பத்துமலை முருகன் மலைக் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை முருகன் மலைக் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 மார்ச் 2019

பத்துமலை முருகன் மலைக் கோவில்

பத்துமலை முருகன் மலைக் கோவிலும் தமிழர்களும்
(நன்றி: மதியழகன் முனியாண்டி)

1. பத்துமலை முருகன் மலைக் கோவிலின் பொதுவான வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது தம்புசாமி பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி; மலையின் உச்சியில் உள்ள குகையில் தாம் குடிக் கொண்டிருப்பதாகவும், அங்கே தன்னை வந்து மக்கள் தரிசிக்க வேண்டும் எனவும் கனவில் கூறவும்; தம்புசாமி பிள்ளையும் பத்துமலையில் முருகன் கோவில் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தல வரலாறு



2. இது தவிர மேலும் சில வரலாற்று குறிப்புகள் உண்டு. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தம்புசாமி பிள்ளை கோலாலம்பூரில் நீதிமன்ற மொழிப் பெயர்ப்பாளராக ஜே.ஜி. டேவிட்சன் என்கிற ஆங்கிலேயருக்கு உதவியாக 1870-களில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.

3. இங்கு குடியிருந்த இந்திய மக்களுக்கு வழிப்பாட்டு தலம் ஒன்றை அமைக்க முயற்சிகள் எடுத்தார். ஆரம்ப காலத்தில் கோலாலம்பூர் கிள்ளான் ஆற்றாங்கரை ஓரத்தில் (செண்ட்ரல் மார்கெட் பின்புறம்) ஒரு சிறிய மாரியம்மன் கோவிலைக் கட்டிக் கொண்டார்கள்.

4. பிறகு 1875-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தான் அனுமதி கொடுக்க, ஜாலான் பண்டாரில் (Jalan Bandar) கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு கோலாலம்பூர் ரயில்வே ஆணையம் நிலம் ஒதுக்கி கொடுத்தது. கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை அந்த நிலத்தில் தம்புசாமி பிள்ளை கட்டி எழுப்பினார். அந்த கோவிலையும், கோவில் சார்ந்த நிலங்களையும் இந்தியர் குடியிருப்பு நிலம் என சிலாங்கூர் சுல்தானால் பிரகடனம் செய்யப்பட்டது.

5. கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு தம்புசாமி பிள்ளையின் தலைமையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் உருவானது.

6. தம்புசாமி பிள்ளையின் தலைமையில் செயல்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் பெரும் முயற்சியில் பத்துமலையில் முருகன் கோவில் 1890-ஆம் ஆண்டில் எழுப்பப் பட்டது. முதல் தைபூசத் திருவிழா 1891-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

7. 1902-ஆம் ஆண்டு தம்புசாமி பிள்ளை இறந்த பிறகு, அபோதைய ம.இ.கா. தலைவர் ஜான் திவி தலைமையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இயங்கியது. இந்த தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் மூன்று கோவில்கள் இருந்தன.

* கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்,

* பத்துமலை முருகன் மலைக் கோவில்,

* கோர்ட் மலை புள்ளையார் கோவில்.

8. இதற்கிடையில் 1928-ஆம் ஆண்டில் நிர்வாகத்தினரின் சிக்கலைத் தீர்ப்பதற்கு 5 செப்டம்பர் 1928-ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு, சிலாங்கூர் சுப்ரிம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

9. இரண்டு வருட வழக்குக்கு பின், 28 நவம்பர் 1930-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயம், பத்துமலை முருகன் கோவில், கோர்ட் மலை புள்ளையார் கோவில் மூன்றும் கோலாலம்பூர் மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் செயலபடும் என்றும், இது நீதிமன்ற நேரடி பார்வையின் கீழ் இருக்கும் என்று முடிவானது.

10. அதன் பிறகு 1930 முதல் இன்றுவரை இந்த தேவஸ்தானம் நீதிமன்ற பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, AGM நடத்தி, தேர்தல் வைத்து, கணக்கு அறிக்கைகளை Attorney General அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்து உள்ளதாக அறிந்தால் தலைமை நீதிபதி அலுவலகத்தில் முறையிடலாம்.

11. மாரியம்மன் தேவஸ்தானம் ROS என்கிற சங்க பதிவிலாகவில் பதிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சங்க பதிவிலாகவுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து கணக்கறிக்களை, ஆண்டு பொதுக்கூட்ட மினிட்ஸ்கள், தேர்தல் விபரம், செயலவை உறுப்பினர் விபரம் அனைத்தையும் Attorney General அலுவலகத்தில் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சட்டம்.

12. இதில் முறைகேடுகள் இருப்பதாக யார் புகார் கொடுக்கலாம்? தேவஸ்தான உறுப்பினர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். தேவஸ்தான உறுப்பினர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? தேர்தல் எப்படி நடத்தப்பட்டு தலைவர் மற்றும் ஏனைய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்?

13. இந்தப் பகுதியை நீங்கள் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் படிக்க வேண்டும். சில பெயர்களையும் அமைப்புகளையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பு முறை புரியும்.

14. மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் உபயக்காரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு உபயக்காரர்கள் கமிட்டியில் இருந்து மூன்று பேர்களை தேர்தெடுத்து தேவஸ்தான உறுப்பினர்கள் குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த மூவரில் தலைவராக இருப்பவர்களை நாட்டாமை என்பார்கள்.

15. 1970-ஆம் ஆண்டுகளில் 21 உயக்காரர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு உபயக்காரர்கள் கமிட்டியில் இருந்து மூவர் விதமாக 63 பேர்கள் தேவஸ்தானத்தில் உறுப்பினர்களாக இருப்பாரகள். தேவஸ்தானத்தின் மொத்த உறுப்பினர்கள் 63 பேர்கள்தான். முன்பு இவர்களை 63 நாயன்மார்கள் என்றும் அழைத்தார்கள்.

16. தற்போது 24 உபயக்காரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 72 உறுப்பினர்கள். இந்த 72 பேரில் ஒருவர்தான் தலைவராக வர முடியும். இந்த 72 பேர்கள் ஓட்டு போட்டு செயலவைக் குழுவினரையும் அறங்காவலர்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.

17. இந்த உபயக்காரர்கள் கமிட்டியில் நிறைய உறுப்பினர்கள் இருப்பார்கள். தேவஸ்தானத்தில் இவர்களுக்கு ஒரு AGM நடத்தி மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். முன்னம் சொன்னது போல், அந்த மூன்று உறுப்பினர்களுக்கு தலைவராக ஒரு நாட்டாமை இருப்பார்.

18. யார் இந்த உபயக்காரர்கள்? முன்பு காலத்தில் பத்துமலை கோவிலுக்கும்; மாரியம்மன் கோவிலுக்கும் திருவிழா சமயங்களில் கோவிலில் உபயம் எடுத்து செய்கிறவர்கள் உபயக்காரர்கள். இவர்கள் பொது மக்களிடமிருந்து பணத்தை திரட்டி உபயம் செய்வார்கள். மீதம் உள்ள பணத்தை கோவிலிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

19. அந்தக் காலத்தில் டெலிகோம், டி.என்.பி, வாட்டர் வொர்க்ஸ் (Syabas-Air Selangor), ரயில்வே யூனியன் போன்ற பெரும் நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் அவர்களின் நிருவனங்களில் பெயரில் உயபம் வழங்கினார்கள்.

20. டி.என்.பி போன்ற நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்களின் சேமிப்பு நிதியில் கட்டிடம் வாங்கி; அதில் இருந்து வரும் வாடகைப் பணத்தை இப்போது வரை கோவிலுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்று சில தகவல்கள் சொல்லப்படுகிறது. அதே போல் சபாஷ் நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்களின் சேமிப்பு நிதியிலிருந்து வரும் வட்டி பணத்தை கோவிலுக்கு கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காலத்தில் ஆரம்பித்த சில உபயக்காரர்களின் நிதிகள் இன்றும் தொடர்ந்து கோவிலுக்கு போய் கொண்டிருப்பதாக மேலும் தகவல்கள் சொல்கிறது.

21. தற்போது 24 உபயக்காரர்கள் இருக்கிறார்கள். பொறுமையாக இந்த உபயக்கார்களின் பெயர்களை படித்து பார்க்கவும்.

• சித்திரா பருவ உபயம்(தட்சிணத்தார்கள்)


• வைகாசி விசாக உபயம்(தேசிய மிசார தென்னிந்திய இந்துக்கள்)


• ஆனித் திருமஞ்சன உபயம்(பொது மராமத்து இந்துக்கள்)


• \ஸ்ரீ விநாகர சதுர்த்தி(டெலிகோம் இந்துத் தொழிலாளர்கள்)


• ஆவணி மூல உபயம்


• ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உபயம்


• ரயில்வே எஞ்சின்செட் காரேஜ்செட் உபயம்


• பால்காரர்கள் உபயம்

• ஆசாரிமார்கள் உபயம்


• எஞ்சினியரிங் புகைரதப் பகுதி தொழிலாளர்கள் உபயம்


• எண்ணை வியாபாரிகள் உபயம்


• வியாபாரிகள் உபயம்


• நகரவாழ்வு மக்கள் உபயம்


• ரைட்டர்கள் சரஸ்வதி உபயம்


• காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்


• மேசன்மார்கள் உபயம்


• சுண்ணாம்புக் காளவாயிலுள்ளவர்கள் ஊஞ்சல் உபயம்


• கோவில் அலுவலர்கள் விடையாத்தி உபயம்


• சந்த சஷ்டி உபயம்


• திருக்கார்த்திகை உபயம்


• திருவாதிரை உபயம்


• மாசி மகம் உபயம்


• ஸ்ரீ ராம நவமி உபயம்


• பங்குனி உத்திர உபயம்

22. இதில் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா மாசி மக உபய நாட்டாமையாக இருக்கிறார். முன்பு இவர் சபாஷ் (Selangor Water works-Syabas) நிருவனத்தில் வேலை செய்த போது; அந்த நிருவனத்தின் சார்பில் நடந்த உபயக் கமிட்டியில் மூவரில் ஒருவராகத் தேவஸ்தானத்தில் உறுப்பினராக இணைந்தார்.

23. வள்லல் சிதம்பரம், வள்ளல் கோடிவேல், ராஜா பி.பி.டி, சுப்பையா போன்றவர்களும் தேவஸ்தான தலைவராக இருந்து உள்ளார்கள். தற்போதைய தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜா எப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற விபரம் சரிவர தெரியவில்லை.

24. பல ஆண்டு காலமாக தேவஸ்தானத்தின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜா பதவி விலக வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பத்துமலை கோவில் சமூதாய சொத்து. அது சமூதாயத்தின் அடையாளம். அது பொது மக்களால் பொதுமக்களுக்கு உருவாக்கப்பட்டு, பொதுமக்காளால் நிருவாகிக்கப்பட்டு வந்தது. பத்துமலை தொடர்ந்து பொதுமக்களின் சொத்தாக இருக்க வேண்டும். அந்த கோவிலின் கணக்கறிக்கையைப் பொது மக்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று பல காலமாகப் பலரும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருகிறார்கள்.

25. டான்ஸ்ரீ நடராஜாவைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உபயக்காரர்கள் ஒன்றுகூடி முயற்சி எடுக்க வேண்டும். இல்லை என்றால் உபயக்காரர் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் Attorney General அலுவலகத்தில் முறையிடலாம்.

26. தற்போதைய நிலவரப்படி 72 உறுப்பினர்கள் கோவில் தேவஸ்தானத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் ஓட்டு போட்டு கோவில் தேவஸ்தான தலைவரைத் தேர்தெடுக்கிறார்கள். இந்த உபயக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களிடம் முறையிட வேண்டும்.

27. எப்படி உபயக்காரர்கள் கமிட்டியில் உறுப்பினர்கள் ஆவது? உபயம் நடக்கும் போது, அந்த உபயத்திற்கு 50 ரிங்கிட் அல்லது அதற்கும் மேல் கொடுத்து ரசிது வாங்கினால் நீங்கள் உறுப்பினர்கள். பிறகு அந்த கமிட்டி உறுப்பினர் என்கிற அடிப்படையில் நீங்கள் தேவஸ்தானத்தின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்கள். நீங்கள் கேள்விகள் எழுப்பலாம். உங்கள் கமிட்டியில் புகார் கொடுக்கலாம். அந்த கமிட்டி மற்றும் நாட்டாமை Attorney General அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம்.

28. டி.என்.பி, டெலிகோம், ரயில்வே, சபாஷ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள் தாராளமாக உபயத்துக்கு பணம் கட்டி உறுப்பினர்கள் ஆகலாம். யாரும் தடுக்க முடியாது.

29. நகரவாழ் மக்கள் உபயத்திற்கு செந்தூல், பத்துகேவ்ஸ் பகுதிகளில் வாழும் மக்கள் பணம் செலுத்தி உபய உறுப்பினர்கள் ஆகலாம். இந்த உபயத்தில்தான் தற்போது நடராஜா, ஏ.டி.குமாரராஜா போன்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

30. டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் வண்டிக்காரர்கள் உபயத்தில் பணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகலாம்.

31. பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முதலில் அதிகமாக பொது மக்கள் இந்த உபயத்தில் உறுப்பினர்களாக இணைந்துக் கொள்ள வேண்டும். பொது மக்கள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும். பிறகு உபய கமிட்டிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

32. இல்லை என்றால் பொது மக்கள், பொது மக்களால் தொடங்கப்பட்ட உபய கமிட்டிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் டெலிகோம், டி.என்.பி., சபாஷ், ரயில்வே, நகர மக்கள் உபயம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.

33. இப்படி சாலையில் நின்று கத்திக் கொண்டிருப்பதாலும்; கூட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பதாலும் எதுவும் நடக்காது. அரசு சார்புள்ள டி.என்.பி., டெலிகோம், சபாஷ், ரயில்வே போன்ற நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் ஓட்டு போட்டு பாரிசான் ஆட்சியை மாற்றி; பக்காத்தான் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். மக்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள்.

34. மக்கள் உபயக்காரர்கள் குழுவில் உறுப்பினர்கள் ஆவதை யாரும் தடுக்க முடியாது. தடுக்கும் அதிகாரமும் கிடையாது. உறுப்பினர்களாக விரும்பி உபயப் பணம் செலுத்துவதை யாரும் முடியாது என தடுக்க முடியாது. அப்படி தடுத்தால் அது குற்றம். தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். கேள்விகள் கேட்கலாம்.

34. தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கீழ் இருக்கிறது. அதனால் கோவிலைப் பற்றியும், கோவில் நிர்வாகத்தைப் பற்றியும் எழுதும் எழுதக் கூடாது; பேசக் கூடாது என்று சிலர் சொல்வதையும் பேசுவதையும் கேட்க முடிகிறது.

35. இது ஜனநாயக நாடு. யாரையும் யாரும் கேள்விகள் கேட்கலாம். கேள்விகள் எழுப்பலாம். விமர்சிக்கலாம். தவறு கிடையாது. தகவல்கள் குறித்து கேள்விகள் எழுப்புவதையும் விமர்ச்சிப்பதையும் சட்டம் தடுக்காது. சட்டம் தண்டிக்காது. ஆனால் நேரடி குற்றசாட்டு வைக்க கூடாது.

36. லெபோ அம்பாங், பெட்டாலிங் ஸ்ரிட் சாலைகளில் கோவிலுக்கு சொந்தமான கட்டடங்கள்; கடைகளை விற்று, அந்த பணத்தை நடராஜா முறைக்கேடாக பயன்படுத்துகிறார் என்று எழுதுவதோ பேசுவதோ தவறு. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி. நடராஜா வழக்கு தொடுக்கலாம். எழுதியவர்கள் தண்டிக்கப்படலாம்.

37. கோவிலுக்குச் சொந்தமான சில சொத்துக்கள் லெபோ அம்பாங்; பெட்டாலிங் ஸ்ரிட் பகுதியில் இருந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. அந்த சொத்துக்கள் என்ன ஆயின என்று கேள்விகள் எழுப்பலாம்.

38. ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் மேல் தேவஸ்தானத்திற்கு வருமானம் வருகிறது. தேவஸ்தானத்தின் சொத்துகளின் வாடகை பணம் மட்டும் பல லட்சம் வருகிறது. அந்தப் பணத்தை நடராஜா முறைகேடாகப் பயன்படுத்துகிறார் என்று எழுதக் கூடாது. சட்டம் உங்கள் மீது பாயும்.

39. தேவஸ்தானத்திற்கு 1 மில்லியனுக்கும் மேல் வருமானம் வருவதாக தகவல்கள் சொல்கின்றன. உண்மையா என்று உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள கேள்விகள் எழுப்பலாம். சட்டம் தண்டிக்காது.

40. தேவஸ்தானத்திற்கு 1 பில்லியன் (20,000 லட்சம்) சொத்துகள் இருப்பதாக The malaysian insider, The Edge business போன்ற இணைய ஊடகங்கள் முன்பு செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்தச் சொத்துகளை நடராஜா அபகரித்துக் கொண்டார் என்று எழுதக் கூடாது. தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு என்ன என்று கேள்விகள் எழுப்பலாம். அதன் நிலைப்பாட்டை விமர்சிக்கலாம்.

41. தேவஸ்தானத்தைப் பற்றி யாரும் பேசக் கூடாது; விமர்ச்சிக்கக் கூடாது என்பது எல்லாம் மக்களைப் பயமுறுத்தும் செயல். இது சட்டப்படி குற்றம். யாரும் யாரையும் பயமுறுத்த முடியாது. கேள்விகள் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது. விமர்சனங்கள் வைக்கலாம். சட்டப்படி குற்றம் கிடையாது.

43. பூச்சோங் முரளி மற்றும் தமிழ் மலர் மீது வழக்கு தொடரப்பட்டது என்பது நேரடி தாக்குதல்களுக்கான வழக்கு. நடராஜா என்கிற தேவஸ்தானத்தின் தலைவரை நேரடியாக குற்றம் சாட்டினார்கள். முகநூலிலும் பொது மக்கள் மத்தியிலும் அவதூறு பரப்புவதற்கு காரணமாக இருந்தார்கள். இதனால் அந்த வழக்கில் நடராஜா வெற்றி பெற்றார். ஆனால் கேள்விகள் கேட்கலாம். விமர்சனம் வைக்கலாம். யாரும் நம்மீது வழக்கு போட்டு தண்டிக்க முடியாது.

43. அதர்மம் பலமாக இருக்கிறது என்றால் தர்மம் அதைவிட பலமாக இருக்கும். தர்மத்தின் மரணப் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த உலகம் எத்தனையோ மாற்றங்களைப் பார்த்துள்ளது. தேவஸ்தானத்தின் மாற்றத்தையும் பார்க்க முடியும். மாற்றங்கள் நடக்கவில்லை என்றால் இந்த உலகம் இயங்கவில்லை என்று பொருள். உலகத்தின் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது. இதை உணராமல் பலரும் பல தவறுகளைச்ச் செய்து வருகிறார்கள். கடைசியில் அந்த குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.