மலேசியா 1MBD மோசடி - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 3

தமிழ்மலர் - 19.11.2018 - திங்கட்கிழமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்தப் பழமொழியை நினைத்துக் கொண்டு ஜோலோவின் முகத்தைப் பாருங்கள். 




பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா - அவர்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா


வியட்நாம் வீடு திரைப்பாடல் நினைவிற்கு வந்து இருக்க வேண்டுமே.

பச்சைச் சிசுவின் பிஞ்சுத் தனம். பால் வடியும் வெகுளித் தனம். பிள்ளைப் பூச்சியின் அப்பாவித் தனம். மறுபடியும் நன்றாக உற்றுப் பாருங்கள். எதுவும் தெரிகிறதா. எனக்குத் தெரிகிறது.

ஏமாற்றுத் தனத்தின் ஏழாயிரம் சாரங்கள். ஏமாந்தவர்களை ஏப்பம் விட்ட நவரசங்கள். முக்காடு போட்ட முகாரிகளின் ராகங்கள். உப்பிப் போன கன்னங்களில் எல்லாமே கொத்து கொத்தாய்ப் பூத்துக் குலுங்குகின்றன. மன்னிக்கவும். மலேசிய மக்களைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்ட ஒரு மனிதத்திற்கு மதிப்புக் கொடுக்க மனசு வரவில்லை. 




மலேசிய மக்களின் பணத்தைக் கோடிக் கோடியாய்க் கொள்ளை அடித்ததாகக் குற்றச்சாட்டுகள். நிரபராதி என்று நிரூபித்துக் காட்டட்டும். பின்னர் பார்ப்போம். அதுவரையிலும் வசைப் பாடல்கள் வஞ்சகம் இல்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். அப்புறம் என்னங்க.

மலேசிய மக்கள் நித்தம் நித்தம் வியர்வையில் நசிந்து நலிந்து; விலைவாசி ஏற்றத்தில் துண்டு துண்டாய்ச் சிதறிச் சிதைந்து; அன்றாட வேதனைகளில் அல்லல்பட்டு சம்பாதித்த பணச் சுவடிகள். சும்மா விட முடியுமா.

கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற நினைப்பு தான் ஒருவரின் மனத்தை மாசுபடுத்தி விடுகிறது. அந்த வகையில் ஒரு சொட்டு குற்ற உணர்வும் இல்லாமல் மலேசிய மக்களின் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. 




மனசாட்சி இல்லாமல் எப்படித் தான் பயணித்தார்கள். ஒருநாள் பிடிபடுவோம் என்கிற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் எப்படித் தான் நகர்ந்தார்கள்; எப்படித் தான் வாழ்ந்தார்கள். அது தான் பெரிய அதிசயமாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கிறோமே; வெளியே தெரிய வருமே என்கிற குற்ற உணர்வு ஒரு துளியும் இல்லாமல் எப்படித் தான் சந்தோஷமாக இருந்தார்கள். வேடிக்கை அல்ல. வேதனையாக இருக்கிறது.

அவர்களுக்குப் அச்சம் இல்லாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற அந்த நினைப்புத் தான். அந்த வகையில் 1 எம்.டி,பி. பணம் கோடிக் கோடியாய் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. 




அவர்களுக்குப் பயம் இல்லாமல் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் எப்படியும் நஜீப் வெற்றி பெற்று விடுவார்; தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுவார் எனும் நம்பிக்கை.

அதனால் தான் அந்த அளவிற்கு அவர்கள் துணிந்து மக்களின் பணத்தை விளையாடி இருக்கிறார்கள். இப்போதைய நிலையைப் பாருங்கள். முன்னாள் பிரதமர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.

What is baffling is how individuals involved in the 1MDB saga spent money without a tinge of fear of being caught or the entire scandal blowing up in their faces. They just thought that the people of Malaysia would continue to vote in the Barisan Nasional government and it would be business as usual.

Source: https://www.thestar.com.my/business/business-news/2018/09/15/money-is-cheap-when-its-not-yours/
(ஸ்டார் 15.09.2018 நாளிதழில் வெளியான செய்தி)




சரி. நம்ப 1எம்.டி.பி. கதைக்கு வருவோம். பாரிஸ் ஹில்டன் என்பவரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

பாரிஸ் ஹில்டன்Paris Whitney Hilton

அமெரிக்காவில் ஒரு  சமூகப் பிரபலம்; ஊடகப் பிரபலம்; மாடல்; பாடகி; கதாசிரியை; ஆடை அலங்கார வடிவமைப்பாளர்; நடிகை என்று பல கோணங்களில் பல பரிமாணங்களைப் பார்த்தவர். வயது 37.

இவரைத் தான் ஜோலோ முதன்முதலாகத் தூண்டில் போட்டுப் பார்த்தார். எதற்குத் தூண்டில் போட்டார் என்பதை ஜோலோவைத் தான் கேட்க வேண்டும். பாரிஸ் ஹில்டனும் சாதாரணப் பெண் இல்லீங்க. இப்போது உலகம் பூராவும் பிரபலமாக இருக்கிறதே ஹில்டன் ஓட்டல்கள். அந்த ஓட்டல்களை 1940-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய காண்ட்ராட் ஹில்டனின் பெயர்த்தி தான் இந்தப் பாரிஸ் ஹில்டன். 




அப்படி என்றால் இவருக்கும் தாத்தாவின் நினைப்பும் வனப்பும் கொஞ்சமாவது இருக்குமா இருக்காதா. அந்த மாதிரி நினைப்பு தான் பலருடைய வாழ்க்கையையும் இப்போதும் எப்போதும் கெடுத்துக் கொண்டு போகிறது. விடுங்கள்.

பாரிஸ் ஹில்டன் என்கிற பகட்டு மீன், ஜோலோவின் வலையில் சிக்குகிற மாதிரி சிக்குவது. அப்புறம் சிக்காத மாதிரி சிணுங்கிக் கொண்டே போவது. அது ஒரு ஸ்டைல். அதைச் சரி கட்ட ஜோலோ பல கோடிகளைச் செலவு செய்து இருக்கிறார். லாஸ் வெகாஸ் சூதாட்ட மையங்களுக்கு பாரிஸ் ஹில்டனைப் பல முறை அழைத்துச் சென்று இருக்கிறார். ஒரு முறை பத்து இலட்சம் ரிங்கிட் கொடுத்து சூதாடச் சொல்லி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.

இருந்தாலும் ஜோலோவின் ஜொல்லுத் தன்மை பலிக்கவில்லை. பாரிஸ் ஹில்டனிடன் கொஞ்சம் கொஞ்சமாய் ஒதுங்கிப் போய் விட்டார். பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணைக் கவர்ந்து கட்டிப் பிடிக்க முடியுமா. கொஞ்சமாவது கலை இருக்க வேண்டாமா என்று பாரிஸ் ஹில்டனே ஒருமுறை சொல்லி இருக்கிறார். 




அந்தக் கலை ஜோலோவிடம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்குப் முக்கியம் இல்லை. அதை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. நம்ப காசைத் திருடிக் கொண்டு போனது தான் நமக்கு இப்போதைக்கு ரொம்ப முக்கியம். அதுவே நமக்கு இப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சினை. சரிங்களா.

மிரண்டா கெர்
Miranda Kerr


இவரைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகை; விளம்பர அழகி; சூப்பர் மாடல். வயது 35.

இவரையும் ஜோலோ வளைத்துப் போட திட்டம் தீட்டினார். தன்னுடைய இரவு கேளிக்கை விருந்துகளுக்கு அவரை அடிக்கடி அழைத்தார். ஒரு கட்டத்தில் 35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வைர நகைகளை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். 




நடிகை மிரண்டா கெரும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஜோலோவை தன் இடுப்பில் செருகிக் கொண்டு பாவ்லா காட்டி வந்தார். ஜோலோ விடவில்லை. மிரண்டா கெரை எப்படியாவது தன் பக்கம் இழுத்துப் போட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த ஒரு பெராரி காரையும் வாங்கி அன்பளிப்புச் செய்தார். அந்தக் காரின் விலை 13 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்.

இந்த மிரண்டா கெரும் சாதாரண பெண் அல்ல. பல கோடீஸ்வரர்களைச் சுற்றலில் விட்டவள். முதலில் ஓர்லாண்டோ புலூம் என்கிற கோடீஸ்வரரைக் காதலித்தாள். கொஞ்ச நாளில் காதல் கசந்து போனது. அப்படியே கழற்றிவிட்டு பெய்பர் எனும் இன்னொரு கோடீஸ்வரருடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தாள். ஒரு கட்டத்தில் இவளால் இந்த இரண்டு கோடீஸ்வரர்களுக்கும் வாக்குவாதம். குடி போதையில் அடித்துப் பிடித்துக் கொண்டார்கள்.

பார்த்தாள் மிரண்டா கெர். போங்கடா நீங்களாச்சு உங்க பணமாச்சு என்று சொல்லி வேறு ஒரு கோடீஸ்வரை மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அந்தக் கல்யாணமும் கசந்து போனது. விவாகரத்து செய்து கொண்டார்கள். அந்த விவாகரத்திற்கு மூல காரணமாக இருந்தது நம்ப கில்லாடி ஜோலோ தான். 




பின்னர் 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை, மிரண்டா கெர் மீது வழக்கு தொடுத்தது.

மிரண்டு போன மிரண்டா கெர் பழைய காதலன் ஜோலோ அன்பளிப்புச் செய்த எல்லா நகைகளையும் திரும்பவும் அமெரிக்க நீதித் துறையிடமே ஒப்படைத்து விட்டார். 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. இந்தத் தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அடுத்து வருபவர்

கிம் கார்டாசியான்.
Kim Kardashian


அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம்; தொழில் முனைவர்; நயநாகரிகச் சமுதாயவாதி. வயது 38. இவரையும் ஜோலோ வளைத்துப் போட திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி இருக்கிறார். இவருக்கும் ஒரு பெராரி காரை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார். அந்தக் காரின் விலையும் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட். 




அந்தக் காரினாலேயே கிம் கார்டாசியானுக்கும் அவருடைய கணவருக்கும் சண்டை. அந்தக் காரை அவருடைய கணவரும் பயன்படுத்தி இருக்கிறார். அந்தக் காரை ஜோலோ தனக்குத் தான் வாங்கிக் கொடுத்தார். நீங்க பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல இருவருக்கும் சண்டை.

அந்தச் சண்டை கடைசியில் விவாகரத்தில் போய் முடிந்து விட்டது. அதன் பின்னர் கிம் கார்டாசியானும் ஜோலோவும் ஊர்சுற்றித் திரிந்தார்கள். அப்புறம் அதுவும் கசந்து போய் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அடுத்து வருபவர் 

எல்வா சியோ.
Elva Hsiao

இவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன். எல்வா சியோ என்பவர் தைவான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி; திரைப்பட நடிகை. வயது 39.

உலக அளவில் இவர் ஒன்றும் மிகப் பிரபலம் இல்லை. இருந்தாலும் இவரையும் ஜோலோ விட்டு வைக்கவில்லை. இவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டு பயங்கரமாகச் செலவு செய்து இருக்கிறார். 




துபாயில் நிச்சயார்த்தம். அட்லாண்டிஸ் கடற்கரைச் சொகுசு மாளிகையில் மாபெரும் கேளிக்கை விருந்து. வான வேடிக்கைகள். ஒரே ஓர் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் ஜோலோ 55 இலட்சம் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார்.

எல்வா சியோவிற்கு விருந்து பிடித்தது. கேளிக்கை பிடித்தது. வான வேடிக்கை பிடித்தது. ஆனால் ஜோலோவை மட்டும் பிடிக்கவில்லை. நீ எனக்கு தம்பி வயதில் இருக்கிறாய். திருமணம் வேண்டாம் என்று சொல்லி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் கழன்று கொண்டார்.

அப்படிச் சொன்ன அதே அந்த எல்வா சியோ தன்னைவிட 12 வயது குறைவான தைவான் நாட்டு நடிகரை மணந்து கொண்டார். தேனிலவு கொண்டாட பாலித் தீவுக்கு போய் இருக்கிறார்கள். சாப்பாட்டு விசயத்தில் இருவருக்கும் வாய்ச் சண்டையாம். இப்போது இரண்டு பேரும் பேசிக் கொள்வது இல்லையாம். அதுவும் பெரிய கதை. சரி. ஜோலோ கதைக்கு வருவோம்.

இப்படி எல்லாம் ஜோலோ செலவு செய்து இருக்கிறாரே. இது எல்லாம் யாருடைய காசுங்க. நம்ப மலேசிய மக்களுடைய காசுங்க. ஜோலோ இந்த மாதிரி செலவு செய்வதற்கு யாருங்க காரணம். யாருங்க இடம் கொடுத்தது. அதை நினைத்துப் பாருங்கள். வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது.

இது ஜோலோவின் காதல் வாழ்க்கையில் மூன்று நான்கு பிரபலமான பெண்கள் வந்து போன கதை. வெளிச்சத்திற்கு வரமால் இன்னும் நிறைய இருக்கலாம். அவர்களுக்கு ஜோலோ என்கிற ஜொல்லு வாய் எவ்வளவு செலவு செய்தாரோ. யாம் அறியோம் பராபரமே.

1எம்.டி.பி. கணக்கில் ஜோலோ செலவு செய்தது எல்லாம் ஒரு சொட்டுச் செலவு கணக்கு தான். இனிமேல் தான் ஒரு பெரிய கணக்கே வரப் போகிறது. சொல்வதற்கு நான் தயார். கேட்பதற்கு நீங்கள் தயாரா? நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7



சான்றுகள்

1. Jho Low allegedly bought white Ferrari for Kim Kardashian - https://www.thestar.com.my/news/nation/2018/09/13/jho-low-allegedly-bought-white-ferrari-for-kim-kardashian/

2. Police hunt missing billionaire playboy who gave Miranda Kerr $9m in diamonds - https://www.news.com.au/finance/business/police-hunt-missing-billionaire-playboy-who-gave-miranda-kerr-9m-in-diamonds/news-story/24430c09e1452f4de4adcae11749a11e

3. 10 things to know about Malaysian businessman Jho Low - https://www.straitstimes.com/asia/10-things-to-know-about-malaysian-businessman-jho-low

4. 1MDB Explained: A Round Up Of The Scandal That Toppled A Government - https://mustsharenews.com/1mdb-scandal-explained/

5. Malaysia Billionaire Jho Low’s RM5.5 Million Failed Marriage Proposal To Elva Hsiao - https://thecoverage.my/news/jho-lows-rm5-5-million-failed-marriage-proposal-to-elva-hsiao/

6. 1MDB: The inside story of the world’s biggest financial scandal - https://www.theguardian.com/world/2016/jul/28/1mdb-inside-story-worlds-biggest-financial-scandal-malaysia