எழில் கொஞ்சும் கேமரன் மலை - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழில் கொஞ்சும் கேமரன் மலை - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2019

எழில் கொஞ்சும் கேமரன் மலை - 3

தமிழ் மலர் - 23.11.2019

வில்லியம் கேமரன் என்பவர் கேமரன் மலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது இறைவன் எழுதி வைத்த சாசனம். உன்னை விட்டால் யாரும் இல்லை என்று இறைவன் அனுப்பி வைத்த ஒரு கலா விருச்சகம்.



ஆங்கிலேயர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது கேமரன் மலை என்பது அவர்களுக்கு ஒரு சொர்க்கபுரி. மலாயாவின் வெப்பத்திற்கும் வெப்பக் காற்றுக்கும் ஒரு குளிர் நிவாரணியாக விளங்கியது.

ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் ஆங்கிலேயர்கள் கேமரன் மலைக்கு ஓடிச் செல்வது ஒரு வழக்கமாகிப் போனது. திரும்பி வர மனசு இல்லாமல் சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.

ஆங்கிலேயர்கள் பலர் இங்கிலாந்து ரக பங்களாக்களையும்; ஸ்காட்டிஷ் ரக மாளிகைகளையும் கட்டினார்கள். அவை இன்றும் கேமரன் மலையில் ஒய்யாரமாய்க் காட்சி தருகின்றன. பார்க்கும் போதே அழகின் அவதாரங்களாய்த் தனித்து நின்று தத்துவம் பேசுவதையும் காண முடிகின்றது.




ரோஜா செடிகளை வளர்ப்பது. ஸ்ட்ராபெரி பழச் செடிகளை வளர்ப்பது. கேமரன் மலை போ தேநீர் குடிப்பது. அப்படியே ஒன்று கூடுதல். இப்படித் தான் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முன்பு காலத்தில் ஓடிக் கொண்டு இருந்து இருக்கிறது.

இடையில் 1960-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் அல்லி தர்பார். அதனால் தானா ராத்தாவில் ஒரு பெரிய பிரிட்டிஷ் இராணுவப் படையே முகாம் போட்டு இருந்தது.

அங்கே அப்போது ஓர் இராணுவ மருத்துவமனையும் இருந்தது. இப்போது இல்லை. கத்தோலிக்கப் பள்ளியாக மாற்றம் கண்டது. செயல் படுகிறதா என்று தெரியவில்லை.

அந்த வகையில் கேமரன் மலை ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த மதிப்பில்லா சீதனம். 



மலேசியாவில் மேலும் சில மலைசார் ஓய்வுத் தளங்கள் உள்ளன. ஆனாலும் கேமரன் மலைக்கு ஈடு இணையாகக் கோலோச்ச முடியாது என்பதே என் கருத்து.

முன்பு எல்லாம் கேமரன் மலையைத் தமிழர்கள் பசுமலை என்று பாசமாகச் சொல்லுவார்கள். ஆனால் அண்மையில், அந்நியர்களின் படை எடுப்பினால் அந்தப் பாசம் குறைந்து விட்டது. சரி. கேமரன் மலைத் தேயிலைத் தோட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

கேமரன் மலையில் தேயிலைத் தோட்டங்கள் உருவான கதை. கேமரன் மலையின்  தொடக்கக் காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எங்கு இருந்து கொண்டு வரப் பட்டார்கள் எனும் தகவல்கள் குறைவாகவே உள்ளன.

இருப்பினும் கேமரன் மலையைச் சேர்ந்த குமாரவேல் முத்து என்பவர் சில தகவல்களைக் கூறுகிறார்.

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலையில் கவிதை வேள் கா.பெருமாள் எனும் கவிஞர் இருந்தார். அவர் போ தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வியலை வானொலி வழியாக அடிக்கடிச் சொல்லி வந்தார். சங்கமணி வார இதழிலும் எழுதி வந்தார். 



1920 முதல் 1950-ஆம் ஆண்டு வரை தமிழ் நாடு நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்கள் கேமரன் மலைக்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

வெள்ளைக்கார முதலாளிகள் தமிழ் பேசும் தரகர்களைத் தேடிப் பிடித்தார்கள். அவர்கள் மூலமாகத் தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். தமிழகத்துத் தமிழர்களின் அயரா உழைப்பினால் போ தோட்டம்; மற்றும் ஏழு எட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன.

இப்போது மூன்று பெரிய தோட்டங்கள் மட்டுமே உள்ளன. சின்னச் சின்னத் தோட்டங்கள் உள்ளன. இவை சீனர்களும் தமிழர்களும் உருவாக்கியத் தோட்டங்கள்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வேலை செய்தனர். ஆனால் இப்போது பாருங்கள். ஒரு பத்து பதினைந்து தமிழ் குடும்பங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.

இன்று கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், பூந்தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்திலும் வங்களாதேசிகள், நேப்பாளிகள், இந்தோனேசியர்கள், மியன்மாரிகள், இந்தியர்கள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள் வேலை செய்கின்றனர்.



அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அத்துடன் அந்நியர்கள் நிலத்தை வாடகைக்கு எடுத்து சொந்த விவசாயமும் செய்கிறார்கள். பலர் மினி மார்க்கெட், முடி திருத்தகம், உணவகம், தங்கும் விடுதி போன்ற பல் வகை வர்த்தகங்களிலும் ஈடுபடுகிறார்கள். கணிசமான வருமானத்தை ஈட்டி வசதியுடன் வாழ்கிறார்கள்.

மலேசியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத வேலை வர்த்தக வாய்ப்புக்கள் கேமரன் மலையில் கொட்டிக் கிடக்கின்றன!

கேமரன் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளை அந்நிய நாட்டவர்கள் பயன்படுத்தத் தெரிந்து கொண்டு உள்ளனர். நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் மலேசிய இந்தியர்கள் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அக்கறை காட்டுவது இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனை என்று குமாரவேல் முத்து ஆதங்கம் கொள்கிறார்.

ஒன்று மட்டும் உண்மை. கேமரன் மலையில் வாழும் மலேசிய இந்தியர்கள் உழைப்பதில் எறும்புகள். சேமிப்பதில் கரும்புகள். அவர்களுக்கு அந்த மலையில் தனி ஒரு  சிறப்பான இடம் உண்டு.

விவசாயம், கடை வர்த்தகம், தங்கும் விடுதி, சொத்து முதலீடு, மற்றும் பிள்ளைகளின் உயர்க் கல்வி போன்ற எல்லாவற்றிலும் சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை இந்தியர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 



உழைக்கப் பிறந்து உழைப்பால் வாழ்ந்து காட்டிய இனம் தமிழர் இனம். அந்த இனம் கேமரன் மலையில் உச்சம் பார்க்கிறது. மகிழ்ச்சி அளிக்கின்றது. வாழ்த்துவோம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. என்னதான் கேமரன் மலையின் காடுகளைச் சன்னம் சன்னமாய் அழித்துக் கொண்டு வந்தாலும், அந்த மலையில் இன்னும் 71 விழுக்காடு காடுகள் பத்திரமாக உள்ளன. பகாங் வனவிலாகாவின் புள்ளி விவரங்கள் பேசுகின்றன.

விவசாயம் வர்த்தகம் என்று சொல்லி அந்தக் காடுகளை மேலும் அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மலேசியர்களின் கடமை ஆகும்.

போ தோட்டம் என்பது மலேசியாவிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டம். தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரியது என்று தாராளமாகச் சொல்லலாம். 1929-ஆம் ஆண்டு ஜான் அர்ச்பால்ட் ரசல் (John Archibald Russell) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட தோட்டம். இன்னும் சரியாகச் சொன்னால் 23 ஏப்ரல் 1929-ஆம் தேதி உருவானது.

ஜான் ரசல் இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு ஏழு வயதிலேயே வந்தவர். 1890-ஆம் ஆண்டிலேயே மலாயாவுக்கு வந்து விட்டார். வருசத்தைப் பாருங்கள். கோலாலம்பூரில் பற்பல வேலைகள் செய்தவர்.

அவருடைய 44-ஆவது வயதில் ரப்பர், நிலக்கரி (பத்து ஆராங்), கட்டுமானம் (ரவாங்), செங்கல் தயாரிப்பு (பிரிக்பீல்ட்ஸ்) போன்ற வணிகத் துறைகளில் ஈடுபட்டார். 1927-ஆம் ஆண்டு உலகளாவிய நிலையில் பொருளாதார மந்த நிலை. அதனால் தேயிலை பயிரிடும் தொழில் ஈடுபட்டார்.



கேமரன் மலையில் அவருக்கு 4000 ஏக்கர் நிலத்தை ஆங்கிலேய மலாயா அரசாங்கம் வாடகைக்கு கொடுத்தது. இவருக்கு இலங்கை தேயிலைத் துறை முன்னோடி ஏ.பி.மிலின் (A.B. Milne) உதவியாக இருந்தார்.

ஒரே ஒரு நீராவி உருளை இயந்திரம். சில தொழிலாளர்கள். சுமை தூக்க சில கோவேறு கழுதைகள். இவர்களை வைத்துக் கொண்டு 5000 அடி உயரத்தில் இருந்த காடுகளைப் பொன் விளையும் தேயிலைப் பூமியாக மாற்றிக் காட்டினார்கள். அதற்கு போ தோட்டம் என்று பெயர் வைத்தார்கள்.

தமிழ் நாடு நாமக்கல் வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொண்டு வரப் பட்டார்கள். கேமரன் மலையில் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.

மலேசியாவில் அதுதான் முதல் தேயிலைத் தோட்டம். 1929-ஆம் ஆண்டு உருவானத் தோட்டம்.

1932-ஆம் ஆண்டு ஜான் ரசலுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் திரிஸ்டன் ரசல் (Tristan Beauchamp Russell). மகன் பிறந்த மறு ஆண்டு மூத்தவர் தந்தையார் ஜான் ரசல் காலமானார். அப்போது அவருக்கு வயது 50.



மகன் திரிஸ்டன் ரசல் 1969-ஆம் ஆண்டு போ தோட்டத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். அன்றில் இருந்து அவர் தான் போ தோட்டங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றி வருகிறார்.

போ தோட்டம் ஓர் ஆண்டிற்கு நான்கு மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. அதாவது ஒரு நாளைக்கு ஆறு மில்லியன் தேநீர் கப் அளவிற்கு தேயிலை உற்பத்தி.

மீண்டும் சொல்கிறேன். ஒரு நாளைக்கு ஆறு மில்லியன் தேநீர் கப் அளவிற்கு தேயிலை உற்பத்தி. பிருமாண்டமான உற்பத்தி. மலேசியாவில் 50 விழுக்காட்டினர் கேமரன் மலையின் போ தேயிலையைப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நம் தமிழர்களின் பங்கு தான் முதன்மை வகித்தது. இப்போது அந்த இடத்தை வங்காளதேசிகள் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

உண்மையிலேயே கேமரன் மலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை இங்கிலாந்து மக்களுக்காகத் தான் முதலில் உற்பத்திச் செய்யப் பட்டது. மலாயாவிலும் விற்பனை செய்யலாமே என்று ஒரு திட்டம் உருவானது. ஆக மலாயா வாழ் மக்களுக்காக டைகர் டீ (Tiger Tea) என்றும் போ டீ (Boh Tea) என்றும் இரு வகை தேயிலைகள் விற்பனைக்கு வந்தன.

2016-ஆம் ஆண்டில் போ நிறுவனத்திற்கு நான்கு தோட்டங்கள். 1. ஹாபூ தோட்டம் (Habu). இது தான் தலைச்சன் பிள்ளை. 2. பெர்லி தேயிலை தோட்டம் (Fairlie Tea Garden). 3. சுங்கை பாலாஸ் தோட்டம் (Sungai Palas Tea Garden). 4. புக்கிட் சீடிம் தோட்டம் (Bukit Cheeding, Selangor). 



உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் காடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் விரட்டி அடித்துத் துரத்தி விட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த சிறுத்தைப் புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து விட்டார்கள். துள்ளி விளையாடிய புள்ளிமான்கள், சருகுமான்களை எல்லாம் ‘அட்ரஸ்’ இல்லாமல், அவற்றின் முகவரிகளைக் கிழித்து எறிந்து விட்டார்கள். அடுத்து மனிதர்கள்தான் பாக்கி. அவர்களையும் அந்நியர்கள் புரோட்டா ரொட்டி போட்டு விடலாம். சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் கேமரன்மலை போய்க் கொண்டு இருக்கிறது. மன்னிக்கவும்.

கேமரன் மலை இந்தியர்கள் ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாகச் செய்தும் வருகிறார்கள். பாராட்டுவோம்.

பகாங் மாநில அரசும் இயற்கைப் பாதுகாப்புகளுக்காக நிறைய மானியங்களை ஒதுக்கி இருக்கிறது. வெள்ளம் வந்து கேமரன்மலை வீட்டு வாசல் கதவுகளைத் தட்டிய பிறகு இனிமேல் காடுகளை அழிக்கக் கூடாது என்று தடாலடியான சட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறது. பாராட்டுகள்!

இயற்கையைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்று ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ இயக்கத்தின் முன்னோடியான சிம்மாதிரி கூறுகிறார்.



கேமரன்மலையைப் பாதுகாக்கச் சொல்லி இவரும் பத்திரிகைகளுக்கு நிறைய செய்திகளை அனுப்பி வருகின்றார். விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிம்மாதிரி, குமாரவேல் முத்து, அம்மச்சியப்பன், வேலு போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அடுத்து… சர் வில்லியம் கேமரன் கண்டுபிடித்த அந்த மலைக்கு கேமரன் மலை என்று அவருடைய பெயரையே வைப்பார்கள் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

அதே சமயத்தில் தான் கண்டுபிடித்தக் காடுகள் இந்த மாதிரி அழிக்கப்படும். அந்தக் காடுகளில் திடீர் வெள்ளம் வரும். தமிழர்கள் வருவார்கள். பக்கம் பக்கமாய் எழுதுவார்கள் என்று சர் வில்லியம் கேமரனும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். பாவம் சர் வில்லியம் கேமரன். இருந்தாலும் அவர் நினைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நல் உள்ளங்களுக்கு மறுபடியும் நன்றிகள்.



யானை மீது ஏறிப் போய் கஷ்டப்பட்டு கேமரன் மலையைக் கண்டுபிடித்த வில்லியம் கேமரனை நினைத்துப் பார்க்கையில் ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

கேமரன்மலை காலா காலத்திற்கும் போற்றிப் புகழ வேண்டிய ஓர் அட்சய பாத்திரம். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் வாரி இறைத்த ஒரு செங்கமலச் சாத்திரம். அந்த வகையில் கேமரன்மலை மீண்டும் புதுப் பொலிவுடன் பார் புகழச் சிகரம் பார்க்க வேண்டும். கேமரன்மலைத் தமிழர்கள் மேலும் சிறப்பாக விளங்க வேண்டும் வான்புகழ் உச்சம் பெற வேண்டும். வணிகச் சாதனைகள் செய்ய வேண்டும். வாழ்த்துகிறோம்.

(முற்றும்)