சஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஜூன் 2016

சஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு

கொளுந்து விட்டு எரிகிற தீயின் எச்சம். அதைச் சாம்பல் என்கிறோம். அந்தச் சாம்பலில் நீரு பூத்து தகிக்கும். பார்த்தால் தெரியாது. தொட்டால் சுடும். அதே போலத் தான் கப்பலேறி வந்த சஞ்சிக்கூலிகளின் எச்சங்களும் மிச்சங்களும்.

நம்முடைய பெற்றோர் தாத்தா பாட்டிமார்களும் அந்தச் சஞ்சிக்கூலிகளின் எச்சங்கள் தான். அதாவது அவர்களின் சாம்பல்கள். இதை முதலில் மறந்துவிட வேண்டாம்.

இல்லை என்று மறுத்துப் பார்க்கலாம். மறுத்துப் பேசலாம். எப்படிப் பார்த்தாலும், கடைசியில் அங்கேதான் வந்து நிற்க வேண்டும். இப்போது பணம், காசு, புகழ், செல்வம், செல்வாக்கு, அதிகாரம், ஆணவம், அகம்பாவம் இத்யாதி இத்யாதி என்று சகல வைபோகங்களும் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு தலைமுறையாகப் பின்னோக்கிப் போய் பாருங்கள்.

கடைசியில் ரஜுலா கப்பலுக்கு முன்னால் போய் தான் கைகட்டி நிற்க வேண்டி இருக்கும். ரோணா, அண்டோரா, ஜல கோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் போன்ற கப்பல்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. அங்கே தான் நம்முடைய பூர்வீகம் சுவர் இல்லாத சித்திரங்களாகத் தெரிய வரும். ஜல உஷா என்பது 1952-இல் மலாயாவுக்கு வந்து போன கப்பல்.

விமானச் சேவைகள் இல்லாத காலத்தில்

அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் சஞ்சிக்கூலியின் வாரிசுகள் இல்லை என்று சிலர் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு கலர் கலராய்ப் பெருமை பேசிக் கொள்ளலாம். நல்லது. பேசிவிட்டுப் போகட்டும். விமானச் சேவையே இல்லாத காலத்தில் அவர்களின் மூதாதையர்கள் மலாயாவுக்கு எப்படி வந்தார்களாம். அதைக் கேட்டுப் பாருங்கள். என் மேல் கோபப்பட வேண்டாம்.

இமயமலையில் இருந்து இறக்கைக் கட்டிப் பறந்து வந்தார்களா. இல்லை போர்னியோ களிமந்தான் காடுகளில் தப்பித்து வந்தார்களா. இல்லை அந்தமான் தீவில் இருந்து நீச்சல் அடித்து வந்தார்களா. இல்லை பர்மா சயாம் காடுகளில் புலிகளை முறத்தால் மொத்தி விட்டு வந்தார்களா. கட்டுச் சோறு கூட்டாஞ் சோறு ஆக்கிச் சாப்பிட்டக் கதைகளை மறந்து விட்டு பெருமை பேசக் கூடாது.

ஒரு சிலர் வியாபாரம் செய்ய வந்தார்கள். குஜாராத்தியர்களைச் சொல்லலாம். மற்ற சிறு சிறுச் சமூகத்தவர்களையும் சொல்லலாம். அவர்களும் சஞ்சிக்கூலிகளின் பட்டியலில் தான் சேர்க்கப் படுகிறார்கள். ஏன் தெரியுமா. நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறும் போது வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கப்பல் ஏறவே முடியாது. விடவும் மாட்டார்கள்.

ஒப்பந்தக் கூலி முறை ஆவணத்தில் கையெழுத்துப் போடச் சொல்வார்கள். அந்த இடத்தில் மலாயாவில் இருந்து வந்த கங்காணியும் கையெழுத்துப் போட வேண்டும். அப்புறம் தான் உங்களைக் கப்பலிலேயே ஏற விடுவார்கள். இந்திய முஸ்லீம் சமூகத்தவர்களில் சிலருக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.

இந்த இடத்தில் தான் இந்தியர்களின் புலம்பெயர்வு வந்து நிற்கிறது. ஆக, சஞ்சிக்கூலிகளின் எச்சங்களில் அப்போது நீரு பூத்தது. இப்போது அந்த எச்சங்களில் நீர் தெளிக்கப்பட்டு போர்வை போர்த்தப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இன்னமும் தகித்துக் கொண்டு தான் இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன்.

மலாயாவுக்கு கப்பலேறி வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி வந்த அந்தத் தமிழர்களை இந்த உலகம் இந்தியர்களாகத் தான் பார்க்கிறது. தமிழர்களாகப் பார்க்கவில்லை. ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் "டயஸ்போரா' (Diaspora) என்று அழைப்பார்கள். 2015ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி வெளிநாடுகளில் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். (சான்று: http://indiandiaspora.nic.in/)

புலம்பெயர் தமிழர்கள் யார்

இந்தியன் டையஸ்போரா (Indian Diaspora) எனும் இந்தியர்களின் புலம்பெயர்வை முதலில் தெரிந்து கொள்வோம். 1830-களில் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நலிந்த பிரிவினர். 1834-க்கும் 1937-க்கும் இடையே அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல் கடந்து சென்றுள்ளனர். அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மட்டுமே மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்தனர்.

புலம்பெயர் தமிழர் என்று அழைக்கப் படுகிறவர்கள் இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ரீயூனியன் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ், சீசெல்ஸ், பிஜி, கயானா, மியான்மார், டிரினிடாட் தொபாகோ, பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள். 2010 புள்ளிவிவரங்கள் (சான்று: https://en.wikipedia.org/wiki/Non-resident_Indian_and_person_of_Indian_origin)
  • United States - 3,443,063
  • Saudi Arabia - 3,000,000
  • Malaysia - 2,088,000
  • Nepal  2,000,000
  • United Kingdom - 1,451,862
  • Canada -1,214,110
  • South Africa -1,286,930
  • Myanmar - 1,100,000
  • Mauritius - 882,220
  • Oman - 670,000
  • Kuwait - 579,390
  • Sri Lanka - 551,500
  • Qatar - 545,000
  • Trinidad and Tobago - 468,500
  • Australia - 390,894
  • Singapore - 351,700
  • Bahrain - 350,000
  • Guyana - 320,200
  • Fiji - 313,798
  • Réunion - 220,000
  • Netherlands - 215,000
  • Thailand - 150,000
  • Suriname - 140,300
  • Indonesia - 125,000
  • Italy - 120,000
  • Yemen - 111,000
  • New Zealand - 160,000
  • Kenya - 100,000
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த இடங்களுக்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர். பிற பூர்வீக இனத்தவருடன் ஒன்றரக் கலந்தும் விட்டனர். எஞ்சிய இந்தியர்கள் சம காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தனர். புராதன மரபு உரிமைகளில் இவர்களின் அடையாளங்கள் தெரிய வருகின்றன. அந்த அடையாளங்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திலும் வேரூன்றி உள்ளன.

தற்சமயம் உயிர்த் துடிப்பான ஓர் இந்தியக் கலாசாரம் உலகளாவிய நிலையில் நிலவி வருகின்றது. தொடக்கக் காலங்களில் குடியேறிய இந்தியர்களைப் பற்றிய விவரங்கள் சரியான முறையில் ஆவணப் படுத்தப்படவில்லை. அது ஒரு வேதனையான செய்தி. ஆக, நம்மால் முறையாக ஆய்வு செய்து ஒரு தீர்க்கமான முடிவிற்கும் வர முடியவில்லை.

மலேசியாவைப் பொருத்த வரையில் மலேசிய இந்தியர்களில் 81 விழுக்காட்டினர் தமிழர்களாகும். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். அந்த மலேசிய இந்தியர்களின் பட்டியலில் வங்காளிகள், சிந்திகள், குஜராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்களும் இணைகின்றனர்.

மலேசிய அரசாங்கத்தின் சலுகைகள்

பாகிஸ்தானியர்களும் மலேசிய இந்தியர்களின் பட்டியலில் சேர்க்கப் படுவது தான் ஒரு வேடிக்கையான செய்தி. மலேசிய அரசாங்கத்தின் சலுகைகளும் கல்விக் கடன் உதவிகளும் உயர்க் கல்விக்கானத் தேர்வு முறைகளும் மலேசிய இந்தியர்கள் எனும் அடிப்படையில் தான் அவர்களுக்கும் சேர்த்து ஒதுக்கீடுகள் செய்யப் படுகின்றன. அதே மாதிரி மற்ற அனைத்துச் சமூகங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன.

வங்காளிகள், குஜராத்திகள், மலையாளிகள், தெலுங்கர்கள், இலங்கைத் தமிழர்கள் என தனியாகப் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. மனுபாரங்களில் இந்தியர்கள் என்றுதான் அவர்கள் குறிப்பிட வேண்டும். தனி ஒரு சமூகத்தின் பேரில் விண்ணப்பிக்க முடியாது. மனு செய்தாலும் செல்லுபடி ஆகாது.  

முன்னாள் பிரதமர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். 1947-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்தார். மனுபாரத்தில் இந்தியர் என்றுதான் பதிவு செய்து படிக்கப் போனார். (சான்றுகள்: (1) https://devology.wordpress.com/2009/11/29/tun-dr-mahathir-mohamed/ (2) https://forum.lowyat.net/topic/2692285/all )

இவரும் மலாயா இந்தியர்களின் பெயரில் தான் பதிந்தார். படித்தும் வந்தார். நல்லபடியாக படித்து நல்ல நிலைக்கு வந்தார். இப்போதைக்கு மலேசிய இந்தியர் மனங்களில் மறக்க முடியாத மனிதராகத் திகழ்ந்து வருகிறார்.

உலகளாவிய பின்னணி

1826-ஆம் ஆண்டு, இந்திய மாக்கடலில் இருக்கும் ரியூனியன் தீவுக் கூட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டனர். அதற்குப் பிரெஞ்சுக்காரர்கள் தான் முதன்முதலில் ஊதுபத்தி கொளுத்தி சாம்பிராணி போட்டனர். இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

ரியூனியன் தீவுகளுக்குப் போக வேண்டுமா. பிரச்சினையே இல்லை. ஒரு நீதிபதியின் முன்னால் போய் நிற்க வேண்டும். தன் சுய விருப்பத்தின் பேரில் அங்கு போக விரும்புவதாகச் சொல்லி சத்தியம் செய்ய வேண்டும். அவ்வளவுதான். பெரிய சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை.

இந்தா பிடி என்று வேலையைக் கொடுத்து விடுவார்கள். மாதச் சம்பளம் எட்டு ரூபாய். ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம். 1830 ஆம் ஆண்டுகளுக்குள் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து 3,012 இந்தியத் தொழிலாளர்கள் ரியூனியன் தீவுக் கூட்டத்திற்கு அனுப்பப் பட்டனர். வருடத்தைப் பாருங்கள். 1830. ஆக, 190 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழர்கள் ஆப்பிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து இருப்பது தெரிய வருகிறது.

மொரிசியஸ் தீவிற்குந்தியத் தொழிலாளர்கள்

இதே போல 1829-இல் மொரிசியஸ் தீவிற்கும் ஆட்களைக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் செய்யப் பட்டன. அவை தோல்வியில் முடிந்தன. இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை சரி செய்யப் பட்டது.

1834-ஆம் ஆண்டில், பிரிட்டனின் ஆளுமையின் கீழ் இருந்த பெரும்பான்மையான காலனித்துவ நாடுகளில் அடிமைத்தனம் ரத்து செய்யப் பட்டது. ஆப்பிரிக்க அடிமைகளின் விடுதலையைத் தான் சொல்கிறேன். அதனால் உலகளாவிய நிலையில் வேலைக்கு ஆள் கிடைக்காத ஒரு திண்டாட்ட நிலை.

ஆக, வேறு வழி இல்லாமல் இந்தியத் தொழிலாளர்களை மொரிசியஸ் தீவிற்கு கொண்டு சென்றார்கள். 1838-ஆம் ஆண்டுக்குள் மொரிசியஸ் தீவிற்கு 25,000 இந்தியத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப் பட்டனர்.

மொரிசியஸ் தீவு என்பது இந்து மாக்கடலில் மடகாஸ்கார் தீவிற்கு கிழக்கே இருக்கிறது. இன்னும் நானூறு மைல்கள் தள்ளி டியாகோ கார்சியா தீவு இருக்கிறது. எம். எச். 370 விமானம் கடத்தப்பட்டு இந்தத் தீவில் தான் பதுக்கி வைக்கப்பட்டதாக ஒரு வதந்தி. தெரியும் தானே. சாட்சாத்அந்தத் தீவுதான் இந்தத் தீவு. 

முதன்முதலில் மொரிசியஸ் தீவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்தார்கள். அடுத்து பிரெஞ்சுக்காரர்கள். அடுத்து வந்தது பிரிட்டிஷார். 1810-இல் இருந்து 1968 வரை மொரிசியஸ் தீவை, பிரிட்டிஷார் தங்கள் பிடியில் வைத்து இருந்தார்கள். வருடத்தைப் பாருங்கள். 1968. ஆக 150 வருடங்களுக்கு அந்தத் தீவு  பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து இருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் மொரிசியஸ் தீவிற்கு குடியேற்றம் செய்யப் பட்டனர். அப்போது இருந்துதான் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்குகிறது. அதுதான் சஞ்சிக்கூலிகளின் முதல் நகர்வு.

ரயத்துவாரி என்றால் என்ன

18-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தென் இந்தியாவின் ஆட்சியும் அதிகாரமும் பிரிட்டனின் கைகளுக்குள் வந்தன. 1858-ஆம் ஆண்டில், ஒட்டு மொத்த இந்தியாவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் வந்தது. அதற்கு முன்னர், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி செய்து வந்தது. இந்த ஆட்சி மாற்ங்களினால் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மைத் துறையில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன.

புதிய அரசாங்கம் வந்ததும் ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நிலக்கிழார்கள் உருவாயினர். அது என்ன ரயத்துவாரி. அப்படி என்றால் என்ன என்று சிலர் கேட்கலாம். பலருக்குத் தெரியாமலும் இருக்கலாம். அதையும் கொஞ்சம் விளக்கி விடுகிறேன்.

இன்னொரு விஷயம். இது என்ன மலாயா சஞ்சிக்கூலிகளைப் பற்றி எழுதப் போய் எங்கே எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறான் என்று நினைக்க வேண்டாம். சஞ்சிக்கூலிகளின் ஆணி வேருக்கே நாம் போக வேண்டி இருக்கிறது. தமிழர்கள் மற்ற மற்ற நாடுகளுக்கு ஏன் கொண்டு போகப் பட்டார்கள்; எப்படி கொண்டு போகப் பட்டார்கள் என்பதை நாம் முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் மலாயாவிற்குத் தமிழர்கள் வந்த கதையும் உங்களுக்குச் சரியாகப் புரியும். இந்தக் கட்டுரையும் ஒரு முழுமை அடைந்ததாகவும் இருக்கும்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் விவசாய நிலங்களுக்கு ஒரு வகையான வரி விதிக்கப்பட்டது. அந்த வரியே, கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குச் சிறந்த ஒரு வருவாயாக இருந்தது. அந்த வகையில் ஆங்கிலேயர்கள் பல இடங்களைப் பல மன்னர்களிடம் இருந்து பல சால்சாப்புகளைக் காட்டி கைப்பற்றியது. பயங்கரமான மோடி மஸ்தான் வேலைகள். தமிழக வரலாற்றில் அது ஒரு கறுப்பு அத்தியாயம்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் வருவதற்கு முன்னர், தமிழகத்தில் ஒவ்வோர் இடத்திற்கும் ரு வகையான வரி. அவை சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள் காலத்து வரிகள். ஆங்கிலேய அரசாங்கம் இந்த வரிகளைத் தொகுத்து ஓர் ஒழுங்கு முறைக்குக் கொண்டு வந்தது. குடிமக்கள் அரசாங்கத்திற்கு நேரடியாக வரி கட்டினால் போதும். வேறு வரிகளைக் கட்ட வேண்டாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அப்படி வந்த அந்த வரிக்குப் பெயர்தான் ரயத்துவாரி’. 

(சான்றுகள்)
(1) https://devology.wordpress.com/2009/11/29/tun-dr-mahathir-mohamed/
(2) http://moia.gov.in/accessories.aspx?aid=10
(3) http://www.themalaymailonline.com/malaysia/article/population-to-hit-30-million-today-statistics-department-says
(4) http://www.jstor.org/stable/2644086?seq=1#page_scan_tab_contents
(5) http://www.tribuneindia.com/news/nation/india-has-largest-diaspora-population-in-world-un/183731.html
(6) http://mha.nic.in/pdfs/oci-chart.pdf
(7) https://forum.lowyat.net/topic/2692285/all )