கௌசல்யா தேவி - காக்கும் கரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கௌசல்யா தேவி - காக்கும் கரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஜூலை 2019

கௌசல்யா தேவி - காக்கும் கரங்கள்

மாறி வரும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. மாறி வரும் அந்த நவீன மாற்றத்தில் மன வலிமை கொண்ட பெண்கள் அழகு அழகாய் மலர்ந்து வருகின்றார்கள். சிறப்பு மிக்கச் சேவைகளைச் செய்து வருகின்றார்கள். ஆணாதிக்கம் மலைத்துப் போகும் அளவிற்கு அதிரடிச் சாதனைகளையும் செய்து வருகின்றார்கள். 


உண்மையைச் சொல்வதில் தப்பு இல்லை. சொல்லப் போகும் உண்மையும் தப்பாகத் தெரியவில்லை. அந்தக் காலத்துப் பெண்கள் தட்டு முட்டுச் சரக்குகளோடு சமையல் சமையல் கட்டிலேயே சமைந்து போய் சாய்ந்து கிடந்தார்கள். 

இந்தக் காலத்துப் பெண்கள் அப்படி இல்லீங்க. ஆண்களுக்கு நிகராய் கோட்டு சூட்டுகள் போடுகிறார்கள். மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் ஊர்க்கோலம் போகின்றார்கள்.

அந்த மாதிரி வெற்றிக் கனிகளை எட்டிப் பிடித்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களின் மத்தியில் ஒருவர் வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர்தான் மலேசியச் சிறை இலாகாவின் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.

ஒரே வார்த்தையில் சொன்னால் பார் புகழ் பெண்மணி. மலேசியப் பெண்கள் மட்டும் அல்ல. உலகப் பெண்கள் அனைவருக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழும் அழகிய பெண்மணி. இப்படி ஒரு துணிச்சல்மிக்க பெண்மணி இங்கே இந்த மலேசியாவில் பவனி வருகிறாரே என்பதில் மலேசியர்களாகிய நாம் பெருமை கொள்வோம். மகிழ்ச்சி அடைவோம்.  


பொதுவாகச் சொன்னால் இந்தக் காலத்துப் பெண்கள் தோல்விகளைக் கண்டு மிரண்டு போவது இல்லை. சரிவுகளைக் கண்டு துவண்டு போவது இல்லை. சறுக்கல்களைக் கண்டு சரிந்து போவது இல்லை. எதிலும் துணிந்து நிற்கிறார்கள். எதிலும் எதிர்த்து நிற்கிறார்கள். எதிர்த்துப் போராடுகிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். அதுதான் அந்த உண்மை. ஆணாதிக்க உலகம் அதை ஏற்பதில் தயக்கம் காட்டலாம். கண்களைக் கசக்க வேண்டாமே.

சகோதரி கௌசல்யா தேவி மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை ஆணையர். அவரின் முழுப்பெயர் கௌசல்யா தேவி சாது. 

(DCP Kausalya Devi Sathoo, Deputy Commissioner of Prisons, Head of Parole & Community Services, Prisons Department of Malaysia.)

இப்படி ஓர் உயர்ப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணியும் இவர்தான். பெருமையாக இருக்கிறது. 


கடந்த 27 ஆண்டுகளாக மலேசியச் சிறைச்சாலைகளின் முக்கியப் பதவிகளில் பொறுப்பு வகித்து வருகிறார். கௌசல்யா தேவியின் சிறைச் சேவையை அசை போட்டுப் பார்க்கும் போது உண்மையிலேயே மலைப்பு கலந்த திகைப்பு  ஏற்படுகிறது. இடையில் ஒரு செருகல்.

பெண்களின் நிர்வாகம் என்றால் மதுரை மீனாட்சி என்றும்; ஆண்களின் நிர்வாகம் என்றால் சிதம்பரம் நடராஜர் என்றும் முன்பு சொல்லி வந்தார்கள். அது என்னவோ அப்போதைக்குச் சரியாக இருந்தது. இப்போதைக்குச் சரிபட்டு வராதுங்க. மன்னிக்கவும். தில்லை அம்பலத்து நாட்டியத்திலும் பெண்கள் திரை கட்டிப் புகழ் சேர்க்கிறார்களே. அதைத் தான் சொல்ல வருகிறேன். சரி.

சிறைச்சாலை என்றால் எப்படி இருக்கும். நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகள் நிறைந்த இடம். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகள் வாழ்கின்ற இடம். தூக்குத் தண்டனை கைதிகள் தொலைந்து போன நாட்களை எண்ணி எண்ணி வருந்துகின்ற இடம். இப்படி பலதரப் பட்ட மனோபாவங்களுடன் பல்லாயிரம் பேர் அங்கே அடைக்கலம்.


அவர்களின் மத்தியில் கௌசல்யா தேவி தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருகிறார். துணிச்சலின் வடிவமாய் நடந்து போகின்றார். அவர்களின் துக்கத்திலும் துயரத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றார். சாதாரண விசயம் அல்ல.

மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும் என்ற பாரதியார் வாக்கை அழுத்தம் திருத்தமாக வழிமொழிகிறவர் கௌசல்யா தேவி. சிறைச்சாலைக் கைதிகளிடம் ஒரு தாயாக, ஒரு சகோதரியாகப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

எப்படி அவரால் முடிகிறது. எப்படி ஒரு பெண்மணியால் இப்படி ஒரு சவால் மிக்கச் சேவையைச் செய்ய முடிகிறது. இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான். இருந்தாலும் அதற்கு அவரின் ஒரே பதில் என்ன தெரியுங்களா. பொறுமை.

சிறைக் கைதிகளிடம் பொறுமையுடன் பழக வேண்டும். நாம் பார்க்கும் பார்வையில் கண்டிப்பாக முரட்டுத்தனம் இருக்க வேண்டும். பார்வையில் தான்  முரட்டுத்தனம். மற்றபடி மனதிற்குள் இரக்கக் குணம் எப்போதும் இருக்க வேண்டும். இதுதான் அந்த பார்முலா.

அவர்களுடன் ரொம்பவும் புன்னகை பூத்த மலராகப் பழகினால் பிரச்சினை தான். இடத்திற்குத் தகுந்த மாதிரி கண்டிப்பு இருக்க வேண்டும். அதே சமயத்தில் கருணையும் இருக்க வேண்டும் என்கிறார்.

சிறைக் கைதிகள் என்பவர்கள் அறிந்தோ அறியாமலோ; தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்தவர்கள். செய்த தவறுகளுக்காகத் தண்டனையை அனுபவிக்கும் சாமான்ய மனிதர்கள். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாகத் தவறுகள் செய்து இருக்கலாம். செய்த தவறுகளுக்கு ஏற்றவாறு தண்டனை பெற்றவர்கள். ஆனாலும் அவர்களும் மனிதர்கள் தானே.

திருந்தி வாழ்வதற்கு ஒரு புகலிடமாகத் தான் சிறைச்சாலைக்கு வருகிறார்கள். அவர்களைத் திருத்தி அனுப்புவதே சிறைச்சாலைகளின் தலையாயக் கடமை. அந்த வகையில் தண்டனை பெற்றவர்களைக் கண்டிக்கும் இடமாகத் தான் சிறைச்சாலை இருக்க வேண்டும். தண்டனைக்கு மேல் தண்டனைகள் கொடுக்கும் நரகச் சாலையாக இருக்கக் கூடாது.

சகோதரி கௌசல்யா தேவி 1964-ஆம் ஆண்டு பகாங், ரவுப் நகரில் பிறந்தவர். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போதே சீருடை அணிந்து சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். நன்றாகப் படித்தார். பள்ளியின் சீருடை இயக்கங்களில் சேர்ந்து பள்ளியின் வெளிப்புற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

1981-ஆம் ஆண்டு மனித மேம்பாட்டுத் துறையில் பட்டயம் (டிப்ளோமா) படிப்பு படித்து முடித்தார். பின்னர் 1988-ஆம் ஆண்டு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் மனித மேம்பாட்டுத் துறையில் (Human Development) இளங்கலை பட்டம் பெற்றார். கொஞ்ச காலம் ஆய்வுத் துறை உதவியாளராகப் பணி புரிந்தார். 


1993-ஆம் ஆண்டு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மனித சூழலியல் துறையில் வள மேலாண்மைப் பிரிவில் (Resource Management in the Faculty of Human Ecology) மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றார். கொஞ்ச கால இடைவெளிக்குப் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் மனித வளத் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

மாஸ்டர்ஸ் பட்டம் கிடைத்ததும் அவருக்கு இரு நேர்காணல்கள் வந்தன. ஒன்று நல அலுவலர் பணி. மற்றொன்று சிறைச்சாலைப் பணி. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நல அலுவலர் வேலைக்குத் தான் அவருக்கு முதலிடம் கிடைத்தது. ஆனாலும் எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரியாக எழுதிச் சென்றன. சிறைச்சாலை அதிகாரி வேலையில் அமர்ந்தார்.

1992 ஜூலை முதல் தேதி சிறைச்சாலை கல்லூரியில் ஏழு மாதங்களுக்கு அடிப்படை பயிற்சிகள். பின்னர் சிறைச்சாலை தலைமையகத்தில் ஆய்வுத் துறை பகுதியில் பணிகள்.

1995-ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை சிறைச்சாலை கல்லூரியில் விரிவுரையாளர் பணி. அதற்கு அடுத்து தலைமையகத்தில் பொது உறவு அதிகாரியாக நியமிக்கப் பட்டார். பின்னர் பெண்களுக்கான சிறைச்சாலையில் இயக்குநராக நியமனம். இங்கே தான் கௌசல்யா தேவியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்.


குடும்பத்தைப் பிரிந்த பெண்கள் சிறைச்சாலையில் எப்படி எல்லாம் வேதனைப் படுகிறார்கள் என்பதை உணர்ந்தார். அதற்காகச் சிறைச்சாலையிலேயே மகளிர் தினத்திற்கு ஏற்பாடு செய்தார். 2005-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த நிகழ்ச்சி தொடர்கிறது.

இவரின் மேல் கல்விக்காகவும் மேல் பயிற்சிகளுக்காகவும் மூன்று முறை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப் பட்டார். 2010-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சிறைச்சாலைகளின் நன்னடத்தைச் சட்ட அமைப்பில் (paroles and related issues) திருத்தங்கள் செய்த சட்டக் குழுவில் இவரும் பங்கு வகித்தார்.

தமக்கு 60 வயதாகும் வரை தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிறைச்சாலை கல்லூரியில் விரிவுரையாளராகச் சேவை செய்வதில் மனநிறைவு பெறலாம் என்கிறார்.

சிறைச்சாலையில் கௌசல்யா வேலை செய்வதை உற்றார் உறவினர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் இவர் கவலைப் படவில்லை. தான் தேர்ந்து எடுத்த அந்தத் துறையில் முழு ஈடுபாடு காட்டினார். 


இவருடைய தாயாரும் கணவரும் இவருக்கு முழு ஆதரவு தந்து உற்சாகம் கொடுத்தார்கள். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே இந்தச் சகோதரி கௌசல்யாவின் முன்னேற்றத்திற்குப் பின்னால் வேறொரு பின்னணி. அவருடைய கணவரும் அவருடைய தாயாரும் அணிவகுத்து ஆதரவு வழங்கி இருக்கின்றனர். கௌசல்யாவிற்கு மூன்று பிள்ளைகள்.

தக்கன பிழைத்து வாழ்தல் என்பதைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆங்கிலத்தில் Survival of the fittest என்று சொல்வார்கள். சூழலுக்கு ஏற்றால் போல தங்களை வலிமையாக மாற்றிக் கொண்டு தப்பிப் பிழைக்கிற ஒரு முறைமையைத் தான் தக்கன பிழைத்து வாழ்தல் என்று சொல்வார்கள். இந்த மாதிரியான குணம் பெண்களிடம் அதிகம் உண்டு என்பதற்கு கௌசல்யா ஒரு தக்க சான்று.

ஒரு வேலையில் ஈடுபட்டு விட்டால் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பது ஆண்களின் திறன். ஆனால் அவர்களுக்கு அந்த வேலையில் ஏதாவது பிரச்னை என்றால் வேலையில் கவனம் இருக்காது. 


பெண்கள் அப்படி இல்லை. வேலையையும் தனிப்பட்ட பிரச்னைகளையும் குழப்பிக் கொள்வது இல்லை. அலுவலகத்திற்குச் சரியான நேரத்திற்கு வருவதில் பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள். அடிக்கடி டீ சாப்பிடுவது; புகைப் பிடிப்பது; வெளியில் செல்வது போன்ற பழக்கம் ஆண்களிடம் இருக்கும் பெரிய ஒரு மைனஸ் பாயிண்ட்.

பெண்களிடம் இது போன்ற குறைபாடுகள் ரொம்பவும் குறைவு. இப்படி நான் சொல்லவில்லை. தமிழகப் பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். ஆண்களைப் பற்றி எங்கேயோ இடித்தது. அதான் சுட்டிக் காட்டினேன்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சிறைச்சாலைகளில் பெண் அதிகாரிகள் எண்மர் உயர்ப் பதவிகளில் நியமிக்கப் பட்டார்கள். அவர்களில் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி கௌசல்யா தேவி. 2007-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவியில் இருக்கிறார்.

தவிர மலேசிய வரலாற்றில் இதுவரையில் இரு பெண்கள் மட்டுமே மலேசிய சிறை இலாகாவின் துணை இயக்குநர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கௌசல்யா தேவி.


பொதுவாகவே பெண்கள் இந்த மாதிரி கடினமான, சவால் மிக்கப் பணிகளில் ஈடுபடத் தயங்குவார்கள். ஆனால் கௌசல்யா தேவி சற்றும் தயங்கவில்லை.

சிறைக் கைதிகள் என்றாலே முரட்டு ஆசாமிகளின் மூர்க்கத் தனங்கள் தான் முதல் அடையாளமாகத் தெரிய வரும். அவர்களைக் கையாள்வதில் துணிச்சல் வேண்டும். அதிலும் ஒரு பெண்மணி முரட்டு ஆன்களைக் கையாள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அதில் வெற்றி கண்டவர் சகோதரி கௌசல்யா தேவி.

பெண் என்பவர் ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு தங்கையாக, ஒரு மகளாக, ஒரு பேத்தியாக ஓர் ஆணின் வாழ்க்கையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். மனித உறவுகளின் அனைத்துத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதற்கு ஏற்றால் போல சிறைச்சாலை அதிகாரி என்றால் உடலைச் சரியாக; கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சகோதரி கௌசல்யா நெடுந்தூர ஓட்டத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். 


மாறும் என்பதைத் தவிர மற்ற எல்லாமே மாறிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்று சிலர் வருத்தப் படுவது உண்டு. அந்தப் புலம்பல் மட்டும் இன்னும் மாறவில்லை. அப்படி ஒரு வருத்தம் வந்தால் சகோதரி கௌசல்யாவை நினைத்துக் கொள்ளுங்கள். மாற்றம் வரும். மனிதில் தெபு வரும்.

என்னைக் கேட்டால்... ஆண்களைவிட பெண்கள் பல விதத்திலும் பல விசயங்களிலும் ’பெஸ்ட்’. அவர்களுக்கு நம்பர் ஓன் விருது கொடுக்கலாம். ஆண்களே பொறுத்தருளவும்.

சவால் மிக்க சேவையில் ஈடுபட்டு வரும் சகோதரி கௌசல்யாவிற்கு மலேசியத் தமிழர்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துகள். நலமாய் பயணிக்க வேண்டுகிறேன்.


copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

சான்றுகள்:


1. https://www.utusan.com.my/mega/rona/kausalya-seronok-di-penjara-1.201501

2.http://www.prison.gov.my/portal/page/portal/mobile/beritaterkini?fac_next_page=htdocs/beritaTerkini/ViewBerita.jsp?id=3211

3. https://www.facebook.com/jabatanpenjaramalaysia/videos/1571529049523808/?v=1571529049523808