ஈப்போ ஜி.சரோஜினி - மலேசியச் சாதனைப் பெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ ஜி.சரோஜினி - மலேசியச் சாதனைப் பெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜனவரி 2020

ஈப்போ ஜி.சரோஜினி - மலேசியச் சாதனைப் பெண்மணி

தமிழ் மலர் - 05.01.2020

மலேசியத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் வானுயர்ந்து நிற்கும் மாந்தர்கள் பலர். மேதினிக் கலசங்களாய் மெல்லிசை பாடும் சாதனைச் சேவகர்களாய்ப் பலர். சமூகச் செம்மல்களாய் வையகம் போற்றும் நிதர்சன மலர்களாய்ப் பலர். அவர்களில் செய்கழல் தாரகை ரஞ்சிதங்களாய்ச் சிலர். 



அவர்களிலும் சிலர் தழையும் கண்ணியும் தண்நறு மாலையுமாய் சத்துவ குணங்களைப் பார்க்கின்றனர். சமநிலைச் சிந்தனைகளை வாரி இறைத்து நல்வழி காண்கின்றனர். வாழ்க்கை வழிகாட்டல்களில் தன்னிறைவு அடைகின்றனர்.

அப்படியே நிறைமொழி மாந்தர்களாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் புனித எண்ணங்களின் புண்ணிய திருக்கோலங்கள். அந்தக் கோலங்களில் தான் சத்தியத்தின் நியாயம் சாணக்கியம் பேசுகின்றன.

அந்த வகையில் அன்னைத் தமிழுக்குத் தலைவாசல் அமைத்து, அதற்கு அழகுச் சாளரங்கள் கட்டி, சிந்து பைரவி பாடிய ஒரு தமிழ்ப் பெண்ணை  அறிமுகம் செய்கின்றோம். 



உயிரோட்டமான சமூகச் சேவைகள். ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு உணர்வுகள். தமிழ் அன்னைக்கு மதிப்பு மரியாதைகளை அள்ளி இறைத்தவர்.

அவர்தான் குருசேவா ரத்னா  சரோஜினி ராஜரத்தினம். மலேசியா கண்டெடுத்த ஒரு தங்கப் பெண். பேராக் மாநிலம் கண்டெடுத்த ஒரு வெள்ளிப் பேரிகை.

கண்ணியமான சேவைப் பண்பு நெறிமுறைகளைத் தக்க வைத்தவர். அரசியல், கல்வி, இனம், மொழி, சமயம் என பல்வகைச் சேவைக் கூறுகளிலும், தன்னிகரற்றத் தலைவராய்த் திகழ்ந்தவர்.

தமிழர்ச் சமூகச் சேவையின் வளர்ச்சியில் புதிய அணுகுமுறைகளை நகர்த்திக் காட்டியவர்.


பொதுவாகவே சரோஜினி ராஜரத்தினம் என்பவர் மலேசியச் சமூகச் சேவை பார்வையில், பல்லாயிரம் மனங்களில் நிறைந்து நிற்கின்றார். அங்கே  ஒரு கங்கையாகவும் ஒரு காவேரியாகவும் அனைவரையும் அணைத்து அழைத்துச் செல்கின்றார்.

சமூக சேவகி என்கிற குணநலன்களைத் தன்னகத்தே பதித்துக் கொண்ட ஓர் அன்னையின் மறுவடிவத்தை அங்கே காண்கின்றோம். அந்தச் சாரலின் தூறல்களில் அவரை மனதார வாழ்த்துகின்றோம்.

அவரின் அயராத சமூகச் சேவைகளையும் தளராத தன்முனைப்புத் தூண்டுதல்களையும் தமிழ்கூறும் நல்லுகம் என்றென்றும் நினைத்துப் பார்க்கும். 



அன்னாரின் சீரிய செயல் ஆற்றல்களைச் சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக ரீதியில் பற்பல விருதுகளைப் பெற்றவர்.

மலேசியத் தமிழர்ச் சரித்திரச் சாதனை பெண்மணி சரோஜினி

பேராக் மாநிலத்தின் சமூக சேவை, கலை, இலக்கியத் துறைகளின் பெண்மணிச் செம்மல்

மலேசிய இந்தியர்களின் மாதர்குல மாணிக்கம்

தென்கிழக்காசியச் சமூக மேம்பாட்டுச் சாதனைப் பெண்

ஆசிய நாடுகளின் முன்னோடி சாதனைப் பெண்மணி

அனைத்துலகச் சமூக சேவை ப்பெண்மணி

இப்படி பற்பல விருதுகள். பற்பல பரிசுகள். பற்பல புகழாரங்கள்.



1970-ஆம் ஆண்டுகளில் இருந்து இது வரையிலும் மலேசிய தெய்வீக வாழ்க்கை சங்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டவர். சமயம் சமூகம் தெய்வீகம் என தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அறப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவரைப் பாருங்கள். லேசாய் சுருக்கங்கள் விழுந்த முகம். அதில் லேசாய் தெரிகின்ற மலர்ச்சி. கண்களைச் சுருக்கி உற்று நோக்கும் இளமையின் பரவசம். வானில் திரண்ட மழை மேகங்கள், பூமிக்கு மெதுவாய்ப் பரிசளிக்கும் வெள்ளி மணித் தூறல்கள் போல சின்னதாய்ப் புன்னகை. அதுவே பெரும் பொன்னகை.

வறட்சியாய் இருக்கும் விளை நிலத்தில் உயிர் நீராய், ஜீவ அமுதமாய் விழுகின்ற மழைச் சாரல் போல அந்தப் புன்னகை அழுத்தமாய்ப் பரிணமிக்கின்றது. 



அப்புறம் அதற்கு மேலும் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்த புன்னகைத் தூரல்கள். இந்த நிமிடம் இதைவிட சந்தோஷம் எதுவுமே வேண்டாம் என்கிற நிறைவின் பிரதிபலிப்புகளில், மலர்ச்சியின் மனிதச் சாரல்கள். கண்களில் கசிகின்ற கருணை நேயங்கள். அத்தனையும் மனித நேயத்தின் மறுபக்கங்கள்.

அவருக்கு நிறையவே புகழ்மாலைகள். அந்தப் புகழ்ச்சியில் பந்தா இல்லை. பணம், படிப்பு, புகழ், அந்தஸ்து இவற்றை எதையும் பார்க்காத நல்ல ஒரு பெண்மணி.

மலேசிய இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெண்மணி. இவரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

நிறையவே சமூகச் சேவைகள் செய்தவர். பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறார். அவரை நான் சந்தித்தும் வியந்து போனேன். 



இப்படி பல அரிய சமூகச் சேவைகள் செய்தவர் எவருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறாரே என்று மலைத்தும் போனேன். இவரை தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

அவரின் சமூகச் சேவைகளைப் பற்றி எழுதினால் ஏடு கொள்ளாது. அவற்றில் சிலவற்றை நினைவு கொள்வோம். Universal Peace Federation எனும் அனைத்துலக அமைதி இயக்கம் இவரை 2007-ஆம் ஆண்டில் அமைதித் தூதராக நியமித்தது. அதன் வழி பல நாடுகளுக்குச் சென்று அமைதிப் பரப்புரைகள் செய்து இருக்கிறார்.

அதன் பின்னர் அதே ஆண்டு டத்தோ வீரசிங்கம் தலைமையில் அவருக்கு சிறப்பு விருது நிகழ்ச்சி ம.இ.கா.வின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பேராக் மாநில தோக்கோ பெண்மணி (Tokoh Wanita Negeri Perak) எனும் சிறப்பு விருது வழங்கப் பட்டது. 



இதற்கு முன்னர் பேராக் மாநில சுல்தான் அஷ்லான் ஷாவின் சகோதரி டத்தோ ஸ்ரீ யோங் சோபியா அவர்கள் 2005-ஆம் ஆண்டில் மிகச் சிறந்த அன்னையார் (Ibu Cemerlang) எனும் விருதை வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பேராக் இந்திய முஸ்லீம் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

2016-ஆம் ஆண்டில் மலேசிய மணிமன்றப் பேரவை இவருக்கு ‘தங்கப் பெண்’ எனும் விருதை வழங்கிச் சிறப்பித்து உள்ளது. இவருடைய சேவைகள் பற்றியும் இவரின் தன்னார்வ முனைவுகள் பற்றியும் நாளையும் தெரிந்து கொள்வோம்.

*மலாக்கா முத்துக்கிருஷ்ணன்*

(தொடரும்)