பேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூன் 2014

பேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம்

மீரா.ரத்தினவேலு, தஞ்சோங் மாலிம், பேராக்

கே: என்னுடைய மகள் படிவம் 4 படிக்கிறாள். அண்மைய காலமாக அவளுடைய அறையில் தனிமையாக இருப்பதையே விரும்புகிறாள். கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தோம். அவள் 'பேஸ்புக்'கில் தீவிரம் காட்டி வருகிறாள் என்பது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரம் செலவு செய்கிறாள். 'பேஸ்புக்'கின் கடவுச் சொல்லைக் கேட்கிறோம். கொடுக்க மறுக்கிறாள். 'பேஸ்புக்'கில் அவள் என்னதான் செய்கிறாள் என்று புரியவில்லை. அவளைத் திட்டி நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை. உங்களின் ஆலோசனை என்ன?



ப: Facebook என்பது பிருமாண்டமான ஒரு சமூக வலைத்தளம். இதை ஒரு நட்பு ஊடகம் என்றும் சொல்லலாம். உலகில் ஏறக்குறைய 1280 மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி எல்லோருமே, தங்கள் மனதில் பட்டதை 'பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்கிறார்கள். 

ஒரே வீட்டில் இருந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்துப் பேசுவதற்குகூட நேரம் இல்லையாம். அந்த அளவிற்கு மேல்நாடுகளில் 'பேஸ்புக்' காய்ச்சல் சுனாமி வேகத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது.

மலேசியத் தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில், முன்பு 'பேஸ்புக்' காய்ச்சல் அடித்தது. அதுவே இப்போது பேய்க் காய்ச்சலாக மாறி வருகிறது. 'பேஸ்புக்' கணக்கு இல்லாதவரை ‘நீ நண்பன் இல்லேடா’ என்று சொல்லும் அளவுக்கு நிலைமையும் மோசமாகி வருகிறது. 

உங்கள் மகளுக்கு இப்போது 'பேஸ்புக்' காய்ச்சல் அடிக்கிறது. அது மட்டும் உண்மை. அவருடைய கணக்கைப் போய்ப் பார்த்தேன். அவருக்கு 1792 நண்பர்கள் இருக்கிறார்கள். எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் என்பதைக் கணக்குப் பண்ணிப் பார்க்க முடியவில்லை. அத்தனை பேரையும் அவருக்குத் தெரியுமா என்பது அவருக்கே தெரியாது.


சரி. அப்பாவாகிய நீங்கள் சொல்ல வேண்டியதை, நல்லபடியாகச் சொல்லித் திருத்த வேண்டியது உங்களுடைய கடமை. இப்போதுதான் உங்கள் மகளுக்கு காய்ச்சல் ஆரம்பமாகி இருக்கிறது. போகப் போகத்தான் உதறல் எடுக்கும். ஆக, அதுவே ஒரு பேய்க் காய்ச்சலாக மாறி வருவதற்குள், ஒரு நல்ல முடிவை எடுங்கள். உங்கள் மகளுக்கு இப்போது வயது 16.

எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் தடுமாறும் வயது. பள்ளியில் படிக்கும் வரையில் அவரை நீங்கள் கட்டுப் படுத்தலாம். 17 வயதைத் தாண்டியதும், தனிப்பட்டவரின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும். 

அவர் உங்களுக்குப் பிறந்தவளாக இருந்தாலும், ஒரு கட்டம் வரையில்தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியும். வயதுக்கு வந்த ஒரு பெண் பிள்ளையிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

1. ஒரு கால அட்டவணை போட்டு, ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று ஓர் அன்பான கட்டளை போடலாம். அன்பாக அமைதியாக்ச் சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாகக் கேட்பார்.

2. அந்த அன்புக் கட்டளை சரிபட்டு வரவில்லை என்றால் அடுத்ததாக இதைச் செய்யலாம். கணினியை எல்லாரும் பார்க்கும் படியாகப் பயன் படுத்த வேண்டும் என்று சொல்லி விடுங்கள். கணினியை அவருடைய அறையில் இருந்து எடுத்து, வீட்டில் ஒரு பொதுவான இடத்தில் வைத்து விடுங்கள்.

3. அதுவும் சரிபட்டு வரவில்லை என்றால் இணையத்தைத் துண்டித்து விடலாம்.

4. அதற்கும் அடுத்து, ஆகக் கடைசிக் கட்டமாக, கணினியை முடக்கி வைப்பது அதாவது  கணினிக்குப் போகும் மின்சாரத்தைத் துண்டித்து வைப்பது.

இவற்றை எல்லாம் செய்வதற்கு முன்னால், மகளிடம் மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். பொதுவாகவே, பெண்பிள்ளைகள் அப்பா பக்கம்தான் சாய்வார்கள். சின்ன வயதாக இருக்கும் போது, எந்தப் பெண்பிள்ளையும் அப்பா சொல்லை மிஞ்சிப் போக மாட்டார்கள். இது அனுபவத்தில் கண்ட உண்மை.