சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரித்து வாழ்ந்திடாதே என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார். இன்றைக்கு அந்த எல்லோரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டார். உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்கள் என்று அவர்களுடன் சேர்ந்து உலகமே அழுது கொண்டு இருக்கிறது. ஓர் அற்புதமான கலைஞரை உலகம் இழந்து விட்டது.
மனத்தின் அழுத்தங்கள் ஓர் எல்லைக்குள் அடங்கிப் போக வேண்டும். தாண்டிப் போனால் மன உலைச்சல்கள் விஸ்வரூபம் எடுக்கும். மனிதனை மரணப் படுக்கையில் சாய்த்துவிடும். இதற்கு அமெரிக்க ஔவை சண்முகி நல்ல ஒரு சான்று. கோலிவூட்டிற்கு கமல்ஹாசன் ஓர் ஔவை சண்முகி என்றால் ஹாலிவூட்டிற்கு ரொபின் வில்லியம்ஸ் ஓர் ஔவை சண்முகி.
சுத்த பத்தமான வெள்ளந்தி
மன அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தக் கலைஞன் தற்கொலை செய்து கொண்டான் என்பது ஒரு வதந்தியாக இருந்துவிட்டுப் போகட்டும். இல்லை என்றால் அதை நம்மாலும் தாங்கிக் கொள்ள முடியாது.
அதிகம் பேசாமலேயே அசட்டுத் தனமான உடல் அசைவுகளினால், உலக மக்களைக் கட்டிப் போட்டவர். நவரச நாயகன் கமல்ஹாசனின் மானசீக குருவாக வலம் வந்தவர். மன்மதலீலைகளை வாசிக்கத் தெரியாத சுத்த பத்தமான வெள்ளந்தியாக வாழ்ந்தவர்.
கலை நகர்வுக்கு புதிய வடிவம்
மிஸ்டர் பீன்ஸ் நிகழ்ச்சி தெரியும் தானே. அதற்கு ஆரத்தி எடுத்து ஆலாபனை செய்தவர் இந்த ரொபின் வில்லியம்ஸ் தான். எதார்த்தமான உடல் கோணங்கித் தனத்தினால் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியும் எனும் ஒரு கலை நகர்வுக்கு புதிய வடிவம் கொடுத்த அந்த மனிதரை நினைத்துப் பார்ப்போம். சார்லி சாப்ளின், ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) வரிசையில் ரொபின் வில்லியம்ஸுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்.
அவருக்கு அதிகமானப் புகழ். அதிகமானச் செல்வாக்கு. இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தன. துணைக்கு மன உலைச்சலைச் சேர்த்துக் கொண்டன. அடுத்து அவரை மது போதைக்கு அடிமையாக்கின. இப்போது அந்த மனிதரைப் பலிக்கடாவாகவும் ஆக்கி விட்டன. ஒரு நல்ல நடிகரை உலகம் இழந்து விட்டது.
புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர்
மனிதச் சாமான்ய வாழ்க்கையில் பணம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றினால் மன நிம்மதி, மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவுகளைப் பெற முடியாது என்பதற்கு ரொபின் வில்லியம்ஸ் நல்ல ஓர் எடுத்துக் காட்டு.
ரொபின் வில்லியம்ஸ் என்பவர் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர். அகடாமி விருதுகளுக்கு மூன்று முறை முன் மொழியப் பட்டவர். ஆனாலும், Good Will Hunting எனும் படத்திற்கு அகடாமி விருது கிடைத்தது. அகடாமி விருது என்பது இந்தியாவின் திரைப்பட தேசிய விருதிற்குச் சமமானதாகும். இரண்டு முறை எமி விருதுகள், இரண்டு முறை அமெரிக்கத் திரைப்பட விருதுகள், நான்கு முறை கோல்டன் குளோப் விருதுகள், ஐந்து முறை கிராமி விருதுகள் பெற்றவர்.
கணவர் எனக்கு ஒரு நல்ல தோழர்
அவருடைய இறப்புச் செய்தியைக் கேட்டு உலகமே அதிர்ந்து போனது. நேற்று வரை சிரித்துப் பேசிக் கொண்டு நல்லா தானே இருந்தார். திடீரென்று என்ன ஆனது. இத்தனைக்கும் பெரிய வயது இல்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். உலக மக்களை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மகிழ்ச்சிப் படுத்தி இருக்கலாம். அவருடைய மனைவி சூசன் என்ன சொல்கிறார் தெரியுமா.
என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல தோழராகவே இருந்தார். வாழ்ந்தார். யாரும் அழக்கூடாது என்று எப்போதும் சொல்வார். அமெரிக்கப் போர் வீரர்கள் ஈராக்கில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது, அவர் அங்கே போனார். ஆடிப் பாடி நகைச்சுவை வழங்கி எல்லாரையும் சிரிக்க வைத்தார். சண்டை வேண்டாம் சமாதானமாகப் போவோம் என்று சொன்னவர் இப்போது அழ வைத்துவிட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்.
1993-ஆம் ஆண்டு மிஸஸ் டவுட்பையர் (Mrs. Doubtfire) எனும் படத்தில் ஆண் பெண் இரட்டை வேடங்களில் நடித்து உலகத்தையே அசத்திக் காட்டியபர் இந்த ரொபின் வில்லியம்ஸ். 25 மில்லியன் பட்ஜெட் படம். ஆனால், 441 மில்லியன் வசூல் செய்து ‘பாக்ஸ் ஆபிஸ்’ சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தழுவி, 1996-ஆம் ஆண்டு, தமிழில் ஔவை சண்முகி படம் எடுக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே பரிச்சயம் ஆனது. கமல்ஹாசனின் நவரசங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது.
கமல்ஹாசன் இரங்கல் செய்தி
தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரொபின் வில்லியம்ஸை அதிகமாய்த் தெரிந்து வைத்து இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். இறப்புச் செய்தியைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் இப்படிச் சொல்கிறார்.
’தொடர்ந்தால் போல வேடிக்கையான முகபாவத்தை வைத்து இருப்பது மன அழுத்தத்தைத் தரும். அந்த வகையில் ரொபின் வில்லியம்ஸ் இயற்கையாகக் கண்ணீர் சிந்தி நடிப்பவர். அவரது படங்களில் அதைத் தெளிவாகக் காண முடியும். ஆணின் அழுகைக்கு ஒரு கண்ணியமான அர்த்தத்தைத் தந்தவர் ரொபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காகவே நான் அவரைப் பெரிதும் விரும்புகின்றேன்.
கமலஹாசன் கவலை
ஆனால் அவரது மரணம் தற்கொலை என்பது உறுதியானால், அந்தச் செயலை வெறுக்கிறேன். திறமை வாய்ந்த ஒரு நடிகரான அவரிடம் இருந்து, இப்படிப்பட்ட ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என்று கமலஹாசன் கவலையுடன் கூறினார்.
ரொபின் வில்லியம்ஸ்க்கு எல்லாம் இருந்தன. ஆனால், மன நிம்மதியும் மன அமைதியும் மட்டும் கிடைக்கவே இல்லை. மாற்றுவழியாக மது போதைக்குப் பாதை மாறினார். ஒட்டு மொத்தமாக அவற்றுக்கு அடிமையாகியும் போனார். கடைசியில் என்ன ஆனது. தன் உயிரையே அடமானம் வைக்க வேண்டி வந்தது.
அதிகமான போதைப் பொருட்கள்
இரண்டு முறை மதுப் பழக்கத்தில் இருந்து வெளியாகி புனரமைப்பு மையங்களில் புதிய வாழ்க்கை தேடி இருக்கிறார். பல ஆண்டுகள் அந்தத் தறுதலைகளின் பக்கம் தலை வைக்காமல் பயணித்தும் இருக்கிறார். இருந்தாலும், சில சமயங்களில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி இருந்தது கடைசியில் கள்ளிக் காயாக மாறிப் போனது.
அவர் அதிகமான போதைப் பொருளைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று வதந்தி நிலவுகிறது. அதிகமாக மதுவையும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று இன்னொரு வதந்தியும் நிலவுகிறது.
அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது மூன்றாவது வதந்தி. எது எப்படியோ அவர் இறந்து விட்டார். இப்போது நம்மிடம் இல்லை, மன உலைச்சலின் காரணமாக மது மயக்கத்திற்கு அடிமையாகிப் போனது என்பது என்னவோ உண்மை.
மனைவியினால் பிரச்சினை தொடங்கியது
ஔவை சண்முகி படத்தில் கமல்ஹாசன் எப்படி நடித்து இருந்தாரோ, அதைவிட மிஸஸ் டவுட்பையர் படத்தில் ரொபின் வில்லியம்ஸ் சிறப்பாகவே நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். அதனால்தான், ரசிகர்களால் ரொபின் வில்லியம்ஸின் இறப்பை அவ்வளவு எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
இப்படி உலகத்து மக்கள் எல்லோரையும் சிரித்து மகிழ்வித்த இவருக்கு வீட்டிலே தான் பிரச்சினை ஆரம்பமானது. அவருடைய மனைவியினால் தான் பிரச்சினை தொடங்கியது. மனைவின் பெயர் வாலரி வாலார்டி. 1978-இல் திருமணம். அப்போது அவருக்கு வயது 27.
மணவாழ்க்கையில் பல சிக்கலகள்
குடும்பம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. வாலரி வாலார்டி தன்னைவிட வயது குறைந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த ரொபின் வில்லியம்ஸ் குடிக்க ஆரம்பித்தார். அதனால் பலப் பல சிக்கல்கள். கடைசியில் பத்தாண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.
அடுத்து மார்ஷா கார்சே என்பவரை ரொபின் வில்லியம்ஸ் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவின் காலத்தில் தான், ஆங்கில ஔவை சண்முகி (மிஸஸ் டவுட்பையர்) படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திருமணமும் விவாகரத்தில் போய் முடிந்தது.
மூன்று ஆண்டுகள் கழித்து சூசன் சினேய்டர் எனும் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். இங்கேயும் பிரச்சினைதான். இருந்தாலும் வாழ்க்கையை அமைதியாக ஓட்டிக் கொண்டு வந்தார். ஏற்கனவே வாழ்ந்த மனைவிகள் ஜீவனாம்சம் கோரி வழக்கு மேல் வழக்கு போட்டு, அவரை ரொம்பவும் அலைகழித்து விட்டார்கள்.
மகள் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை
மன உலைச்சல்களில் இருந்து அவரால் மீள முடியவில்லை. மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார். அப்புறம் போதைப் பொருட்களுடன் சகவாசம் ஏற்பட்டது. கடைசியில், இரண்டு நாட்களுக்கு முன்னர் குடி, போதைப் பொருட்களால் தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.
இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள். ஒரு மகள். பெயர் செல்டா வில்லியம்ஸ். இவரும் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை என்பதைச் சொல்லி விடுகிறேன். இதுவரை 15 படங்களில் நடித்து இருக்கிறார். செல்டா தன் தந்தையுடன் சேர்ந்து ’ஹவுஸ் ஆப் டி’ எனும் படத்தில் நடித்து இருக்கிறார்.
தவிர, தந்தையும் மகளும் சில பாடல்களைப் பாடி தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர். எமி விருதும் கிடைத்து இருக்கிறது. செல்டா வில்லியம்ஸ் 2007-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகைகளில் அழகான நடிகையாகத் தேர்வு செய்யப் பட்டவர். தன் தந்தையாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர். தந்தையாரின் மறைவு இவரை மிகவும் பாதித்துவிட்டது. ஒரு மாதத்திற்குத் தன் படப் பிடிப்புகளை நிறுத்தி வைத்து இருப்பதாகக் கேள்வி.
தனிமை வாழ்க்கை
ரொபின் வில்லியம்ஸ், 1951 ஜூலை மாதம் 21-ஆம் தேதி சிக்காகோவில் பிறந்தவர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெரிய வீடு. தனிமையிலேயே வாழ்ந்து இருக்கிறார். நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. சின்னச் சின்ன பொம்மை போர் வீரர்கள் தான் நண்பர்கள். அவர்கள்தான் அவருக்குத் துணை. அம்மாவிடம் அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி வீசி அட்டகாசம் செய்வார்.
வில்லியம்ஸின் தந்தையார் எப்போதும் வீட்டில் இருப்பது இல்லை. அப்படியே வீட்டில் இருந்தால் ரொபின் வில்லியம்ஸின் அடிவயிறு கலங்கும். அம்மாவும் வேலைச் செய்தார். அதனால் பெரும்பாலும் வேலைக்காரிகளின் பராமரிப்பிலேயே வாழ்ந்தார். அவர் வளர்க்கப்பட முறைதான் அவரிடம் ஒரு புறக்கணிப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டதாக ரொபின் வில்லியம்ஸ் சொல்கிறார். அந்த உணர்வை ‘லவ் மி சிண்ட்ரோம்’ (Love Me Syndrome) என்று சொல்லி வந்தார்.
1978-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். படிப்படியாக முன்னேறி அமெரிக்காவின் ஔவை சண்முகி எனும் அவதாரத்தையும் எடுத்து விட்டார். எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவர், தனக்குத் தானே தண்டனையை விதித்துக் கொண்டது தான் வேதனையான விஷயம். ஓடி ஆடி சிரிக்க வைத்த ஒரு சிரிப்பு ராஜாவை மனுக்குலம் இழந்து விட்டது.