முத்துலட்சுமி ரெட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துலட்சுமி ரெட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜனவரி 2016

முத்துலட்சுமி ரெட்டி

தேவதாசி விடுதலை வீராங்கனை


ஆண்களின் இச்சைக்கு ஆரவாரப் பூக்கள். பெண்களின் இயலாமைக்கு பரிவாரப் பூக்கள். ஒரு பக்கம் ஆண்களுக்குச் சாதகமான வக்கிரச் சலவைகள். இன்னொரு பக்கம் பெண்களுக்குப் பாதகமான மூளைச் சலவைகள். முன்னது ஆண்களின் லௌகீத்தில் மோப்பம் பிடித்த வேசித் தனம். பின்னது பெண்களின் பலகீனத்தில் ஏப்பம் விட்ட அசிங்கத்தனம். இது எனக்குள் ஆர்ப்பரிக்கும் வேதனைத் தனம். உணர்வுகள் கொப்பளிக்கும் ஆதங்கத் தனம். கோபம் வேண்டாமே... 

தேவதாசி முறையை ஒழித்துக் கட்டிய வீராங்கனை முத்துலட்சுமி ரெட்டியின் வரலாறு வருகிறது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான வாழ்வியல் வரலாறு. படியுங்கள்.

படித்து விட்டு அந்தப் பெண் தெய்வத்தைக் கை எடுத்துக் கும்பிடுங்கள். சொர்க்கத்தில் இன்றைக்காவது உங்களால் கொஞ்ச நேரம் பூமாரி பொழியட்டும்.

தேவதாசி என்கிற பெயர்கூட சரித்திரத்தில் இருக்கக் கூடாது


ஓர் உண்மைச் சம்பவம். 1950களில் நடந்தது. தமிழகச் சட்டச் சபையில் ஒரு நா‌ள் அன‌ல் பற‌க்கு‌ம் ‌விவாத‌ம். பல காலமாகத் தமிழகத்துக் கோயில்களில் பொட்டுக் கட்டுதல் என்கிற தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. இனிவரும் காலங்களில் தேவதாசி என்கிற பெயர்கூட சரித்திரத்தில் இருக்கக் கூடாது.



அந்த முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் பிடிவாதமான இறுமாப்பு. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அரசியல் பீடத்தில் ஆவேசமாக முழக்கமிட்டார்.

அதே அந்தச் சட்டச் சபையில் சத்தியமூர்த்தி என்பவர் ஒருவர் இருந்தார். இவர் மாறுதல்களை விரும்பாத நல்ல ஒரு பழமை விரும்பி. நன்றாகப் பட்டை அடித்துக் கொண்டு வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிந்தவர். அரசியல் டிக்கெட் வாங்கிச் சட்டச் சபைக்கு வந்து விட்டார். எட்டுக் காலில் அவர் எகிறிக் குதித்து எதிர்க் குரல் கொடுத்தார்.

சாமிக்கு விரோதமாக எதையும் செய்யக் கூடாது. சாமி கண்ணைக் குத்தி விடும். தேவதாசிகள் காலம் காலமாக ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப் பட்டவர்கள். அவர்கள் தேவர்களின் அடிமைகள். தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் பெற்றவர்கள்.


அவர்களை ஏன் ஒழிக்க வேண்டும். அதெல்லாம் கூடாது. அது பெரிய பாவம். சரித்திரத்தைத் திருப்பி எழுதக் கூடாது. எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டுமே. தெய்வ நிந்தனைக்குப் பட்டயம் கட்ட வேண்டாம். இது சத்தியமூர்த்தியின் சத்தியமான குரல்.

அந்தப் பெண் சும்மா விடுவாரா. சற்றும் தாமதிக்கவில்லை. எழுந்து நின்று உயர்ந்த குரலில் கத்தினார்.


தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் என்றால்


தேவதாசி முறை புனிதமானது என்றால்... தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப் பட்டது என்றால்... தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் என்றால்… உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்…

அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா... ஏன் உங்கள் உயர் சாதிப் பெண்களைத் தேவதாசிகளாக ஆக்கிப் பாருங்களேன்… நாங்களும் சந்தோஷப் படுவோம் இல்லையா… என்றார். அனல் தெறித்த வார்த்தைகளால் சட்டசபையே சில நொடிகள் ஆடிப் போனது. சரி…


அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா. அவர் தான் இன்றைய நம்முடைய கதாநாயகி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. இந்திய அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண்மணி.

பெண்ணியம் பார்த்த அழகிய மகள்


பாரத மண்ணின் முதல் சட்டசபை பெண் உறுப்பினர். தமிழகத்தின் முத‌ல் பெ‌ண் மரு‌த்துவ‌ர். பெண் விடுதலைக்காகப் போராடியவர். தேவதாசி ஒழிப்புக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். பெண் குலத்திற்குப் பெண்ணியம் பார்த்த அழகிய மகள். ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. ஒரு சமூகப் போராளி. ஒரு தமிழ் ஆர்வலர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர்.

அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தவர். அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் வகையில் அவ்வை இல்லம் எனும் அன்பு நிலையம். புற்று நோய்க்கு உயர்ச் சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.

பத்து வயது பெண்ணுக்குப் பொட்டு கட்டும் நிகழ்ச்சி

பெண்கள் அடிமைகளாக நடத்தப் பட்ட காலத்தில், புழு பூச்சிகளாகக் கருதப் பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy). முதலில் அவரைக் கை எடுத்துக் கும்பிடுவோம்.

இந்தக் கட்டுரையில் தேவதாசிகளைப் பற்றி எதையும் அதிகமாகச் சொல்லவில்லை. விரைவில் அதைப் பற்றி தனியாக ஒரு தொடரை எழுதுகிறேன். இன்றைக்குப் பெண்ணியத் தலைமகள் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம். சரிங்களா.

இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய காலச்சுவடு. 1886 ஜூலை 30ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தவர். தந்தையாரின் பெயர் நாராயணசாமி. தாயாரின் பெயர் சந்திரம்மாள். நான்கு பிள்ளைகள்.

அவர்களில் மூத்த மகளாகப் பிறந்தார். இவருக்குச் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பி. சுமாரானக் குடும்பம். நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப் பற்றாக்குறை.

முத்துலட்சுமிக்கு நான்கு வயதான போது திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பட்டார். மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா என்று நாராயணசாமி நினைத்தார்.

 பள்ளியின் மானத்தைக் காப்பாற்றினார்


அப்போது… அவரைக் கிணற்றுத் தவளையாக மாற்றிவிட வேண்டாம் என அவருக்குப் படித்துக் கொடுத்த ஆசிரியர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்தார்கள். இல்லை என்றால் முத்துலட்சுமியின் படிப்பும் அதோடு நின்று போய் இருக்கலாம். பத்தில் பதினொன்றாக ஆறிப் போய் இருக்கும்.

ஆக, அந்த வகையில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பைத் தொடர வாய்ப்பு பெற்றார். முத்துலட்சுமியின் கல்வி தொடர்ந்தது. மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில் பத்து பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமையையும் பெற்றார் முத்துலட்சுமி. மன்னிக்கவும்… பள்ளியின் மானத்தைக் காப்பாற்றினார் எனும் டயலாக்கைப் பயன்படுத்தலாம் தானே.


அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தடை ஏதும் இல்லாமல் போனது. அடுத்து புதுக்கோட்டை அரசக் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு. அங்கே முத்துலட்சுமியின் ஆங்கிலப் புலமை ஆசிரியர்களையே அசர வைத்தது.

பெண் அடிமைத்தனம் விலக வேண்டும்


அத்தனைத் திறமையும், புத்திக் கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு சிறுவயதில் இருந்தே கண்பார்வைக் கோளாறு. அது ஒன்று தான் அவருடைய ஒரே குறை. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப் பாடங்களுடன் ஐக்கியமாகிப் போனார்.

இவருக்கு ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்கள் மிகவும் பிடிக்கும்.

தனது 20 ஆவது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார். அவருக்குள் இருந்த உடல்நலக் குறைபாடே அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது என்றும் சொல்லலாம்.

அறுவை சிகிச்சைத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சான்றிதழும் கிடைத்தது.

1912இல் மருத்துவராய் வெளியே வந்தார். அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணியாற்றிய போது தான் அவருக்குச் சமூகத் தொண்டுகளின் மீது ஆர்வம் பிறந்தது.

பெண் அடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் அழிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.

அடுத்து அவருடைய இலக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுவது. அந்த இலக்கு தனது பகுதி மக்களுக்கானச் சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றிய உள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலம் பெற்று புத்துயிர் பெற்றன.


திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் முத்துலட்சுமிக்குத் திருமணத்தில் நாட்டம் இல்லை. இங்கேயும் அந்த மாதிரி பல முத்துலட்சுமிகள் சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். திருமணமே வேண்டாம் என்று அடம் பிடித்து படம் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆக, முத்துலட்சுமியின் விருப்பம் எல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே பயணித்தன.

மூன்று நிபந்தனைகள்


இருப்பினும் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவராகச் சுந்தரரெட்டி என்பவர் வந்து சேர்ந்தார்.

தன்னுடைய விடுதலை உணர்வுக்கு தன் கணவர் தடையாக இருக்க மாட்டார் என்று உணர்ந்த பின்னர் தான் முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். அதற்கு முன் மூன்று நிபந்தனைகள்.

1. தம்மைச் சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தம் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்ம ஞான சபை இருந்தது. மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்கும் திருமணங்களை அங்கே நடத்தி வந்தார்கள். அங்கேதான் முத்துலடசுமி - சுந்தர ரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது.

கணவன் - மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம் மோகன். தனியார் நிறுவனத் தொழில். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல மருத்துவர். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணரானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்தார்.

கோயிலுக்கு நேர்த்திக்கப்பட்ட சிறுமி

சரித்திரம் படைத்த பெண்மணிகள் வரிசையில் முத்துலட்சுமி ரெட்டி இடம் பிடித்தார். அந்தப் பெருமையை அவர் பெறக் காரணமாக இருந்தவற்றைத் தெரிந்து கொள்ளலாமே….

முத்துலட்சுமி ரெட்டியின் ஆற்றலை அறிந்த இந்திய அரசாங்கம் அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கி அவரை இங்கிலாந்திற்கு அனுப்பியது.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சில புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிகள்


அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் போன்றவற்றச் சொல்லலாம்.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் முத்துலட்சுமி புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவருடைய தங்கைக்குப் புற்று நோய். தான் ஒரு மருத்துவராக இருந்தும் தன் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் பதறிப் போனார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கையின் இழப்பு அவரை வெகுவாகப் பாதித்தது.

புற்று நோய் எனும் உயிர்க் கொல்லி நோயில் இருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது. 1925இல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே அரச புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்தார்.


நல்ல மருத்துவமனைகள் இல்லாத காரணத்தினால் தான் அவருடைய தங்கை சுந்தரம்மாள் இறந்து போனார். சொல்லி இருக்கிறேன். தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைத்தார்.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி


1954இல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப் பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று விஸ்வரூபம் எடுத்துச் சிகரம் தொடுகிறது. புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி என பல பிரிவுகள். இன்று அந்த மருத்துவமனையில் பயன் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா. வருடத்திற்கு 80,000 பேர். மலேசியாவில் இருந்தும் அங்கே போய் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அக்காலத்தில் வறுமையில் வாடிய பெண்களும், நடத்தை தவறிய பெண்களும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கம். அந்த மாதிரியான அனாதையாக்கப் பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அடையாறு அவ்வை இல்லம். இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் திருமணமும் செய்து வைத்தார்.

பெண் விடுதலைக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு, 1956இல் இந்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது. சாதனைகள் படைத்து சரித்திரம் பேசிய முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்து போனார். அந்த இதயம் நின்ற போது அவருக்காகப் பல இலட்சம் இதய‌ங்க‌ள் துடி‌த்துக் க‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டன.


பல ஆயிரம் தேவதாசிகளைக் காப்பாறிய புண்ணியம்… பல ஆயிரம் நோயாளிகளைக் காப்பாறிய புண்ணியம்… பல ஆயிரம் அனாதைக் குழந்தைகளைக் காப்பாறிய புண்ணியம்… அவரை ஒரு நிலையான ஆத்மாவாக பூபாளம் பாடுகின்றன. தமிழ் மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே வணங்குகிறார்கள். வாழ்த்துகிறார்கள்.

டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அவர் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறையவில்லை. வாழ்கிறார்… கை எடுத்து கும்பிடுவோம்!