தைப்பிங் மார்க்கெட் தைப்பிங் தமிழர்கள் - 1884 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தைப்பிங் மார்க்கெட் தைப்பிங் தமிழர்கள் - 1884 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன் 2020

தைப்பிங் மார்க்கெட் தைப்பிங் தமிழர்கள் - 1884

தமிழ் மலர் - 18.06.2020

பேராக், தைப்பிங் நகரில் உள்ள தைப்பிங் சந்தை (தைப்பிங் மார்க்கெட்) 1884-ஆம் ஆண்டு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. 1885-ஆம் ஆண்டு கட்டுமானங்கள் முடிவு பெற்றன. இந்தச் சந்தையைக் கட்டுவதற்கு தைப்பிங் தமிழர்கள் பெரும் பங்கு ஆற்றி உள்ளனர். பலருக்கும் தெரியாத உண்மை.



1880-ஆம் ஆண்டுகளில் தைப்பிங் வட்டாரத்தில் மிகப் பிரபலமான சீனத் தொழிலதிபர் நிங் பூ பி (Ng Boo Bee). தைப்பிங் வட்டாரத்தில் பல ஈயச் சுரங்கங்களின் உரிமையாளர். ஒரு கட்டத்தில் இவரிடம் 3000 பேர் வேலை செய்து இருக்கிறார்கள். இவர் வைத்து இருந்த காபித் தோட்டங்களில் தமிழர்கள் வேலை செய்தார்கள்.

மலாயாவின் முதல் இரயில் பாதை தைப்பிங் - போர்ட் வெல்ட் (Taiping – Port Weld railway) பாதையை அமைக்கும் குத்தகை வேலை நிங் பூ பியிடம் ஒப்படைக்கப் பட்டது. அந்த இரயில் பாதை போடுவதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஏற்கனவே கொண்டு வரப் பட்டார்கள்



1884-ஆம்; 1885-ஆம் ஆண்டுகளில் அந்த இரயில் பாதை நிர்மாணிக்கப்படும் போதே தைப்பிங் மார்க்கெட்டும் கட்டப்பட்டது. தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை நிர்மாணிப்பில் ஈடுபட்டு இருந்த தமிழர்களும் இந்த மார்கெட் கட்டுமானத்திற்கு கொண்டு வரப் பட்டார்கள். 

இரயில் பாதையில் போடுவதற்குப் பயன்படுத்தப் பட்ட பெரிய பெரிய இரும்புத் தண்டவாளங்களும் தைப்பிங் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப் பட்டன. பெரிய பெரிய தேக்கு மரங்களும் கொண்டு வரப் பட்டன. அந்தத் தண்டவாளக் கம்பிகளை நிமிர்த்தி தூண்களாக நிறுத்தி வைக்கும் பணிகளைச் செய்தவர்கள் தமிழர்கள் ஆகும்.



இந்த மார்க்கெட்டின் இரும்புத் தளவாடங்களைச் சீனத் தொழிலதிபர் நிங் பூ பி அன்பளிப்பாக வழங்கி உள்ளார். இவர் தமிழர்களின் உழைப்பில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தான், தைப்பிங் வட்டாரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டன.

தைப்பிங் சிம்பாங் தோட்டம் Taiping Simpang Estate; லாடர்டால் தோட்டம் (Lauderdale Estate); மாத்தாங் ஜம்பு தோட்டம் (Matang Jamboe Estate); பூங் லீ தோட்டம், மேற்சிஸ்டன் தோட்டம், மசாலை தோட்டம் போன்றவை. அந்தத் தோட்டங்களில் தமிழர்கள் பலரும் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.

தைப்பிங் நகரம் ஓர் அழகிய நகரம். பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம். அழகிய பூங்காக்கள்; அழகிய குளங்கள்; அழகிய நடைபாதைகள்; அழகிய கட்டிடங்கள்; அழகிய மனிதர்கள். பார்ப்பது எல்லாமே அங்கே அழகு அம்சவர்த்தனிகள். தைப்பிங்கிற்கு ’கிலியான் பாவு’ (Klian Pauh) எனும் மற்றொரு பெயரும் உண்டு. கிலியான் என்றால் ஈயச் சுரங்கம். பாவு என்றால் மாம்பழம். 



1992-ஆம் ஆண்டில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை (PLUS Expressways) அமைக்கப்பட்டது. அதில் தைப்பிங் - செலாமா நெஞ்சாலை அமைக்கும் துணைப் பிரிவு. அந்தப் பிரிவில் நில அளவாய்வாளர்களில் ஒருவராகப் பணியாற்றி உள்ளேன்.

சில மாதங்கள் அங்கு தங்கி இருந்த போது தைப்பிங் நகரம் என் வாழ்க்கையில் ஒன்றித்துப் போனது.

தைப்பிங் நகரத்தின் சுற்று வட்டாரங்களில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் பச்சைப் பசேல் வண்ணங்களை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறார். உண்மையிலேயே இயற்கையின் அழகுச் சீதனங்கள் நிறைந்த ஒரு ரம்மியமான நகரம். 



மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம். ஆண்டு முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாக இருக்கும். ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிக மிகச் சிறந்த இடம். சரி. அதன் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

19-ஆம் நூற்றாண்டில் கிந்தா பள்ளத்தாக்கில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. நிறைய ஈயச் சுரங்கங்கள் தோன்றின. அந்தச் சுரங்கங்களில் வேலை செய்வதற்கு ஆயிரக் கணக்கானோர் தைப்பிங்கிற்கு வந்தார்கள்.

குறிப்பாகச் சீனர்கள் அதிகமாகச் சீனாவில் இருந்து வந்தார்கள். தைப்பிங் சுற்றுப் பகுதிகள் மிகத் துரிதமாக வளர்ச்சி அடைந்தன. 



1870-ஆம் ஆண்டுகளில் சீனக் குடியேற்றவாசிகளுக்குள் பலத்த போட்டி மனப்பான்மை உருவாகியது. அவர்களுக்குள் கும்பல், கோஷ்டித் தகராறுகள் அதிகமாயின.

ஈய லம்பங்களில் தங்களின் பாதுகாப்புகளுக்காக இரகசியக் கும்பல்களைத் தோற்றுவித்துக் கொண்டார்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்த இரகசியக் கும்பல்களின் மோதல்கள் ஓர் உச்சக் கட்டத்தை அடைந்தன.

அதனால் ஆங்கிலேயர்கள் அந்த மோதல்களில் தலையிட்டுச் சமரசம் செய்ய வேண்டிய ஒரு நிலைமையும் ஏற்பட்டது. அது ஒரு வகையில் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக அமைந்தது. 



அதன் விளைவாகத் தைப்பிங் வட்டாரத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். அப்போது தைப்பிங் நகரம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களுக்குத் தலைப் பட்டணமாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் தைப்பிங்கைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்னர் டத்தோ லோங் ஜாபார் (Dato Long Jaffar) என்பவர் அதன் மாவட்ட ஆளுநராக இருந்தார்.

டத்தோ லோங் ஜாபார், தைப்பிங் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். 1848-ஆம் ஆண்டு லாருட்டில் ஈயம் கண்டுபிடிப்பதில் இவர் முக்கிய பங்காற்றியவர். 



லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. டத்தோ லோங் ஜாபாரிடம் லாருட் எனும் பெயரில் ஒரு யானை இருந்தது. அவர் பயணம் செய்யும் போது அந்த யானையையும் உடன் அழைத்துச் செல்வார்.

ஒரு நாள் அந்த யானை காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து அதுவே அவரைத் தேடி வந்தது. அதன் உடல் முழுமையும் சேறும் சகதியுமாக இருந்தது. அத்துடன் அதன் கால்களில் ஈயச் சுவடுகளும் காணப்பட்டன.

ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அந்த இடத்தைத் தேடிச் சென்றார்கள். பின்னர் அந்த இடத்திற்கு அந்த யானையின் பெயரான லாருட் (Larut) என்று வைக்கப் பட்டது.



மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருக்கின்றது. லாருட் எனும் இடத்திற்கு மலேசிய வரலாற்றில் தனி இடம் உண்டு. 1850-ஆம் ஆண்டு லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபாருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது.

1857-ஆம் ஆண்டில் பேராக் சுல்தான் இறந்ததும் பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள் ஏற்பட்டன. உட்பூசல்கள் தலைவிரித்தாடின. அரச குடும்பத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர்.

அப்போது தைப்பிங்கில் இருந்த இரு இரகசிய கும்பல்களில் ஆளுக்கு ஒரு தரப்பில் சேர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் பழி வாங்கும் படலத்தில் இறங்கினர்.



இருப்பினும் டத்தோ லோங் ஜாபாரின் மகன் நிகா இப்ராஹிம் என்பவர் லாருட் மாவட்டத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் மேலும் பல சீனர்களை அவர் லாருட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்தக் கட்டத்தில் தான் தைப்பிங்கில் இரு பெரும் சீனக் குழுக்கள் உருவாகின. ஒரு குழு ‘ஐந்து சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது. மற்றொன்று ‘நான்கு சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது.

‘ஐந்து சங்கங்கள்’ குழு கிலியான் பாவுவில் (Klian Pauh) உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது. ‘நான்கு சங்கங்கள்’ குழு கிலியான் பாருவில் (Klian Baru) உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது. 



‘ஐந்து சங்கங்கள்’ குழு சீன இனத்தில் ஹாக்கா பிரிவைச் சேர்ந்தது. அதை ஹோ குவான் அல்லது என்று அழைத்தனர். ‘நான்கு சங்கங்கள்’ குழு கண்டனீஸ் பிரிவைச் சேர்ந்தது. இதை சி குவான் என்று அழைத்தனர்.

கண்டனீஸ் பிரிவைச் சேர்ந்த ஹோ குவான் குழுவிற்கு கீ கின் கும்பல் என்றும் ஹாக்கா பிரிவைச் சேர்ந்த குழுவிற்கு ஹாய் சான் கும்பல் என்று அழைக்கப் பட்டது. இந்த இரு கும்பல்களும் இரகசியக் கும்பல்கள். இவை இரண்டுக்கும் இடையே அதிகாரப் போர் நடந்து வந்தது.

இந்தக் கால கட்டத்தில் அதாவது 1860-ஆம் ஆண்டுகளில் சீனாவில் தைப்பிங் புரட்சி நடைபெற்றது. 



சீனாவில் உள்ள தைப்பிங் வேறு. மலேசியாவில் இருக்கும் தைப்பிங் வேறு.
சீனத் தைப்பிங் புரட்சியில் இருந்து நிறைய ஹாக்கா சீனர்கள் ஆயிரக் கனக்கில் தப்பித்து மலேசிய ஈயச் சுரங்கங்களுக்கு ஓடி வந்தார்கள். அதனால் ஈயச் சுரங்கத் தொழில் லாருட் வட்டாரத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டது. இது பழைய கதை. மலாயா வரலாற்றில் ஒரு நிகழ்வு.

1900-ஆம் ஆண்டுகளில் தைப்பிங் நகரத்தின் ஈயச் சுரங்கத் தொழில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்தது. நாட்டின் முதல் இரயில் சேவை தொடங்கியது. தைப்பிங் நகரத்திற்கும் போர்ட்வெல்ட் என்று அழைக்கப் படும் கோலா செபாத்தாங் எனும் இடத்திற்கும் 1885 ஜூன் மாதம் முதல் தேதி மலேசியாவின் முதல் இரயில் பாதை போடப் பட்டது.

மலாயாவின் முதல் ஆங்கில நாளிதழ் தைப்பிங்கில் பிரசுரம் ஆனது. பேராக் மாநிலத்தின் முதல் ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. 



ஈய இருப்பு என்பது நிலையானது அல்ல. அதே போலத் தான் தைப்பிங்கிலும் நடந்தது. காலப் போக்கில் ஈய இருப்பு தீர்ந்து போனது. அதற்குப் பதிலாக இப்போது ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் வந்து விட்டன. பழைய வளப்பத்துடன் தைப்பிங் பீடு நடை போட்டு வருகின்றது. சரி. மீண்டும் தைப்பிங் மார்க்கெட்.

மலாயாவில் அமைக்கப்பட்ட முதலாவது பெரிய மார்க்கெட் தைப்பிங் மார்க்கெட் ஆகும். அதுவே இரும்புத் தண்டவாளங்களாலும்; மரத் தூண்களாலும் உருவாக்கப் பட்ட பெரிய மார்க்கெட் ஆகும்.

தைப்பிங் மார்க்கெட்டில் இரண்டு பெரிய கட்டடங்கள் உள்ளன. ஒன்று பழைய மார்க்கெட் (old market). 1884-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. மற்றொன்று புதிய மார்க்கெட் (new market). 1885-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. ஒவ்வொன்றும் 220 அடி நீளம். 60 அடி அகலம்.



தைப்பிங் மார்க்கெட், இந்த நாட்டில் மரத்தாலான மிகப்பெரிய கட்டிடம் என்றும் கூறப்படுகிறது. 1900-ஆம் ஆண்டின் கட்டட அமைப்பிற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய வரைக்கும் நன்றாகப் பராமரிக்கப் படுகிறது.

இந்த மார்க்கெட் திறக்கப்பட்ட போது ஒரு கட்டி மீன் 10 காசு. ஒரு கட்டி கீரை 2 காசு. ஒரு பீக்கள் மூட்டை அரிசி 10 மலாயா டாலர். ஆங்கிலேய அரசாங்கம் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தது.

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நகரங்களில் தைப்பிங் நகரம் முதன்மை வகிக்கின்றது. தமிழர்கள் சார்ந்த பல வரலாற்றுச் சுவடுகள் அங்கே பொதிந்து கிடக்கின்றன.



தைப்பிங் நகரில் தமிழர்களின் அடையாளமாக ஒருவர் உள்ளார். அவர்தான்  தமிழ்ச் சீலர் என புகழாரம் செய்யப்படும் பெரியவர் மா.செ. மாயதேவன். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முகவரியாக வாழ்ந்துக் கொண்டு இருப்பவர். அவரை நினைவுப் படுத்தாமல் இந்தக் கட்டுரை முழுமையாகாது.

தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர். தைப்பிங் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களின் முன்னோடியாகத் திகழ்கின்றவர். வாழ்த்துகிறோம் ஐயா.

இன்னும் ஒரு விசயம். தைப்பிங் மார்க்கெட் இப்போது அமைந்து இருக்கும் பகுதியில் இன்னும் அதிகமான ஈயம் இருக்கலாம் என்பது அண்மையத் தகவல். மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு ஈயத்தை எடுக்கும் திட்டங்கள் உள்ளதாகவும் வதந்திகள். எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


இந்த நாட்டின் கட்டுமானங்களின் தமிழர்கள் பங்களிப்புகள் நிறையவே உள்ளன. அந்தப் பங்களிப்புகள் மறைக்கப்படுவது மட்டும் அல்ல; ஒட்டு மொத்தமாக இரட்டடிப்புகளும் செய்யப் படுகின்றன.

ஆயிரம் மேகங்கள் வரலாம். ஆயிரம் மேகங்கள் போகலாம். ஆனால் ஆதவனை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதே போல இந்த நாட்டிற்காக உழைத்த தமிழர்களின் பங்களிப்புகளை மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது.

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Taiping,_Perak

2. The Singapore Free Press and Mercantile Advertiser (1884–1942), 28 April 1894, Page 11

3. https://www.britannica.com/place/Taiping-Malaysia

4. https://overseaschineseinthebritishempire.blogspot.com/2009/08/ng-boo-bee.html