மலேசியா 1MBD மோசடி - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 4

தமிழ்மலர் - 20.11.2018 - செவ்வாய்க்கிழமை

அமேசான் அனக்கொண்டா. கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு இனத்திலேயே ஆகப் பெரிய பாம்பு. அமேசான் புலிகள் என்ன; ஆப்பிரிக்கா யானைகள் என்ன. கெட்டி உருண்டை மாதிரி கெட்டியாகப் பிடித்துச் சுருட்டி அவற்றின் மேலேயே பாய் விரித்துப் படுத்து விடும். அப்பேர்ப்பட்டது அனக்கொண்டா பாம்பு. அப்படிப்பட்ட ஓர் அமேசான் அனக்கொண்டா போல 1எம்.டி.பி. ஊழல் பட்டியலிலும் ஒரு சொகுசான அனக்கொண்டா உள்ளது.

இக்குவானிமிட்டி சூப்பர் சொகுசுக் கப்பல் எனும் அனக்கொண்டாவைத் தான் சொல்ல வருகிறேன். அதாவது மலேசிய மக்களின் 100 கோடி ரிங்கிட்டை விழுங்கி ஏப்பம் விட்ட அழகிய அமேசான் அனக்கொண்டா. ஜோலோ என்கிற அம்மாஞ்சி ராஜா ஆசை ஆசையாய் அழகு பார்த்துக் கட்டிய ஆடம்பரக் கப்பல்.

அந்தக் கப்பலை ஒரு கடல் கன்னி என்று சொல்வதைவிட ஒரு கடல் தேவதை என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை அழகு. அத்தனை மிடுக்கு. அத்தனை கம்பீரம். சும்மாவா. ஒரு பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப் பட்டது.

உலகத்திலேயே பெரிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ். தெரியும் தானே. அப்பேர்ப்பட்ட அவரிடமே அந்த மாதிரி சொகுசுக் கப்பல் இல்லையாம். ஒரு கட்டத்தில் அவருடைய மகள் ஜெனிபருக்கு ஒரு ஐபோன் வாங்கிக் கொடுக்கவே இரண்டு முறை யோசித்தாராம். ஆனால் அம்மாஞ்சி ராஜா ஜோலோவுக்கு மக்களின் வரிப் பணத்தில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

இக்குவானிமிட்டி சூப்பர் சொகுசுக் கப்பலின் பெயர் இப்போது உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப் படுகின்ற புகழ்பெற்ற ஒரு பெயராக மாறி வருகின்றது. உலகில் இதுவரை கட்டப்பட்ட சொகுசுக் கப்பல்களில் இக்குவானிமிட்டி தான் ஆகப் பெரியது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓசியானோ நிறுவனம் கட்டிய கப்பல். இக்குவானிமிட்டி கடலில் போனால் மற்ற மற்ற கப்பல்கள் எல்லாம் வெட்கப்படும் அளவிற்கு சொகுசுத் தன்மை.

மலேசியப் பணத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட கப்பல். ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த ஆடம்பர உல்லாச சொகுசு கப்பலில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

இப்போது அந்தக் கப்பல் லங்காவி தீவில் இருக்கிறது. இந்தக் கப்பலைப் பராமரிக்க ஒரு நாளைக்கு மட்டும் 100,000 ரிங்கிட் தேவைப் படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரிங்கிட். ஒரு மாதத்திற்கு மூன்று மில்லியன் ரிங்கிட். அந்த அளவிற்கு விலையுயர்ந்த சொகுசுக் கப்பல்.

விரைவில் ஏலத்தில் விடப்படும் இந்தக் கப்பலை வாங்குபவர் கப்பலின் சுகங்களை நன்றாகவே அனுபவிக்கலாம். நாம் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும். விலையைப் பாருங்கள். 100 கோடி ரிங்கிட். அந்தப் பணத்தைக் கொண்டு 2000 - 3000 பட்டதாரிகளை முழு நிதியுதவியுடன் படிக்க வைத்து விடலாம்.

அப்படிப்பட்ட ஓர் ஆடம்பரமான கப்பலைத் தான் 1எம்.டி.பி.யில் இருந்து சுரண்டப்பட்ட பணத்தைக் கொண்டு ஜோலோ வாங்கி இருக்கிறார்.

மலேசியாவின் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அந்தக் கப்பல் உலகம் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தது. ஆகக் கடைசியாக பாலி தீவில் நங்கூரம் இட்டது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் பெயர் எப்.பி.ஐ. அதன் உத்தரவின்படி இந்தோனேசிய அரசாங்க அதிகாரிகள் இக்குவானிமிட்டி கப்பலைக் கைப்பற்றினார்கள்.

நீண்ட காலமாகவே மலேசிய அரசியல் பிரசார மேடைகளில் ஒரு மையப் பொருளாக அந்த ஆடம்பரக் கப்பல் உருவெடுத்து இருந்தது. இந்தக் கப்பலைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நஜீப் மறுத்து வந்தார்.

அதே போல ஜோலோவையும் தெரியாது என்று சொல்லி வந்தார். ஆனால் ஜோலோவுடன் இக்குனாமிட்டி கப்பலில் எடுத்த படங்கள் இப்போது உலகம் பூராவும் வைரல் ஆகி வருகின்றன. நஜீப் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

ஜோலோ தான் அந்தக் கப்பலுக்கு இக்குனாமிட்டி எனப் பெயர் சூட்டி இருந்தார். ஆங்கிலத்தில் இக்குனாமிட்டி என்றால் “சலனமற்ற அமைதி” என்று பொருள். இந்தச் சொகுசுக் கப்பல் ஜோலோவின் பணக்கார வணிக நண்பர்களின் கேளிக்கை மையமாகத் திகழ்ந்து வந்தது.

14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்தக் கப்பலுக்குத் துறவி வாழ்க்கை. மலேசியாவில் ஆர்ப்பரித்த கொந்தளிப்பான சூழ்நிலையில் சிக்கியது. அங்கே இங்கே ஓடி ஒளிந்து கொண்டு ஒரு குற்றவாளியைப் போல தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது.

பிரான்ஸ் மொனோக்கோ கேளிக்கை நகரில் கொஞ்ச காலம். மத்தியத்தரைக் கடலில் கொஞ்ச காலம். வளைகுடா நாட்டுக் கடல்களில் கொஞ்ச காலம். இந்தியா கொச்சினில் கொஞ்ச காலம். தாய்லாந்து புக்கெட் பட்டினத்தில் கொஞ்ச காலம். சிங்கப்பூர்; அப்புறம் பாலி தீவு. இப்படியாக அதற்கு நாடோடி வாழ்க்கை.

1எம்.டி.பி. விவகாரத்தில் ஜோலோ சிக்கிக் கொண்டதும் மலேசியாவில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார். மொத்தமாகக் காணாமல் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர் எங்கே இருக்கிறார் என்பது பரம இரகசியமாகவே இருந்தது. மலேசியப் போலீசாரில் இருந்து இண்டர்போல் உலகப் போலீசார் வரை அவரை வலைப் போட்டுத் தேடினார்கள். ஆள் அகப்படவில்லை.

இருந்தாலும் பாருங்கள். ஜோலோ இந்தக் கப்பலில் இருந்து கொண்டு தான் தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்து இருக்கிறார். இப்போது தெரிய வருகிறது.

அது மட்டும் அல்ல. இந்தக் கப்பலில் இருந்து கொண்டு தான் தன் வணிகப் பிரமுகர்களுடன் தொடர்பிலும் இருந்து இருக்கிறார். அந்தக் கப்பலிலேயே சந்திப்புகளையும் நடத்தி வந்து இருக்கிறார்.

இந்தக் கப்பலில் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் விமான மேடை இருக்கிறது. ஜோலோவின் வெளிநாட்டு வணிக நண்பர்கள் சிங்கப்பூருக்கு வந்து; அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலமாக இந்தக் கப்பலுக்கு வந்து இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக எல்லாக் கப்பல்களிலும் தானியங்கி அடையாள முறைமை (Automated Identification System) எனும் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும். ஒரு படகு அல்லது ஒரு கப்பல் கடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது. அது எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்பதை அந்தச் சாதனம் காட்டிக் கொடுக்கும்.

ஆபத்து அவசர வேளைகளில் இந்தச் சாதனத்தின் உதவி கொண்டு தான் அந்தக் கப்பலின் மைய இலக்கை அடையாளம் காண்பார்கள்.

அதே மாதிரியான சாதனம் இக்குவானிமிட்டி கப்பலிலும் பொருத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் அந்தச் சாதனத்தின் இயக்கம் இக்குவானிமிட்டி கப்பலில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.

அதன் காரணமாக அந்தக் கப்பல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சொல்லப் போனால் ஒரு மர்மமான முறையில் இக்குவானிமிட்டி செயல்பட்டு இருக்கிறது.

இந்தோனேசியக் காவல் அதிகாரிகள் இக்குனாமிட்டி கப்பலைப் பாலி தீவில் கைப்பற்றிய போது அதில் 34 பணியாளர்கள் இருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் ஜோலோ மட்டும் இல்லை. வேட்டை நாய்களுக்கு மோப்பம் அதிகம் என்பார்கள். ஆனால் ஜோலோவிற்கு அதைவிட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னிக்கவும். ஒரு மனிதரை ஒரு நாலு கால் ஜீவனுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. ரொம்பவும் தப்பு.

அடுத்து ரோசாப்பூ ரோசும்மா வருகிறார். ரோஸ்மா என்பதைவிட ரோசும்மா தான் நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ரோசம் வடிகிறது. சரி.

1எம்.டி.பி. பணத்தைக் கொண்டு 11 கோடி 30 இலட்சம் மதிப்புள்ள ஒரு நெக்லஸை ரோஸ்மாவிற்கு ஜோலோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார். ஒரே ஓர் இளஞ்சிவப்பு நிறத்திலான வைர நெக்லஸ். அதன் விலை மட்டும் 11 கோடி 30 இலட்சம். உலகத்திலேயே மிக விலை உயர்ந்த நெக்லஸ்களில் இதுவும் ஒன்று. அந்த நெக்லஸ் அமெரிக்கா நியூயார்க் நகரில் வாங்கப் பட்டது.

Court documents contradict claims by former prime minister Datuk Seri Najib Tun Razak over who paid for the US$27.3mil (RM113.7mil) pink diamond necklace meant for his wife.

The indictment papers by the US Department of Justice (DOJ) against fugitive businessman Low Taek Jho stated that the necklace was purchased by a shell company owned by Low and several co-conspirators.

On Sept 28, 2013, Low asked a high-end New York jeweller to meet him, a “Malaysian Official #1” and the official’s wife at a hotel in New York to show the necklace made especially for her.

(சான்று: 03.11.2018 ஸ்டார் நாளிதழ்)

இருந்தாலும் நஜீப் மறுக்கிறார். அந்த நெக்லஸை தான் தன் மனைவிக்கு அன்பளிப்பு செய்ததாகச் சொல்கிறார். அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசர் அந்த நெக்லஸைத் தனக்கு வழங்கியதாவும்; அதையே தன் மனைவிக்கு அன்பளிப்புச் செய்த்தாகவும் சொல்கிறார்.

ஆனால் அது அப்படி இல்லை. ஜோலோ தான் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என்று அமெரிக்க நீதித் துறை தக்க சான்றுகளுடன் உறுதி படுத்துகிறது.

ரோஸ்மாவை மேடம் போஸ் என்றே ஜோலோ அன்புடன் அழைத்து இருக்கிறார். அவர் மீது அவ்வளவு மரியாதை மதிப்பு. அன்பளிப்பு செய்த அந்த வைர நெக்லஸை ஒரு கேக் என்று சொல்லி இருக்கிறார். கேக் என்றால் நாம் சாப்பிடுகிறோமே அணிச்சல் என்கிற இனியப்பம். அது தான்.

அந்த வைர நெக்லஸும் மலேசிய அதிகாரிகள் கைப்பற்றி விட்டார்கள். பொதுத் தேர்தல் முடிந்த கையோடு நஜீப் வீட்டில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பண வேட்டை நடந்தது. தெரியும் தானே. பல கோடி நகைகள் கைப்பற்றப் பட்டன. தெரியும் தானே. அந்த நகைகளில் அந்த இளம் சிவப்பு நெக்லஸும் சிக்கிக் கொண்டது.

புத்ராஜெயா மேல்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் ஜோலோ நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்வதற்கு ரோஸ்மா தான் பாதை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். அதைப் பற்றிய மேலும் பல மர்மமான; ஆனால் அதிர்ச்சியான தகவல்களை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. Low likely bought Rosmah’s pink diamond necklace - https://www.thestar.com.my/news/nation/2018/11/03/low-likely-bought-rosmahs-pink-diamond-necklace/

2. Low and his associates convinced Deutsche Bank into extending a US$250 million loan to 1MDB unit 1Malaysia Energy Holdings Ltd for the purchase of Equanimity - http://www.theedgemarkets.com/article/special-report-how-jho-low-laundered-money-buy-equanimity

3. All You Need to Know About Jho Low and his Yacht Equanimity - https://www.superyachtfan.com/motor_yacht_equanimity.html

4. The US Department of Justice had earlier claimed that the Equanimity, valued at US$250 million (S$328 million), was among assets purchased by Mr Low using funds siphoned from 1MDB - https://www.straitstimes.com/asia/10-things-to-know-about-malaysian-businessman-jho-low