புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 நவம்பர் 2019

புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7

 தமிழ் மலர் - 06.11.2019

உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் ஆக்கும் ஆற்றலும் இருக்கிறது. அழிக்கும் ஆற்றலும் இருக்கிறது. அதே போல புலாவ் பெசார் ஆண்டவருக்கும் அந்த ஆற்றல்கள் இருக்கின்றன. 


புலாவ் பெசார் தீவில் கால் பதித்ததும் ஒருவிதமான அதிர்வுகளை (Vibration) உணர முடியும். எல்லோருக்கும் அந்த உணர்வுகள் ஏற்படுமா என்று தெரியவில்லை. இறந்தும் இறவாமல் அங்கே உறைவிடம் கொண்டுள்ள துறவி மகான்களை மனதார நினைத்தாலே போதும். அந்த அதிர்வுகள் தானாக வந்து சேரும்.

பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள் சாதி சமயம் சம்பிரதாயங்களைத் தாண்டிய வாக்குமூலங்கள்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே ஒரு பொதுவான வாழ்க்கை முறை. அந்த மாதிரியான பொது வாழ்க்கை நெறி முறைகளுக்கு அப்பால் பட்டவர்கள் இந்தத் துறவி மகான்கள். இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கியவர்கள்.

இவர்கள் நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து வாழ்ந்தவர்கள். இயற்கையோடு இயற்கையாக அசலான இயற்கை வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள். சரிங்களா.

அடுத்து ஒரு முக்கியமான விசயம். உங்களிடம் உடல் சுத்தம், மனச் சுத்தம், சொல் சுத்தம், நடைச் சுத்தம். இந்த நான்கு சுத்தங்கள் இருந்தாலே போதுங்க. அலை அலையான பிரபஞ்ச அதிர்வுகளை உங்களால் உணர முடியும். அப்படித்தான் பலரும் சொன்னார்கள். சொல்லியும் வருகிறார்கள்.

புலாவ் பெசார் தீவிற்குப் போக வேண்டும். அங்கு போய் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது பலரின் கனவுகள். ஆக உலக ஆசைகளைக் கடந்து போன தெய்வங்கள் தான் அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதை நாம் மறக்கக் கூடாது. அதற்கு ஏற்றவாறு நம்முடைய பிரார்த்தனைகள் அமைய வேண்டும்.

அந்தத் தீவில் கால் பதித்து அந்தத் தெய்வங்களை மனதார நினைத்தாலே போதும். கண்களை மூடி கொஞ்ச நேரம் மௌனமாக நின்றாலே போதும். ஒருவிதமான ஆழ் உணர்வுத் துடிப்புகள் ஏற்படும். 


அதைத் தான் புலாவ் பெசார் அதிர்வு அலைகள் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி ஆய்வு செய்து யூடியூப்பில் ஒரு காணொளியைப் பதிவு செய்து இருக்கிறார்கள். போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

(https://www.youtube.com/watch?v=PHq28bTugo4 - Misteri Pulau Besar Melaka)

இன்னும் ஒரு செய்தி. அங்குள்ள புனிதத் தளங்களிலும் சரி சமாதிகளிலும் சரி மறைந்தும் மறையாமல் பல பெருமகன்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விசயம் பலருக்குப் புரிவது இல்லை.

ஆகவே அங்கு போகிறவர்ளில் சிலர் அந்த மகான்களைப் பற்றிக் கேலி செய்துவது உண்டு. கிண்டல் செய்வதும் உண்டு. ரொம்ப தப்புங்க. உங்களுக்குப் பிடிக்கவில்லையா. விட்டுவிடுங்கள். கமெண்ட் அடிக்க வேண்டாம்.

தெய்வ நம்பிக்கையுடன் பயணியுங்கள். எல்லாமே நல்லபடியாக நடக்கும். நம்பினார் கெடுவது இல்லை. நம்புங்கள். நம்பிக்கையே நம்பிக்கை. சரி.


புலாவ் பெசார் தீவில் பல மகான்கள்; பல துறவிகள் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார்கள்.

அந்தத்  துறவிகளில் முதலிடம் வகிப்பவர் சுல்தான் ஷெயிக் அரிபின் (Sultan Sheikh Aarifeen). இவரை அரிபின் பாபா என்றும் அன்புடன் அழைக்கிறார்கள்.

ஒருவரை பாபா அந்தஸ்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள் என்றால் அவருடைய சீர் சிறப்புகளை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அரிபின் பாபாவின் புனிதக் கல்லறை, புலாவ் பெசார் தீவில் தான் இருக்கிறது. இப்போது அது ஒரு வழிப்பாட்டுத் தளம். மிக மிக முக்கியமான வாழ்வியல் கூற்றுத் தளம்.

இந்தத் தீவிற்கு வருபவர்களில் பெரும்பாலோர் சுல்தான் ஷெயிக் அரிபின் பாபா அவர்களின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்யாமல் திரும்பிப் போவது இல்லை.

புலாவ் பெசார் தீவில் உள்ள சமாதிகளில் ஷெயிக் அரிபின் பாபாவின் புனிதச் சமாதியே ஆகப் பெரியதாகும். பெரும்பாலும் எல்லா சமயத்தவர்களும் இவருடைய கல்லறைக்கு வந்து போகிறார்கள். ஒரு தனிப்பட்ட செருகல்.

2015-ஆம் ஆண்டில் ஒரு நாள் இரவு முழுவதும் இவருடைய சமாதியின் அடிவாசலில் பிரார்த்தனை செய்து இருக்கிறேன். இவருடைய புனிதச் சமாதியைச் சுற்றிலும், அன்றைக்கு ஒரு நூறு பேராவது தங்கி பிரார்த்தனை செய்து இருப்பார்கள்.

சுல்தான் ஷெயிக் அரிபின், சவூதி அரேபியா பாக்தாத் நகரில் 1463-ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய 32-ஆவது வயதில், அதாவது 1495-இல், புலாவ் பெசார் தீவிற்கு வந்தார்.

வரும் போது அவருடைய ஆசான் ஷெயிக் யூசுப் சித்திக்கையும் (Maulana Mohamad Yusof Sidiq) அவருடைய சகோதரர் ஷெயிக் இப்ராகிமையும் தன்னுடன் அழைத்து வந்தார். அத்துடன் தன்னுடைய 13 மாணவர்களையும் மறக்கவில்லை. அவர்களையும் அழைத்து வந்தார். 


சூபிச சன்மார்க்கத்தைப் பரப்புவதே அவருடைய தலையாய நோக்கமாகும். இவர்தான் புலாவ் பெசார் தீவின் மூத்த முதல் முன்னோடி.

புலாவ் பெசார் தீவை ஒரு சமய, சமூக, கலாசார வளர்ச்சித் தீவாக மாற்றி அமைத்ததும் இந்தப் பெரியவர்தான். இவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். ஜாவா, சுமத்திரா போன்ற இடங்களில் இருந்து வந்தார்கள். இவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் புலாவ் பெசார் தீவிலேயே ஐக்கியமாகிப் போனார்கள்.

ஷெயிக் அப்துல் காடி ஜிலானி (YA SHAYKH ABDUL QADIR JILANI). இவர் சூபிசத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவருடைய வழிமுறைகளைப் பின்பற்றி வந்தவர்தான் சுல்தான் ஷெயிக் அரிபின்.

சுல்தான் ஷெயிக் அரிபின், புலாவ் பெசார் தீவில் சன்மார்க்கப் பிரசாரங்களில் ஈடுபட்ட போது மலாக்காவின் சுல்தானாக இருந்தவர் முகமட் ஷா. இவர் தான் மலாக்காவின் கடைசி சுல்தான்.

சுல்தான் ஷெயிக் அரிபின் பாபா, 1520-இல் புலாவ் பெசார் தீவிலேயே அமரர் ஆனார். வருடத்தைக் கவனியுங்கள். அப்போது அவருக்கு வயது 58. 


அவர் மறைந்து அறுநூறு ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற நன்னெறிகள், மத நல்லிணக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. 

அவருடைய சமாதிக்குச் சென்று வேண்டுதல் செய்தவர்களுக்கு வேண்டியது கிடைத்து இருக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை. சென்று வந்தவர்கள் மனதாரச் சொல்கின்றனர்.

அதைத் தவிர புலாவ் பெசார் தீவிற்குப் போனால், கவலைகள் தீரும் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதைப் பலர் நம்புகிறார்கள். இருப்பினும் ஒரு விசயம். நம்புவதும் நம்ப மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. எவரும் தலையிட முடியாது. சரி.

புலாவ் பெசார் தீவில் பல வரலாற்றுக் கல்லறைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கது  சாரிபா ரோட்சியா (Syarifah Rodziah) என்பவரின் கல்லறை.

இந்தக் கல்லறையிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழியும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.  பலரின் பிரார்த்தனைகள் பலித்து இருக்கின்றன.

கணவன் – மனைவி பிரச்சினை உள்ளவர்கள் இங்கு வந்தால் அவர்களின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப் படுவதாகவும் பலர் சொல்கிறார்கள்.

சாரிபா ரோட்சியா கல்லறையின் கதவுகள் எப்போதும் மூடியே இருக்கின்றன. அதே போல சுல்தான் ஷெயிக் அரிபின் கல்லறையின் கதவுகளும் எப்போதும் மூடி இருக்கின்றன. 


மலாக்கா இஸ்லாமிய சங்கத்தின் (JAIM) கட்டளை என்று கேள்விப் படுகிறோம். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர்கள் சொல்வதில் நியாயமும் இருக்கிறது.

இங்கு வருபவர்கள் பிரார்த்தனை செய்யும் போது கல்லறைகளின் வளாகம் முழுவதும் பூக்கள், பழங்கள், துணிமணிகள், பழங்கள், பலகாரப் பொருட்களைப் போட்டுக் குவித்து, தூய்மைக் கேட்டை உருவாக்கி விடுகிறார்கள்.

அதனால் இரவு நேரங்களில் ஊர்வனவும் நடப்பனவும் வந்து கல்லறைகளில் தஞ்சம் அடைகின்றன. பொதுமக்களுக்குத் தான் ஆபத்து.

இங்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைப் பொருட்களைக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்து வழிபாடு செய்தால் அந்த இடம் சுத்தமாகவும் இருக்கும். சுகாதாரமாகவும் இருக்கும். அழகாகவும் இருக்கும். தூய்மையாகவும் இருக்கும்.

ஒன்றை மறக்க வேண்டாமே. பக்திப் பரவசம் என்பது மனதிற்குள் இருக்க வேண்டும். புனிதமான இடங்களில் வேண்டுதல் பொருட்களைப் போட்டு அசுத்தப் படுத்துவதில் அல்ல. 

முடிந்த வரை கல்லறை வளாகங்களில் பூக்களை அள்ளிக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆக பக்தி என்பது மனசிற்குள் இருக்க வேண்டும். வெளிப்படையாக விளம்பரம் காட்டுவதில் அல்ல. அப்படியே வெளியே காட்டினாலும் சுற்றுச் சூழலை அசுத்தப் படுத்துவதாக இருக்கக் கூடாது.

தெய்வத்தை மகிழ்ச்சிப் படுத்துகிறோம் என்று சொல்லி அந்தத் தெய்வமே முகம் சுளிக்கிற மாதிரி நடந்து கொள்ளக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து. 

சாரிபா ரோட்சியா 1447-ஆம் ஆண்டில் சுமத்திராவில் பாசாய் எனும் இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் மௌலானா சாயிட் இஷாக்.

சாரிபா ரோட்சியா ஓர் ஆன்மீக வழிகாட்டி. தன்னுடைய கடைசி காலத்தில் ஒரு பெண் துறவியாக வாழ்ந்தார். ஒரு பெண் துறவியாகவே மறைந்தும் போனார். புலாவ் பெசார் தீவிற்கு வந்து, இறை நம்பிக்கையில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் பெண்ணரசி.

இவருடைய கல்லறையைச் சுல்தான் ஷெயிக் அரிபின் கல்லறைக்கு முன் பக்கத்தில் அழகாக அமைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சாரிபா ரோட்சியாவின் சன்மார்க்கத் தொண்டுகளைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அந்தச் சிறப்பு செய்யப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி அடைவோம்.

புலாவ் பெசார் மகான்கள் வரிசையில் இன்னும் சிலர் இருக்கின்றார்கள். அவர்களில் தோக் ஜங்குட்; தோக் பூத்தே; என்பவர்கள் முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரும் இந்தோனேசியா ஆச்சே பகுதியில் இருந்து வந்தவர்கள். சுல்தான் ஷெயிக் அரிபினின் தலைமைப் பாதுகாவலர்களாகச் சேவை செய்தவர்கள். 

மற்றும் இருவர். தோக் பாங்லீமா லீடா ஈத்தாம்; தோக் ஹரிமாவ். இவர்கள் இருவரும் இறைத் தேவர்கள். சுல்தான் ஷெயிக் அரிபினின் வலது கரங்கள். இவர்களின் சமாதிகளைப் பத்து பெலா எனும் இடத்தில் பார்க்கலாம். சரி.

இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடரை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகிறேன். நன்றி. 

(முற்றும்)