மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜூலை 2019

மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு

மின்னல் எப்.எம். (Minnal FM) என்று சொல்லும் போது மின்மினியாய் இனிமைக் கீர்த்தனங்கள். அழகு அழகான குரல்கள். அழகு அழகான நிகழ்ச்சிகள். அழகு அழகான சிந்து பைரவிகள். எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். தப்பில்லை. 


அந்த வகையில் மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு என்பது நீண்ட நெடிய சுவடுகளைக் கொண்டது. நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பு வானொலி 6 என்றும் மலேசிய வானொலி அலைவரிசை 6 என்றும் அழைக்கப்பட்டது. அதில் இருந்து வந்த புதிய பரிமாணம்தான் மின்னல் எப்.எம். மலேசிய இந்தியர்களின் தகவல் பொழுதுபோக்கு ஊடகம். மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது. மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது.

மலேசிய வானொலியின் வரலாறு 1921-ஆம் ஆண்டு தொடங்குகிறது. 1920-ஆம் ஆண்டுகளில் ஜொகூர் மாநில அரசாங்கத்தில் ஏ. எல். பெர்ச் என்பவர் ஒரு மின்பொறியியலாளர். இவர்தான் மலாயாவிற்குள் முதன்முதலாக ஒரு வானொலிப் பெட்டியை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்தார். 



அதே ஆண்டு ஜொகூர் கம்பியில்லாத் தொடர்புக் கழகத்தை (Johore Wireless Association) உருவாக்கினார். 300 மீட்டர் ஒலி அலையில் ஒரு சின்ன கம்பியில்லாத் தொடர்பு முறை. அவ்வளவுதான்.

1922-ஆம் ஆண்டு பினாங்கில் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர், மலாக்காவில் கம்பியில்லாத் தொடர்புக் கழகங்கள் உருவாகின.

1930-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தைச் சேர்ந்த சர் ஏர்ல் (Sir Earl) என்பவர், மாதத்தில் இரண்டு நாட்களுக்குச் சிற்றலை ஒலிபரப்பைத் தொடங்கினார். 



பின்னர் காலத்தில் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் பகுதிக்கு மாற்றம் கண்டது. அங்கு இருந்து ஒரு புதிய ஒலிபரப்புச் சேவைத் தொடங்கினார்கள். மலாயா கம்பியில்லாக் கழகம் (Malaya Wireless Association) என பெயரையும் வைத்தார்கள்.

அடுத்து சர் செண்டோன் தாமஸ் (Sir Shenton Thomas) என்பவர் வருகிறார். இவரைத் தான் மலாயா வானொலியின் தந்தை என்று பெருமையுடன் அழைக்கிறார்கள். மலாயாவின் ஒலிபரப்புத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவர்.

1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி சிங்கப்பூரில் இருக்கும் கால்டிகாட் குன்றில் (Caldecott Hill) ஓர் ஒலிபரப்பு அறையை உருவாக்கினார். அதற்கு மலாயா பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corporation of Malaya) என பெயரையும் சூட்டினார். பின்னர் மலாயா ஒலிபரப்புக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.


Sir_Thomas_Shenton

இந்த மலாயா ஒலிபரப்புக் கழகத்தில் மலாய், ஆங்கிலம், மாண்டரின் சீனம், தமிழ் என நான்கு மொழிகள் இருந்தன.

மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு 1938-ஆம் ஆண்டு தொடக்கப் பட்டதாகச் சிலர் சொல்கின்றனர். அது தவறு. 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்பது தான் மிகச் சரியான தகவல்.

அந்த நாளில் சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தமிழ் மொழியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. கோலாலம்பூர் நிலையத்தில் தஞ்சை தாமஸ் என்பவர் தமிழ்ப் பகுதியின் தலைவராக இருந்தார். இவர்தான் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி.

1942-இல் இரண்டாம் உலகப் போர். மலாயாவிலும் சிங்கப்பூரிலும் ஜப்பானியரின் ஆட்சி. அப்போது மலாயா தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் ஜே.எம்.பி.கே வானொலி.


அப்போதுதான் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. எந்த எந்த இடங்களில் எத்தனை மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்பதை வானொலி மூலமாக மக்கள் தெரிந்து கொண்டனர்.

1950-களில் மலாயா வானொலியின் (Radio Malaya) தமிழ்ச் செய்திகள், சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. 1951-இல் புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் (Hospital Tang Ling) ஓர் அறையில் இருந்து தமிழ் ஒலிபரப்புகள்.



1956-ஆம் ஆண்டு கூட்டரசு மாளிகையில் (Federal House) இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி அங்கு இருந்த போது, மலேசிய தமிழ் உலகிற்கு நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிக் கொடுத்தது.

1963-ஆம் ஆண்டு மலேசியா உருவானது. மலாயா வானொலி என்பது மலேசிய வானொலி ஆனது. அதாவது ரேடியோ மலாயா என்பது ரேடியோ மலேசியா ஆனது.

1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, இனிலா ரேடியோ மலேசியா (INILAH RADIO MALAYSIA) எனும் அறிமுக வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 1969 அக்டோபர் 6-ஆம் தேதி, அங்காசாபுரி வளாகத்திற்கு மலேசிய வானொலி மாற்றம் கண்டது. 



1970-ஆம் ஆண்டு ரங்காயான் மேரா என பெயர் மாற்றம். அதுவே 2005 ஏப்ரல் மாதம் முதல் தேதி மின்னல் எப்.எம். என பெயர் மாற்றம் கண்டது.

மொழிக்கு கலை ஒரு கலைவாசல். கலைக்கு இசை ஓர் இசைவாசல். இசைக்கு மொழி ஒரு விழிவாசல். அந்த மொழிக்கு ஒலி ஒரு தலைவாசல். அதுதான் மின்னல் எப்.எம். என்கிற ஓர் ஒலிவாசல். ஆனந்தத் தேன்காற்றில் ஓர் ஆனந்த பைரவி. வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

மின்னல் எப்.எம். பற்றி விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் முகவரி:

https://ta.wikipedia.org/s/559