கொரோனா வைரஸ் மனித மரபணுவை எப்படி அழிக்கிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் மனித மரபணுவை எப்படி அழிக்கிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 மார்ச் 2020

கொரோனா வைரஸ் மனித மரபணுவை எப்படி அழிக்கிறது

கொரோனா வைரஸ் எப்படி நம் மரபணுவைக் கட்டாயப் படுத்தி புதிய கிருமிகளை உருவாக்கிக் கொள்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் இரண்டு விதத்தில் நம் உடலுக்குள் செல்கிறது. முதலாவது சுவாசத்தின் மூலமாகச் செல்கிறது. 


நம் பக்கத்தில் இருப்பவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நமக்கே தெரியாமல் இருக்கலாம்.

ஏன் என்றால் கொரோனா தொற்று ஏற்பட்டு 3 - 14 நாட்கள் வரை தொற்று ஏற்பட்டவருக்கே தெரியாது.

அதன் நோய் காப்புக் காலம் (incubation period) 3 - 14 நாட்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. பொதுவாக 5 நாட்களில் தெரிந்து விடும்.

கொரோனாவின் காப்புக் காலத்தில் பாதிக்கப் பட்டவரின் உடலில் கோடிக் கணக்கான கொரோனா கிருமிகள் உற்பத்தி ஆகி இருக்கும். அறிகுறிகள் தோன்றி இருக்காத காலக் கட்டம். பொது இடங்களில் பரவிக் கொண்டும் இருக்கும்.
 

அந்தக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர் மூச்சு விடும் போதும் சரி; தும்மும் போதும் சரி; இருமல் வரும் போதும் சரி; ஏப்பம் விடும் போதும் சரி; ஒரு பொருளைத் தொடும் போதும் சரி; கொரோனா கிருமிகள் அலை அலையாய் பரவிப் போகின்றன.

பாதிக்கப் பட்டவரைக் குறை சொல்ல முடியாது. ஏன் என்றால் கொரோனா தன் உடலில் குட்டிப் போட்டு பேரன் பேத்திகள் எடுத்து இருக்கின்றன என்பது பாவம் அவருக்கே தெரியாது.

பாதிக்கப் பட்டவர் இருமினால் அல்லது தும்மினால் அவர் உடலில் இருந்து கொரோனா கிருமிகள் வெளியாகின்றன. அப்படியே ஒரு மீட்டர் வரை பரவுகின்றன.

அவர் இருமிய இடத்தில் அல்லது அவர் தொட்ட இடத்தில் உள்ள ஒரு பொருளை நாம் தொடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்னர் அப்படியே எதேச்சையாக நம் முகத்தையும் தொடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
 


அங்கே தான் பிரச்சினை தொடக்கம். கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலிலும் நுழையத் தொடங்குகிறது.

ஆக வெளியே எங்கேயாவது போனால்; ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால்; எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் கை விரல்கள் உங்கள் முகத்தின் மீது படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைக் கைகளால் தொடவே கூடாது.

வெளியே போய் வந்ததும் உங்கள் கைகளைச் சவர்க்காரம் போட்டு 25 விநாடிகளுக்கு நன்றாகக் கழுவுங்கள். அப்படியே உங்கள் கைகளில் கொரோனா கிருமிகள் இருந்தால் அவை அழிவதற்கு 22 விநாடிகள் பிடிக்கும். எந்த இடத்தில் எந்தக் கிருமி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. சரி தானே.

கொரோனா கிருமிகளின் மீது படர்ந்து இருக்கும் புரத அமினோ அமிலங்களைச் சவர்க்காரம், குளோராக்ஸ் அமிலம், சுத்திகரிப்பு திரவங்கள் (Sanitizers) போன்றவை கரைத்து அழித்து விடும். அதனால் கொரோனா கிருமியும் செயல் இழந்து போகும்.
 

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று முக்கிய அமைப்புத் தொகுதிகளைக் கொண்டு உள்ளன. 1. ஆர்.என்.ஏ. (RNA); 2. புரதங்கள் (Proteins); 3. கொழுப்புப் பொருட்கள் (Lipids).

ஆர்.என்.ஏ. என்பது வைரஸ் கிருமியின் மரபணுப் பொருள். இது டி.என்.ஏ. (DNA) போன்றது. கிருமியின் புரதங்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன.

கொரோனா வைரஸ் கிருமியின் தலையாய வேலை என்ன தெரியுங்களா. மனிதர் அல்லது விலங்குகளின் உயிரணுக்களை உடைப்பது. அப்புறம் தன்னைப் போல மேலும் பிரதிகளை உற்பத்தி செய்ய வைப்பது. உயிரியல் அடிப்படையில் பார்த்தால் ஒரு முக்கிய கட்டிடத் தொகுதியைப் புரதங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.

ஒரு வீட்டைக் கட்டும் போது செங்கற்களை அடுக்கி அடுக்கி சுவர் எழுப்புகிறோம் அல்லவா. அதே போலத் தான் வைரஸ் கிருமிகளின் கட்டமைப்பில் புரதங்கள் உதவி செய்கின்றன.
 


லிப்பிடுகள் (Lipids) எனும் கொழுப்புப் பொருட்கள், வைரஸ் கிருமியின் மேல் தோல் பகுதிக்கு கொழுப்பை உருவாக்கித் தருகின்றன. அந்தக் கொழுப்பு தான் கிருமியின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவுகிறது.

அதே சமயத்தில் கிருமி பரவிப் போவதற்கும் அந்தக் கொழுப்பு உதவி செய்கிறது. அடுத்து முக்கியமான ஒரு விசயம். எதிரி அணுக்கள் மீது படை எடுப்பதற்கும் கிருமியின் புரதம் தான் உதவுகிறது. சரி.

இறுதிக் கட்டத்தில் கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) வருகிறது. ஆக இந்த ஆர்.என்.ஏ.; இந்தப் புரதங்கள்; இந்த லிப்பிட் கொழுப்புகள் மூன்றும் கூட்டு சேர்ந்து ஒரு வைரஸை உருவாக்குகின்றன. அதற்கு உயிரும் கொடுக்கின்றன.

இருந்தாலும் பாருங்கள். எந்தச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டினாலும் மூன்று பங்காளிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று சொல்வார்கள். ரொம்ப கஷ்டம் என்பது அந்தக் காலத்து வழக்கு.
 

அந்த மாதிரிதான் வைரஸ் கூட்டு அமைப்பிலும் சற்றே இடக்கு முடக்குகள். மேலே சொன்ன அந்த மூன்று தொகுதிகளையும் ஒன்றாக இணைத்து; அவற்றை ஒரு வலுவான, ஓர் உறுதியான கட்டமைப்புக்குள் பிணைக்கும் திறன் வைரஸ் கிருமியிடம் இல்லை. கொரோனா வைரஸின் வீக் பாயிண்ட்.

அங்கே தான் அதன் கட்டமைப்பில் பலகீனம் உருவாகிறது. மூன்று தொகுதிப் பொருட்களும் கூட்டாக இணைந்து வலுவாக இருப்பது இல்லை. அதுதான் வைரஸ் கிருமியிடம் உள்ள சின்ன ஒரு குறைபாடு.

இருந்தாலும் கிருமியின் மரபணுக் கட்டமைப்பை அப்படி ஒன்றும் சுலபத்தில் உடைத்துவிட முடியாது.

ஆனால்... ஆனால்... ஒரே ஒரு பொருள். சவர்க்காரம் எனும் சாதாரணமான பொருள். அந்தப் பொருள் மட்டும் தான் வைரஸ் கிருமியின் கட்டமைப்பைச் சில விநாடிகளில் உடைத்துவிட முடியும். உடைக்கும் ஆற்றலைப் பெற்று உள்ளது.
 

அதே சமயத்தில் சலவைத்தூள்; சாராயம் (Isopropyl Alcohol); ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen Peroxide) போன்ற பொருட்களும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டவை. நினைவு படுத்துகிறேன்.

ஒரு கொரோனா வைரஸ் ஒரு மனித உயிரணுவை ஆக்கிரமிக்கும் போது, கிருமியின் ஆர்.என்.ஏ. போல புதிய ஆர்.என்.ஏ. நகல்களை உருவாக்க மனித உயிரணுவையே கட்டாயப் படுத்துகிறது. பாருங்கள் எப்பேர்ப்பட்ட கில்லாடித் தனமான வைரஸ்.

கிருமியின் ஆர்.என்.ஏ. போல மேலும் மேலும் பல பிரதி ஆர்.என்.ஏ. -க்களை உருவாக்க மனித உயிரணுவைக் கட்டாயப் படுத்துகிறது. அதையும் தாண்டிய நிலையில் கிருமியிடம் இருக்கும் பற்பல புரதங்களைப் போல மேலும் மேலும் பல புரதங்களை உருவாக்கவும் மனித உயிரணுவைக் கட்டாயப் படுத்துகிறது.
 

அந்த வகையில் பழைய வைரஸ் கிருமியைப் போன்றே புதிய புதிய வைரஸ் பிரதிநிதிகள் உருவாக்கப் படுகின்றன.

நம்முடைய உயிரணுவில் ஏற்கனவே புரதச் சத்துகள் இருக்கும். அந்தப் புரதச் சத்துகளைக் கொண்டே புதிய வைரஸ் கிருமிக்கான புரதங்களும் உருவாக்கப் படுகின்றன.

அப்புறம் என்ன. அந்தப் புரதங்களைக் கொண்டு புதிய புதிய வைரஸ் கிருமிகள் உருவாக்கப் படுகின்றன. எப்பேர்ப்பட்ட கில்லாடித் தனமான வைரஸாக இருக்க வேண்டும். நீங்களே மார்க் போட்டு கொடுத்து விடுங்களேன்.

பின்னர் தான் இடி அமின் கொலை வெறித் தாண்டவங்கள். புதிதாக உருவான வைரஸ் கிருமிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அவற்றின் விருந்தாளியான மனித மரபணுவை எதிர்க்கின்றன. வெற்றி அந்தப் பக்கம் தான்.

பாவம் மனித மரபணு. புதிய வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல் மெது மெதுவாய்ச் செத்துப் போகும். அல்லது வெடித்துச் சிதறிப் போகும்.
 

அதன் பின்னர் புதிதாக முளைத்த வைரஸ் கிருமிகள் அடுத்தடுத்த மனித மரபணுக்கள் மீது படை எடுக்கின்றன. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன.

இறுதியில் மனித நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்கள்; சளிச் சவ்வுகளில் (mucous membranes) நுழைந்து தங்களின் கொடூரப் பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் நோயாளி புனர் ஜென்மம் எடுத்து உயிர் பெற்று இருக்கலாம். அல்லது இறந்து போய் இருக்கலாம்.

நீங்கள் இருமும் போதும்; அல்லது தும்மும் போதும் நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்கள் வழியாகச் சிறு சிறு திரவத் துளிகள் வெளியே கொட்டுகின்றன.

தும்மும் போது, சளி நீர்த் துளிகளில் உள்ள சில பல வைரஸ் கிருமிகள் 30 அடி தூரம் வரை பறந்து பரவிச் செல்ல முடியும். அதை மறந்துவிட வேண்டாம்.

கொரோனா வைரஸ் கிருமிகள் சற்றே பெரியவை. தும்மும் போது அந்தக்  கிருமிகள் 7 அடி வரை பாய்ந்து செல்ல முடியும். ஆகவே தும்மும் போதும் சரி; இருமும் போதும் சரி; முகத்தை மூடிக் கொள்ளுங்கள்.

வரும் முன் காப்போம். வந்த பின் தடுப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.03.2020