ஜாவா எரிமலையில் சம்புசாரி சிவன் ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாவா எரிமலையில் சம்புசாரி சிவன் ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை 2020

ஜாவா எரிமலையில் சம்புசாரி சிவன் ஆலயம்

தமிழ் மலர் - 15.07.2020

ஜாவாவில் ஒரு சிவன் ஆலயம். 1000 ஆண்டுகள் எரிமலைச் சாம்பலில் புதைந்து இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தார்கள். புனரமைப்பு செய்து புனிதத் தலமாகக் கொண்டாடுகிறார்கள். இப்போது இந்தோனேசிய மக்கள் அலை அலையாய் படையெடுக்கின்றார்கள். ஆரவாரம் செய்து போற்றிப் புகழ்கின்றார்கள்.



1966-ஆம் ஆண்டு ஓர் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் ஓர் அதிசயம் நடக்கப் போகிறது. அந்த அதிசயம் கரியோ வினங்குன் (Karyowinangun) எனும் ஜாவானிய விவசாயிக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. வழக்கப் போல மண்வெட்டியுடன் காட்டுப் பகுதிக்குள் போகிறார்.

கொஞ்சம் செடி புதர்கள். அவற்றைச் சுத்தம் செய்து சோளம், கிழங்கு பயிர்களை நடுவது அவருடைய அன்றைய வேலை. நிலத்தைச் சுத்தம் செய்யும் போது அவருடைய மண்வெட்டி ஒரு பெரிய கல்லில் பட்டித் தெறித்தது.

பெரிய கற்பாறை. சோதித்துப் பார்த்த போது கற்பாறையில் பல வடிவங்களில் பல கோணங்களில் செதுக்கல்கள் இருப்பதைப் பார்த்தார். கரியோ வினங்குனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே கிராமத்துக்குள் ஓடி அங்கு உள்ளவர்களிடம் சொன்னார். அவர்களும் வந்து பார்த்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம்.


அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்த பிரம்பனான் தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அப்புறம் என்ன. காரியோவினங்குனின் பயிர் நிலத்தை அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான தொல்பொருள் தளமாக அறிவித்தார்கள். அகழாய்வுகள் தொடங்கின.

கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை ஒரு கோயிலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆக அந்தக் கோயில் அந்தப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

பின்னர் தீவிரமான அகழ்வாராய்ச்சிகள். பல நூற்றுக் கணக்கான கற்பாறைகள்; பழங்காலச் சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தக் கற்பாறைகள் ஒரு கோயிலின் கூறுகள் என்றும் உறுதி செய்யப்பட்டன.



1987 மார்ச் மாதம் அகழ்வாராய்ச்சி மற்றும் புனரமைப்பு பணிகள் நிறைவு அடைந்தன. 21 ஆண்டுகால அகழ்வாய்வுகள். எத்தனை வருடங்கள் என்பதைக் கவனியுங்கள்.

அதுதான் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்து வாழ்ந்த சம்புசாரி சிவன் ஆலயம்

சம்புசாரி கோயிலுக்கு அருகில் உள்ள மெராபி எரிமலை (Mount Merapi) வெடித்ததால் அதன் சாம்பல் இந்தக் கோயிலை மண்ணுக்குள் புதைத்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

சம்புசாரி கோயில் கண்டுபிடிப்பு என்பது அண்மைய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அதிசயத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பு என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.



தவிர இந்தக் கோயிலுக்கு அருகில் இன்னும் பல பழங்காலக் கோயில்கள் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கலாம். அப்படி ஓர் ஊகத்திற்கும் வழிவகுத்து உள்ளது. மெராபி எரிமலை வெளியிட்ட சாம்பல் புழுதிகளுக்கு அடியில் அந்தக் கோயில்கள் புதைபட்டு இருக்கலாம்.

சின்ன ஒரு சுருக்கம். சம்புசாரி (Sambisari) என்பது 9-ஆம் நூற்றாண்டின் இந்து கோயிலாகும். இது யோக் ஜகார்த்தா (Yogyakarta) பூர்வோமர்தானி (Purwomartani) புறநகர்ப் பகுதியில் சம்புசாரி குக்கிராமத்தில் உள்ளது.

சம்பு என்றால் சிவன். சாரி என்றால் சாரம். சம்புசாரி என்றால் சிவனைச் சார்ந்த வழிபாட்டுத் தலம் என்று பொருள்.

இந்தச் சம்புசாரி கோயில் சுமார் ஐந்து மீட்டர் ஆழத்தில் புதைபட்டு இருந்தது. அசல் கோயிலின் பல பகுதிகள் தோண்டப்பட்டு உள்ளன.


இந்தக் கோயில் யோக் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அடிசுசிப்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு (Adisucipto International Airport) அருகில் அமைந்து உள்ளது.

இந்தோனேசியாவில் சிவ வழிபாடுகள் அதிகமாக இருந்த காலக் கட்டத்தில், அங்கே நூற்றுக் கணக்கான சிவாலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. நூற்றுக் கணக்கில் என்று சொல்வது தவறு. ஆயிரக் கணக்கில் என்று சொன்னால் தான் சரியாக அமையும்.

அவை எல்லாம் இன்றைக்கு நேற்றைக்கு கட்டப்பட்ட சிவ ஆலயங்கள் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டவை. இன்னும் சரியாகச் சொன்னால் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயங்கள்.

பெரும்பாலும் ஜாவாவில் கட்டப்பட்ட ஆலயங்கள் மெராப்பி எரிமலை வெடிப்புகளினால் மண்ணுக்குள் புதையுண்டு போயின. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மெராப்பி எரிமலை வெடிப்புகள் தொடர்பான தகவல்கள் சரிவரக் கிடைக்கவில்லை.



அந்த எரிமலை பல நூறு வருடங்களுக்கு பேசாமல் அமைதியாக இருக்கும். அப்புறம் ஒரு தடவை வெடிக்கும். இருக்கிற கிராமங்கள்; கட்டுமானங்கள்; பயிர் பச்சைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய் விடும்.

அப்படி புதையுண்டு போன இந்து ஆலயங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறோம். தாயாங் பீடபூமியில் இருந்த 400 ஆலயங்களில் இப்போது எட்டு ஆலயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய வருகின்றன.. மற்றவை எல்லாம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

அந்த மாதிரி புதையுண்டு போன ஆலயங்களில் பல மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று தான் சம்பு சாரி சிவன் ஆலயம்.

இந்தோனேசியாவைப் பல்லவ அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல்லவ இந்திய ஜாவானிய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இந்திய ஜாவானிய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரும்பாலோர் சிவ வழிபாட்டில் தீவிரம் காட்டி இருக்கிறார்கள்.



சிவ வழிபாடுதான் இந்தோனேசியாவில் மேலோங்கி இருந்து இருக்கிறது. புத்த மதம் வந்த பிறகு சிவ வழிபாடு குன்றத் தொடங்கியது. இஸ்லாமியம் வந்த பிறகு சிவ வழிபாடு குன்றிப் போனது.

மகா மன்னர்களும் சரி; மகாராணியார்களும் சரி. சிவாலயங்களைக் கட்டி சிவ வழிபாட்டில் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் உள்ள மற்றோர் இந்து கோயில் பிரம்பனான் சிவாலயம் ஆகும். இந்த ஆலயத்தின் சுவர்களைச் சுற்றிலும் இந்து சமயச் சிலைகள் உள்ளன. பிரம்பனான் கோயிலுக்குள் அமைந்து உள்ள கட்டடக் கலை; மற்றும் அலங்கார ஒற்றுமைகள் சம்பு சாரி சிவன் ஆலயத்துடன் ஒத்துப் போகின்றன.



அந்த வகையில், சம்பு சாரி ஆலயம் 9-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலப் பகுதியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அதாவது கி.பி. 812 - கி.பி. 838.

பண்டைய ஜாவாவில், 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக் காலத்தில் காவி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. அந்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு தங்கத் தகட்டை சம்பு சாரி ஆலயத்தில் கண்டு எடுத்தார்கள். அந்தத் தங்கத் தகட்டிற்குப் பெயர் வனுவா தெங்கா கல்வெட்டு III (Wanua Tengah inscription III).

அந்தக் கல்வெட்டில் மாதரம் எனும் மத்தாரம் பேரரசை (Mataram Kingdom) ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அந்த வகையில் சம்பு சாரி ஆலயம், ராகா கருங்கா (Rakai Garung) எனும் மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ராகா கருங்காவின் ஆட்சிக் காலம் கி.பி. 828 - கி.பி. 846.


இருப்பினும் ஒரு கோயிலின் கட்டுமானம் என்பது எப்போதுமே ஒரு மன்னரால் உருவாக்கப் படுவது இல்லை. அந்தக் காலத்தில் வாழ்ந்த நிலப் பிரபுக்களும் கட்டுமானத்திற்கு உத்தரவிட்டு இருக்கலாம். அதற்கு நிதியுதவி செய்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

சம்பு சாரி ஆலயத்தின் மையப் பகுதி 6.5 மீட்டர் (20 அடி) ஆழத்தில் இருக்கிறது.  அப்படி என்றால் அவ்வளவு ஆழத்திற்கு எரிமலைச் சாம்பல் மூடி இருந்து இருக்கிறது. ஆக இதே மாதிரி நிறைய ஆலயங்களும் சாம்பல் மண்ணில் புதையுண்டு இருக்கலாம்.

சம்பு சாரி ஆலயத்தின் சுவர்களைச் சுற்றிலும் இந்து தெய்வங்களின் சிலைகள் சரம் சரமாய் உள்ளன. அவற்றுள் துர்காதேவி சிலைகள்; விநாயகர் சிலைகள்; அகத்தியர் சிலைகள் உள்ளன. நந்தீஸ்வரர் சிலைகளும் ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ளன.


ஜாவா மக்கள் அங்குள்ள இந்து ஆலயங்களைத் தங்களின் வரலாற்றுப் பெருமைக்கு உரிய புனிதத் தலங்களாகப் போற்றுகின்றார்கள். பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றார்கள்.

அவர்களின் பெயர்களையும்; வணிகப் பெயர்களையும் இந்திய சாயலில் அமைத்துக் கொள்கின்றார்கள். இந்தியப் பாரம்பரியத் தன்மைகள் அவர்களின் வாழ்வியலில் ஒன்றாய்க் கலந்து விட்டன. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.07.2020

சான்றுகள்:

1. https://www.maioloo.com/tempat-wisata/yogyakarta-jogja/candi-sambisari/

2. https://www.yogyes.com/en/yogyakarta-tourism-object/candi/sambisari/

3. https://en.wikipedia.org/wiki/Sambisari

4. https://www.expedia.com.my/Sambisari-Temple-Yogyakarta.d6223390.Place-To-Visit

5. https://iopscience.iop.org/article/10.1088/1755-1315/212/1/012048