கெலிங் வரலாற்றுச் சொல் - பாகம்: 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெலிங் வரலாற்றுச் சொல் - பாகம்: 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஏப்ரல் 2020

கெலிங் வரலாற்றுச் சொல் - பாகம்: 1

தமிழ் மலர் - 29.04.2020

கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல். நனிமிகுச் சொல். நாணயமான சொல். நியாயமான சொல். கலிங்கர்களின் நம்பிக்கைச் சொல். அசோகர் வாழ்ந்த காலத்தில் ஆர்ப்பரித்தச் சொல். கலிங்கத்தில் அப்போது தொடங்கிய ஆர்ப்பரிப்பு இப்போது இங்கும் தொடர்கிறது. 

 

வரலாறுகள் வரலாறுகளாக இருந்த காலத்தில் வணக்கத்தின் பாவனையில் மலர்ந்து வளர்ந்தது. வரலாறுகள் கோளாறுகளாக மாறிய காலத்தில் வருத்தத்தின் சோதனையில் ஏவுகணைகளாய் மாறிப் பாய்கின்றது. வேதனை.

வெள்ளைச் சாயத்தில் கறுப்புச் சாயம் பூசப் பட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் கெலிங் எனும் சொல் கறுப்புச் சாயத்தில் கொச்சைப் படுத்தப் படுகிறது. காலம் செய்த கோலத்தினால் கலிங்கத்தில் களங்கம் கசிகின்றது.

கறையைத் துடைக்க வேண்டியது மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் கட்டாயம் அல்ல. எதிர்காலச் சந்ததிகளுக்காக இந்தக் காலத்துத் தலைமுறையினர் விட்டுச் செல்ல வேண்டிய தன்மானச் சீதனத்தின் அடையாளம்.




தொடக்கக் கால வரலாற்றில் கெலிங் எனும் சொல் கிழக்கு இந்தியாவின் கலிங்கப் பேரரசுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்தச் சொல்லின் பயன்பாடு ஒரு வரையறைக்குள் உட்பட்டதாக இருந்தது. ஒரு நடுநிலையான பாவனையில் நல்ல ஒரு சொல்லாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது.

ஆனால் பிற்கால வரலாற்றில் அந்தச் சொல்லின் பயன்பாடு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீது பாயும் ஒரு தரக்குறைவான சொல்லாகத் திரிந்து திசை மாறிப் போனது.

குறிப்பாக மலேசியாவில் அந்தச் சொல்லின் தாக்கம் மிகுதியாகவே வளைந்து நெளிந்து வக்கிரம் பேசத் தொடங்கியது. மன்னிக்கவும். தயிர்ச் சாதத்திற்கு ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக் கொள்ளப் பட்டது. 




2015-ஆம் ஆண்டில் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அதில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு ஓர் இந்திய மருத்துவர் உதவி செய்யப் போய் இருக்கிறார். அப்போது விபத்தில் சிக்கியவர் கெலிங் என்னைத் தொட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

பின்னர் உதவிக்குப் போனவர் ஒரு மருத்துவர் என்று தெரிந்ததும் வருத்தங்களில் திருத்தங்கள். பலருக்கும் தெரிந்த விசயம்.

1960-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான், இந்தியர்களை இழிவுபடுத்திப் புண்படுத்தும் கெலிங் எனும் சொல் கொரொனா வைரஸ் போல பரவத் தொடங்கியது. பேராண்மையின் இனவாதத்தில் ஆறாத புண்ணாக மாறி சீழ் பிடிக்கத் தொடங்கியது.




2003-ஆம் ஆண்டில் மலேசிய ஊடகங்களில் கெலிங் எனும் சொல் ஒரு சர்ச்சையாக வெடித்தது. அந்தச் சொல் அவதூறான கேவலமான சொல். அந்தச் சொல்லை டேவான் பகாசா புஸ்தாகா (Dewan Bahasa dan Pustaka (DBP)) தன்னுடைய மலாய் அகராதியில் (Kamus Dewan) சேர்த்தது குற்றம் என்று அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப் பட்டது.

அந்தச் சொல்லுக்கு எடுத்துக் காட்டுகளாக ’கெலிங் மாபுக் தோடி’ (Keling Mabuk Todi); ’கெலிங் காராம்’ (Keling Karam - சத்தமாக பேசுபவர்) என்று பதிவு செய்து இருந்தது. முட்டாள்தனமான எடுத்துக் காட்டுகள். பின்னர் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் பட்ட கண்களுக்கு சின்ன ஒரு தலைவலி மாத்திரை. 




முன்னாள் மூத்த தலைவர் ஒருவரும் சும்மா சொல்லக் கூடாது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் கெலிங் எனும் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது ஒட்டிக் கொண்ட பழக்க தோசம். ஒரு தடவை முன்னாள் பிரதமர் நஜீப்பைப் பார்த்து ’கெலிங் என்ன சொல்வார்... போடா’ என்றார். (What do the ‘keling’ say? Podah!)

சமயங்களில் சிலருக்கு ரொம்பவும் வயதாகி விட்டால் இப்படித்தான். சொந்த ஊரின் அக்கம் பக்கத்துச் சொந்தங்களை மறந்து விடுகிறார்கள். என்ன செய்வது. மனித இயல்புகளில் புத்திக் கோளாறுகள் ஏற்படுவது சகஜம் தானே.

முன்பு காலத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனும் சொல் இல்லை. இந்தியர் எனும் சொல்லும் இல்லை. அந்த இரு சொற்களும் மலாயா நாட்டிலும் இந்தோனேசியா நுசந்தாரா பகுதியிலும் புழக்கத்திலும் இல்லை.


இந்தியர்களைக் குறிப்பிடுவதற்குக் கலிங்கா எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்தப்படுத்தி வந்தார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியர்கள் கலிங்கா நாட்டில் இருந்து வந்தவர்கள் எனும் பொதுவான கருத்து நிலவி வந்தது. அதனால் இந்தியாவில் இருந்து வந்தவர்களை ஓராங் கலிங்கா (Wang Kalinga) என்று அழைத்து வந்தார்கள்.

எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பார்கள். அது போல கலிங்கா எனும் சொல்லும் காலப் போக்கில் தேய்ந்து நலிந்து கலிங் என்று காய்ந்து போனது. அப்புறம் நாளாக நாளாக கலிங் எனும் சொல் கெலிங் என்று மாறிப் போனது.



கலிங்கப் போர்

15-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள்; டச்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள் போன்றோர் வணிகம் செய்வதற்கு மலாயாவிற்கும் நுசந்தாரா பகுதிகளுக்கும் வந்தார்கள். நுசந்தாரா என்றால் தென் திரை நாடுகள்.

மஜபாகித் அரசு ஜாவாவை ஆட்சி செய்யும் போது நுசந்தாரா (Nusantara) எனும் சொல் உருவானது. மஜபாகித் அரசிற்கு கப்பம் கட்டிய நாடுகளை நுசந்தாரா நாடுகள் என்று அழைத்து இருக்கிறார்கள்.

பொதுவாகச் சொன்னால் சுமத்திரா, ஜாவா, மலாயா தீபகற்பம், போர்னியோ, சுந்தா தீவுகள், சுலாவசி, மொலுக்கஸ் தீவுகள் போன்றவை நுசந்தாரா என்று அழைக்கப் பட்டன. 



கலிங்கர்கள் புலம்பெயர்வு
அந்த நுசந்தாரா தீவுக் கூட்டத்தில் (Maritime Southeast Asia) வாழ்ந்த மக்கள், இந்தியாவில் இருந்து வியாபாரம் செய்ய வந்த இந்தியர்களை ஓராங் கலிங்கா (Wang Kalingga) என்று அழைத்து இருக்கிறார்கள்.

ஐரோப்பியர்கள் தென் திரை நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இந்தியா; இந்தியர் எனும் சொற்கள் பரவலாகிப் புழக்கத்திற்கு வந்தன. ஆனாலும் கலிங்கா எனும் சொல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போனதால் இந்தியா எனும் சொல் அழுத்தமாகப் படரவில்லை.

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இந்திய நாட்டு வணிகர்கள்; அரபு நாட்டு வணிகர்கள்; சீனா நாட்டு வணிகர்கள் மலாயாவுக்கு வந்து போய் இருக்கிறார்கள். பண்டமாற்று வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.



அசோகர்

ஏறக்குறைய 2000 - 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அவர்கள் மலாயா தீபகற்பத்திற்கு வந்து போய் இருக்கிறார்கள்.

ஆனால் அரபு, சீனா நாட்டு வணிகர்கள் இந்தியா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. இந்தியர்கள் எனும் சொல்லையும் பயன்படுத்தவில்லை.
இந்தியாவைக் குறிப்பிட்டுச் சொல்ல கலிங்கா எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல கலிங்கர்கள் எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒருவரைச் சுட்டிக் காட்ட கெலிங்கா (Kelinga) எனும் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது.



2000 ஆண்டுகளுக்கு முன்னர்
கலிங்கர்களின் கடல் பயணங்கள்

தென் திரை நாடுகளில் இந்தியா எனும் ஆங்கிலச் சொல் அறிமுகம் ஆவதற்கு முன்பு, இந்தியா எனும் நாட்டைக் குறிப்பதற்கு கெல்லிங் (Keling) எனும் சொல்லையும் ஜம்பு தீவு (Jambu Dwipa) எனும் சொல்லையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மலாய், இந்தோனேசிய மொழிகளில் தான் அந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்திய துணைக் கண்டத்தைக் குறிப்பிடுவதற்கு பெனுவா கெலிங் (Benua Keling) எனும் சொல் தொடரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற மற்ற நாடுகளில் அந்தச் சொல்லின் பயன்பாட்டைப் பார்ப்போம். கம்போடியாவின் கெமர் மொழியில் கிளெங் (Kleng) எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பொருள் வேறு. ’அக்குள்’ என்று பொருள் படுகிறது.

தென்திரை நாடுகளில் இந்தியர்கள்

அதே போல தாய்லாந்தின் தாய் மொழியில் கெலிங் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. கெய்க் (Khaek) என்று அழைக்கிறார்கள். ’விருந்தினர்’ என்று பொருள் படுகிறது.

இருந்தாலும் கிளேங் எனும் மூலச் சொல்லில் இருந்து தான் அந்த இரு மொழிகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

மலாய் வரலாற்று இலக்கியமான செஜாரா மெலாயு (Sejarah Melayu) கெலிங் எனும் சொல்லை எடுத்துக் காட்டுகின்றது. அதன் புராணக் கதைகளில் ராஜா சூலானை (Raja Shulan) கலிங்காவின் மன்னன் என்று குறிப்பிடுகிறது. அவர் தன் சந்ததியினரான ராஜா சுலானுடன் (Raja Chulan) சீனாவைக் கைப்பற்றச் சென்றதாகச் சொல்கின்றது.



கலிங்கப் போர்

இங்கே ஒன்றைக் கவனியுங்கள். ராஜா சூலான் எனும் பெயரும் ராஜா சுலான் எனும் பெயரும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளன. செஜாரா மெலாயு இலக்கியத்தில் அப்படித்தான் சொல்லப் படுகிறது. ஆனால் வேறு வெறு அர்த்தங்கள் கொண்டவை. வேறு வேறு நபர்களின் பெயர்கள்.

அந்தப் பதிவுகள் உண்மையாக இருக்குமானால் கெலிங் எனும் சொல்லை வேறு மாதிரியாகவும் பார்க்க வேண்டி உள்ளது.

கி.பி 1025-ஆம் ஆண்டில் ஸ்ரீ விஜய பேரரசின் மீது ராஜேந்திர சோழரின் படையெடுப்பு நடந்தது. அதைப் பற்றி செஜாரா மெலாயுவில் சொல்லப் படுகிறது. அங்கே கெலிங் எனும் சொல் வருகிறது. அந்தச் சொல் சோழர்களைக் குறிப்பிடுவதாக இருக்கலாம். கலிங்கத்தைக் குறிப்பிடுவதாக அமையாது.



கலிங்கப் போர்
செஜாரா மெலாயுவில் சில குறிப்புகள் மிக அண்மைய கால நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. மலாக்கா சுல்தானகத்தின் (Melaka Sultanate) காலத்தில் ஹாங் நாடிம் (Hang Nadim) என்பவர் கலிங்கத் துணைக் கண்டத்திற்கு (Benua Keling) வருகை மேற்கொண்டதாகச் சொல்கிறது.

ஹாங் நாடிம் என்பவர் இளம் மலாய் சிறுவன். சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் தெமாசெக்கை வாள்மீன்கள் தாக்கிய போது கிராம மக்களை ஹாங் நாடிம் காப்பாற்றியதாக வரலாறு. அதைத் தான் செஜாரா மெலாயு சுட்டிக் காட்டுகிறது.

செஜாரா மெலாயுவில் சொல்லப்படும் கலிங்கத் துணைக் கண்டம் என்பது ஒட்டு மொத்த இந்தியாவைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. ஏன் என்றால் அப்போது கலிங்க நாட்டின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்து போய் விட்டது. 



அசோகர்

அசோகரின் படையெடுப்பு; அதன் பின்னர் மொகலாயர்களின் படையெடுப்பு. அதனால் கலிங்கம் பலகீனமான நிலையில் இருந்தது. கலிங்க நாடு பெரிய ஒரு சக்தியாக விளங்கவில்லை.

ஹிக்காயாட் ஹங் துவா (Hikayat Hang Tuah) எனும் வரலாற்றுப் படிவத்தில் ஹங் துவாவின் இந்தியப் பயணம் பற்றி ஒரு முழு அத்தியாயமே உள்ளது. அந்த அத்தியாயத்தில் கலிங்கா எனும் சொல் பயன்படுத்தப் படவே இல்லை. கலிங்கம் என்பதற்குப் பதிலாக ‘பெனுவா கெலிங்’ (Benua Keling) எனும் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன.

சான்று: http://www.sabrizain.org/malaya/keling.htm

'கெலிங்' எனும் சொல் கலிங்க நாட்டில் இருந்து வந்த சொல்லாக இருக்கலாம். கலிங்கா நாடு ஒரிசா பகுதியில் உள்ளது. இருந்தாலும் ஆரம்ப காலத்தில் இருந்தே தென்னிந்தியர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அது ஒரு வகையில் தென்னிந்தியர்களின் துரதிர்ஷ்டவசமே!

மலாய் மொழியில் 'பெங்காலி' என்ற சொல்லிலும் அதே போன்று ஒரு தவறு நடந்து உள்ளது. பஞ்சாபியர் என்பவர்களைப் பெங்காலிகள் என்று மலாய் மொழியில் சொல்லப் படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பஞ்சாபியர்கள் வங்காளிகள் அல்ல. அவர்கள் சீக்கிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.

அதே போல ஒரு தவறுதான் தென் இந்தியர்களுக்கும் நடந்து இருக்கிறது. செஜாரா மெலாயு, தென் இந்தியர்களைக் கலிங்கர்கள் என்று தவறாகச் சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் அவர்களைத் தென் இந்தியர்கள் என்றே பதிவு செய்து இருக்க வேண்டும். 

செஜாரா மெலாயுவின் சிற்சில முரண்பாடுகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் மேலும் விளக்கம் தருகிறேன். சரி.

மிக மிகப் பழங்காலத்தில் இந்தியா முழுவதும் ஐம்பத்தாறு நாடுகள் இருந்ததாக வரலாற்றுப் புராணங்கள் சொல்கின்றன. அங்கம், வங்கம், கலிங்கம், அவந்தி, அயோத்தியா, கோசலம், காந்தாரம், காம்போஜம், பாஞ்சாலம் என்று நீண்ட ஒரு பட்டியல். அதில் கலிங்கம் எனும் சொல் வருகிறது. கவனியுங்கள்.

கெலிங் எனும் சொல் எப்படி உருவானது. அந்தச் சொல்லின் பின்னணி என்ன? வரலாற்று ஏடுகளில் கெலிங் எனும் சொல் எப்படி வந்தது? கடந்த நூறாண்டுகளில் தமிழர்கள் ஏன் கெலிங் என்று அழைக்கப் பட்டார்கள்?

இதைப் பற்றி ஓர் ஆய்வே இந்தக் கட்டுரைத் தொடர். கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல் என்பதை இந்தத் தொடரின் மூலம் உலகத்திற்குத் தெரியப் படுத்துவோம். அதுவே நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனமாக அமையும் என்று நம்புவோம். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.04.2020


சான்றுகள்:

1. Singaravelu Sachithanantham (2004). The Ramayana Tradition in Southeast Asia. Kuala Lumpur: University of Malaya Press.

2. Sastri, Nilakanta (1 January 1939). Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras.

3. Malaysian Indians - https://www.wdl.org/en/item/555/

4. Definisi 'keling'" (in Indonesian). Arti Kata - http://artikata.com/arti-333898-keling.html

5. ‘Keling’ and proud of it - https://www.thestar.com.my/opinion/columnists/along-the-watchtower/2016/08/10/keling-and-proud-of-it-the-k-word-deemed-to-be-derogatory-and-offensive-to-the-indian-community-sinc/



பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்


Inbachudar Muthuchandran >>> Muthukrishnan Ipoh: // உங்களது கட்டுரை நல்ல ஒரு விளக்கம். Keling என்ற சொல்லுக்கு பொருள் தமிழர், இந்து என்று ஆசிரியர் சி.வேலுசாமியின் மலாய் தமிழ் அகராதியில் இன்னும் இடம் பெற்று இருக்கின்றது.

அவர் உயிரோடு இருந்த காலத்தில் அன்னாரை நான் சந்தித்து அந்தச் சொல்லை உங்கள் அகராதியில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கேட்டேன். ஆனால் அன்னார் அது அப்படியே இருக்கட்டும். அதன் அர்த்தம் சரி தான் என்று சொல்லிவிட்டார்.

இந்த அகராதி பல பதிப்புகள் வெளியாகி இன்னும் இருக்கின்றது. அன்னாரது அகராதி இன்னும் தமிழ் பள்ளிகளில் இருக்கின்றது. ஆகையால் இச்சொல் தவிர்க்க முடியாது. என்னை மலாய்க்கார நண்பர்கள் ஏசாமல் நட்பு பாராட்டும் வகையில் அந்த சொல்லை கூறினால் ஏற்றுக் கொள்வேன்.

ஆனால் இழிவாக அதனைச் சொன்னால் விடமாட்டேன். ஏன் துன் மகாதீரே அந்தச் சொல்லை சொல்லி இருக்கின்றார் என்றால் பாருங்களேன்.

Muthukrishnan Ipoh : // Keling என்ற சொல்லுக்கு பொருள் தமிழர், இந்து என்று ஆசிரியர் சி.வேலுசாமியின் மலாய் தமிழ் அகராதியில் இன்னும் இடம் பெற்று இருக்கின்றது, //

கெலிங் என்றால் கலிங்கர்; கலிங்க நாட்டைச் சேர்ந்தவர்; கலிங்கம் என்பது கலிங் என்று மருவி உச்சரிப்பு பிறழ்வினால் கெலிங் என்று மாறியது;

எதிர்காலப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு அவ்வாறு அந்த அகராதியில் இடம் பெறச் செய்து இருக்க வேண்டும்.

இனத் துவேசமான சொற்களைக் கையாளும் போது பார்ப்பவர் படிப்பவர் மனங்களில் காயம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகளுக்கு நன்றிங்க ஐயா இன்பச்சுடர்,,, வாழ்த்துகள்...

Melur Manoharan : "அருமையான"
வரலாற்று பதிவு...!
------------------------------------
தங்களின்
"எழுத்துப்பணி" சிறக்க
"வாழ்த்துகள்" ஐயா...!
-----------------------------------------

Muthukrishnan Ipoh : நன்றி. மகிழ்ச்சி. இனிய வாழ்த்துகள்.

Sheila Mohan : மிகவும் தெளிவான வரலாற்று கட்டுரை... நன்றிங்க சார்..,

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... இனிய காலையில் இனிய வாழ்த்துகள்...

Sundaram Natarajan : இனிய காலை வணக்கம் அண்ணா

Muthukrishnan Ipoh : வாழ்த்துகள் வணக்கம்...

Samugam Veerappan : யாருக்கும் தெரியாத பல அற்புதமான செய்திகளை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

Muthukrishnan Ipoh : நமக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சி அடைகிறோம் ஐயா... வாழ்த்துகள்...

Prem Rani : துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாத வரலாற்று தகவல்கள். தங்களின் பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

Muthukrishnan Ipoh : மிக்க நன்றி. வாழ்த்துகள்.

Gunasegar Manickam : மிகவும் தெளிவாக அற்புதமாக விளக்கம் அளித்துள்ளீர்கள், ஐயா. நன்றி.. நன்றி.. நன்றி.

Aananthi Pooja

Muthukrishnan Ipoh : நன்றி... நன்றி.

Anthony Tony : அருமையான பதிவு ஐயா, பகிர்ந்தமைக்கு நன்றி

Muthukrishnan Ipoh : நன்றி. மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம்.

Banu Banu


https://scontent.fkul4-1.fna.fbcdn.net/v/t39.1997-6/s168x128/65910633_2400415203372647_3938680740681613312_n.png?_nc_cat=1&_nc_sid=ac3552&_nc_ohc=gS3mWHWtXPQAX_M-Gyg&_nc_ht=scontent.fkul4-1.fna&oh=48e5ce42b0a08e7821246ba83c71da2a&oe=5EEB8BC7

Muthukrishnan Ipoh :
இனிய காலை வேளையில் இனிய வாழ்த்துகள்...