வேப்பமரம் தாய்மையில் தவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேப்பமரம் தாய்மையில் தவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மார்ச் 2019

வேப்பமரம் தாய்மையில் தவிப்பு

அம்மன் சிலையில் குங்குமம் கொட்டுகிறது. ஆஞ்சனேயர் சிலையில் பால் வடிகிறது. காளிக் கோயிலில் கர்ப்பகம் கண்ணீர் வடிக்கிறது. வட பழனியில் குரங்கு அர்ச்சகர் வேலை செய்கிறது. சீரங்கத்தில் கோயிலில் மாடு மணி அடிக்கிறது. குஜராத்தில் ஏழு தலை நாகம் பதஞ்சலி மகிரிஷியாக மாறுகிறது. இப்படி எத்தனையோ அதிசயமான கதைகளைப் பார்த்து விட்டோம். படித்து விட்டோம்.

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பது கடைசியாக வந்து போன செய்தி. அவை எல்லாம் அவரவர் நம்பிக்கைக்குப் பொருந்திப் போகும் விசயங்கள். அந்த நம்பிக்கையில் அடியேன் தலையிட விரும்பவில்லை. அவர்களின் நம்பிக்கைகளை மாற்றவும் விரும்பவில்லை. அது அவரவர் நம்பிக்கைகள்.


அந்த வரிசையில் இந்த முறை ஒரு புதுமையான தெய்வ தரிசனம் அரங்கேறுகிறது. அதற்கு முன் இது ஓர் அதிரடித் தகவல். தமிழ்கத்துப் பத்திரிகைகளில் வெளியான செய்தி. அதையும் முதலில் சொல்லி விடுகிறேன். இது ஓர் அதிசயமான கதை வருகிறது. படியுங்கள்.  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

ஒரு வேப்ப மரம் கர்ப்பமாக இருக்கிறதாம். பல ஆண்டுகளாகக் கர்ப்பமாகவே இருக்கிறதாம். எங்கே என்று கேட்கிறீர்களா. தமிழ்நாடு  நாகை மாவட்டத்தில் தான் அந்த விசித்திரமான நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. 


சும்மா சொல்லக்கூடாது. கர்ப்பமாக இருக்கும் வேப்ப மரத்தைப் பார்க்கத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் மக்கள் வண்டி வண்டியாக வந்து குவிகிறார்கள். வேப்ப மரத்தைக் கும்பிட்டு விட்டுப் போகிறார்கள். பார்க்க எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. உங்களுக்கும் ஆசை வரலாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். முதலில் படியுங்களேன்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்குச் செல்லும் சாலையில் மங்கைநல்லூர் எனும் ஊர். அங்கே இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அனந்தநல்லூர் எனும் ஒரு கிராமம். ஒதுக்குபுறமாக  ஒரு பண்ணை வயல்காடு.

அங்கே ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஓர் அரச மரம். அந்த மரத்துடன் ஒரு வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இப்போது அது கர்ப்பமாக இருக்கிறதாம். நல்ல ஒரு செய்தி. 


இங்கே அதே மாதிரி உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் அப்படி ஒரு மரம் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். இருந்தாலும் இருக்கலாம். சொல்ல முடியாது.

அனந்தநல்லூரில் இருக்கும் வேப்ப மரத்தின் அடிவேரின் மேற்பகுதி அதாவது வயிற்றுப் பகுதி சற்று உப்பலாக இருக்கிறதாம். பார்ப்பதற்கு மேடு கட்டிய மாதிரி தெரிகிறதாம்.

அந்த மரம்தான் இப்போது மாசமாக இருக்கிறது. அதைப் பார்க்க ஆயிரக் கணக்கான மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து வரிசைப் பிடித்து நிற்கிறார்கள்.

இந்தக் கதை அதாவது ஒரு மரம் மாசமான கதை இன்னும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் போய்ச் சேரவில்லை. ஒரு வருத்தமான செய்தி. அதையும் சொல்ல வேண்டி இருக்கிறது.

மரத்தைச் சுற்றிலும் சவுக்கு மரத்தடுப்பு வேலி போட்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் இப்போது ஏகப்பட்ட திடீர்க் கடைகள். திடீர்ப் பூசை புனர்ச் சாமான்கள். 

திடீர் மஞ்சள் கயிறுகள். திடீர் மஞ்சள் வளையல்கள். திடீர் மஞ்சள் மணிகள். திடீர் மஞ்சள் மரத் தொட்டில்கள். எல்லாமே மஞ்சள் நிறங்கள். எல்லாமே மஞ்சளோ மஞ்சள்.


இன்னொரு பக்கம் காபி, டீ, வடை, பஜ்ஜி, பன்னீர்ப் பாயாசம் என்று பரபரப்பான விற்பனைகள். நல்ல ஒரு மஞ்சள் வெயில் அபிஷேகம். நான் சொல்லவில்லை. பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

மரத்தின் தடுப்பைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள் தவமாய்த் தவம் இருந்து காத்து நிற்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். நான் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் சொல்கிறார்கள். தடுப்பின் உள்ளே சில பெண்கள் அமைதியின் வடிவத்தில் பக்தியின் சின்னங்களாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துத் தவம் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நடுவில் ஒரு பெண் பூசாரி. இவரும் திட்டிர்ப் பூசாரி என்று அரசல் புரசலாகக் கேள்வி. அவருடைய பெயர் கல்யாணி. பெண்களில் தலையில் கையை வைத்து ஆசி வழங்குகிறார்.

அந்தப் பெண்கள் கொண்டு வந்து இருக்கும் வகை வகையான வளையல்களை அவர்களுக்கே அணிவித்து ஆசீர்வதிக்கிறார். 'நிச்சயம் குழந்தை பாக்கியம் இருக்குது. 


ஆம்பிளைப் புள்ளையா பொறந்தா வேப்பஞ்சாமினு பேரு வையுங்க. பொட்டப் புள்ளையா பொறந்தா வேப்பாயினு பேரு வைங்க. கவலைப்படாமல் போயிட்டு வாங்க...’ என்கிறார் அந்தப் பெண் அர்ச்சகர்.

கல்யாணியின் கணவருக்கும் முக்கிய வேலை. வருகின்ற பக்தர்களுக்குத் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, விபூதி, குங்குமம் தருகிறார். கல்யாணியின் கணவர் பெயர் சரவணன்.

கல்யாணியின் தாயார் சின்னம்மாவிற்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வேப்பமர தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு எடுபிடி உதவிகளைச் செய்து ஆசியும் வழங்குகிறார்

எல்லாவற்றுக்கும் சூப்பர்வைசராக இருக்கிறார் கல்யாணியின் மாமனார் ஆறுமுகம். இப்படி ஒரு குடும்பமே  ஓடி ஆடிச் சாமி பார்க்கிறது. பாராட்டப்பட வேண்டிய விசயம். 


சரி. இப்போது கேமராவை முடுக்கி விடுவோம். ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன். பெண் பூசாரி கல்யாணி பேசுகிறார். கேளுங்கள்.

''நாலு மாசத்துக்கு முன்னாடி என் கனவுல ஒரு வயசான அம்மா வந்தாங்க. வயிறு வலிக்குதுனு சொன்னாங்க. பால் வேணும்னு கேட்டாங்க. ஆனா அந்த அம்மாவோட உருவம் முழுசா எனக்குத் தெரியலை”

”அப்புறம் நானும் நாலு மாசம் விரதம் இருந்தேன். அப்போதான் அது என் கண்ணுக்குத் தெரிஞ்சது. புள்ளதாச்சிப் பொம்பளையா இருந்துச்சு. எனக்குக் குழந்தை பொறக்கப் போவுது. வயிறு எல்லாம் வலிக்குதுனு சொல்லி அழுதுச்சு. எனக்கு யாரும் பால் தரலை.

அதனால யாராவது ஒரு பால்காரனை பலி வாங்கப் போறேன்னு சொன்னுச்சு. நான் பால் கொடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள  அந்த அம்மா மறைஞ்சிட்டாங்க.


”அவங்க சொன்ன மாதிரியே  மூணு நாள்ல எங்க ஊர் பால்காரர் ஒருத்தர் செத்துப் போயிட்டாரு. அதனாலே இனிமே நடக்கப் போற சாவுங்களைத் தடுக்க முடிவு செஞ்சேன். உலகத்தை காக்கிறது நம்ம கடமை இல்லீங்களா. கடுமையா தவம் இருந்தேன். சோறு, தண்ணி  பார்க்கலை... மூடின கண்ணைத் தொறக்காம தவம் செஞ்சேன்.”

”என்னை சுத்தி இருக்கிற இந்த உலகமே எனக்கு மறந்து போச்சு. நான் வேற ஒரு உலகத்துகே போயிட்டேன். அங்கே போய் பார்த்தா ஆதி பராசக்தியில இருந்து கருமாரி அம்மா வரைக்கும் ஏகப்பட்ட அம்மன்கள் உலாவுனாங்க.

அவங்க எல்லார்கிட்டயும் போய் அவங்க காலில் விழுந்து ஆசி வாங்கினேன். சில அம்மன்கள் என்னை அப்படியே வாரி எடுத்து அணைச்சி கிட்டாங்க.”

”தவத்துல இருந்து வெளியே வந்தேன். அன்னிக்கு ராத்திரி திரும்பவும் கனவில அவங்க இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க. அந்த இடத்தைப் போஉ பார்த்தா அரசும் வேம்பும் பின்னி இருந்துச்சு. இங்கே தினமும் வந்து பூஜை செய்ய ஆரம்பிச்சேன். 


நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு எங்க ஊர் மக்கள் இங்கே வர ஆரம்பிச்சாங்க. என்னையும் கர்ப்பமா இருக்கிற வேம்பையும் சாமியா நினைச்சுக் கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க” மரத்தில் சாமி தோன்றிய கதையைச் சொல்லி முடிக்கிறார் கல்யாணி.

''கர்ப்பமா இருந்த வேம்பு எப்படி இருக்கிறது?'' என்று கேட்டால் ''ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கு'' என்று வேப்ப மரத்தில் புதிதாக முளைத்து இருக்கும் இரண்டு சிறிய கிளைகளைக் காண்பிக்கிறார்.

பிள்ளைகள் பிறந்தும் வேப்ப மரத்தின் வயிறு அப்படியேதான் இருக்கிறது. வயிறு சின்னதாக ஆகவில்லை. இன்னும் பத்து மாசப் பெருக்கம் தெரிகிறது.

''பிள்ளை இல்லாதவர்கள் இங்கே வந்து, வழிபட்டு வளையல் போட்டுக் கொண்டு போனால் நிச்சயம் குழந்தை பிறக்கும். கல்யாணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால் உடனே கல்யாணம் ஆகும்'' என்று பட்டியல் போடுகிறார் கல்யாணி.

மங்கைநல்லூரில் இருந்து இந்த வேப்ப மரத்திற்குச் சிறப்பு பஸ் சேவையை வேறு தொடங்கி விட்டார்கள்.

வேப்பமரம் கர்ப்பம் ஆவதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று புத்தகங்களைத் தேடினேன். மன்னிக்கவும். ஒரு புத்தகமும் கிடைக்கவில்லை. மக்கள் அறியப்படாத உலக மகா தத்துவம்.

ஆக அந்த மகா அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி இந்த உலகத்தில் இன்னும் எவரும் புத்தகம் எதுவும் எழுதவில்லையே என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது.

அப்படியே எழுதினாலும் அக்கா கல்யாணி ஒருவரால்தான் அதை எழுத முடியும் என்று நினைக்கிறேன். சாமிகள் வாழும் உலகத்திற்குப் போய் வந்து இருக்கிறார் இல்லையா. அவருக்குத்தான் சாமிகளைப் பற்றிய சகல உண்மைகளும் தெரியும்.

அறிவியல் அதன் பார்வையில் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். தாவரங்கள் மகரந்தச் சேர்க்கையின் மூலமாக இனவிருத்தி செய்கின்றன. மகரந்தத் தூள்களில், ஒரு பிரிவு ஆண் பால் அணுக்களைக் கொண்டுள்ளன.
(Stamens - the male reproductive organs)

இன்னொரு பிரிவானது சூல்வித்திலைகள் அதாவது பெண் பால் அணுக்களைக் கொண்டுள்ளன.
(Carpels - the female reproductive organs)

மகரந்தச் சேர்க்கைக்கு ஆங்கிலத்தில் போலினேசன்
(Pollination)

ஒரு பூவில் உள்ள மகரந்தம் அதே பூவில் உள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கை அடைந்தால் அதை தன் மகரந்தச் சேர்க்கை
(self-pollination)

என்று அழைப்பார்கள். அதே சமயத்தில், வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கரு கட்டுப் பட்டால் அதை அயன் மகரந்தச் சேர்க்கை
(cross-pollination)

என்று அழைப்பார்கள். பூ பூத்து, காய் காய்த்து, அதில் இருக்கின்ற விதையில் இருந்து வேறு ஒரு மரம் வருகிறது.

மற்றபடி தாவரங்கள், புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் பக்கம் போனது இல்லை. நல்ல நாள் பார்த்து தாலி கட்டி புருசன் பெண்சாதி ஆவதும் இல்லை. மனிதனைப் போல சாந்தி முகூர்த்தம், சம்பிரதாயம் சடங்கு, சீமந்து, சோமந்து என்று எதையும் பார்ப்பதும் இல்லை.

மரத்திற்கு அப்பா பேரும் தெரியாது ஆத்தா பேரும் தெரியாது

அதனால் பாருங்கள் மரங்கள் கர்ப்பம் ஆவதே இல்லை. பத்து மாசக் கடைசியில் இடுப்பு வலி என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகச் சொல்வதும் இல்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் புதிதாக முளைத்த மரத்திற்கு அப்பா பேரும் தெரியாது. ஆத்தா பேரும் தெரியாது. உஸ்ஸ்ஸ்… தாங்க முடியல சாமி.

ஆக, கர்ப்பம் என்றால் என்ன என்று தெரியாத ஓர் அப்பாவி மரத்தைத் தேடிப் பிடித்து அதைக் கர்ப்பிணி ஆக்கி அப்புறம் அதைச் சாமியாக மாற்றியது எல்லாம் நல்ல சுவையான விசயம்தான். நமக்கு வருத்தம் இல்லை.

இருந்தாலும் பல பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் கல்யாணியின் குடும்பத்திற்கு இந்த நல்ல நாளில் அன்பான வாழ்த்துகளையும் பணிவான பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதவில்லை. அப்படியே யாருக்காவது வருத்தம் என்றால் சொல்லுங்கள். அனந்தநல்லூர் கிராமத்தில் கர்ப்பம் அடைந்து இரட்டைப் பிள்ளைகளுக்குத் தாயாகி நிற்கும் வேப்ப மரம் இருக்கிறதே (பெயர் தெரியவில்லை) அதன் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சான்றுகள்

1. http://en.vikatan.com/article.php?aid=23006

2. http://suvanappiriyan.blogspot.com/2014/10/blog-post.html

3 Christophe Plomion, Gregoire Leprovost, Alexia Stokes, "Wood Formation in Trees", Plant Physiology, December 2001, Vol. 127, pp. 1513–1523. 

4. Uwe Schmitt, "Chaffey, N.J. ed. Wood formation in trees—cell and molecular biology techniques", Annals of Botany, 2002, Vol. 90, no. 4, pp. 545-546.