நீல உத்தமன் புகழாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் புகழாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

நீல உத்தமன் புகழாரம்

சிங்கப்பூரை நீல உத்தமன் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நீல உத்தமன் தான் சிங்கப்பூருக்குச் சிங்க ஊர் என்று பெயர் வைத்தவர். சிங்கப்பூர் வரலாறும் சிதைவு படாமல் அவரைப் பற்றி சித்திரம் பேசுகிறது.


சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகி எனும் ஒரு சிற்றரசர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். 1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதன் பின்னர் சிங்கப்பூரில் நீல உத்தமனின் ஆட்சி. அப்போது சிங்கப்பூர் சின்ன ஒரு மீன்பிடி கிராமம். கடல் கொள்ளையர்களின் உறைவிடம். அப்போது அது ஒரு பட்டினம் அல்ல. ஆக தெமாசிக் என்பதைச் சிங்கப்பூர் என மாற்றிக் காட்டியவர் நீல உத்தமன். 


சிங்கப்பூர் மக்களும் அவரை மறக்கவில்லை. அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் சீரும் சிறப்புமாய்ச் செய்து வருகிறார்கள். போதுமான மதிப்பு மரியாதைகளைக் கொடுத்து வருகிறார்கள்.

அஞ்சல் தலை வெளியீடு செய்வதில் இருந்து பள்ளிக்கூடம், அருங்காட்சியகம் கட்டுவது வரை பல்வேறு சிறப்புகளைச் செய்து இருக்கிறார்கள். திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் The Hunt for the Red Lion எனும் தலைப்பில் ஓர் ஆவணப் படம் தயாரித்து நீல உத்தமனுக்குப் பெருமை செய்தார்கள். வரலாற்றுப் பாட நூல்களில் அவரை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்து இன்றும் புகழாரம் செய்கிறார்கள். சிங்கப்பூர் நூல்நிலையங்களில் அவரைப் பற்றி குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லித் தருகிறார்கள்.

ஆனால் மற்ற இடத்தில் அப்படியா நடக்கிறது. மலேசிய இந்தியர்களின் காலச் சுவடுகளை எல்லாம் சிதைத்துச் சின்னா பின்னமாக்கி வருகிறார்கள். காட்டை அழிப்பது போல புல்டோசர் போட்டு இந்தியக் கலாசாரங்களைச் சகட்டு மேனிக்கு அழித்து அடையாளம் தெரியாமல் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.

நம் காலச்சுவடுகளைப் பழிக்கும் அவர்களை குறை சொல்ல வேண்டாம். ஏன் என்றால் அவர்கள் அப்படி செய்வதால் தான் நமக்குள் ஓர் ஆழமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மலேசிய இந்தியர்களின் வரலாறு ஒரு பக்கம் குழி தோண்டிப் புதைக்கப் படுகிறது. பரவாயில்லை. நாங்கள் ஒரு பக்கம் தோண்டி எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

மேலும் மேலும் கூடுதலான சான்றுகளைத் தேடிப் பிடித்துப் போராட்டம் செய்து வருகிறோம். ஆக ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையிலும் நம்முடைய இந்தப் போராட்டம் தொடரும். 

2007ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் *நீல உத்தமனின் நீள் பயணம்* (Legenda Singapura - Sang Nila Utama's journey) எனும் ஒரு நாடகக் காவியத்தையும் அரங்கேற்றம் செய்தார்கள். அந்த நாடகத்தில் இருந்து சில காட்சிகள்...

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.