கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மார்ச் 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4

தமிழ் மலர் - 18.02.2020

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டது. அதன் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,890-ஆக அதிகரித்து உள்ளது.
(இந்தக் கட்டுரையைப் பதிவு செய்யும் போது பலியானவர்களின் எண்ணிக்கை 10,050). உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. 



சீனாவின் ஹுபே (Hubei) மாநிலத்தின் தலைநகரம் வுகான் (Wuhan). அங்கு இருந்து தான் கடந்த டிசம்பர் மாத இறுதி வாக்கில் கொரோனா வைரஸ் (கோவிட் - 19) பரவியது.

தற்சமயம் சீனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. மற்ற மற்ற நாடுகளிலும் பரவிக் கொண்டு வருகிறது. சீனா மட்டும் அல்ல. உலகமே கதி கலங்கிப் போய் நிற்கிறது. அங்கே தானே நடக்கிறது… இங்கே இல்லையே என்று அசட்டையாக இருந்து விட வேண்டாம். நம் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு ரொம்ப நேரம் பிடிக்காது.

நேற்று 17.02.2020 ஒரே நாளில் வுகான் நகரில்  மட்டும் 100 பேருக்கும் மேல் உயிர் இழந்து உள்ளனர். 2000 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வுகான் நகரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் சீனர்கள் மட்டும் அல்ல ஏராளமான வெளிநாட்டு மக்களும் தங்கி இருக்கிறார்கள். அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே தனிமையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.




இன்னும் ஒரு வேதனையான செய்தி. வுகான் நகரில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த 1,700  மருத்துவ உதவியாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஆக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்ப முடியவில்லை. அப்பேர்ப்பட்ட கொடிய கிருமி. மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்தபடி தான் பணியாற்றுகிறார்கள். இருந்தாலும் பாதிக்கப் படுகின்றனர்.

உடலில் நுழையும் கிருமி மூன்று நான்கு நாட்கள் வரை அமைதியாக இருக்கும். அதனால் பாதிக்கப் பட்டவருக்கே தெரியாது. அதற்குள் பல கோடிகளாகப் பெருகி விடும். பாதிக்கப் பட்டவரின் உடலில் இருந்து பரவிக் கொண்டே இருக்கும்.

பொது மக்களில் 71,450  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மேலும், 2,048 பேருக்குப் புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 11,326 பேருக்கு மோசமான பாதிப்புகள் (Serious or Critical).




மலேசியாவில் 22 பேருக்குப் பாதிப்பு. அவர்களில் 9 பேர் குணம் அடைந்து விட்டனர். சரி.

உலகின் மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ரோபர்ட் ரெட்பீல்ட் (Dr. Robert Redfield
Director, US Centers for Disease Control and Prevention):

"இந்தக் கொரோனா வைரஸ் அடுத்த ஆண்டு வரை நம்முடன் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இறுதியில் இது ஒரு பருவகால காய்ச்சலாக மாறலாம். சீனாவில் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நிச்சயமாக இன்னும் கட்டுக்குள் அடங்கவில்லை."

ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் லிப்சிட் (Prof. Marc Lipsitch
Head, Harvard Ctr. Communicable Disease Dynamics):

"இது உண்மையில் ஓர் உலகளாவிய பிரச்சினை. ஒரு வாரம் அல்லது ஒரு சில நாட்களில் போகப் போவது இல்லை. இதைக் கட்டுப்படுத்துவது ரொம்பவும் கடினமாக உள்ளது. ஏன் என்றால், ஒருவர் நோய்வாய்ப் படுவதற்கு முன்பாகவே அவரிடம் உள்ள கிருமிகள் மற்றவர்களிடம் பரவிச் சென்று விடுகின்றன."




"ஆகவே மிக மோசமான ஒரு நிலைமைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நவீன காலங்களில் இது ஒரு மிக மோசமான நோயாக இருக்கலாம்."

சார்ஸ் கிருமிகளைப் பற்றி 2003-ஆம் ஆண்டில் ஆய்வுகள் செய்து, முதன்முதலில் உலகத்திற்குச் சொன்ன பேராசிரியர் நான்சான் சோங் (Prof. Nanshan Zhong, Medical Professor of Guangzhou Medical College).

"2020 ஏப்ரல் மாதத்தில் இந்த நோய் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். இந்த நோய் ஏன் இன்னும் இனம் காண முடியாத ஒரு தொற்று நோயாக இருக்கிறது. புரியவில்லை. இது உலகப் பிரச்சினை மட்டும் அல்ல. புரியாத உலகப் புதிராகவும் இருக்கிறது."

ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேபிரியல் லியோங் (Prof. Gabriel Leung, Chair of Public Health Medicine, Hong Kong University).

"முறைப்படி கவனிக்கா விட்டால் இந்த நோய் உலக மக்கள் தொகையில் 60% பேரைப் பாதிக்கும். கொரோனா நோய்க் கிருமிகளை வுகான் நகரில் இருந்து முழுமையாக அழிக்கவில்லை என்றால் சீனாவின் மற்ற மற்ற நகரங்களிலும் நோய் வெடிப்பு உண்டாகும். அதுவே உலகின் மற்ற நாடுகளிலும் பரவலாம்."




அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் இயான் லிப்கின் (Prof. W. Ian Lipkin, Epidemiology Director, Columbia University).

"இது ஒரு புதிய வைரஸ். இதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இதற்கான மருந்து இல்லை. இது இன்னும் மோசமான ஒன்றாக உருவாகாது என்பதை உறுதிப் படுத்த வேண்டும். அதனால் அனைவரும் கவலைப் படுகிறோம்."

"நம்மிடம் தற்போது தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் எதுவும் இல்லை. நோய்வாய்ப் பட்டவர்களைத் தனிமைப் படுத்துவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே நிவாரணம்."

இலண்டன் இம்பிரியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் நியால் பெர்குசன் (Prof. Niall Ferguson, Director, Institute for Disease, Imperial College, London)

"சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 50,000 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் வுகான் நகரத்தில் இந்த நோய் மிக உச்சத்திற்குப் போகலாம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனா முழுமைக்கும் பரவலாம். அதன்பிறகு பல நாடுகளிலும் இந்த நோயின் தாக்கங்களைப் பார்க்கலாம்." 




கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்பது மிக மிக நுண்ணியமான வைரஸ் கிருமி. ஆட்கொல்லி தொற்று நோய்க் கிருமி. இதுவரையில் நோய்த் தடுப்பு மருந்துகள்; தடுப்பு ஊசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தடுப்பு மருந்துகள் உருவாக்குவதற்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தற்காப்பு முயற்சியின் மூலமாகத் தான் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் கிருமி மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகின்ற கிருமி. மனித உடலில் பத்து பதினைந்து நாட்களுக்குப் பதுங்கி இருக்கும். மெதுவாகத் தன் சேட்டைகளைத் தொடங்கும். அதற்குள் பல கோடி கிருமிகள் வெளியே பரவிப் போய் இருக்கும். ஒரு செருகல்.

இந்தக் கொரோனாவினால் ஜப்பான் நாட்டு மன்னரின் பிறந்த நாள் விழாகூட ரத்து செய்யப்பட்டு உள்ளது.  ஜப்பானில் வழக்கமாக அந்த நாட்டின் மன்னர் பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஜப்பானிய மக்கள் வீதிகளில் பெரும் அளவில் கூடி மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு, மன்னர்  நருஹிட்டோ (Naruhito) பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப் படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசால் ஜப்பானில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சரி.

வைரஸ் என்றால் என்ன? அதைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பி.பி.சி. ஒளிபரப்புக் கழகம் வெளியிட்டுள்ள சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

வைரஸ் (Virus) என்பது மிகச் சிறிய புரதங்கள்; மரபணுப் பொருட்களைக் கொண்டது. உலகில் ஆயிரக் கணக்கான வைரஸ் இனங்கள் உள்ளன. வைரஸ் கிருமிகளால் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படுகின்றன.

தமிழில் தீநுண்மி அல்லது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம். 20-300 நானோமீட்டர் (Nanometer) அளவு கொண்டது. நானோமீட்டர் என்றால் ஒரு மீட்டர் நீளத்தின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும். அதாவது 0.000000001 மீட்டர்.

சில வகையான வைரஸ்கள் நேரடியாகவே ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும். எயிட்ஸ் HIV போன்ற வைரஸ், பாலியல் உறவு மூலமாகப் பரவுகிறது.

1892-ஆம் ஆண்டு திமித்ரி இவனோவ்சுகி (Dmitri Ivanovsky) எனும் ரஷ்ய நாட்டுத் தாவவியலாளர், புகையிலையைப் பாக்டீரியா அல்லாத ஒரு கிருமி தாக்குகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னார். அவர் கண்டுபிடித்த கிருமி தான் வைரஸ்.

வைரஸ் கிருமிகள் பரவுதலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண்டமிக் (Endemic); எபிடமிக் (Epidemic); பாண்டமிக் (Pandemic).

எண்டமிக் (Endemic) என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரத்திலும் பரவக் கூடியது. எடுத்துக்காட்டாக அம்மை நோயைச் சொல்லலாம் (Chickenpox). பெரியம்மை அல்ல. பெரியம்மை (Smallpox) நோயை 1977-ஆம் ஆண்டிலேயே, உலகத்தில் இருந்து அழித்து விட்டார்கள்.

இருந்தாலும் கடந்த 100 ஆண்டுகளில் 50 கோடி பேரைப் பழி வாங்கி விட்டுத்தான் போனது. இதற்கு மருந்து கண்டு பிடித்த மனிதத் தெய்வம் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner).

அதே போல மலேரியா காய்ச்சலையும் எண்டமிக் என்பதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

எபிடமிக் (Epidemic) என்றால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் மட்டும் அதிகமாகப் பரவக் கூடிய நோயாக இருக்கும். மழைக் காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். பார்த்து இருப்பீர்கள். அதன் பிறகு அந்த வைரஸ் காய்ச்சல் சன்னம் சன்னமாய்க் குறைந்துவிடும். இந்த மாதிரியான தொற்றலுக்கு எபிடமிக் என்று பெயர்.

பாண்டமிக் (Pandemic) என்றால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக் கூடியது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு பயணிக்கும் மனிதர்கள் மூலமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சரி.

வைரஸ் கிருமி வகைகளைப் பற்றி பார்ப்போம். முதலில் இபோலா வைரஸ் (Ebola Virus). இதை இபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease, EVD) அல்லது இபோலா ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் (Ebola hemorrhagic fever, EHF) என்றும் சொல்வார்கள்.

கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் இருந்து மூன்று வாரங்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (Myalgia–muscle pains), வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.




இபோலா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள், மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பின்னர் அதே அந்த மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவக் கூடியது.

1976-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தென் சூடான்; காங்கோ; ஆகிய இரு நாடுகளில் இந்த இபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கோ நாட்டில் இபோலா என்கிற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் முதன்முதலில் தாக்கியதால் அதற்கு இபோலா வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். இது வரையில் 11,300 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்து வருவது சார்ஸ் (SARS). Severe Acute Respiratory Syndrome என்பதின் சுருக்கம். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். 21-ஆம் நூற்றாண்டில் மிக மோசமான நோய் என் பெயர் பெற்றது. இருந்தாலும் இப்போது கொரோனா முன்னுக்கு நிற்கிறது.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த தொற்றுக் கிருமி.

2000-ஆம் ஆண்டு தென் சீனா, குவாங்டாங்க் மாநிலத்தில் முதன்முதலில் இந்தத் தொற்றுக் கிருமி கண்டு அறியப் பட்டது.  சார்ஸ் வைரஸால் 916 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. கொரோனா மாதிரி தான்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்த நோய் ஏற்படவில்லை. இருந்தாம், பெரியம்மை போல இந்த நோய் முற்றிலும் அழிக்கப் பட்டதாகக் கூற இயலாது. விலங்கு இனங்களில் இன்னும் இருப்பதால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மனிதருக்குத் தொற்றலாம். வாய்ப்பு உண்டு.

நாளைய கட்டுரையில் மேலும் சில வைரஸ் நோய்களைப் பற்றி பார்ப்போம்.

(தொடரும்)