கருஞ்சுற்றுலா- Dark Tourism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருஞ்சுற்றுலா- Dark Tourism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே 2016

கருஞ்சுற்றுலா- Dark Tourism


தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்தியப் பிரமிடுகள், அங்கோர் வாட், ரோமாபுரி கொலிசியம், பிரம்பனான் சிவன் ஆலயம், பொரபுடுர் புத்த ஆலயம் போன்றவை உலகம் பார்க்கும் அதிசயங்கள். உலக மக்கள் தேடிப் போகும் அதிசயங்கள். கேட்ட காசைக் கொடுக்கின்றனர். பார்த்த பின்னர் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். 
 



ஒரு முறை அங்கோர் வாட்டைப் பார்த்தவர்கள் மறுபடியும் பார்க்க ஆசைப் படுகிறார்கள். இரண்டு முறை தாஜ்மகாலைப் பார்த்தவர்கள் மூன்றாவது முறையும் பார்க்கத் துடித்து நிற்கின்றார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. காலம் மாறி வருகிறது. அண்மைய காலங்களில் உலகச் சுற்றுலாத் தளங்கள், கருஞ்சுற்றுலா பக்கமாய்ப் பாதை மாறிப் போகின்றன. 


கருஞ்சுற்றுலா எனும் சொல் புதிதாக இருக்கிறதே. அது என்ன கருஞ்சுற்றுலா என்று கேட்பது காதில் விழுகிறது. கருஞ்சுற்றுலா என்பதை ஆங்கிலத்தில் Dark Tourism என்று அழைக்கிறார்கள். இது ஒரு புதிய வகையான சுற்றுலாத் துறையாகும். ஏறக்குறைய ஒரு பத்து ஆண்டுகளாக இந்தத் துறை உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
 



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாவீரன் ஜூலியஸ் சீசரைக் கொலை செய்தார்களே அந்த இடம் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. கென்னடியைச் சுட்டுக் கொன்றார்களே டாலாஸ் என்கிற இடம், அதுவும் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. அதே போல, ரஷ்யா நாட்டில் ரஸ்புட்டின் பைத்தியக்கார சாமியாரைக் குத்திக் கொலை செய்தார்களே அந்த இடமும் இப்போது ஒரு பிரசித்தி பெற்ற கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. அதற்கு முன் ஸ்ரீ லங்காவைப் பற்றி ஒரு சின்னத் தகவல்.



முள்ளிவாய்க்கால் கொலைக் களம்



அண்மைய காலங்களில் ஸ்ரீ லங்காவிற்கு நிதி நெருக்கடி. கிடைக்கிற வருமானத்தில் பெரும்பகுதி இராணுவத்திற்குச் செலவு செய்வதிலேயே தீர்ந்து போகிறது. மிச்சம் மீதி இருந்தால் அதிலே அரசியல் மூக்கை நுழைத்துக்  கொள்கிறது. கடைசியாக ஏழைப் பாமரர்களுக்கு இரண்டு மூன்று அல்வாத் துண்டுகள். என்றைக்கு அப்பாவித் தமிழர்களைக் கொன்று போட்டார்களோ அன்றைக்கே ஏழரை நாட்டுத் தலைவன் சங்கு ஊதி விட்டான்.
 



முள்ளிவாய்க்கால் கொலைக் களத்திற்கு ஜால்ரா போட்டது புகழ்பெற்ற ஓர் அரசியல் குடும்பம். எழுதிச் செல்லும் விதியின் கைகள் சும்மா விடுமா. அந்தக் குடும்பத்திற்கும் ஏழரை நாட்டுத் தலைவன் தம்பட்டம் அடித்து வருகிறான். கடைசி கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னால் சரியான அடி.



இறந்து போன பல இலட்சம் தமிழர்களின் பாவமும் சாபமும் சும்மா விடுமா. அந்தக் குடும்பத் தலைவன் நினைத்து இருந்தால் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஒரு பக்கம் சாய வேண்டாம். நியாயத்தைப் பாருங்கள். சரி. இதை ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. 
 



வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பல இடங்களைக் கருஞ்சுற்றுலா இடங்களாக மாற்றி வருகிறார்கள். வியட்நாம் போரில், வியட்கோங்குகள் தோண்டிய சுரங்கப் பாதைகள், தாட் மாவ் தான் தாக்குதல் (Tat Mau Than Offensive), மை லாய் படுகொலை (My Lai Massacre)  போன்ற இடங்கள் இப்போது பிரசித்தி பெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் போய்ப் பார்த்துவிட்டு வருகிறார்கள்.



அனுதாபம் பெறும் புனர்வாழ்வு மையங்கள்



அதே போல கம்போடியாவில், போல் போட் (Pol Pot) என்கிற கொடுங்கோலன் ஆட்சி செய்த போது இருபது இலட்சம் கம்போடியர்கள் கொலை செய்யப் பட்டனர். அங்கே நிறைய கொலைக் களங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக துவோல் சிலேங் (Tuol Sleng) சிறைச்சாலையைச் சொல்லலாம். அந்தச் சிறைச்சாலையில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர். பெரும்பாலோர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள். இதே போல பலப் பல இடங்கள் இருக்கின்றன.  அவற்றைச் சுற்றுலா மையங்களாக மாற்றி வருகின்றனர். 
 



கன்னிவெடிகளில் சிக்கி கை கால் இழந்தவர்களுக்காக அங்கே புனர்வாழ்வு மையங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த மையங்களும் இப்போது மனித நேய அனுதாபங்களைப் பெற்று வருகின்றன. அங்கோர் வாட்டைப் பார்க்கிறார்களோ இல்லையோ கை கால் இல்லாதவர்களைப் போய்ப் பார்க்கிறார்கள். அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஆதரவு தெரிவிக்கிறார்கள். அங்கே மனிதநேய வசந்தம் வீசுகின்றது.



ஆக அதே போல முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தையும் ஒரு கருஞ்சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். அதை இப்போதே மைத்திரி செய்தால் நாட்டுக்கும் நல்லது. அந்த மனுசனுக்கும் நல்லது. அந்த மனுசனுடைய வீட்டுக் கஜானா நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். சீனா பாகிஸ்தான் லொட்டு லொசுக்குகளை வாங்கிப் போட்ட மாதிரியாகவும் இருக்கும். வீடு நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். விலைவாசி ஏறிப் போன மாதிரியாகவும் இருக்கும். நம்ப விஷயத்திற்கு வருவோம்.



நீயுமா புருட்டஸ் – ஜூலியஸ் சீசர்



ஜூலியஸ் சீசர் மறக்க முடியாத வரலாற்று நாயகர். கிளியோபாட்ரா எனும் பச்சைக் கிளியை எகிப்திய சிம்மாசனத்தில் உட்கார வைத்து ஆசை ஆசையாய்ப் பார்த்தவர். கி.மு. 44-இல் அதாவது 2058 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரியில் கொலை செய்யப் பட்டார். அது ஒரு கொடூரமான கொலை. ஜூலியஸ் சீசர் சர்வாதிகார ஆட்சி செய்வதாக ரோமாபுரியின் செனட்டர்கள் சந்தேகப் பட்டனர். மக்களாட்சியில் இருந்து ஜூலியஸ் சீசர் விலகிச் செல்வதாகவும் நினைத்தனர். அவரைத் தீர்த்துக் கட்டினால்தான் நல்ல முடிவு ஏற்படும் என்று கருதினர். அந்தச் செனட்டர்களுக்குப் பதவிகள் கொடுத்து, பணம் புகழைக் கொடுத்ததே ஜூலியஸ் சீசர்தான். என்ன செய்வது. 
 



ஒரு நாள், 60 செனட்டர்களும் ஒன்றுகூடி, ஜூலியஸ் சீசரை முடித்து விடுவது என்று ரகசியமாகத் திட்டம் போட்டனர். அதே மாதிரி செய்தும் காட்டினர். அதை மையமாக வைத்து, ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதி இருந்தார். அதன் பெயர் ’ஜூலியஸ் சீசர்’. சீனியர் கேம்பிரிட்ஷ் தேர்வில், எனக்கு ஆங்கில இலக்கியப் பாட நூல். அதில் ஒரு வாசகம் வரும். உலகப் புகழ் பெற்றது. நாற்பது ஐம்பது ஆண்டுகளாகியும், அந்த வாசகத்தை இதுவரையிலும் என்னால் மறக்க முடியவில்லை.



‘நீயுமா புருட்டஸ்’. ('…and you too, Brutus?'). உயிருக்கு உயிராய் நம்பிய மார்க்கஸ் புருட்டஸ் என்கிற ஆத்ம நண்பனே, ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்தினான். கடைசிக் கத்திக் குத்து. அதோடு ஜூலியஸ் சீசரின் கதையும் முடிந்தது.



பதினைந்து வயதில் ஓர் ஆண்மகன், தகப்பனாக முடியுமா



கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், புருட்டஸ் என்பவன் ஜூலியஸ் சீசருக்கு மகன் முறையில் வருகிறான். அல்லது ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஏன் என்றால், புருட்டஸின் அம்மா செர்வீலியா (Servilia Caepionis) என்பவர், ஜூலியஸ் சீசரின் வைப்பாட்டியாகும். புருட்டஸ் பிறக்கும் போது, ஜூலியஸ் சீசருக்கு வயது வெறும் பதினைந்து. 
 



ஆக, அந்த 15 வயதில் ஓர் ஆண்மகன், ஒரு பிள்ளைக்குத் தகப்பனாக முடியுமா. முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி இத்தாலியர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை அப்படியே விட்டு விடுவோம்.



இன்னும் ஒரு செய்தி. ரஷ்யாவில் ஒரு பதின்மூன்று வயது பையன். அவனுடைய மனைவிக்கு பன்னிரண்டு வயது. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இருக்கிறாள். என்ன சொல்லப் போகிறீர்கள். ரஷ்யக் கிராமப்புறங்களில் இந்தியாவைப் போல பால்ய விவாகங்கள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.



ஜூலியஸ் சீசருக்கு மொத்தம் 23 கத்திக் குத்துகள். அவற்றில் புருட்டஸின் குத்துதான் நெஞ்சைப் பிளந்து கொண்டு போனது. ஜூலியஸ் சீசர் இறந்து, 17 ஆண்டுகளுக்குப் பின், ரோமாபுரி மன்னராட்சிக்குத் திரும்பியது. ஒக்தோவியா என்பவன் மாமன்னராக முடி சூட்டிக் கொண்டான். ஜூலியஸ் சீசர் இறந்த இடம் பூமிக்கு அடியில் பல அடிகள் ஆழத்தில் இருக்கிறது.



ஜான் கென்னடி அரும் காட்சியகத்திற்கு 350,000 பேர் வருகை



ஜுலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கும் மேலே, ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி இருக்கிறார்கள். இப்போது அந்த இடம் ஒரு கருஞ்சுற்றுலா இடமாக மாறி வருகிறது. நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். மாவீரன் அலெக்ஸாண்டருக்குப் பின் நம் மனங்களில் பதியும் ஒரே மாவீரன் இந்த ஜூலியஸ் சீசர்தான். ஜூலியஸ் சீசரின் பெயரைச் சொல்லி, இத்தாலியும் காசு பார்க்கிறது.



நவீன கால வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு மனிதர் நெப்போலியன். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவரைச் சிறை வைத்தார்கள். இருந்தாலும் தப்பித்து வந்தார். சிறையில் இருக்கும் போது, விஷம் வைத்துக் கொல்லப் பட்டது அண்மையில்தான் தெரிய வந்தது. 
 



அடுத்து அதிபர் கென்னடி வருகிறார். ’உனக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க வேண்டாம். உன்னால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’. (Ask not what your country can do for you, ask what you can do for your country.) உலகம் கேட்ட ஓர் அருமையான தத்துவப் பொன் மொழி. சொன்னவர் ஜான் கென்னடி. 1963 நவம்பர் மாதம் 22-ஆம் தேதி, டெக்சஸ் டாலாஸ் நகரில், லீ ஹார்வே ஓஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப் பட்டார்.



உலக மக்களைக் கவர்ந்த கென்னடியின் அசாத்தியமான துணிச்சல்



அப்போது அவருக்கு வயது 46. மிகச் சின்ன வயதிலேயே போய்விட்டார். மூன்று ஆண்டுகள்தான் பதவியில் இருந்தார். அமெரிக்க அதிபர்களில் ஆப்ரகாம் லிங்கனுக்குப் பின், மக்கள் மனங்களில் இன்றுவரை நீங்காத இடம் வகிப்பவர் ஜான் கென்னடி ஆகும். இவருடைய அசாத்தியமான துணிச்சல் உலக மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



ஒரு முறை ரஷ்யா தன்னுடைய ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்தி வைத்து இருந்தது. அப்போது ரஷ்யா உலகப் பெரும் வல்லரசு. இருபத்து மணி நேரத்தில், ஏவுகணைகளை அப்புறப் படுத்தாவிட்டால், அமெரிக்கா போர் தொடுக்கும் என்று கென்னடி எச்சரிக்கை செய்தார். மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய வாய்ப்பு இருந்தது. அந்தச் சமயத்தில், ரஷ்யாவின் அதிபராகக் குருஷேவ் இருந்தார். ரஷ்யா ஆடிப் போய்விட்டது. சொன்னதைச் செய்வார் கென்னடி எனும் பயத்தில் ரஷ்யா பின் வாங்கியது.



அடுத்து, சந்திரனில் மனிதனை இறக்கும் அப்போலோ விண்வெளித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் இதே கென்னடிதான். அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான். பாவம் அவர். அதைப் பார்க்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவருக்காக ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 350,000 பேர் வருகை தருகிறார்கள். அதுவும் ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாகும்.



இப்படி உலகக் கருஞ்சுற்றுலாத் தளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடைசியாக, ராஸ்புட்டினைப் பற்றி சொல்லி விடுகிறேன். ரஸ்புட்டின் எனும் பெயர், உலக வரலாற்றுச் சுவடுகளில் மறைக்க முடியாத கறைகளை விட்டுச் சென்ற பெயர். ஆனால், எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர். அது ஒரு மந்திரச் சொல். வரலாற்றில் ரஸ்புட்டின் எனும் சொல் இல்லாமல் இருந்தால், அது ஒரு வரலாறாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெயர் புகழ்பெற்றது.



ரஷ்யாவின் ஆட்சி பீடத்தை ஆட்டிப் படைத்த ரஸ்புட்டின்



ரஸ்புட்டின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பள்ளிக்கூட வாசல் பக்கமே போகாதவன். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்தவன். கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஊர் சுற்றித் திரிந்த ஒரு சாமான்யச் சிறுவன். ஆனால், ரஷ்யாவின் ஆட்சி பீடத்தையே தன் பிடிக்குள் இறுக்கிப் பிடித்தான் என்றால், அது ஒரு பெரிய விசயம் இல்லையா.



காடுமேடுகளில் அலைந்த அந்தச் சிறுவன்தான், ரஷ்ய நாட்டு மகாராணியையே தன் மாயவலைக்குள் சிக்க வைத்தான். அந்த மகாராணியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு ரஷ்யாவின் தலைவிதியையே மாற்றி அமைத்தான். உண்மையிலேயே அவன் ஒரு பைத்தியக்காரச் சித்தன்.


அந்த மகாராணி அவனுக்கு மனைவியாகவே வாழ்ந்தவள். அவனைக் கொல்வதற்கு என்ன என்னவோ செய்து பார்த்தார்கள். மனுஷனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் ஒரு வழியாகக் கதையை முடித்து விட்டார்கள். எப்படி? அது ஒரு வரலாற்று ஆவணம்.