மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 நவம்பர் 2019

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள்

தமிழ் மலர் - 24.11.2019

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடி விடுங்கள் என்று ஒரு பக்கத்தில் மேடை முழக்கம். மூடி விட முடியுமா என்று மறு பக்கத்தில் வீர முழக்கம். அந்தப் பக்கம் சோதனைகள். இந்தப் பக்கம் சாதனைகள். அந்தப் பக்கம் இனவாதம். இந்தப் பக்கம் மொழி வாதம்.  



ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை இறைவன் திறந்து விடுவார் என்பது பொன்மொழி. இனம் சமயம் மொழி தாண்டிய முது மொழி. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரையில் அந்த மொழி மிகவும் சரியாகவே அமைந்து போகின்றது.

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இறைவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டு இருக்கலாம் என்று சிலர் சொல்லலாம். அதுவே உண்மை என்று மற்றவர்களும் சொல்லலாம்.

இருந்தாலும் முதலில் வருவது மாணவர்களின் விடா முயற்சி. அதில் அவர்களின் கடும் உழைப்பு. சவாலே சமாளி என்று ஒவ்வொரு சவாலையும் கனவில் சந்தித்து நனவில் சாதிக்கின்ற திறன்படுகள். சத்தியமாகச் சொல்கிறேன். சாதித்து விட்டார்கள். சந்தோஷப் படுவோம்.



அதற்கு அடுத்து வருவது ஆசிரியப் பெருமக்களின் அர்ப்பணிப்பு ஈடுபாடுகள். அதில் அவர்களின் கடமை உணர்வுகள். அதையும் தாண்டிய நிலையில் அவர்களின் சமுதாயப் பற்று கலந்த இனப் பற்று.

அதற்கு மேலும், அவர்களின் மொழிப் பற்று. ஆக இப்படி அத்தனைப் பற்றுகளும் தமிழாசிரியர்களின் கற்பித்தல் வாழ்வியலில் கலந்து பயணித்து இருக்கின்றன. அதனால் தான் மாணவர்கள் அப்படி ஒரு சாதனையைப் படைத்து இருக்கிறார்கள். தமிழ் மாணவர்கள் தஞ்சைப் பெரிய கோயில் என்றால் அதைக் கட்டியவர்கள் தமிழ் ஆசிரியர்கள் எனும் இராஜ ராஜ சோழனின் வாரிசுகள்.


சுவர் இல்லாமல் சீனப் பெருஞ்சுவர் பெயர் பெற்று இருக்க முடியாது. உளி இல்லாமல் தாஜ்மகால் உலகப் புகழ் பெற்று இருக்க முடியாது.

இப்போது உள்ள தமிழாசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளைப் புகழாரம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். காலத்தின் கடப்பாடு. இப்போது புகழாமல் வேறு எப்போது புகழ்வதாம். சொல்லுங்கள்.

வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தால் போதும் என்பது அந்தக் காலம். அது மாறிப் போய் விட்டது. இப்போது உள்ள தமிழாசிரியர்கள் ஊதியச் சன்மானத்தைப் பெரிதாகப் பார்க்காமல் ஊழியச் சன்மார்க்கத்தைத் தான் பெரிதாகப் பார்க்கிறார்கள். அது இந்தக் காலத்து தமிழாசிரியர்களின் இன மனப்பாங்கு.

இன்னும் ஒரு விசயம். அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர்களிடம் இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி நிற்கிறது. இதை மலேசிய இந்தியச் சமுதாயம் நன்றாகவே உணர்ந்து வருகிறது. ஒரு செருகல்.




ஈப்போ தமிழார்வலர் பி.கே.குமார் அவர்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன். இவர் மலேசியாவில் பிரபலமான தமிழார்வலர். சமூக ஆர்வலர். கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பவர். தொய்வு இல்லாமால் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர். நாடளாவிய நிலையில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றவர்.

அவர் சொல்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் மாறி இருக்கிறது. மாறி விட்டது.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்; மிகத் திறமையான தலைமைத்துவம் மிக்க தலைமையாசிரியர்கள்; தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்; சமூக ஆர்வலர்கள்; அரசு சார்பற்ற இயக்கங்கள்; முன்னாள் மாணவர் சங்கங்கள்; தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்புகள்; இந்தத் தமிழ் நெஞ்சங்களின் வற்றாத ஆதரவுக் கரங்கள் தமிழ்ப்பள்ளிகளை நோக்கி திசை திரும்பி உள்ளன.



தமிழ் ஊடகங்களும் அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், தங்களால் இயன்ற பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ரோபாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. அது போல இந்தச் சாதனைகளும் ஒரே நாளில் நடைபெற்றவை அல்ல.

தமிழ்ப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் காய்களை நகர்த்தி வந்தன. இப்போது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி உள்ளன. இந்தச் சாதனையைப் படைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

இந்தச் சாதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வேண்டும். அதிகரிக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

தமிழ்ப் பள்ளிகளைப் பொறுத்த வரையில் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் ஓரிரு வெற்றிகளைப் பெறுவது முக்கியம் அல்ல. சதவிகித வெற்றியே முக்கியம். அதுவே மலேசியத் தமிழ் நெஞ்சங்கள் வேண்டி விரும்பும் உண்மையான எதிர்பார்ப்பு. 



அந்த வகையில் இந்த 2019-ஆம் ஆண்டின் வெற்றி மகத்தான வெற்றி. போற்றப்பட வேண்டிய வெற்றி. பாராட்டப்பட வேண்டிய ஒரு வெற்றி.

இந்த வெற்றியின் மூலமாகத் தமிழ்க் கல்விக்கு மேலும் உரம் சேர்க்கப்பட வேண்டும். இடைநிலைப் பள்ளிகளில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் தமிழ்ப் பாடத்தைக் கற்க வேண்டும். இந்தக் கற்றலைப் பள்ளி நேரத்திலேயே ஆவணப் படுத்த வேண்டும்.

தமிழ் மாணவர்கள் படிவம் ஒன்றில் இருந்து தொடர்ந்து தமிழ் கற்க வேண்டும். அப்படியே எஸ்.பி.எம்., பல்கலைக்கழகம் வரையில் தமிழ்ப் பாடங்களைப் பயில வேண்டும். தேர்வு பெற வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.



பி.கே.குமார் அவர்களுக்கு நன்றி. மலேசியத் தமிழர்களை வணிக விரும்பிகளாக உருமாற்றம் காண வேண்டும் என்று கனவு காணும் பி.கே.குமாரின் கனவுகள் நனவாக வேண்டும்.

பொதுவாகவே மலேசியத் தமிழாசிரியர்களிடம் இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு புதிய கலாசாரம் தோன்றி வருகிறது.

தமிழ்ப் பள்ளிப் பிள்ளைகளைத் தங்கள் பிள்ளைகளாக நினைத்து அந்தப் பிள்ளைகளை அரவணைத்து, ஆதரித்து அன்பு காட்டிக் கண்டித்துப் போதிக்கின்ற ஒரு புதுக் கலாசாரம்... புதுப் பொலிவு பெறுகிறது. இதைப் பெற்றோர்களும் அறிவார்கள். பிள்ளைகளும் அறிவார்கள். தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றிகள். சிரம் தாழ்த்துகிறோம்.

தமிழ் மாணவர்கள்; தமிழ் ஆசிரியர்கள். இந்த இரு சாராரின் தலையாயப் பங்குகள் தான், யு.பி.எஸ்.ஆர். தகுதியில் முதலிடம் வகிக்க உதவி செய்து உள்ளன.

தமிழாசிரியர்களை இப்படி உச்சி முகர்ந்ததற்காகச் சிலர் பொறாமைப் படலாம். அந்தப் பாவனையில் வேறு மாதிரி எதையாவது சொல்லி வசை பாடிவிட்டுப் போகலாம். கவலை இல்லை. உண்மையைத் தான் எழுதி இருக்கிறேன். 



அடுத்து வருபவை பெற்றோர்களின் உற்சாகத் தூண்டுதல்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் விழிப்புணர்வுப் பார்வைகள். பொது மக்களின் ஆதரவுக் கரங்கள். ஆக இத்தனையும் சேர்ந்து தான் இந்த ஆண்டு மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்படிப்பட்ட ஒரு சாதனையைச் செய்வதற்கு வழிவகுத்து உள்ளன.

கதவைத் திற காற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் கதவைத் திறக்க வேண்டாம். காற்றைத் தேடி நாங்கள் போகிறோம் என்று நம் தமிழ் மாணவர்கள் சாதனை படைத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நெஞ்சம் கனக்கிறது.

ஒரே வார்த்தையில் சொன்னால் 2019-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகள் ஓர் உச்சக் கட்டத்தைத் தொட்டு இருக்கின்றன. அண்மைய காலங்களில் இதுதான் ஆக உச்சம். 78.51 விழுக்காட்டு தேர்ச்சிப் பதிவு. மலாய்ப் பள்ளிகள் 69.77 விழுக்காடு. சீனப் பள்ளிகள் 66.16 விழுக்காடு.

அதாவது தேசிய (மலாய்) பள்ளிகள், மற்றும் சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் அதிகமான அளவில் சிறப்புத் தேர்ச்சி. இந்தத் தேர்ச்சி முடிவு தமிழ்ப் பள்ளிகளுக்குப் பெருமை. மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை. உலகத் தமிழர்களுக்கும் பெருமை.



ஆக இந்தத் தேர்ச்சி நிலை என்பது தமிழ்ப் பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற நம்பிக்கை உணர்வை மலேசிய மக்களிடையே தோற்றுவித்து உள்ளது.

இன்னொரு பக்கம் பாருங்கள். இந்த நாட்டில் தமிழ்ப் பள்ளிகளே இல்லாமல் செய்வதற்கு என்ன என்னவோ திருகுதாளங்கள். என்ன என்னவோ தில்லாலங்கடிங்கள். என்ன என்னவோ தெருக்கூத்துகள். என்ன என்னவோ செப்படி வித்தைகள்.

என்ன என்று விளக்கம் கேட்கலாம். சுயநலத்து ஜால்ராக்களின் இனவாத மேள தாள வாத்தியங்கள் என்றுதான் பதில் வரும். அண்மைய காலத்து அமேசான் களிமந்தான் காட்டுப் புகைச்சல்களுக்குச் சரியான போட்டி. ஓர் எடுத்துக்காட்டு.

பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம். 



அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

அதன் பின்னர் பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) கட்சியின் தலைவர் இப்ராகிம் அலியின் கூக்குரல்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற மேடை முழக்கம்.

 


இடை இடையே இப்படிப்பட்ட ஒடிசி கதகளி நடனங்கள். எப்படியாவது ஆடிவிட்டுப் போங்கள். நாங்கள் பாட்டிற்கு நாங்கள் படித்து நாங்கள் சாதனை செய்கிறோம் என்று நம் மாணவர்களும் களம் இறங்கி விட்டார்கள். சாதனையும் படைத்து வருகிறார்கள்.

மேலும் ஒரு குண்டக்க மண்டக்க செய்தி. யு.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. அதனால் தான் விகிதாசாரம் கூடி நிற்கிறது. இதில் என்ன பெரிய பிரேக் டான்ஸ் என்று ஓர் எதிர்வினைச் செய்தி.

வயிற்றில் சுமந்த வலி அம்மாவுக்குத் தெரியும். தோளில் சுமந்த வலி அப்பாவுக்குத் தெரியும். பக்கத்து வீட்டு பாப்பாத்திக்குத் தெரியுமா. அல்லது பசார் மலாம் பக்கிரிக்குத் தெரியுமா. மீசையில் மண் ஒட்டினாலும் குற்றம். ஒட்டா விட்டாலும் குற்றம். அப்படிச் சொல்கிறவர்களிடம் நாம் மாற்றுக் கருத்துகள் சொல்ல முடியாது. அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நாம் பாட்டிற்குப் போய்க் கொண்டே இருப்போம்.



இருந்தாலும் மலேசியத் தமிழர்களாகிய நாம் இந்த விநாடி வரையில் சலிக்காமல் சளைக்காமல் நம் தமிழ் மொழி உரிமைகளுகாகத் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மலேசிய வாழ் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ... எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால வலிமைக் கேடயம்.

அன்புச் செல்லங்களே… சாதனைகள் படைத்த என் இனிய தமிழ்ச் செல்வங்களே சபாஷ். மீண்டும் ஒரு சபாஷ்!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
24.11.2019