உலகம் அழிவை நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் அழிவை நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஆகஸ்ட் 2010

உலகம் அழிவை நோக்கி - கட்டுரை (22.08.2010)


 (இந்தக் கட்டுரை 22.08.2010 மலேசிய நண்பன் நாளிதழ் - ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது)


மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை இருப்பதால் தான் மனிதன் மனிதனாக பேர் போட்டுக் கொண்டு இருக்கிறான். அந்த ஆசைகள் இல்லை என்றால் மனித இனம் எப்போதோ அழிந்து போய் இருக்கும்.

அந்தக் காலத்தில் வாளை ஏந்தியவனுக்கு அரசபதவி கிடைத்தது. பார்த்ததை கேட்டதை அள்ளிக் கொண்டு ஓட முடிந்தது. கிடைக்காத போது வரட்டுத் தனமான வக்கிரப் புத்தியைப் பயன்படுத்த முடிந்தது. இந்தக் காலக் கட்டங்களில் பெண்கள் பகடைக் காய்களாகப் பேரம் பேசப் பட்டார்கள். இருந்தாலும் இவை எல்லாம் படிப்பறிவு நிறைவு பெறாத காலத்தில் நடந்த கோளாறுகள்.


இப்போது இந்தக் கணினி யுகத்தில் இந்த மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்பதற்கு வேறு மாதிரியான அடையாளம் காணப் படுகிறது. மண்ணைத் திருடுவது. மணலைத் திருடுவது. மலைகளை இடிப்பது. காடுகளை அழிப்பது. கண்டதைத் தின்று கக்கல் கழிசல்களை மலை மலையாகக் குவித்து வைப்பது. கடைசியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மனித இனத்தையே அழித்துக் கொல்வது.

இந்த இடத்தில்தான் இப்போதைய மனிதன் வந்து நிற்கிறான். இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? ஆசைகள்! ஆசைகள்! மண்ணாசை! பெண்ணாசை! பொன்னாசை! எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லாத ஆசைகள்.

நாம் வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போதும் ஒன்றையும் எடுத்துக் கொண்டு போவதும் இல்லை. ஆனால், இன்று இருக்கிறதை அள்ளிக் கொண்டு போவதைப் பற்றியே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். தர்க்க வாதம் புரிகிறார்கள்.

பொருளாதாரம் தேடும் வெறித்தனத்தால் காடுகள் அழிக்கப் படுகின்றன. மலைகளும் மடுக்களும் இடித்துத் தள்ளப்படுகின்றன. அதனால் சுவாசிக்கும் காற்று தூய்மை அற்றுப் போய் விட்டது. குடிக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் விஷமாகிப் போய் விட்டது. மனிதன் தன்னுடைய உடல் நலத்தை அநியாயமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய ஓர் அவல நிலையும் வந்து விட்டது.


இப்போது பாருங்கள். மனிதனுக்குப் பதிலாக நாடுகளுக்கு இடையில் சண்டைச் சச்சரவுகள். அந்த அரிச்சுவடியில் அழுக்கும் அசுத்தமும் அலை அலையாய் வந்து மோதுகின்றன. மனித மனம் வெதும்பிப் போகும் அளவுக்கு அழுக்காறுகள் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. மாசுத் தன்மைகள் மலை மலையாய்க் குவிகின்றன.

அடுத்து, உலகத்தை நவீன மயமாக்குகிறோம் என்று சொல்லிச் சொல்லியே தாய் மண்ணை அசிங்கப் படுத்தி வருகிறார்கள்.

உலகளாவிய உஷ்ண நிலை உயர்ந்து போனதற்கு காரணங்கள் என்ன? மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். கார்கள் இல்லாத வீடுகளே இல்லை. வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு இரண்டு கார்கள். சில வீடுகளில் ஆளுக்கு ஒரு கார். வளர்ந்து வரும் மலேசியாவிலேயே இப்படி என்றால் வளர்ந்து விட்ட நாடுகளில் எப்படி. இந்தக் கார்கள் தான் மூலகாரணம். இவை வெளியிடும் Carbon Dioxide எனும் கெட்ட காற்றுதான் பூமியின் நல்ல காற்றை மாசு படுத்துகின்றன.


மலைகள் குன்றுகளை வெட்டி மண்ணை நிரப்பும் போது அங்கே இருந்து Methane எனும் நச்சுக்காற்று வெளியாகிறது. விவசாயம் செய்யப் பயன்படுத்தும் உர வகைகளில் இருந்து Nitrous Oxide எனும் மிக மிக மோசமான நச்சுக்காற்று நல்ல காற்றுடன் கலக்கிறது.

உலகம் முழுமையும் பரந்து கிடக்கும் தொழிற்சாலைகள் கோடிக்கணக்கான டன்கள் புகையை பூமியின் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றன. இந்த வகையான காற்றுகளை Greenhouse Gases (GHGs) என்று அழைக்கிறார்கள்.

பொதுவாகத் தாவரங்கள் கரியமில காற்றைக் கிரகித்து Oxygen எனும் உயிர்க்காற்றை வெளியிடுகின்றன. உயிரினங்கள் அதற்கு மாறாக உயிர்க்காற்றைக் கிரகித்து கரியமில காற்றை வெளியிடுகின்றன. இதுதான் இந்த இரண்டு இனங்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கித் தருகிறது.


இந்த நிலைமையில் விவசாயம் எனும் போர்வையில்  பெரும் அளவில் அமேசான் காடுகள், போர்னியோ காடுகள் அழிக்கப் படுகின்றன அல்லது எரிக்கப் படுகின்றன. அதனால் பூமியின் காற்றுச் சமநிலைத் தன்மையில் முரண்பாடு ஏற்படுகிறது. பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

குளிர்சாதனப் பெட்டிகளுக்கு Chlorofluorocarbon எனும் வாயுவைப் பயன் படுத்துகின்றார்கள். இந்த வாயு பூமியின் வளி மண்டலத்தில் வெற்றிடத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. அதாவது பூமியின் Ozone Layerல் ஓட்டை போட்டு விடுகின்றன. ஆக பூமியின் தட்ப வெப்ப நிலையில் சீர்குலைவு ஏற்படுகிறது.


இப்போது வரும் நவீன வகையான குளிர்சாதனப் பெட்டிகளில் இதற்குப் பதிலாக Tetrafluoroethane எனும் வாயுவைப் பயன் படுத்துகிறார்கள். இந்த வாயு இயற்கைக்கு சேதம் விளைவிப்பதில்லை. இதே போல தொழில்சாலைகளில் பயன்படுத்தப் படும் குளிர்சாதனங்களும் நிறைய நச்சுக் காற்றுகளை வெளியிடுகின்றன. இவையும் தவறான மனிதப் பயன் பாடுகள். அதனால் ஒவ்வோர் ஆண்டும் 6 பில்லியன் டன் கரியமிலக் காற்று உள் மண்டலத்தில் கலக்கின்றது. இயற்கைத் தன்மையைச் சீர்குலைக்கின்றது.

உஷ்ண நிலை உயர உயரப் போவதால் பூமிக்கு கணக்கு வழக்கு இல்லாத தீமைகள். வட துருவம், தென் துருவம், கிரீன்லாந்து போன்ற துருவப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கி விட்டன. இமய மலை உச்சியில் கசிவு. சைபீரியப் பனிக் காடுகள் உருகி நிற்கின்றன. எந்த நேரமும் உடைத்துக் கொண்டு வெளியே வரலாம்.
ஆக, இந்த நூற்றாண்டின் கடைசியில் கடல் அளவு 18 செண்டிமீட்டரில் இருந்து 59 செண்டிமீட்டருக்கு உயரப் போகிறது என்று கணக்குப் போட்டுச் சொல்லி விட்டார்கள்.

இதில் முழுகப் போகும் முதல் நாடு மாலைத் தீவுகள், அந்தமான், நிக்காபார் தீவுகள். இன்னும் ஓர் ஆச்சரியான செய்தி. இந்தியத் துணைக் கண்டத்தில் முதலில் முழுகப் போகும் நகரங்கள் எவை தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்களே. சென்னையும் பம்பாயும். போதுமா.

உலகம் இந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ரோமாபுரி எரிகிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அந்த மாதிரி அங்கே என்னடா என்றால் அரசியல் தாக்கத்தில் சகோதரச் சண்டை சர்வ லோகச் சண்டையாக மாறி வருகிறது.


லீசா, பவ்லா, ரீத்தா, ஹன்னா, பலோமா, ஜூலியா என்பவை எல்லாம் பெண்களின் பெயர்கள். இந்தப் பெயர்களில்தான் உலகத்தைச் சிதைக்கும் சூறாவளிப் புயல் காற்றுகளுக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவற்றின் சீற்றம் அதிகரிக்கும். பயங்கரமான சேதங்களை விளைவிக்கும் என்றும் ஆருடம் சொல்கிறார்கள்.

உலகத் தட்ப வெப்ப மாற்றத்தால் அடிக்கடி பேய் மழைகள் வரும். திடீர் வெள்ளங்கள் வரும். உயிர் உடமைகளுக்குச் சேதங்கள் சிதைவுகள் ஏற்படும். ஊழி ஊழி காலமாக வானம் பார்த்த பூமியாக இருப்பது எதியோப்பியா நாடு. அந்த நாட்டில் எதிர்காலத்தில் ஒரு புல்லும் இருக்காது ஒரு பூச்சியும் இருக்காது என்று வேறு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள்.

Fresh Water என்று சொல்லப்படும் சுத்தமான நீர் கிடைப்பது அரிதாகி விடும். தென் அமெரிக்காவில் பெரு எனும் நாடு இருக்கிறது. அங்கே Quelccaya எனும் பனிமலை இருக்கிறது. போகிற போக்கில் இந்த மலை 2100 ஆண்டுக்குள் உருகி அடையாளமே தெரியாமல் போய் விடும் என்கிறார்கள்.

இந்த நிலைமை அப்படியே நீடித்தால் அமுங்கிப் போய் கிடக்கும் பல நோய்கள் மேல் எழுந்து வரலாம். எடுத்துக் காட்டாக மலேரியா நோய். அம்மை நோய்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். புனர் ஜென்மம் எடுக்கும் இந்த நோய்கள் மனித இனத்திற்கே சவால் விடுக்கும் ஓர் இக்கட்டான நிலைமையைக் கொண்டு வரலாம். மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்திய ரேகை நாடுகளில் காணப்படும் உயிரினங்கள் வடக்கு திசை நாடுகளுக்குப் புலம் பெயரலாம். அப்படி போக முடியாதவை மண்ணோடு மண்ணாகிவிடும். அந்த இனங்கள் உயிரினப் பட்டியலில் இருந்து காணாமல் போய்விடும்.

வட துருவம் கரைகிறது என்று சொன்னேன் அல்லவா. அந்தத் தாக்கத்தால் அங்கே வாழும் துருவக் கரடிகள் முற்றாக அழிந்து போகும். இப்போதே துருவக் கரடிகளின் உருவ அமைப்பு மெலிவு பெற்று வருவதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 4 பாகை செல்சியஸ் வரை உயர்ந்து விட்டது. அதாவது நம்முடைய மலேசியாவின் சராசரி வெப்பநிலை 28 பாகை என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதன் வெப்பநிலை 24 பாகையாக இருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

சரி. இமயமலை பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் மனசு ரொம்பவும் சங்கடப் படுகிறது. ஏன் தெரியுமா. இப்போதே இமயமலை உருத் தொடங்கி விட்டதாம். திபெத்திய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்தான் அதற்கு காரணம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

உலகளாவிய வெப்பநிலையின் உயர்வால் இந்தியாவின் அசாம் மாநிலம்தான் மிக மிக மோசமாகப் பாதிப்பு அடையும் என்று ஐ.நா சொல்கிறது.

அதைப் பற்றி அங்கே யாரும் அதிகமாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச் சூழல் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை. அதற்கு காரணம் பொதுவான கல்வியறிவு குறைவே. ஆனால் அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

அந்தமான், இலட்சத்தீவுகளில் காணப்படும் பவளமணித் திட்டுகளில் 70 விழுக்காடு அப்படியே முற்றாக அழிந்தும் விட்டன. இது ஓர் அதிச்சியான தகவல். Indira Gandhi Institute of Development Research எனும் இந்திராகாந்தி மேம்பாட்டு வளர்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஒரு கணிப்பு பெரும் அதிர்ச்சி தரக் கூடியது.

இந்தியாவின் வெப்ப அளவு இரண்டே இரண்டு செல்சியஸ் கூடினால் போதும். அதன் மொத்த உற்பத்தித் திறன் 40 விழுக்காடு குறையும். அது மட்டுமா. 70 இலட்சம் மக்கள் இடம் பெயறக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மும்பை நகரமும் சென்னை நகரமும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அடுத்து வங்காளதேசம். இந்த நாடும் மிக மிக மோசமாகப் பாதிக்கப் படும்.

நம்முடைய தாய்க்குச் சமமானது இந்தப் பூமி. மண்ணும் மலைகளும், செடிகளும் கொடிகளும், ஆறுகளும் அருவிகளும், காடுகளும் கடல்களும் அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் எல்லா உயினங்களுக்கும் சொந்தம். ஆனால் மனித இனம் மட்டும் தான் அவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு வருகிறது.

மற்ற இனங்களைப் பாது காக்க வேண்டிய அதீதப் பொறுப்பு மனித இனத்திற்கு உள்ளது. முதலில் மனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்.

மரங்களை நடுவோம். மழையை வர வைப்போம். சுற்றுச் சூழலைச் சுகமாக வைத்து இருப்போம். சுத்தமான சமுதாயத்தை உருவாக்குவோம். புதிய பூமியை விண்ணில் தேட வேண்டாம். நாம் வாழும் இந்தத் தாய் மண்ணைச் சுத்தமாக வைத்து இருந்தாலே போதும். அதுவே பெரிய புண்ணியம். மாசு மறுவு இல்லாத உலகத்தைச் செய்வோம்.  மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை கொடுப்போம்.