ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2

[பாகம்: 2]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 15.06.2015-இல் எழுதப்பட்டது.) 



1980-ஆம் ஆண்டு, தமிழீழப் போராட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணக் குழுக்கள் உயிர் கொடுத்துப் போராடின. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு போராட்டக் குழு. ஆனால், அந்தக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான் மிக மிக வேதனையான விஷயம். கடைசியில் படுகொலைகளில் போய் முடிந்தது. அதற்குச் சகோதரப் படுகொலைகள் என்று பெயர். விடுதலைக்காகப் போராடப் போன குழுக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. அது மனவருத்தங்களைத் தாண்டிய  மன வேதனைகள்.

1981-ஆம் ஆண்டு குழுக்களின் தலைவர் பதவிகளுக்குப் பயங்கரமான போட்டிகள் வந்தன. அதனால் உயர்மட்டத்தில் கொலைகளும் விழுந்தன என்றும் சொல்லப் படுகிறது. இந்தச் சம்பவங்களை எவராலும் மறைக்க முடியாது. ஏன் என்றால் அவற்றைப் பற்றிய தகவல்களை இணைய ஊடகங்களில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.



விடுதலைப் புலிகளுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்று நாம் எல்லோரும் நினைக்கலாம். அதை மறைக்க நீங்களும் நானும் முயற்சிகள் செய்யலாம். இருந்தாலும்  முடியாதுங்க. இணையம் என்ற மாயை உலகில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. இணையப் பதிவுகளை அழிப்பது என்பது ரொம்பவும் சிரமம்.

நீயா நானா போட்டிகள்

சரி. போராட்டக் குழுக்களில் ஏன் இந்தப் பதவிப் போட்டிகள் வந்தன. அதைக் கொஞ்சம் அல்சிப் பார்ப்போம். அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை முன் வைக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். 1984-ஆம் ஆண்டு இந்தக் குழுக்களுக்குள் அடுக்கடுக்காய் நீயா நானா போட்டிகள். அவை பலத்த மோதல்களில் போய் முடிந்தன. பல உயிருடல் சேதங்கள்.

அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டுச் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லாக் குழுத் தலைவர்களையும் சென்னைக்கு வந்து அவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். சில நாட்கள் கழித்து கலைஞர் கருணாநிதியும், அதே பாணியில் தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார்.

எம்.ஜி.ஆரின் அழைப்புக் கடிதம் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தான் முதலில் போய் கிடைத்து இருக்கிறது. உடனே பிரபாகரன் அவரைப் பார்க்கச் சென்றார். ஆனால், புளொட் என்கிற தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOT); டெலோ என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO); இ.பி.ஆர்.எல்.எவ். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதல் முன்னணி (EPRLF); ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக விடுதலை அமைப்பு (EROS) போன்ற குழுக்களுக்கு ஒரு நாள் பிந்தி போய் அழைப்பு கிடைத்து இருக்கிறது.

கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்கள்

அதனால், அவர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது வருத்தம். எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டனர். பாருங்கள். ஒரே ஒரு நாள் லேட். அதற்கு போய் ஒரு பிணக்கு. எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாது என்று சொல்லி கலைஞர் கருணாநிதியைப் போய்ப் பார்த்து இருக்கின்றனர்.





இதற்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் மேல் எம்.ஜி.ஆருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. சொன்ன சொல்லைப் பிரபாகரன் கட்டிக் காக்கிறாரே என்கிற மன நிறைவு. அதன் பிறகுதான் பண உதவிகள் செய்ய ஆரம்பித்தார். முதன் முதலாக இரண்டு கோடி ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்களுக்கு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இந்தக் குழுக்கள் சென்னைக்குப் போய் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து திரும்பிய சில வாரங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய இனப் படுகொலையே நடந்து முடிந்தது.

வவுனியாவில் கென்பாம் டாலர்பாம் எனும் இடங்களில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் பயங்கரமான கைகலப்பு. தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீக மண்ணில் சிங்களர்கள் குடியேறி ஆக்கிரமிப்புச் செய்தார்கள். அதனால் நடந்த கைகலப்பில் 119 பேர் பலி. அதிகம் பாதிக்கப் பட்டது சிங்களர்கள். 





அதற்குப் பதிலடியாக இலங்கை இராணுவம் முல்லைத் தீவு ஒதியமலை கிராமத்தில் நுழைந்து 27 தமிழ் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது. கொதித்துப் போன விடுதலைப் புலிகள், ஒரு போலீஸ் முகாமையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழித்தனர். அதற்கு அடுத்து பலப் பல கைகலப்புகள். பலப் பல மோதல்கள். அவை ஒரு தொடர்கதையாகவே மாறிப் போயின. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இளைஞர்களின் முகவரிகள் தொலைக்கப் பட்டன

இதை இதோடு நிறுத்திக் கொள்வோம். போராட்டக் குழுக்களில் ஏன் பதவிப் போட்டிகள் வந்தன என்பதைப் பார்ப்போம். இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்கிற நோக்கத்தில் பாரபட்சம் இல்லாமல் பணத்தை வாரி வழங்கினார்கள்.

அப்படி கிடைக்கும் நிதியுதவியை போராட்டக் குழுவின் தலைவர் மட்டுமே கண்காணிக்க முடியும். நிர்வாகம் செய்ய முடியும். அப்படி ஓர் எதேச்சையான அதிகாரம். அந்த அதிகாரம் குழுத் தலைவருக்கு மட்டுமே என்பதும் எழுதப் படாத ஒரு சாசனமாக உருவானது.  





அதனால், அவருக்கு கீழே இருந்த மற்ற மற்றத் தளபதிகளுக்கும் தலைவராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. தலைவர் மட்டுமே எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கிறார் என்கிற ஆதங்கமும் வெளியே வந்து கொட்டியது. அதுவே நாளடைவில் பேராசையாக மாறி வெறிபிடித்துப் போனது. அதைத் தொடர்ந்து உள்ளுக்குள்ளேயே சில பல களையெடுப்புகள். அதன் விளைவு, நன்றாகப் படித்த, அறிவு சார்ந்த பல இளைஞர்களின் முகவரிகள் இரவோடு இரவாக அழித்துத் தொலைக்கப் பட்டன. இது முதலாவது காரணம்.

அடுத்து, தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்து வந்தார். அதனால் இந்திய வல்லரசு தங்களின் பின்னால் எப்போதும் துணை நிற்கும் என்கிற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆபத்து வந்தால் இந்தியா களம் இறங்கும் என்கிற ஒரு நம்பிக்கை. அந்த அசட்டு நம்பிக்கையினால் அசட்டுத் துணிச்சல்கள் வேறு. அதனால் குழுத் தலைமைத்துவங்களில் பதவிப் போராட்டங்கள் உச்சம் பார்த்தன. இது இரண்டாவது காரணம்.

கொரில்லா வன்முறையை விரும்பாத இந்திரா காந்தி

தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்தார். உண்மைதான். ஆனால், அவர் எல்லாக் குழுக்களையுமே ஆதரித்து வந்தார் என்பது தான் சூசகமான உண்மை. எம்.ஜி.ஆரைப் போல அவர் ஒரே ஒரு குழுவை மட்டும் ஆதரிக்கவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

ஒரே ஒரு குழுவை ஆதரித்தால், அந்தக் குழு முதன்மை பெற்று, மற்றக் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்புறம் அந்தக் குழு பிரபலம் அடையும். காலப் போக்கில் பெரிய ஒரு சக்தியாகவும் மாறி விடும். ஆக, கொரில்லா போரினால் தான் ஓர் இனத்திற்கு விடுதலை கிடைத்தது என்கிற அங்கீகாரமும் பிரசித்திப் பெற்று விடும். இல்லையா. 





விடுதலை கிடைப்பது நல்ல விஷயம் தான். தமிழீழத்திற்கு விடுதலை கிடைப்பதில் இந்திரா காந்திக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. ஆனாலும் இந்த மாதிரி வன்முறையில் விடுதலை கிடைப்பதை இந்திரா காந்தி விரும்பவில்லை. கொரில்லா முறையில் விடுதலை வாங்குவது அவருக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தது. பேச்சு வார்த்தையின் மூலமாக விடுதலை கிடைப்பதையே அவர் விரும்பினார்.

இந்திரா எதற்காக பயந்தார்

சரி. அதே அந்தக் கொரில்லா வன்முறையை இந்தியாவில் உள்ள பிரிவினை வாதிகளும் பயன்படுத்தத் தொடங்கினால் என்ன ஆகும். சொல்லுங்கள். மூலைக்கு மூலை பூஞ்சைக் காளான்கள் மாதிரி கொரில்லா அமைப்புகள் கொடிகளைப் பறக்க விடும். கிழக்கே குச்சிப்புடி என்றால் மேற்கே ஒடிசி. வடக்கே பரத நாட்டியம் என்றால் தெற்கே கதக்கலி. அப்புறம் சொல்லவும் வேண்டுமா. அடுத்து ராஜஸ்தான் ஒட்டகங்களைக் களம் இறக்கினாலும் இறக்கி விடுவார்கள். சொல்ல முடியாது. அப்புறம் இந்தியாவின் நிலைமை கட்டவிழ்த்த களிறுக் கதையாகி விடும்.

அதற்காகத் தான் இந்திரா காந்தி பயந்தார். அவர் பயந்து நின்றதிலும் நியாயம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பஞ்சாப், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர், அந்தமான், தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம் போன்ற மாநிலங்கள் தனிநாடு அல்லது தனியாட்சி கேட்டு இந்திரா காந்தியின் சிண்டு முடியைப் பிடித்துப் பேன் பார்த்துக் கொண்டு நின்றன. அது அவருக்கு ஒரு பெரிய தலைவலி.

ஆக, இந்திரா காந்தி இப்படி நினைத்தார். தமிழீழத்தில் ஒரே ஒரு போராட்டக் குழு மட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றால், இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு குளிர்விட்டுப் போகும். அப்புறம் அந்த வெற்றி இந்தியாவிற்குள்ளும் ஊடுருவும். பயங்கரமான எதிர்விளைவுகளைக் கொண்டு வரும். நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. அப்படித்தான் இந்திரா காந்தியின் மூளை வேலை செய்தது.

இந்திரா காந்தி எல்லாக் குழுக்களையும் ஆதரித்தார்

அதனால், இந்திரா காந்தி என்ன செய்தார் தெரியுமா. அவர் எந்த ஒரு போராட்டக் குழுவையும் தனித்து ஆதரிக்கவில்லை. எல்லாக் குழுக்களையுமே ஆதரித்தார். அதை இப்படியும் சொல்லலாம். ‘நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தர உதவி செய்கிறேன். ஆனால், உங்களுக்கு உள்ளேயே நீங்கள் அடித்துக் கொண்டால் அது உங்களுடைய பசால். என்னிடம் மட்டும் வரவேண்டாம். அது தான் எனக்கும் நல்லது என் இந்தியாவுக்கும் நல்லது. அப்படித்தான் இந்திரா காந்தி நினைத்தார்.

தயவு செய்து இதை இந்திரா காந்தியின் ஒரு சதித் திட்டம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். அப்படி ஒரு நினைப்பு வரலாம். வேண்டாங்க. தப்புங்க. அதை வேறு மாதிரி நினைத்து அரசியல் சாணக்கியம் என்று சொல்லிப் பாருங்கள். நன்றாக இருக்கும். பிரகாசமாக இருக்கும். நல்லா சூப்பராகவும் இருக்கும்.





அந்தச் சாணக்கியத்திற்குச் சாணைப் பிடிக்க இந்திய உளவுத் துறையையும் (Research and Analysis Wing) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது. அந்த உளவுத் துறையும் தங்கள் வேலைகளை இம்மியும் பிசகாமல் இடுப்பும் நகராமல் நன்றாகவே செய்து முடித்தன.

கடைசியில் என்ன ஆனது. விடுதலைக் குழுக்களுக்குள் கூடுதலாகத் தான் சண்டைகள் வந்தன. அப்புறம் அவை மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிப் போயின என்பது வரலாறு. இங்கேயும் இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம் அரிச்சுவடி படித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம்

தவிர, இந்திரா காந்தியிடம் இன்னொரு காரணமும் இருந்தது. 1970-களிலேயே இலங்கையின் மீது இந்திரா காந்திக்குக் கோபம் தொடங்கி விட்டது. கிழக்கு பாக்கிஸ்தான் மீது இந்தியா படையெடுத்தது. வங்காள தேசத்தை உருவாக்கியது. அந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே. அப்போதே அந்தச் சமயத்தில் இருந்தே இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம். இந்தியாவுக்கும் கோபம்.





மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து விமானங்கள் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு போக வேண்டும் என்றால் இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின்னர்தான் இந்தியாவின் மேலே பறக்க முடியும். ஆக, வங்காள தேச விடுதலைப் போர் நடக்கும் போது, பாக்கிஸ்தானிய விமானங்கள் இந்திய வான்பரப்பில் பறக்க முடியவில்லை. அதனால், அவை இந்தியத் துணைக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு கிழக்கு பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டி வந்தது.

அப்படி நெடும் தூரம் பயணித்த பாக்கிஸ்தானிய விமானங்களுக்கு, எண்ணெய் எரிபொருள் நீர் உணவு கொடுத்து ராஜ உபசாரம் செய்தது இலங்கை. அது  இந்திரா காந்திக்குக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவருக்கு இலங்கையின் மீது அப்போது இருந்தே கோபம். இரு… ஒரு நாளைக்குப் பார்த்துக்கிறேன்  என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார். 


பிரபாகரன் இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்
 
அந்த வகையில் தமிழீழப் போராட்டமும் சரியாக, கணக் கச்சிதமாக வந்து அமைந்தது. பழி தீர்க்கிற மாதிரி போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். பணத்தைக் கொடுத்தார். ஆயுதங்களை வழங்கினார். தமிழீழப் போராளிகளுக்கு பயிற்சிகள் கொடுக்க இந்தியாவில் முகாம்களையும் அமைத்துக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சித் தளங்கள் இருந்தன. ஆனால், எந்த ஒரு குழுவும் தனித்து நின்று மாபெரும் சக்தியாக விளங்குவதைத் தவிர்ப்பதிலும் ரொம்பவும் எச்சரிக்கையாக இருந்தார். இதுதான் நடந்த விஷயம். அரசியல் என்றால் சும்மா இல்லீங்க. உள்ளே ரொம்ப விஷயம் இருக்கிறது.

தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறை. அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறை. வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை என்று தமிழ்ப் பெரியவர் பழ.நெடுமாறன் சொல்கிறார். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம். போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1