தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3


தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1
தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2
முதல் இரண்டாம் பாகங்களைப் படிக்காதவர்கள் மேலே சொடுக்கவும்
 

........................................................................................................

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டார்கள். கர்நாடகா, கன்னடா என்பதில் இரண்டும் ஒன்றுதான். குழப்பம் வேண்டாம். ஆக, அவர்கள் போராடினார்கள். விடாமல் முயற்சி செய்தார்கள். வெற்றியை விரட்டிக் கொண்டு போனார்கள். அதனால், அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.
 
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சும்மாவா சொன்னார்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியும் சும்மாவா வந்தது. காலம் காலமாக இருந்து வந்த தமிழர்களின் நிலப் பகுதிகளை, தங்கள் மாநிலங்களோடு இணைக்கக் கோரி போராட்டம் செய்தனர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றது கேரளா மாநிலம். 

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்

உண்மையிலேயே கேரள அரசியல்வாதிகளைப் பாராட்ட வேண்டும். அந்தச் சமயத்தில் கேரளா ஒரு சின்ன மாநிலமாகத் தான் இருந்தது. இரண்டு மலாக்கா மாநிலங்களை ஒன்று சேர்த்தால் எவ்வளவு இருக்கும். அவ்வளவு பெரியதுதான் அப்போதைய கேரளா. ஆக, அவர்கள் தங்களுக்குக் கூடுதலான நிலம் தேவை என்று ஆர்ப்பரித்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது. எடுத்த இலட்சியத்தில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள். பாராட்ட வேண்டும்.


இப்போது கேரளாவில் இருக்கிறது
கர்நாடகா அப்படி இல்லையே. தமிழ்நாட்டில் இருக்கிறதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போவதில்தானே கண்ணும் கருத்துமாய் இருந்தது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக, போட்டியாளர்களின்  அறைகளில் நகல் பதக்கங்களைத் தொங்க விடுவார்களாம். அதைப் பார்க்கும் போட்டியாளர்கள் தங்கப் பதக்கம்... தங்கப் பதக்கம் என்று பிதற்றிக் கொண்டே வெறி பிடித்துப் அலைவார்களாம்.

அந்த மாதிரி கர்நாடகா அரசியல்வாதிகளும் நிலம்... நிலம் என்று பித்துப் பிடித்துத் அலைந்து திரிந்து இருக்கிறார்கள். நான் சொல்லவில்லை. ம.பொ.சி., ஜீவா போன்ற தமிழ்த் தலைவர்கள் சொன்னார்கள். சந்தேகம் இருந்தால் அவர்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்.
 
 


மன்னிக்கவும். ஓர் இடைச் செருகல். கட்டுரையாளரின் பூர்வீகம் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடங்குகிறது. என் தந்தையார் தமிழகத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் பகுதி. தாயார் திருச்சூர் பகுதியில் இருந்து வந்தவர். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கேள்விப் பட்டேன். நல்ல அழகாக இருப்பார். கச்சான், கடலை வியாபாரம். உள்ளூர் மக்களிடம் மொத்தமாக வாங்கி, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்து இருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் என் தந்தையார், அவர்களிடம் வேலை செய்து இருக்கிறார். பெற்றோர் இருவருக்கும் விருப்பம். ஆனால், தாயார் தரப்பில் தடை. அதனால், சொந்தக்காரர்களிடம் இருந்து தப்பிக்க, நாகப்பட்டினம் வந்து இருக்கிறார்கள். அப்போது என் தாயாருக்கு வயது 16. தந்தையாருக்கு 22.

மலேசியாவிலும் இந்தியர்களின்
உரிமைப் போராட்டம் தொடர்கிறது
கடைசியில், ரஜுலா கப்பலில் ஏறி மலாயாவுக்கு வந்தார்கள். 1940-இல் நடந்தது. வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரு பெண்மணி. கடைசியில் இங்கே மலாயா ரப்பர் காடுகளில் சங்கமம். கொசுக்கடி, பாம்புக்கடி, மலேரியா காய்ச்சல். அடிபட்டு தேய்ந்து ஓடாகிப் நார் நாராகக் கிழிந்து போனது தான் மிச்சம். ஆனால், அவர்கள் செய்த நல்ல காரியம். அவ்வளவு பெரிய கஷ்டத்திலும் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டார்கள். அது ஒரு வரலாறு.


கப்பல் ஏறி வந்த தமிழர்களின் வாரிசுகள்
இன்னும் உரிமைப் போராட்டம் செய்கிறார்கள்
அதன்பிறகு இருவருமே இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. கடிதப் போக்குவரத்து இருந்து இருக்கிறது. கடைசியில், எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை, அவர்களுடைய பிள்ளைகள் நாங்களே தேடிக் கண்டுபிடித்தோம்.
புதுடில்லி விமானநிலையத்தில் என்னுடைய மனைவியும் தோழியும் - 14.06.2014
தமிழகம், கேரளா, ஆந்திரா, கன்னடா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரத்த உறவுகள் பரவிக் கிடக்கின்றன. சொந்த பந்தங்களை மூன்று முறை போய்ப் பார்த்து இருக்கிறோம். சில மாதங்கள் தங்கியும் இருக்கிறோம். உறவுகள் தொடர்கின்றன. அவர்களும் இங்கே வந்து இருக்கிறார்கள்.


தமிழகத்தை இயற்கை அன்னை வஞ்சிக்கவில்லை
அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் சப்போர்ட் செய்வதாக நினைக்க வேண்டாம். எங்கே நியாயம் இருக்கிறதோ அங்கேதான் நியாயம் பேச வேண்டும்.

ஆக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இனம் சார்ந்து பார்க்கவில்லை. அரசியல் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. காமராசர் ஒரு தமிழர்தான். ஆனால், அவருக்குத் தமிழ்நாட்டைவிட இந்தியாதான் பெரிதாக தெரிந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதனால், அடுத்த மாநிலங்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாய நிலை. திரிசங்கு நிலை என்றுகூட சொல்லலாம்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற இடங்கள் இப்போது கேரளாவில் இருக்கின்றன. ஆனால், இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் பார்த்தால், அவை தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவை. அந்த வகையில் அவை தமிழகத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.



மலேசிய இந்தியர்களைப் போல கேரளத் தமிழர்களின் உரிமைப் போராட்டமும் தொடர்கிறது
இப்படியும் பார்க்க வேண்டும். கன்னியாகுமரியில் தமிழர்களைவிட கேரளத்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் அவை கேரளத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. ஏன். எல்லாமே அரசியல்வாதிகள் போட்ட தாறுமாறான கணக்குகள்.

1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் மேலே சொன்ன அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகளை எல்லாம் கேரளா கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் சேர்த்துக் கேட்டது.

மற்றவை எல்லாம் கிடைத்தன. ஆனால், நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகள் கிடைக்கவில்லை. நீலகிரியையும்  ஊட்டியையும் கொடுத்து இருந்தால், ஒரு கப் தேயிலைத் தூளுக்கு தமிழ்நாடு அடுத்த மாநிலத்தைக் கெஞ்ச வேண்டிய நிலை வந்தாலும் வந்து இருக்கலாம்.


இந்த நிலங்கள் எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது. வேறு ஒரு நாட்டுக்காரன் வந்து பிடுங்கிக் கொண்டு போகவில்லையே. அப்புறம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. அந்த மாதிரி இடுக்கியைக் கொடுத்ததால் தானே பெரியாறு பிரச்சினை பெரிய கோளாறு பண்ணுகிறது. கொடகு நாட்டைக் கொடுத்ததால் தானே காவேரிப் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

அதனால் தானே இலட்சக் கணக்கான தமிழர்களின் நிலங்கள் வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாமல், தங்களின் பயிர்பச்சைகள் வாடி வதங்கிச் செத்துப் போவதைப் பார்த்து, ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு எல்லாம் யார் காரணம். ஆரம்பத்திலேயே கொஞ்சம் பிடிவாதமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா?

1956-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், செல்வாக்கு காரணமாகக் கேரளாவுக்கு மாற்றப் பட்டது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போடப் பட்டது.


தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி ஆமாம் சாமி போட்டனர்.

தமிழ்நாட்டு நிலங்களை மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்தத் தேவி குளம், பீர்மேடு பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. என்ன ஏது என்று பார்ப்போம்.

தேவிகுளம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார் என்ற இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பிரதேசம். நம்ப கேமரன்மலை மாதிரி அழகிய மலைக்காடுகள் நிறைந்த இடம்.



இராமாயணத்தில் சீதா தேவியின் பெயரில் இருந்தே தேவிகுளம் என்ற பெயர் இந்த இடத்திற்குச் சூட்டப் பட்டதாக ஐதீகம். கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், சிகப்பும் நீளமும் கலந்த அரக்கு மரங்கள் தேவிகுளத்தின் சிறப்புகள்.

இதற்கு அருகில் இருப்பது பீர்மேடு. இதுவும் அழகிய ஒரு நந்தவனச் சோலை. பெருமேடு எனும் தமிழ்ச் சொல்தான், காலப் போக்கில் பீர்மேடு ஆனது. இது ஒரு மலைவாழிடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரம். கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்து உள்ளது.


பீர்மேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசி இலை மரங்களுக்கும் பெயர் போனது. பீர்மேட்டில்  மிளகு, ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் நிறையவே பயிர் செய்யப் படுகின்றன.

ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கோடை கால தங்கும் இடமாக இருந்து இருக்கிறது. பீர்மேட்டில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில், இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் உள்ளது.

அது என்ன கானுயிர்க் காப்பகம் என்று கேட்பது தெரிகிறது. கானகத்தில் வாழும் உயிரினங்களைக் காக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குத் தான் கானுயிர்க் காப்பகம் என்று பெயர்.

இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். 100-க்கு 95 பேர் தமிழர்கள். இவை இப்போது கேரளாவிடம் இருக்கிறது. 1956-இல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. இவற்றை மறுபடியும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இதுதான் தேவி குளம், பீர்மேடு பிரச்சினை.


மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது, தமிழகத்தின் எல்லைகளை வரையறுக்க மூன்று பேர் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் கே.மா. பணிக்கர் (கேரளா) ஓர் உறுப்பினர். இன்னோர் உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ (குஜராத்). அதன் தலைவர் பசல் அலி (பீகார்).

இந்த ஆணையத்தை, அப்போதைய பிரதமர்  நேருதான் நியமித்தார். இதில் ஓர் ஐயப்பாடு என்ன தெரியுமா. கேரளாவைச் சேர்ந்த பணிக்கரை அந்த ஆணையத்தில் சேர்த்து இருக்கக் கூடாது என்பதே என்னுடைய வாதமும் கூட.

ஏன் என்றால், வாதியாக கேரளா நிற்கிறது. ஒரு நடுநிலையான ஆணையத்தில் ஒரு வாதிக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் இல்லையா.

பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பரிந்துரைகள்:

•    சென்னை மாநிலத்தில் உள்ள  மலபார் மாவட்டத்தைக் கேரளாவில் இணைக்க வேண்டும். மைசூர் மாவட்டத்தை கர்நாடகாவில் சேர்க்க வேண்டும்.

•    திருவாங்கூர் மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் தாலுகாக்களை சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும். சென்னை மாநிலம் என்கிற பெயர் நீடிக்க வேண்டும்.

•    சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியது. அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.

•    தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வில்லை.

இவைதான் அந்தப் பரிந்துரைகள். இப்படி சேர்க்கப் படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ்த் தலைவர்கள் ஆத்திரம் அடையவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவும் இல்லை. அமைதி நிலவியது.

பசல் அலி ஆணையம், செங்கோட்டை தாலுக்கா முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால், நடந்தது வேறு. தமிழகத்தின் அமைதியான நிலையைப் பார்த்த கேரளாவிற்கு மகிழ்ச்சி. மேல்மட்ட அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில், வளமான காட்டுப் பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை தாலுக்கா கேரளத்திற்குச் சொந்தமானது. செங்கோட்டை நகரம் மட்டும் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் மாற்றம் செய்யப் பட்டது. அதன் பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.

பசல் அலி ஆணைய அறிக்கை வெளிவந்த அன்றே, பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் ஒரு பேட்டி நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த பதில்களும் வருமாறு:

நிருபர்: பசல் அலி ஆணையம், தமிழ் தாலுகாக்களாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாத்தங்கரை, கொச்சின், சித்தூர் தாலுக்காக்களைக் கேரளாவுடன் சேர்த்து விட்டதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஈ.வெ.ரா: இதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கேரளாவுடன் அவற்றைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள். ஆனால், அவை தமிழ் தாலுகாக்கள் தானே.

ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் வந்து இருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர் சொன்னார் ‘தொழிலுக்காகத் தான் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் கேரளாவுக்குத்தான் சொந்தம்’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.

இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

பசல் அலி அறிக்கை வெளியானது. தி.மு.க. (அண்ணாதுரை) குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் அமைதி. அங்கேயும் எதிர்ப்புகள் இல்லை. அது ஒரு பெரிய செய்தியே.

இருந்தாலும் ம.பொ.சி. விடவில்லை. பசல் அலி அறிக்கை தமிழ் இனத்திற்கு அநீதி இழைத்து விட்டது என்று ம.பொ.சி. கொந்தளித்தார். அதோடு அவர் நிற்கவில்லை. பெரியார், அண்ணாதுரை மற்ற மற்ற தலைவர்களையும் தனித்தனியே போய்ச் சந்தித்துப் பேசினார். எப்படியாவது தேவிகுளம், பீர்மேடு தாலுக்காகளை மீட்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஓர் அதிர்ச்சி. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக - கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

அப்போது வர்கீஸ், அந்தப் பகுதிகளைக் கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் நீங்கள் எப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போட முடியும்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார். அப்புறம் என்னதான் நடந்தது. பிறகு வேறு ஒரு  கட்டுரையில் பார்ப்போம்.