கொரோனா தூக்க வாதங்கள் வேண்டாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா தூக்க வாதங்கள் வேண்டாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஏப்ரல் 2020

கொரோனா தூக்க வாதங்கள் வேண்டாம்

தமிழ் மலர் - 10.04.2020

துயில் வாதத்திற்கு இன்னொரு பெயர் தூக்க வாதம். அது என்ன தூக்க வாதம். தூக்கத்தில் கூட வாதம் வருமா என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. பெரும்பாலும் துக்கம் வரும் போது தானே வாதம் பேதம் சேதம் எல்லாம் வரும்.

துக்க வாதம் என்பது வேறு. தூக்க வாதம் என்பது வேறு. துக்கம் – தூக்கம். இந்தச் சொற்களில் குறில் நெடில் ஆளுமைகளினால் அர்த்தங்கள் மாறுபடுகின்றன. 


துக்க வாதம் என்பது மாதம் முடிந்ததும் சிலருக்கு வரும் வழக்கமான வாதம். கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல... என்று மாதக் கடைசியில் குடும்பத் தலைவனுக்கு வருகின்ற ஒரு துக்கமான வாதம்.

எப்ப போன மச்சான் இப்பவும் வீடு திரும்பல... என்று அதே மாதக் கடைசியில் குடும்பத் தலைவிக்குத் வருகின்ற
துக்க வாதம். அது ஒரு பழக்கமான வாதம். ஆக இந்த இரண்டு வாதங்களும் துக்கக் கலக்கத்தில் வருகின்ற குடும்ப வாதங்கள். பெரிதுபடுத்த வேண்டாமே. பெரும்பாலான வீடுகளில் நடக்கின்ற சம்சாரச் சமாசாரங்கள் தானே.

ஆனால் இந்த துக்க வாதத்தைத் தாண்டிய ஒரு வாதம் இருக்கிறது. அது தான் தூக்க வாதம் என்கிற துயில் வாதம் (Sleep Paralysis).



நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது தற்காலிகமாக உடல் இயங்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். அந்த மாதிரியான ஒரு நிலையைத் தான் துயில் வாதம் என்பார்கள். இப்போதைய கொரோனா காலத்தில் அதைப் பற்றிய துயர் வாதங்கள் வந்து போகலாம். வாய்ப்புகள் அதிகம்.

நாம் நன்றாகத் தூங்கும் போது ஒரு சில விநாடிகள் முதல் ஒரு சில நிமிடங்கள் வரைக்கும் அந்தத் துயில் வாதம் வந்து போகும். அமுக்குறான் பிசாசு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்தக் காலத்தில் தோட்டப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். நல்லா தூக்கத்தில் பேய் வடிவத்தில் என்னவோ வந்து அமுக்கிட்டுப் போவுது என்று சாதாரணமாகப் பேசிக் கொள்வார்கள். சின்னப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு புலி அடித்து கிலி கடிக்கிற மாதிரி இருக்கும். சரி.

நாம் தூங்கும் போது அந்தத் தூக்கத்திற்கு இருநிலைகள் உள்ளன. முதலாவது விரைவாகக் கண் இயக்கத் தூக்கம் (Rapid eye movement sleep - REM). இரண்டாவது விரைவு இல்லா கண் இயக்கத் தூக்கம் (Non-rapid eye movement sleep - Non-REM). 




இதில் முதலாவது நிலையில் (REM), தூக்கம் ஆட்கொள்ளும் போது தான் வழக்கமான கனவுகள் தோன்றுகின்றன. மிகக் குறுகிய நேரத்திற்குள் நீண்ட காட்சிகள். கனவாக வரும். வந்து கொஞ்ச நேரத்தில் கரைந்து போகும். கொஞ்ச நேரம் தான். வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஆனால் எல்லோருக்கும் வந்து போகும் கனவுக் காட்சிகள் தான்.

நாம் படுக்கையில் படுக்கிறோம். தூக்கம் இழுக்கிறது. கண் செருகுகிறது. அப்போது நம்முடைய மூளை ஒரு பெரிய வேலையைச் செய்யும். நம் மனதையும் (Mind Conscious) நம் உடலையும் (Body Conscious) ஒரே நேரத்தில் தளர்ந்து போகச் செய்யும்.

அப்படியே உடலை அமைதிப் படுத்தும். அதனால் உடல் தசைகள் தளர்ந்து போகும். இது எல்லோருக்கும் அன்றாடம் நடக்கும் மூளையின் சடங்குச் சம்பிரதாயங்கள் தான். கவலை வேண்டாம். அதற்காகப் பெரிய பெரிய கற்பனைகளில் மூழ்கி பெரிய பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்ய வேண்டாம்.




ஆக அப்படி உடல் தசைகள் எல்லாம் தளர்ந்து ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தில், ஏதேனும் ஒரு பயங்கரமான கனவு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கொரோனா மாதிரி ஓர் அண்டங் காக்கா வந்து கன்னங்களைத் தடவிப் பார்ப்பது போல ஒரு கனவு. சும்மா ஓர் எடுத்துக்காட்டு. பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.

ஆஹா... கொரோனாவினால் பெரிய ஆபத்து நிகழப் போகின்றது என்று மன உணர்வு முதலில் விழித்துக் கொள்கிறது (Mind Conscious). முதலில் மன உணர்வு தான் துடித்து எழுந்து கொள்ளும். அதன் பிறகு சில விநாடிகள் கழித்து தான் உடல் உணர்வு (Body Conscious) மெல்ல எழுகிறது. அவசரம் அவசரமாக எழுந்தாலும் எப்படியும் நாலைந்து விநாடிகள் நேரம் பிடிக்கும்.

இங்கே தான் ஒரு பிரச்சினை. மனம் விழித்துக் கொள்ளும் அந்த வேகத்திற்கு ஈடாக உடல் தசைகளால் விழித்துக் கொள்ள முடியாது.

அந்தச் சமயம், மூளை உடனடியாக ’பட் பட்’ என்று உடலுக்கு அவசரக் கட்டளை போடுகிறது. ஒன் மினிட் பிளீஸ். அரசக் கட்டளை அல்ல. அவசரக் கட்டளை.

மூளை உடலுக்கு அவசரக் கட்டளை போடும் போது, அந்தக் கட்டளைகள் உடனடித் திடீர்க் கட்டளைகளாக மாறும். 




உடலை அசைத்துக் கொடு; முதுகைத் திருப்பிப் போடு; கைகளை நீட்டி இழுத்து விடு; கால்களை மடக்கி எட்டி உதைத்துக் காட்டு என்று மன உணர்வு, பற்பல கட்டளைகளைப் போட்ட வண்ணம் இருக்கும்.

இவை எல்லாம் மூளை நம் உடலைத் தற்காத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் ஆபத்து அவசர முயற்சிகள். இவை எல்லாம் நடக்கும் போது நமக்கு எதுவுமே தெரியாது. மேலும் ஒரு தகவல்.

நம் மூளையின் ஒரு பகுதி எப்போதுமே தூங்காது. அது தெரியுமா உங்களுக்கு? 95 விழுக்காட்டு மூளை தூங்கும் போது 5 விழுக்காட்டு மூளை தூங்காது. தூங்காமல் நம் உடலின் இயக்கத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கும்.

மூச்சு விடுதல்; சுவாசப் பை இயங்குதல்; இருதயம் துடித்தல்; சிறுநீர் சுத்தம் செய்தல்; இரத்தம் உடல் பூராவும் சுற்றி வருதல் போன்ற அத்தியாவசியமான வேலைகளை அந்த 5 விழுக்காட்டு மூளை பார்த்துக் கொள்ளும்.

மூளை உடலுக்குக் கட்டளை போடுகிறது என்று சொன்னேன். அப்படி கட்டளைகள் போட்டும் உடல் விழிப்பு நிலை அடையவில்லை என்றால்; தளர்வு அடைந்து இருக்கும் தசைகள் இயங்கவில்லை என்றால்; அந்தத் தசைகளை இயக்க வேண்டிய மோட்டார் உணர்வுகளும் இயங்கவில்லை என்றால் அவ்வளவு தான்.

மூளை அடுத்து ஒரு பெரிய பயங்கரமான போராட்டத்தில் இறங்கும். நம் உடலில் ஆபத்து மீட்டர் என்று ஓர் உணர்வு மீட்டர் இருக்கிறது. அந்த மீட்டரை மூளை தட்டி எழுப்பி விடும். அதன் அளவை உச்சத்திற்குக் கொண்டு போகும். வாகனங்களுக்கு ஸ்பீட் மீட்டர் இருக்கிறதே அந்த மாதிரியான மீட்டர் தான்.




ஆக இந்த மாதிரி உடல் செயல்பட முடியாமல் அவஸ்தைப் படும் நேரம் இருக்கிறதே, அந்த நேரத்தைத் தான் துயில் வாதம் என்கிறோம். மனமும் உடலும் சம்பந்தப்பட்ட வாதம். மூளை சம்பந்தப் படாத வாதம்.

அந்தச் சமயத்தில் மூளை கொஞ்சமாய் விழித்துக் கொள்ளும். வெளியே நடக்கும் புறச்சூழல் நிகழ்வுகளைக் காது, மூக்கு வழியாக தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும்.

அதே சமயத்தில் நம்முடன் இருக்கும் பழைய நினைவுகளும்; புதிய கொரோனா நினைவுகளும்; புறச்சூழல் நிகழ்வுகளும் நம் கனவின் ஒரு பகுதியாகச் சேர்ந்து கொள்கின்றன.

சமயங்களில் தேவை இல்லாத கற்பனைகளையும் இணைத்துக் கொள்ளும். புருசன்காரனைச் சண்டைக்காரனாக தேவை இல்லாமல் இழுத்துக் கொண்டு வந்து, கனவை ரொம்பவும் கலகலப்பாக்கி விடும். சமயங்களில் இடி அமினைக்கூட இழுத்து வந்து உங்களை ஐஸ்பெட்டிக்குள் திணிக்கிற மாதிரி பயங்கரப்படுத்தியும் விடலாம். பயம் வேண்டாம்.

இவ்வளவு களேபரங்கள் நடக்கும் போது, சில சமயங்களில் நாம் நம் கண்களை நன்றாகத் திறந்து நன்றாகவே பார்த்துக் கொண்டு இருப்போம். ஆனால் என்ன நடக்கிரது என்று நமக்குத் தெரியாது. நாம் பார்க்கும் ஒரு சில காட்சிகளையும் உள்வாங்கிக் கொள்வோம். 




ஆனாலும் நாம் உறக்கத்தில் தான் இருக்கிறோம் என்பது நமக்கே தெரியாது. ஆக அப்போதைய அந்தக் காட்சிகள் நாம் காணும் கனவின் ஒரு பகுதியாக உள்வாங்கப் படுகின்றன.

துயில் வாதத்தின் போது சமயங்களில் மூச்சு கூட விட முடியாதது போல இருக்கும். மூச்சு அடைக்கலாம். மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

இதோடு நம்ப கதை முடிஞ்சது... அம்புட்டுத்தான்... தொலைஞ்சோம்... இனி பிழைக்க மாட்டோம் என்கிற கன்னா பின்னா நினைப்புகள்கூட வரலாம். சென்னைத் தமிழில் சொன்னால் அவை எல்லாம் கொஞ்ச நேரத்து மெர்சல் ஆயிட்டேன் நினைப்புகள். 

அந்தச் சமயத்தில் யாராவது லேசாகத் தொட்டால்கூடப் போதும். நம் தசைகளை இயக்கும் மோட்டார்கள் விழித்துக் கொள்ளும். இயற்கையான செயல்பாட்டிற்கு மறுபடியும் திரும்பி வந்துவிடும். உடல் இறுக்க நிலையும் மறைந்து போகும்.

அப்படியே யாரும் தொடா விட்டாலும் பரவாயில்லை. மூளையின் தொடர் இம்சைகளைத் தாங்க முடியாமல்... ஆளை விடுங்கோ சாமி என்று நம் தசைகள் பழைய நிலைக்கே திரும்பி வந்துவிடும்.




மூளைக்கும் உடலுக்கும் இடையே இம்சைப் போராட்டங்கள் நடக்கும் போது  நாம் சத்தம் போடுவோம். அழுவோம். கத்துவோம். கதறுவோம். பக்கத்து வீட்டு நாய் ஊளையிடுவது போல பயங்கரமாக ஓலம்கூட போடுவோம்.

ஆனால் நாம் போடுகிற ஓலங்களும் ஒப்பாரிகளும் வெளியே யாருக்கும் தெளிவாகக் கேட்காது. அப்படியே கேட்டாலும் அது என்னவோ கீச்சுக் குரலில் கிண்டர்கார்டன் பிள்ளை முனகுவதைப் போல இருக்கும்.

நமக்கு என்னவோ பெரிய குரல் கொடுத்துக் கத்துவது போல் இருக்கும். ஆனால் அது அப்படி அல்ல. இருந்தாலும் இதையும் மீறி ஆண்கள் சிலருக்குக் காட்டுக் குரலில் காட்டுமிராண்டி ராகங்களும் வரலாம். அதுதாங்க தூக்க வாதம்.

இந்தத் தூக்க வாதம் எல்லோருக்கும் வருவது இல்லை. ஒரு சிலருக்குத் தான் வரும். குறிப்பாக வயதானவர்களுக்கு அதிகமாக வரும்.

கண்டதைப் போனதை நினைத்துக் கொண்டு தூங்கப் போக வேண்டாம். நல்ல இனிமையான நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டால் மன அழுத்தங்களைத் தவிர்க்கலாம். போதுமான தூக்க நேரம் இருந்தால், அதுவே போதுமான உடல் நலத்தைத் தரும்.

தூக்க வாதம் பெரும்பாலும் கடுமையான வேலைகளுக்குப் பின்னர் ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் இல்லாத நிலையிலும் ஏற்படலாம்.




முன்பு காலத்தில் தோட்டப் புறங்களில் அந்த மாதிரியான தூக்க வாதங்களை அமுக்குவான் சேட்டை என்று சொல்வார்கள். தாத்தா பாட்டிமார்கள் நிறைய பேய்க் கதைகளைச் சொல்வார்கள். அந்தக் கதைகளைக் கேட்க தோட்டமே கூடி நிற்கும்.

இராத்திரி நேரத்தில் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என்று அந்த மாதிரி கதைகளைச் சொல்ல மாட்டார்கள். பட்டி விக்கிரமாதித்தன் கதைகள், இராமாயணம், மகா பாரதம், நளவெண்பா, பெரிய புராணக் கதைகள் என இப்படிப்பட்ட கதைகளைத் தான் சொல்வார்கள். பகல் நேரத்தில் தான் மோகினி, பேய்ப் பிசாசுக் கதைகளைச் சொல்வார்கள்.

அந்த மாதிரி பேய்க் கதைகளைக் கேட்டதும் நம் மூளை அந்த மாதிரிக் கதைகளுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறது. ஏதோ ஒரு மோகினி; ஏதோ ஒரு பிசாசு நம் நெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டு நம்மை அமுக்குவதாக நினைத்துக் கொள்வோம்.

அவையே தூக்கவாதம் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகின்றது. ஆக படுக்கப் போகும் முன்னர் வீணானக் கற்பனைகள் வேண்டாமே.

முறையான தூக்கம்; காற்றோட்டம் உள்ளட அறை; வசதியான படுக்கை போன்றவை இருந்தால் இந்தத் துயில்வாதம் தூக்க வாதம் வராமல் தடுக்கலாம்.

இன்றைய காலக் கட்டத்தில் கொரோனா கற்பனைகள் நம்மை அதிகமாகப் பாதிக்கின்றன. கொரோனா கொடுமைகளை மறப்போம். அடுத்து பழைய நிலைக்கு எப்படித் திரும்பி வருவது என்பதைப் பற்றி யோசிப்போம்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் போதுமான கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் நலன்களில் அதிகமாக அக்கறை செலுத்தி வருகிறது.

கொரோனா பற்றிய எந்தத் தகவலையும் மறைக்காமல் எந்தச் செய்தியையும் தணிக்கை செய்யமால் நேர்மையாக நடந்து கொள்கிறது. மக்கள் நலமே மகேசன் நலம் என்று சொல்வார்கள். சரியான நேரத்தில் முறையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றிகள். நன்றிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.04.2020


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்


Punesh Devnes : Explained well, sir 🙏🏻

Muthukrishnan Ipoh : நன்றிங்க.... மகிழ்ச்சி...

Mageswary Muthiah : நல்ல நகைச்சுவை பாணியில் எழுதி இருக்கிறீர்கள்... அருமையாக உள்ளது 😂

Muthukrishnan Ipoh : நன்றி... மகிழ்ச்சி...

Krishna Ram : Thank you sir ...

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...

Khavi Khavi : உடல் பலகீனமானவர்கள், போதை வஸ்துக்களை உபயோகிப்பவர்கள் போன்றோருக்கு இத்தகைய அழுத்தங்கள் வழக்கமாக நிகழ வாய்ப்பு இருக்கிறது ஆசிரியரே..

Muthukrishnan Ipoh : அப்படிப் பட்டவர்களின் தூக்கத்தில் மட்டும் அல்ல... இயல்பாக இருக்கும் போதும் வெட்டி இழுக்கும்... பார்த்து இருக்கிறேன்....

Manickam Nadeson : நம்ம கிட்ட இதெல்லாம் வராது ஐயா சார், நம்மல பாத்தாலே ஒரே ஓட்டம் தான், அந்த அளவுக்கு நம்ம கிட்டு ஒரு பெரிய சக்தி இருக்கு.

Muthukrishnan Ipoh : கேள்விப்பட்டு இருக்கேன் சார்... தாப்பாவில் பேசிக் கொள்கிறார்கள்...

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh : அதானே, இது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா????

Muthukrishnan Ipoh : நக்கல் நையாண்டிகளுக்குப் பேர் போனவர்களிடம் அமுக்குறான் பிசாசுகள் எல்லாம் எந்த மூலைக்கு... 😃😃

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh : அது அமுக்குறான் பிசாசு இல்லீங்கோ... அது அள்ளி விட்டான் பிசாசு... நம்ம கிட்ட வாலை ஆட்டாது... நறுக்கிடுவோம்ல...

Muthukrishnan Ipoh >>> Manickam Nadeson : பிசாசுகளுக்கு வால் இருக்குமோ...

Samugam Veerappan : சிறப்பான செய்தி சகோதரரே.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...

Melur Manoharan : "இனிய" காலை வணக்கம் ஐயா...! பயனுள்ள "மருத்துவ செய்தி" பதிவு ஐயா...! நன்றி...!

Muthukrishnan Ipoh :
வணக்கம்... வாழ்த்துகள்...

Rangasamy Krishnan : Super sir

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றி

Kumar Murugiah Kumar's : வணக்கம் ஐயா ! பகிருவுக்கு நன்றி

Muthukrishnan Ipoh : வணக்கம்.... மகிழ்ச்சி...

Balamurugan Balu : வணக்கம்! நல்ல பதிவு!

Muthukrishnan Ipoh :
இனிய வாழ்த்துகள்...

Anbu Arasu : Tq aiya.

Mani Roy : அருமையான பதிவு சார்.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...

Vanaja Ponnan :
அருமையான பதிவு ஐயா

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்....

Melissa Elroy : God bless you sir

Muthukrishnan Ipoh :
தங்களுக்கும் வாழ்த்துகள்...

Parimala Muniyandy : இப்போது தான் உங்களின் பதிவைப் பொறுமையாக படித்து முடித்தேன். தூக்க வாதம் என்றால் என்னவென்றும் புரிந்து கொண்டேன். எல்லோருக்கும் புரியும் விதத்தில் அழகாக... நகைச் சுவையாக எழுதி இருக்கிறீர்கள். அருமை அண்ணா... 👌👍👏👏👏

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி சகோதரி... நன்றி...

Pragash Moorthy : அற்புதமான விளக்கம். சிறு வயதில் அனுபவப் பட்டிருக்கின்றேன். குப்புறப் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது யாருடையதோ கை முதுகில் எழுந்திருக்க விடாது அழுத்துவது போலவும் அதன் உள்ளங்கை வெது வெதுப்பை உணர்வது போலவும் இருக்கும்.

கண்களைத் திறக்க முயற்சித்தால் முடியவில்லை. பயத்தில் பக்கத்து அறையில் உறங்கி இருக்கும் அம்மாவை அழைக்கிறேன். வாய் அசைகின்றது ஆனால் குரல் வரவில்லை. உடம்பு எல்லாம் குப்பென்று வியர்த்து வடிகின்றது. இப்படி ஒருமுறை அனுபவப் பட்டுள்ளேன்.

Muthukrishnan Ipoh :
வணக்கம் பிரகாஷ். உங்களுக்கு ஏற்பட்டது போல பலருக்கும் கண்டிப்பாக ஏற்பட்டு இருக்கலாம். காற்றுச் சேட்டை வந்து அமுக்குகிறது என்று சொல்வார்கள். நாமும் நம்பினோம். ஆனால் ஓரளவுக்கு உண்மை தெரிய வந்ததும்... பெரும் வியப்பு. கருத்துகளுக்கு நன்றி.

Balan Muniandy

Kamala Udayan :
வணக்கம் ஐயா. ஆழ்மனதில் சோகம் உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படுவது உண்டு. Depression நிலையில் உள்ளவர்களுக்கு இது நடக்க வாய்ப்பு உண்டு. பகல் வேளையில் இரவு தூக்கமின்மை காரணமாக சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆன்மீகம் (தியானம்) உதவா விடில், மருத்துவரை நாடி நிலைமையைச் சரி செய்யலாம்.

(என் மாணவி ஒருவருக்கு இந்த நிலை அவர் தந்தை மறைவுக்கு பின் இருந்தது. மருத்துவத்தால் மீண்டு வந்தார்.)

Muthukrishnan Ipoh :
மகிழ்ச்சி... நல்ல முயற்சி... /// ஆழ்மனதில் சோகம் உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படுவது உண்டு. /// உண்மைங்க...

Ak Muniandy : இந்த வயதிலும் பேய் பயமா, ஐயா?

Muthukrishnan Ipoh : சின்ன வயதில் இருந்தே எனக்கு பேய் பயம் வந்தது இல்லைங்க... பேய் மீது நம்பிக்கை இல்லை...

Poovamal Nantheni Devi

Muthukrishnan Ipoh :
🙏

Baakialetchumy Subramaniam : அருமையான படைப்பு, தெளிவான கருத்து நன்றி சகோதரரே.

Muthukrishnan Ipoh : நன்றி... மகிழ்ச்சி... வாழ்த்துகள்

Baakialetchumy Subramaniam >>> Muthukrishnan Ipoh : தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரரே.

Sheila Mohan : சிறப்பான கட்டுரை.. நன்றிங்க சார்..

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்....

Melur Manoharan : "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்

Samugam Veerappan : ஊரும் உலகமும் தெரிந்துக் கொள்ள சிறந்த படைப்பு

Muthukrishnan Ipoh : மிக்க நன்றிங்க...

Rajmagan Rajendhran : Arumai

Muthukrishnan Ipoh : நன்றி...

Neela Vanam : சார் இந்த கொரொனொ கிருமி எப்படி பல்கிப் பெருகுகிறது...

Muthukrishnan Ipoh : இதைப் பற்றி நிறையவே கட்டுரைகள்... என் வலைத் தலத்திலும் உள்ளன... போய்ப் பாருங்கள் ஐயா....

https://ksmuthukrishnan.blogspot.com/2020/03/19-4.html

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4

Kumaravelu Shanmugasundaram : எனது உலகளாவிய குழுக்களில் உங்கள் பதிவை பகிர்வேன்

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... புதிய தகவல்கள் பொது அறிவிற்கு மிகவும் அவசியம்... நன்றிங்க...

Santhian Narayanasamy : நல்ல தகவல்

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Kumaravelu Shanmugasundaram :
துயில்வாதம் நல்ல சொல்லாக்கம்...


Muthukrishnan Ipoh : துயில் வாதம் அல்லது தூக்க வாதம் எனும் சொல் 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்க் கலைச் சொல். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை...

Vani Yap :
சிறப்பு மிகுந்த பதிவு.... தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.


Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்....