கெடா பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெடா பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூன் 2020

கெடா பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை

கெடா பத்து லிந்தாங் கிராமப்புறத்தில் 1200 ஆண்டுகள் பழைமையான நாட்டியத் தாரகை கற்சிலையைக் கண்டு எடுத்தார்கள். அதைப் பற்றி இன்றைக்குத் தெரிந்து கொள்வோம்.


கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி. இதன் பரப்பளவு 224 சதுர கிலோ மீட்டர். அதாவது சிங்கப்பூரின் பரப்பளவில் பாதி.

வடக்கே குனோங் ஜெராய். தெற்கே சுங்கை மூடா ஆறு. சில கிலோ மீட்டர் மேற்காகத் தள்ளிப் போனால் மலாக்கா நீரிணை. சுங்கை மெர்போக் ஆறு, மலாக்கா நீரிணையில் இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கி.மீ.

கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 


(The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.)

சான்று: https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115

சுங்கை பத்து ஆய்வு மையம் (Sungai Batu Archeological Complex), சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.


கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும்; ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

(The Sungai Batu Archeological Complex, claimed to be Southeast Asia’s oldest civilization (older even than Borobudur and Angkor Wat), is said to be the lost world of Kedah Tua (Ancient Kedah), a kingdom complete with iron ore mines, smelting factory, a port, palace, burial sites and a thriving city.)

பூஜாங் சமவெளியில் சில நூறு அல்லது சில ஆயிரம் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் பல ஆயிரம் பொருட்கள் மண்ணுக்குள் புதைந்து மர்மமாய்க் கிடக்கின்றன.

அவ்வாறு மீட்டு எடுக்கப்பட்டது தான் 1200 ஆண்டுகள் பழைமையான பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை. சுங்கை மெர்போக் படகுத் துறையில் (Kompleks Jeti Sungai Merbok) இருந்து மலாக்கா நிரிணைக்குப் படகில் செல்லும் போது ஆற்றின் இரு புறமும் காண்டா காடுகள்.


இந்த ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்த அனுபவம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியக் கடலோடிகள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் எனும் பெருமை.

பாதி தூரம் கடந்ததும் புக்கிட் லிந்தாங் ஆற்று முக்கத்துவாரம் எதிர்படும் அங்கே தான் இந்த நாட்டியத் தாரகை கற்சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

(Figure of a dancer carved in high relief found at Batu Lintang, south of Kedah in 1957 by Dr.Sullivan and Dr.H.A. Lamb.)

1957-ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்கள் டாக்டர் சுலிவான் (Dr.Sullivan); டாக்டர் லாம்ப் (Dr.H.A. Lamb) கண்டு எடுத்தார்கள். இப்போது அந்தக் கற்சிலை கோலாலம்பூர் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.06.2020

சான்றுகள்:

1. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 31, No. 1 (181) (May, 1958), pp. 188-219

2. https://commons.wikimedia.org/wiki/File:Muzium_Negara_KL10.JPG (Arca penari ukiran timbul dijumpai di Batu Lintang, Kedah Selatan pada tahun 1957 oleh Dr. M. Sullivan dan Dr. H.A. Lamb.)