வனஜா விண்வெளி வீராங்கனை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வனஜா விண்வெளி வீராங்கனை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஆகஸ்ட் 2019

வனஜா விண்வெளி வீராங்கனை - 1

மலேசிய இந்தியர்களின் இதய வானில் இசைக்கும் தென்றலாய்... ஜொலிக்கும் வண்ண முகிலாய்... நினைவின் விளிம்புகளில் தளும்பும் எண்ணங்களாய்... கவிதைகளாய்... கதைகளாய்... இன்னும் பல வடிவங்களாய் வலம் வரும் அழகிய வான்முகில். வனத்தின் வதனங்களில் அவர் வண்ண முகில். அழகிய ஒரு தமிழ் மகள். 



ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு. இது சாமானிய மனிதக் கணக்கு. அதே ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் மூன்று. இது அரசியல் சாணக்கியத்தில் வருகின்ற ஒரு பிணக்கு. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாறுகளைத் திருப்பிப் போடும் வழக்கு.

அந்த மாதிரியான ஆதிக்க உணர்வுகள் புரையோடிக் கிடந்த காலத்தில் மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தமிழ் மகளை மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.

இந்தியாவுக்கு ஒரு கல்பனா சாவ்லா என்றால் மலேசியாவுக்கு ஒரு வனஜா சிவசுப்பிரமணியம். 




அழகு, அறிவு, ஆற்றல் என்கிற மூன்றையும் ஒன்றாய்ச் சேர்த்து ஆலாபனை செய்யப் படுபவர்கள் மிகவும் குறைவு. சமயங்களில் வனஜா மாதிரி சில அரிதான அறிவு ஜீவிகளும் ஆராதனை செய்யப் படுகிறார்கள். மகிழ்ச்சி.

டாக்டர் வனஜா. இவர் விண்வெளிக்குப் போக தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண். முதல் தமிழ்ப் பெண்.

சோயுஸ் வான்கலத்தின் மூலமாக விண்வெளியில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் படுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண் விண்வெளி வீரர். 

இயற்பியல் துறையில் பற்பல ஆய்வுகள் செய்தவர். சுவீடன் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஒரு டாக்டர் பட்டம் அல்ல. இரண்டு டாக்டர் பட்டங்கள். 




மலேசியாவின்  விண்வெளித் திட்டம் 92.9 மில்லியன் ரிங்கிட் செலவில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2007-ஆம் ஆண்டிற்குள் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என மலேசிய விண்வெளி ஆய்வுக் கழகம் தீர்மானித்து இருந்தது.

அங்காசா விண்வெளித் திட்டத்தில் கலந்து கொள்ள 11,275 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். மலேசியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என்பது மலேசியா, ரஷ்யா நாடுகளின் ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும்.

விண்ணுக்கு ஒருவரை அனுப்பி வைப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. அதிகம் செலவாகும். இதை எல்லா நாடுகளுமே தெரிந்து வைத்து இருக்கின்றன.

அந்த வகையில் மலேசியா தன் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்பி வைக்க 100 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து இருந்தது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் செய்து கொண்ட ஒரு விண்வெளித் திட்டத்தைச் சொல்ல விரும்புகிறேன். 




1984-ஆம் ஆண்டில் இந்திய-ரஷ்யக் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டம் உருவானது. அதாவது மலேசியாவின் விண்வெளித் திட்டம் உருவாவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்த இந்திய-ரஷ்யக் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டம் உருவாகிவிட்டது.

அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அதே போல மலேசியாவும் ரஷ்யாவும் 2003-ஆம் ஆண்டில் ஒரு கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன.

அதே 2003-ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து சுக்கோய் (SU-30MKM) ரக 18 போர் விமானங்களை வாங்க மலேசியா முடிவு செய்தது. அவற்றின் விலை 3.34 பில்லியன் ரிங்கிட். அதாவது 334 கோடி ரிங்கிட். பெரிய தொகைதான்.

மலேசியாவில் உள்ள அத்தனைப் பேருக்கும் ஆளுக்கு ஆயிரம் வெள்ளி கொடுக்கலாம். அவ்வளவு பெரிய தொகை. சும்மா சொல்லக் கூடாது. எல்லாம் மலேசியர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த வரிப் பணம்தான்.

மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டத்தை 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முகமது தொடக்கி வைத்தார். 




அந்தக் காலக் கட்டத்தில் மலேசியாவின் விமானப் படைக்கு நவீனமான சுக்கோய் SU-30MKM ரக விமானங்கள் தேவைப் பட்டன. இந்தச் சுக்கோய் விமானங்கள் மலேசியாவுக்கு என்று சிறப்பாகச் செய்யப்பட்டவை. MKM என்றால் ரஷ்ய மொழியில் Modernizirovannyi Kommercheskiy Malaysia.

இந்த விமானம் மணிக்கு 2500 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது. மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எதிரியைத் தாக்கிவிட்டு ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடும். இடையில் எண்ணெய் பிடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஹிரோசிமா நாகாசாக்கி அணுகுண்டுகளைப் போல 12 அணுகுண்டுகளைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது. அதி அற்புதமான விமானம்.

2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புத்தின், மலேசியாவுக்கு அதிகாரத்துவ வருகை தந்தார். அப்போது இந்த விமானங்களை வாங்கும் உடன்படிக்கை கோலாலம்பூரில் கையெழுத்தானது.




அந்த ரஷ்ய - மலேசிய உடன்படிக்கையின் மேல் விவரங்கள். ரஷ்யாவின் விமானங்களை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவரை விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.

அதன்படி இறுதிக் கட்டமாக நால்வர் தேர்வு செய்யப் படுவார்கள். அந்த நால்வரில் இறுதிக் கட்டப் பயிற்சிகளுக்கு இருவர் தேர்வு செய்யப் படுவார்கள். ஒருவர் 2007 அக்டோபர் மாதம் விண்வெளிக்குச் செல்வார். மற்றும் ஒருவர் தயார் நிலையில் இருப்பார்.

தேர்வு செய்யப் பட்டவரை விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது. அவற்றுக்கான செலவுகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக் கொள்வது. அதுவே அந்த  உடன்படிக்கை.

பொருத்தமான விண்வெளி வீரரைத் தேர்வு செய்யும் பொறுப்பு மலேசியாவைப் பொருத்தது. அந்தப் பொறுப்பு மலேசிய தேசிய விண்வெளிக் கழகம், மலேசிய அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகிய இரு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிக் கட்டத்தில் தேர்வு செய்யப்படும் நால்வரும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். ரஷ்யாவில் இருக்கும் யூரி ககாரின் ’ஸ்டார் சிட்டி’ விண்வெளி வீரர்கள் பயிற்சி முகாமில் ஆறு மாத காலத்திற்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். 




அதன் பின்னர் அந்த நால்வரில் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 18 மாத காலப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மலேசியாவில் இளைஞர்களிடையே அறிவியல் புத்தாக உணர்வுகளை மேலோங்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மலேசியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் 11,275 பேர் விண்ணப்பம் செய்து இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கட்டம் கட்டமாகக் குறைக்கப் பட்டார்கள். இறுதியில் பத்து பேர். அவர்களில் நால்வர் மட்டுமே ஆகக் கடைசியாகத் தேர்வு செய்யப் பட்டார்கள்.

அவர்களில் ஒருவர் தான் நம் வானத்து அழகி வனஜா. தேர்வு செய்யப்பட்ட மற்ற மூவரும் ஆண்கள்.

1. டாக்டர் முஷபர் சுக்கோர். மலேசிய தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவர்.

2. கேப்டன் முகமட் கமாலுடின். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி.

3. டாக்டர் பாயிஸ் காலிட். மலேசிய இராணுவத்தில் பல் மருத்துவர்.

4. டாக்டர் வனஜா. இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தயாரிப்புத் தொழில்துறையில் மூத்த பொறியியலாளர்.




இறுதிக் கட்டத்தில் இந்த நால்வரும் ரஷ்யாவிற்கு அனுப்பப் பட்டார்கள். அங்கே ஆறு மாதங்கள் பயிற்சிகள். அதைத் தொடர்ந்து மேலும் பத்து மாதங்களுக்குத் தீவிரப் பயிற்சிகள்.

அனைத்தும் கடினமான பயிற்சிகள். உடலும் பலமாக இருக்க வேண்டும். உள்ளமும் பலமாக இருக்க வேண்டும். உடல் வலிமையைவிட மனவலிமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

வனஜாவின் மனவலிமை, உடல் வலைமை என அனைத்துத் தகுதிகளும் தரம் பிரித்துப் பார்க்கப் பட்டன. இவரால் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருக்க முடியுமா. காற்று அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடிகிறது என்று எல்லாம் சோதனை செய்தார்கள்.

விண்வெளியில் மிதக்கும் போது உடல்வாகு பொருத்தமாக இருக்கிறதா என்று பல்வாறான தேர்வுகள். எல்லாத் தேர்வுகளிலும் ‘பாஸ்’. அதையும் தாண்டிய நிலையில் பெண்களுக்கே உரிய இயற்கையான உபாதைகளும் அவருக்குச் சில சங்கடங்களைக் கொடுத்தன. இதை அவரே சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்தால் போல உடல் பயிற்சிகள். மன உளைச்சலைத் தரும் சோதனைகள். அதில் தூக்கத்தை இடையூறு செய்வதும் ஒரு பயிற்சி.

 

அளவுக்கு மிஞ்சிய உடல் அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியல் காலை மூன்று மணிக்கு எழுப்பி விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சிகள். அதன் பிறகு உடலை உறைய வைக்கும் குளிர் நீரில் நீச்சல் பயிற்சிகள்.

கூடவே மருத்துவர்கள் இருப்பார்கள். தாக்குப் பிடிக்க முடியுமா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சோதனைப் பயிற்சிகளின் போது ஏமாற்று வேலைகள் எதுவும் நடக்க வாய்ப்புகள் இல்லை.

(தொடரும்)

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/S._Vanajah

2. http://www.spacefacts.de/bios/candidates/english/siva_vanajah.htm

3. https://tamizharmedia.com/2019/03/27/video-vanajah-subramaniam-who-almost-became-malaysias-first-astronaut/