சுந்தர் பிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுந்தர் பிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூலை 2019

சுந்தர் பிச்சை

உலக மக்கள் கூகளில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உலக மக்களில் ஒருவரை அந்தக் கூகள் நிறுவனம் தேடி இருக்கிறது. தேடித் தேடிக் கடைசியில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவரைக் கண்டுபிடித்து இருக்கிறது. 



அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அதுவும் தன் நிறுவனத்திலேயே வேலை செய்கிறார் என்பது தெரிந்ததும் அதற்கும் வேலை கொஞ்சம் சுலபமாக முடிந்து விட்டது.

அவரையே இப்போது தலைவராக்கி அழகு பார்க்கின்றது. அந்த நிறுவனத்தின் பெயர் கூகள். தலைவரின் பெயர் சுந்தர் பிச்சை. வயது 46.

நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் என்ன செய்கிறோம். போய் கூகளில் தேடிப் பார்க்கிறோம். இல்லையா. ஒரு சின்னச் சந்தேகமாக இருந்தாலும் கூகளில் தேடுவது இப்போது எல்லாம் ரொம்பவும் வாடிக்கை. அந்த வகையில் கூகளைத் தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். சந்தேகம் வேண்டாம்.




கூகள் இல்லாமல் இணைய வாழ்க்கையே இல்லை என்கிற மாதிரி ஒரு நிலைமை உருவாகி விட்டது. கிண்டர்கார்டன் போகும் மழலையில் இருந்து குண்டர் கும்பல் விசுவாசிகள் வரை எல்லாருமே கூகளில் ஐக்கியமாகிப் போகிற காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கூகள் தேடல் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 700 - 1000 கோடி தேடல்கள் நடைபெறுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு. ஒவ்வொரு விநாடியும் 63,000 தேடல்கள். நம் பூமியில் இருப்பவர்கள் 7 புள்ளி 771 பில்லியன் மக்கள். இவர்களில் பாதி பேர் ஒவ்வொரு நாளும் கூகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். 




இன்னும் ஒரு கொசுறுச் செய்தி. ஒவ்வொரு நாளைக்கும் இந்த உலகில்

360,000 குழந்தைகள் பிறக்கின்றார்கள்

151,600 பேர் இறக்கின்றார்கள்


இப்போதைய உலக மக்கள் தொகை 7,771,576,923 (2018 புள்ளி விவரங்கள்). இதுவும் கூகளில் இருந்து சுடப் பட்டது.

(சான்று: http://worldpopulationreview.com/continents/world-population/)




சுந்தர் பிச்சையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூகள் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த உலகில் பல கணினித் தொழிநுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் இருக்கின்றன. 

அவற்றில் தலையாய நிறுவனத்தின் பெயர் கூகள் (Google). தமிழில் கூகள், கூகல், கூகில், கூகிள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். 




கூகள் என்பதே சரியான சொல். விக்கிப்பீடியாவும் அதையே பயன்படுத்தி வருகிறது. ஆகவே மலேசியாவில் உள்ள ஊடகங்கள், கூகள் எனும் சொல்லையே பயன்படுத்த வேண்டும். நம்முடைய கருத்து. சரி. உலகின் தலையாய 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வருகிறது. அவற்றின் வருமானம் அமெரிக்க டாலர்களில் (கோடி) உள்ளன. இவை ஆகக் கடைசியாகக் கிடைத்த 2018 டிசம்பர் மாதப் புள்ளி விவரங்கள்.


சரி. கட்டுரைக்கு வருவோம். இந்தப் பட்டியலில் கூகள் நிறுவனம் மட்டும் தான் எந்தப் பொருளையும் விற்காமல் சம்பாதிக்கும் நிறுவனமாகும்.

மற்றவை தங்களின் பொருட்களை விற்பனை செய்து காசு பார்க்கின்றன. அதனால் மூலதனம் போடாமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு சம்பாதிக்கிற ஒரே நிறுவனம் என்றால் அது இந்தக் கூகள் நிறுவனம் தான்.

உலகம் முழுமைக்கும் இந்த நிறுவனத்தில் இப்போதைக்கு 98,771 பேர் வேலை செய்கின்றனர்.


கூகள் நிறுவனம், அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் சக்கை போடு போடுகிறது. கூகள் தேடுபொறி இயக்கமே இதன் முதன்மையான சேவை.

1998-ஆம் ஆண்டில் லாரி பேஜ்; சேர்ஜி பிரின் எனும் இரு நண்பர்களால் விளையாட்டுத் தனமாக தொடங்கப் பட்ட நிறுவனம் தான் இந்தக் கூகள். 1996-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது டாக்டர் பட்டத்திற்காக உருவாக்கிய ஆய்வேடு தான் இந்தக் கூகள். இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. 

1998-ஆம் ஆண்டு சூசன் வோசிசிக்கி எனும் சக மாணவியின் வீட்டில், கார் நிறுத்தும் ஒரு கொட்டகைக்குள் கூகள் தொடங்கப் பட்டது. இந்தச் சூசன் வோசிசிக்கி தான் இப்போது யூ டியூப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். இவருக்கு வயது 47.


உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மலேசிய பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டி முடிக்கலாம்.

இவ்வளவு பணம் இருந்தாலும் தன் பெரிய மகளுக்கு வெறும் 200 டாலர் மடிக்கணினியை வாங்கிக் கொடுத்தாராம். ஒரு கோடீஸ்வரின் மகள் என்கிற நினைப்பு தன் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று சொல்கிறார்.   

சரி. கூகிள் விசயத்திற்கு வருவோம். உலகின் தகவல்களை ஒருங்கு இணைப்பதே அதன் தலைமைச் செயல்பாடாகும். முதன்முதலில் அதை உருவாக்கிய போது அதற்கு பேஜ் ரேங்க் என்று பெயர் வைத்தார்கள். பேக்ரப் எனும் மற்றொரு பெயரும் உண்டு. பின்னர் கூகூல் (Googool) என்று பெயர் மாறியது. இப்போது கூகள் என்று ஊர் உலக மக்களுக்குத் தெரிந்த பெயராகி விட்டது.
 

கூகள் இணையத் தேடல், கூகள் மெயில் (GMail), கூகள் டாக்குமெண்டுகள் (Google Documents), கூகள் பிளஸ் (Google Plus), கூகள் டாக் (Google Talk), கூகள் மேப்ஸ் (Google Maps), கூகள் நியூஸ் (Google News), பிளாக்கர் (Blogger), யூ டியூப் (YouTube) போன்ற பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற யூ டியூப் சேவையும் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இன்னும் ஒரு விசயம். பிளாக் (Blog), பிளாக்கர் (Blogger), பிளாக்ஸ்பாட் (Blogspot) என்று சொல்கிறார்களே அந்த இலவச வலைப்பதிவுச் சேவைகளையும் இந்தக் கூகள்தான் இலவசமாக வழங்கி வருகிறது. பிளாக்கர் என்பதை வலைப்பதிவு என்று அழைக்கிறோம்.

சரி. சுந்தர் பிச்சையைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இந்தியர்களின் பங்கு மலைப்பையும் வியப்பையும் தருகிறது.
 

அமெரிக்காவின் பெரிய பெரிய நிறுவனங்கள், இந்தியர்களைத் தான் அவற்றின் தலைமை பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றன.

காரணம் என்ன என்று கேட்டால் கணினித் துறையில் இந்தியர்கள் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறார்கள்; ரொம்பவும் விசுவாசமானவர்கள்; ரொம்பவும் நம்பிக்கையானவர்கள் என்றும் புகழாரம் பாடுகின்றன.

இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை வேலைக்கு வைக்கலாம். (பெயர் வேண்டாம்). பதவிக்கு வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வேலை செய்யும் கம்பெனியைப் போல இன்னொரு சொந்தக் கம்பெனியைத் திறந்து விடுவார்கள்.

கம்பெனியின் ரகசியங்களைக் கடத்திக் கொண்டு போவார்கள். அதனால் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். விடுங்கள். அது நம்ப பிரச்சினை இல்லை.
 

கூகள் நிறுவனம் தன்னுடைய சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையைத் தலைமைச் செயல் அதிகாரியாக அறிவித்தது. உலகமே வியந்து போனது.

ஏற்கனவே அந்தப் பதவியில் கூகளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் தான் இருந்தார்கள்.

சுந்தர் பிச்சை தான் கூகள் நிறுவனத்தில் அண்ட்ராய்ட், கூகள் குரோம் ஆகிய பிரிவுகளுக்குத் தலைவர்.

2004-ஆம் ஆண்டு கூகள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கெட்டிக்காரர். இண்டர்நெட் எக்ஸ்புரோர், பயர் பாக்ஸ், ஒப்பேரா போன்ற உலவிகள் இருக்கும் போது கூகள் குரோமை அறிமுகப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தவர்.
 

இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான உலவி எனும் பெயரில் கூகள் குரோம் முதல் இடத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

உலகில் கோடிக் கோடியான திறன்பேசிகள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு திறன்பேசிகளில் அண்ட்ராய்ட் செயலாக்கம் இடம் பிடித்து இருக்கிறது. அவற்றுக்குள் கூகள் குரோமை இழுத்துச் சென்றவர் சுந்தர் பிச்சை என்கிற அழகிய தமிழர்தான்.

டுவிட்டர், மைக்ரோசாப்ட், டெலிகிராம், மைசாட் போன்ற நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக பல முறை முயற்சிகள் செய்தன. திறமைசாலிகளை இழுத்துப் போடுவதில் கெட்டிக்கார நிறுவனங்கள். அவை ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும்  மிகை ஊதியமாகச் சில பல கோடி டாலர்களைக் கொடுத்து சுந்தரைக் கூகள் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டது.

சுந்தர் பிச்சை 1972-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். உத்தர பிரதேசம் கரக்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர். ஸ்டான்ட்பர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு. பின்னர் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

2004-ஆம் ஆண்டு கூகளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். கூகள் குரோம், கூகள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையே சாரும்.

அடுத்ததாக அண்ட்ராய்ட் செயல்பாட்டு நிரலிகளின் மேம்பாட்டுத் துறைக்குத் தலைமை தாங்கினார். அப்படியே ஜி-மெயில் மின்னஞ்சல் திட்டத்தையும் உருவாக்கித் தந்தார். அந்த வகையில் இவருடைய சேவைகள் உச்சத்திற்குச் சென்றன.

அதன் பின்னர் அண்ட்ராய்ட் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை கூகள் இவரிடம் வழங்கியது. நன்றாகவே செய்து முடித்தார்.

இன்னும் ஒரு விசயம். இந்த உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட்; கூகள். இந்த இரண்டிலுமே தலைமைப் பதவிகளை வகிப்பது இந்தியர்கள் தான்.

உலகின் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களுடைய பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகள் வியந்து பாராட்டுகின்றன.

பொதுவாகவே இந்திய நிர்வாகிகள் அனைவரும் எதிர்காலத்தைச் சார்ந்து கற்பனைக் கடலில் பயணிகின்றார்கள். உண்மையிலேயே அவர்களிடம் தீவிரமான தொழில் வளர்ச்சி சிந்தனைகள் மலிந்து பயணிக்கின்றன. இவர்கள் தான் அசாத்தியமான இலக்கை நோக்கிப் பீடு நடை போடுகின்றார்கள்.

எல்லைகள் விரிந்த அதி நவீனமான கணினி நிறுவனங்களையும் உருவாக்கித் தருகின்றார்கள் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் புகழாரம் பாடுகின்றது. அதைக் கேட்கும் போது இந்தியர்களாகிய நமக்கும் பெருமையாக இருக்கிறது.

உலகமே கூகளில் தேட, கூகள் தேடிய பொற்கலசமாகத் திகழ்கிறார் சுந்தர் பிச்சை. தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த சகோதரர் சுந்தர் பிச்சைக்கு நன்றிகள். வாழ்த்துகள்.