அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2019

அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1

கோடிக் கோடி ஆண்டுகளாகக் கோடிக் கோடி உயிர் இனங்களுக்கு உயிர் கொடுத்த உயிர்நாடி. கோடிக் கோடி ஆண்டுகளாக உயிர்க் காற்றைக் கொட்டிக் கொடுத்த உலக நாடி. 



அங்கே கோடிக் கோடி ஆண்டுகளாகக் கொட்டும் மழையில் நனையும் மழைக் காடுகள். கோடிக் கோடி ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சத்தைப் பார்க்காத பச்சைக் பசுமரத்துக் காடுகள்.

ஒரே வார்த்தையில் சொன்னால்... கோடிக் கோடியான மரங்கள்; கோடிக் கோடியான செடி கொடிகள்; கோடிக் கோடியான மருந்து மூலிகைகள்; கோடிக் கோடியான உயிரினங்கள். உலகத்தையே வாழ வைக்கும் ஓர் உலக அதிசயம் தான் அமேசான் மழைக் காடுகள்.

இறுக்கத்தில் நெருக்கமாய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த மலைக்காட்டு மரங்கள். அமேசான் காடுகளில் மட்டும் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இந்த உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த மழைக் காடுகளில் தான் வாழ்கின்றன.




இப்போது... அந்தப் பச்சைக் காடுகள் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றன. ஓர் இடத்தில் அல்ல. இரண்டு இடத்தில் அல்ல. ஓராயிரம் இடங்களில் ஒரே சமயத்தில் எரிந்து கொண்டு இருக்கின்றன. இந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 72,843 காட்டுத் தீ நிகழ்ச்சிகள்.

அமேசான் காடுகளைப் பூமியின் நுரையீரல் என்று சொல்வார்கள். அந்த நுரையீரலில் தான் ஆயிரத்து எட்டு இடங்களில் காட்டுத் தீ கன்னா பின்னா என்று கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது.

ஒட்டு மொத்த பூமிக்குத் தேவையான உயிர்க் காற்று (ஆக்சிஜன்) 20 விழுக்காடு இந்தக் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. இது ரொம்ப பேருக்குத் தெரியாத விசயம். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் மலேசியாவில் இருக்கிறேன். அப்புறம் எப்படி அங்கே உள்ள காற்று இங்கே வந்து சேரும் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.




ஒவ்வொரு நாளும் அமேசான் காட்டு மரங்கள் விடும் உயிர்க் காற்று ஏறக்குறைய ஆயிரம் மில்லியன் டன்கள். நான் சொல்வது உயிர்க் காற்று மட்டும் தான். இந்த உயிர்க் காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு மூன்று நான்கு வாரங்கள் பிடிக்கும்.

ஆக அங்கே அமேசான் காடுகளில் இருந்து தொடர்ந்து உயிர்க் காற்று வெளியாகிக் கொண்டு இருப்பதால் தான் நாமும் இங்கே பேர் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இது ஒன்றும் சத்தியவான் சாவித்திரி கதை அல்ல. சத்தியமான உண்மைக் கதை. அமேசான் காட்டு மரங்களுக்கு நன்றி சொல்வோம்.

அது மட்டும் இல்லை. பூமியின் 25 விழுக்காடு கரியமிலக் காற்றைக் கிரகித்துக் கொள்வதிலும் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது. தாவரங்கள் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை வெளியிடுகின்றன. படித்து இருப்பீர்கள். அந்த வகையில் உலகத்தின் கால்வாசி கரியமிலக் காற்றை அமேசான் காடுகள் ஈர்த்துக் கொள்கின்றன.




அமேசான் காட்டில் தீ என்றால் என்ன. ஆயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு போய் அணைத்து விடலாமே. ஏன் எரியவிட வேண்டும் என்று கேட்கலாம். இந்தக் காட்டுத் தீ பற்றி எரிவதற்குப் பின்னால் பெரிய பெரிய மனித ஆசைகள் உள்ளன. பெரிய பெரிய அரசியல் பின்னணிகளும் உள்ளன. அங்கே தான் இடிக்கிறது. இருந்தாலும் உலக நாடுகள் சும்மா இல்லை. ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வசை பாடுகின்றன. பிரேசில் நாட்டுக் காதுகளில் படுகிறது. ஆனால் சரியாகக் கேட்கவில்லையாம்.

அமேசான் காடுகள் எரிவதை ஒரு நிகழ்ச்சியாக நினைத்து, உலக மக்கள்  அப்படியே விட்டு விட முடியாது. அதை ஒரு விபத்தாக நினைத்துக் கடந்து போய்விடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியின் பின்புலத்தில் பெரும் அரசியல் நகர்வுகள் உள்ளன. அந்த அரசியல் நகர்வுகள் தான் இத்தனைப் பெரிய களேபரத்திற்குக் காரணம். ஒரு முடிவு காண வேண்டும்.

அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சின்னத் திரை நாடகங்கள் தான். பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் நிறையவே காட்டுத் தீ சம்பவங்கள். இயற்கையாக மின்னல் தாக்கி காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது வழக்கம். 




ஆனால் இந்த முறை அப்படி இல்லை. மரம் வெட்டுபவர்கள், சிறுசிறு தோட்டங்கள் வைத்து இருப்பவர்கள், விவசாயிகள் அவர்கள் இஷ்டத்திற்குத் தீ வைத்துக் காட்டைக் கொளுத்திப் பொசுக்கித் தள்ளுகிறார்கள். அதுதான் உண்மை. அதுவே அனைத்துலகக் குற்றச்சாட்டு.

இந்தப் பக்கம் நுசாந்தாரா காடுகள் மட்டும் என்னவாம். எங்க அப்பன் சொத்தா உங்க அப்பன் சொத்தா என்று மானவாரியாகக் காடுகளைக் கொளுத்தித் தள்ளுகிறார்கள். தென்கிழக்காசிய மக்களையே இரும வைத்து இழுத்துக்க பறிச்சிக்க வைத்து விடுகிறார்கள். மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போகிற மாதிரி அடிக்கடி நடக்கிற விசயம் தானே.

கேட்டால் ஈச்ச மரம், புளிச்ச மரம் நடுகிறோம் என்று சொல்வார்கள். அவர்களின் காடுகளில் நெருப்பு வைத்தே பாதிக் காடுகளை அபேஸ் செய்து விட்டார்கள். விடுங்கள். சப்போர்ட் பண்ண ஸக்கீர் நாயக் வந்துவிடப் போகிறார். நம்ப கதைக்கு வருவோம்.

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லி விடுகிறேன். எப்பேர்ப்பட்ட ஒரு காட்டுத் தீயாக இருந்தாலும் அதை அடக்கி ஆளும் சக்தி காடுகளுக்கே ஒரு வரப்பிரசாதம். சின்ன நெருப்பு பெரிய நெருப்பு என்று பிரச்சினை இல்லை. காடுகள் சமாளித்துக் கொள்ளும். அந்த வலிமை காடுகளுக்கு உண்டு.





ஆனால் அமேசான் காடுகளில் இப்போது நடப்பது அப்படி இல்லீங்க. திட்டம் போட்டே காடுகளுக்கு நெருப்பு வைக்கிறார்கள். ஒரு வகையில் திட்டம் போட்டு செய்யப்படும் ஓர் அரசியல் சதி என்றுதான் சொல்ல வேண்டும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்தப் பச்சைக் காடுகளினால் முடியவில்லை. சரி. என்ன ஏது என்று பார்ப்போம்.

அமேசான் காட்டு தீயின் பின்னணியில் இருப்பவர் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயர் பொல்சோனாரோ (Jair Bolsonaro) என்று சொல்லப் படுகிறது. உண்மையாகவும் இருக்கலாம். உண்மை அல்லாமலும் இருக்கலாம். தொடர்ந்து படியுங்கள். உண்மை ஓரளவிற்குத் தெரிய வரும்.

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்து இருக்கும் ஒரு பெரிய மழைக்காடு. உலகத்திலேயே பெரிய காடு. இதை அமேசானியா (Amazonia) என்றும் அழைக்கிறார்கள். அமேசான் காடுகளின் பெரும் பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளன.

அமேசான் காடுகளின் பரப்பளவு 7,000,000 (ஏழு மில்லியன்) சதுர கிலோமீட்டர்கள். அதாவது 2,700,000 சதுர மைல்கள். நம்ப மலேசியாவைப் போல 22 மலேசியாவிற்குச் சமமான காடுகள். ஒன்பது நாடுகளில் படர்ந்து பரவி உள்ளது.

பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்குவெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளில் படர்ந்து உள்ளது. சரி.

இப்போதைய பிரேசில் நாட்டின் அதிபராக இருக்கும் பொல்சோனாரோ பின்பற்றி வரும் அரசியல் கொள்கைகள்; அதாவது காட்டை அழிக்கும் கொள்கைகள் எதிர்காலத்தில் அமேசான் காடுகளை ஒருவழி பண்ணிவிடும். இது அரசியல் விமர்சகர்களின் பொதுவான கருத்து.

2018-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தல். அப்போது பொல்சோனாரோ பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதாவது அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்குவது; பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து எடுப்பது. இவை இரண்டுமே அவருடைய பிரசாரத்தின் முக்கிய மந்திர வாசகங்களாக இருந்தன. 




இன்றைய நிலையில் பிரேசில் தன் பொருளாதாரச் சரிவில் இருந்து சற்றே மீண்டு வரும் காலக் கட்டம்.

அமேசானை வணிக மயமாக மாற்றுவோம் எனும் அதிபர் பொல்சோனாரோவின் முழக்கம் ஒட்டு மொத்த பிரேசில் மக்களையே கவர்ந்தது. கவர்ந்து இழுத்து விட்டது.

காடுகளை அழிப்பது. விவசாயம் செய்வது. மேய்ச்சல் நிலமாக மாற்றுவது என்பது அவரின் முழக்கம். அந்த முழக்கம் பிரேசில நாட்டு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள்; வணிகர்கள்; அற்றைக் கூலிகள், வெளிநாட்டு எண்ணெய்க் கம்பெனி முதலைகள் எனப் பலரையும் கவர்ந்து இழுத்தது.

இவர்கள் அனைவரும் பிரேசில் நாட்டில் ஒரு பொருளாதார மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் 2019 ஜனவரியில் பொல்சோனாரோ நாட்டின் அதிபரானார்.

பிரேசிலின் காடுகளைக் கொஞ்சம் அழித்தால் போதும். பிரேசில் மக்கள் ரொம்ப பணம் பார்க்கலாம் என்று சின்னதாகத் தூண்டில் போட்டார். மக்களும் மயங்கி விட்டார்கள்.

பிரேசில் நாடு பெரும் அளவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி. பெரிய அளவில் மாடுகளை வளர்ப்பதற்கு மேய்த்தல் நிலங்கள் தேவை. அந்த வகையில் அமேசான் கண்ணை உறுத்தியது.

விவசாயிகள் ஆளாளுக்கு ஒரு பகுதியில் நெருப்பு வைக்கத் தொடங்கி விட்டார்கள். அதிபரே கண் அடித்து விட்டார். அப்புறம் என்ன. கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் கண்டபடி சின்ன சின்னதாக நெருப்பு வைத்து இருக்கிறார்கள். ஒரு விவசாயிக்கு எவ்வளவு நிலம் தேவையோ அந்த அளவிற்கு முதலில் நெருப்பு வைத்து இருக்கிறார்கள்.

இப்படி சின்னதாக நெருப்பு வைக்கத் தொடங்கியது கடைசியில் ஒரு பெரிய அமேசானையே நெருப்பு வைத்துக் கொளுத்தும் அளவிற்குப் போய் விட்டது.

அதிபர் பொல்சோனாரோ வலதுசாரி கொள்கை கொண்டவர். அவர் தான் காடுகளுக்கு நெருப்பு வையுங்கள் என்று விவசாயிகளைத் தூண்டி விட்டதாக உலகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதாவது அதிபர் பொல்சோனாரோவின் அரசுக் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கின்றன என்று சொல்கிறார்கள். காடுகளை அழித்து விவசாயம் செய்வது; மரங்கள் வெட்டுவது; மலைக் காடுகளை மேய்ச்சல் நிலமாக மாற்றுவது போன்ற கொள்கைகளை அதிபர் ஊக்குவிக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்போது ஏற்பட்டு உள்ள காட்டுத் தீயை அணைக்க அதிபர் பொல்சோனாரோ சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என்று உலகச் சுற்றுச் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

அதற்குப் பதில் கூறும் அதிபர் சொல்கிறார்: ‘எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை. காட்டுத் தீயை அணைக்க எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடிந்தது" என்று சொல்கிறார்.

இந்த காட்டுத் தீ சம்பவங்களுக்கு அரசு சாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என்று வேறு மாதிரியாகக் காரணம் காட்டுகிறார்.

அரசுசாரா அமைப்புகளுக்கான நிதியை அதிபர் பொல்சோனாரோ குறைத்து விட்டார். அதனால் அதற்குப் பழிவாங்க அவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று காரணம் சொல்கிறார். சரி.

அமேசான் மழைக் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் தான் இந்தக் காட்டுத் தீ சம்பவங்களினால் முதலில் பாதிக்கப் படுகிறார்கள். ஏறக்குறைய ஒன்பது இலட்சம் பழங்குடி மக்கள் அந்த மழைக் காடுகளில் வாழ்கிறார்கள்.

அமேசான் காடுகளில் ஏற்படும் எந்த ஒரு சிறு பாதிப்பும் முதலில் பழங்குடி மக்களைத் தான் பாதிக்கும். அந்த வகையில் அதிபர் பொல்சோனாரோவிற்கு எதிராக அவர்களும் தங்களின் போராட்டத்தைத் தொடங்கி விட்டார்கள்.

உலக மக்களின் பார்வை இந்தப் பழங்குடி மக்களின் பக்கமாகத் திசை திரும்பி உள்ளது. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)