தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1

மலேசியா தினக்குரல் நாளிதழில் 17.03.2015, 18.03.2015, 19.03.2015 தேதிகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. மூன்று பகுதிகள்.
..................................................................................................................................
பாகம்: 1

என்றைக்குத் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலை எடுத்து வைத்தார்களோ அன்றைக்குப் பிடித்தது தமிழர்களுக்கு கஷ்டகாலம். 1639-ஆம் ஆண்டில், சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அதன் பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய ஒரு சகாப்தம். புதிய ஒரு பரிமாணம். தீராத தலைவலி. 



ஆங்கிலேயர்கள் வலதுகாலை எடுத்து வைக்கவும் இல்லை. இடது காலை எடுத்து வைக்கவும் இல்லை. இரண்டு காலையும் சேர்த்து வைத்துதான் குதித்து வந்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள். பாளையக்காரர்கள். நவாப்புகள். மேட்டுக்குடி பஞ்சாயத்துகள். அவர்களிடம் எக்கச் சக்கமான கருத்து வேறுபாடுகள். சண்டைச் சச்சரவுகள். ஆங்கிலேயர்கள் அவற்றை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்.

பிரித்துவிடு வரித்துவிடு

ஆங்கிலேயர்களிடம் ஒரு தாரகமந்திரம் இருந்தது. அதன் பெயர் பிரித்துவிடு வரித்துவிடு (Divide and Rule). உலகம் முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல ஒரு வாசகம். எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதற்கு இலக்கணம் எழுதியவர்களே ஆங்கிலேயர்கள் தான். அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் தோற்றுப் போவார்... போங்கள். ஒருக்கால் அந்த சாத்திரத்தை இவர்கள் படித்து மனப்பாடம் செய்து இருக்கலாம். சொல்ல முடியாது.



நவீன காலத்துச் சாணக்கியவாதி மாக்கியவெல்லி. அவரின் கருத்துகளில் நையாண்டி, கேலி, பரிகாசம், கிண்டல், ஏளனம் எல்லாமே இருக்கும். இதை சார்க்கஸம் (Sarcasm) என்று சொல்வார்கள். அவற்றின் மொத்தச் சாகுபடியாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இருக்கிறதை எல்லாம் அடித்துப் பிடித்தார்கள். பிழிந்து எடுத்தார்கள். இப்போது இருக்கும் தலைவர்கள் சிலர், மிச்சம் மீதியை உறிஞ்சி எடுக்கிறார்கள்.

அந்தக் காலத்து தமிழ்ச் சிற்றரசர்கள் தொட்டதற்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சொன்னேன். உண்மைதான். அந்த வகையில் தமிழர்களின் பலகீனத்தை, ஆங்கிலேயர்கள் நன்றாகப் பற்றிக் கொண்டு காயை நகர்த்தினார்கள். தமிழர்களின் எதார்த்த வெள்ளந்தித் தனத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.




முதலில் தமிழ்நாடு விழுந்தது. அடுத்து தென் இந்தியத் துணைக் கண்டம் விழுந்தது. அப்புறம் ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டமே சரிந்து விழுந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்கள் பலரின் முகவரிகள் தொலைந்து போயின.

மெட்ராஸ் நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் ஆனது
 

அனந்த பத்மநாபன் நாடார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டனர். இருந்தாலும் இடம் தெரியாமல் அழித்து ஒழிக்கப் பட்டனர்.


சரி. 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மெட்ராஸ் நிலப்பகுதி (The Madras Province) மெட்ராஸ் மாநிலம் ஆனது. இருந்தாலும், 1948-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும், தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. இதுவே இந்தியாவில் சேர்ந்த கடைசி சமஸ்தானம் ஆகும்.

தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை முன்பு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்தன.



இருந்தாலும், 1953-இல் மெட்ராஸ் மாநிலத்தின் வட பகுதிகள், தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. தமிழ் பேசும் தென் பகுதிகள் மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப் பட்டது.

1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் மாநிலமும் பிரிக்கப் பட்டது. மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டன. இங்கு இருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம். அதுதான் நம்முடைய இன்றைய கட்டுரையின் நோக்கமும் ஆகும்.

நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். அதை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப் பட்டதாக உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றுதான் முடிவும் செய்யப் பட்டது.



அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சமயத்தில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் தலைகீழாக மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப் பட்டது.

அப்போது அமைக்கப்பட்ட படாஸ்கர் கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலத்திற்கு யாரிடம் அதிகமாக உரிமை இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை. ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்தார்கள்.

தமிழகத்துக்கு திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்து தீவிரமாகப் போராடினார்கள். இராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும், தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள், (அண்ணாதுரை, கருணாநிதி) இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்கு திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.



1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி, புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப் பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலையும் போனது.

நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால், இப்போது தலைவிரித்தாடும் பாலாற்றுப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் பல நிலப் பகுதிகளை தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது. 





திருப்பதியைக் கொடுக்கிறோம், அதற்குப் பதிலாக, எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இல்லை என்றால் சென்னை போய் இருக்கும். அப்போதைய தலைவர்கள் செய்த ஒரு காரியம். நல்லதா கெட்ட்தா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் அண்ணன் தம்பி உறவுகள்

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று இங்கே எவரையும் நாம் பிரித்துப் பேசவில்லை. எல்லோருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுகள். எவரையும் உயர்வு தாழ்வுடன் பார்க்கவும் இல்லை.



மலாயாவுக்கு இங்கே வந்தவர்கள் கூட, ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். ஒரே படுக்கையில் படுத்துப் புரண்டவர்கள் தான். மாமன் மச்சான் என்று துருப்புச் சீட்டு விளையாடியவர்கள் தான். ஆக, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தான் வரலாற்று ரீதியில் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டைப் பிரிக்கும் போது ஆளாளுக்கு பெரிய பெரிய தொடைச் சப்பையாக வேண்டும் என்று அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். பிய்த்துக் கொண்டும் போனார்களே என்றுதான் சொல்ல வருகிறேன். மற்றபடி அது ஒரு வரலாற்று ஆவணம். இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மட்டும், பத்து ஆண்டுகள் பிடித்தன என்பதைச் சொல்லிக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.   



சென்னை விவகாரத்தில் அரசியல் தமிழ்நாட்டு கட்சிகள் சிலபல போராட்டங்களை நடத்தின. பரவாயில்லை. ஆனால், கர்நாடகா விஷயத்தில் உஹூம். தூங்கி விட்டார்கள். செம தூக்கம். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட தூக்கம். வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று இப்போது தமிழர்கள் அங்கலாய்த்து என்ன பயன். சொல்லுங்கள்.

தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் சுமுகமான உறவு

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒன்று சொல்லத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு, அது நடந்து போகிற அழகை இப்போது பார்த்து ஒப்பாரி வைப்பது மாதிரி இருக்கிறது.

தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கன்னடர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் அரசியல் ரீதியாக விரோதங்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். அப்படி சண்டை போடும் போது தமிழர்களும் கூர்க் மக்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அதனால், தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் நல்ல சுமுகமான உறவு முறைகள் இருந்தன. இப்போதும்கூட இருக்கின்றன. கலப்பு கல்யாணம் காட்சி எல்லாம் நடந்து இருக்கின்றன. நடந்தும் வருகின்றன.

நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்

இன்னும் ஒரு விஷயம். தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய இந்த ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் ஆகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. திராவிட மொழிகளில் தமிழுக்கு அடுத்து வரும் மொழி மலையாளம். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் சேர நாட்டில் உருவானவை. சேர நாடு என்றால் கேரளம். சிலப்பதிகாரத்தைப் பற்றி நாம் எவ்வளவு பெருமையாகப் பேசினாலும், அது கேரள மண்ணில் இருந்து வந்தது. அதை மறந்துவிடக் கூடாது.

கன்னட மொழி, கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி. கர்நாடகம் எனும் வடசொல் திரிந்து கன்னடம் ஆனது. இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்தான் இந்த இருளர்கள்.

கொடகு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அந்த மொழியில் இலக்கியங்கள் இல்லை. நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர் கோடர்கள். இவர்கள் பேசும் மொழி கோடா மொழி. ஏறக்குறைய 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர்.

நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தவர் தோடர்கள். இவர்கள் பேசும் மொழி தோடா மொழி. 800 பேர் பேசுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில் வாழும் படகர்கள் பேசும் மொழி படகா மொழி. 70 ஆயிரம் மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். படகா மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையது. 

சந்திரகிரி கல்யாணகிரி ஆறுகள்

மைசூர் மாவட்டத்தில், சந்திரகிரி, கல்யாணகிரி ஆறுகள் ஓடுகின்றன. அந்த இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் துளு மொழி பேசப் படுகிறது. ஐந்து இலட்சம் பேர் துளு மொழி பேசுகின்றனர். தென் திராவிடக் கிளையில் இருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு, மலையாளம் போன்றவை படிப்படியாகப் பிரிந்து சென்ற மொழிகளாகும்.

சரி. கூர்க் மக்கள் விஷயத்திற்கு வருவோம். மொழிவாரி மாநிலப் பிரிவினை வந்த போது ‘மொழி, கலாச்சார அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு நாங்கள் சேர்ந்து கொள்கிறோம்’ என்று கூர்க் மக்கள் பகிங்கரமாகச் சொன்னார்கள். அதை அப்போதைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் கூர்க் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. இந்தச் சின்ன அல்வாத் துண்டுகள் தேவை இல்லை என்று நினைத்து இருக்கலாம். அங்கேதான் காவிரிபிரச்சினைக்கு ஊதுபத்தி கொளுத்தி வைக்கப்பட்டது.

கூர்க் மக்கள், தமிழ்நாட்டுடன் இணைய ஆசைப்பட்டு, கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். போராட்டம் செய்தனர். அந்த நேரம் பார்த்து, தமிழர்கள் கொஞ்சம் கண் காட்டி இருந்தால் போதும். கூர்க் மக்கள் ஓடோடி வந்து தமிழர்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், தமிழ்நாட்டு வரலாற்றையே திருப்பிப் போட்டு இருக்கலாம். குடகு நாடு தமிழ்நாட்டுடன் வந்து சேர்ந்து இருக்கும். காவிரித்தாய் கண்கலங்கி இருக்க மாட்டாள். காவிரிப் பிரச்சினை என்கிற ஒரு பிரச்சினையே வந்து இருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகிப் போய் இருக்காது.

கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம்

ஆனால், கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடினார்கள். அதனால், முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்கள், கோலார் தங்கவயல் போன்ற பொன்னான பூமிகள் கர்நாடகாவுக்குத் தாரை வார்க்கப் பட்டன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்களே அந்த மாதிரிதான் இங்கேயும் நடந்தது.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம் இருக்கிறதே, சும்மா சொல்லக் கூடாது. அற்புதம். அந்தச் சொக்கட்டான் நகர்த்தல்களிலேயே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்; எவ்வளவு திறமைசாலிகள் என்பதைத் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி பறிபோனது என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம். 


(தொடரும்)