கிளந்தான் சேது ரக்தமரிதிகா சிற்றரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளந்தான் சேது ரக்தமரிதிகா சிற்றரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூன் 2020

கிளந்தான் சேது ரக்தமரிதிகா சிற்றரசு கி.மு. 100-ஆம் ஆண்டு

சேது ரக்தமரிதிகா எனும் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. பலருக்கும் அறியாத பெயராக இருக்கலாம். சேது ரக்தமரிதிகா அல்லது சீது ரக்தமரிதிகா (ChiTu Raktamaritika) என்பது பண்டைய காலத்தில் மலாயா, கிளந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சிற்றரசு ஆகும். புத்த மதம் சார்ந்த அரசு.


கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கிளந்தான் பகுதியில் ஆட்சி செய்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

சேது ரக்தமரிதிகாவின் அமைவிடம் மலாய் தீபகற்பத்தில் கிளந்தான் அல்லது பகாங் மாநிலத்தைச் சுற்றி உள்ள பகுதியாக இருக்கலாம். அல்லது தெற்கு தாய்லாந்தின் சொங்கலா மற்றும் பட்டாணி மாகாணத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக இருக்கிறது.

(The Chi Tu kingdom is believed to have existed as early as 100 BC to the 6th century AD. The location of Chi Tu was disputed to be around Kelantan or Pahang state in Malay Peninsula, or in Songkhla and Pattani Province of southern Thailand.)

அந்த வகையில் கிளந்தான் கோட்பாடு; சொங்கலா கோட்பாடு என இரு கோட்பாடுகள் உள்ளன.



கிளந்தான் கோட்பாட்டை ஆதரிப்பதற்கான சரியான சான்றுகள் உள்ளன. சீனத் தூதர்கள் சேது ரக்தமரிதிகாவை விட்டு வெளியேறிய போது, அவர்களின் கப்பல்கள் வியட்நாம் சம்பாவை வந்து அடைவதற்கு 10 நாட்கள் பிடித்து இருக்கிறது என்கிறார்கள்.

அப்படி என்றால் கிளந்தானில் இருந்து தான் அவர்கள் புறப்பட்டு இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதிபடுத்துகிறார்கள்..

வருடத்தைக் கவனியுங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுனத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் பார்த்த சிற்றரசு ஆகும். ஆட்சி செய்தவர்களின் பெயர்கள் சரியாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் சில தகவல்கள் உள்ளன.



சேது ரக்தமரிதிகா அரச குடும்பத்தின் பெயர் சுதன் (Chu-dan). கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது தானே. ஒரு சின்ன விளக்கம்.

சமண மதம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தச் சமண மதத்தில் ’மூன்று தெய்வங்கள்’ எனும் நம்பிக்கை உள்ளது. அவை தர்ம காயம்; புத்தம்; மகா காயம் எனும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை தான் புத்த மதத்தில் பிதா; சுதன்; ஆவி என மூன்று தெய்வங்களாக நிலைத்து நிற்கின்றன. அவையே மூன்று தெய்வ உருவகங்கள்.

இவற்றுள் சுதன் எனும் பெயர் வருவதைக் கவனியுங்கள். இந்தச் சுதன் எனும் பெயர் தான் சேது ரக்தமரிதிகா அரச குடும்பத்திற்கும் இருந்து உள்ளது. புத்த மதத்தின் மூன்று தெய்வங்களில் சுதன் எனும் தெய்வத்தின் பெயர் அந்த அரசக் குடும்பத்திற்கும் இருந்து உள்ளது என்று சொல்ல வருகிறேன்.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை, புக்கிட் மரியாம் (Bukit Meriam, Muda River) பகுதியில் 1834-ஆம் ஆண்டு ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் மகானவிகா புத்த குப்தா கல்வெட்டு (Mahanavika Buddhagupta). பொதுவாக புத்த குப்தா கல்வெட்டு என்று அழைப்பார்கள். பிராமி (Brahmi) தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டது.



பிராமி என்பது பழங்கால எழுத்து முறையாகும். இது தமிழர்களின் எழுத்து முறை என்றும்; ஆகவே அதைத் 'தமிழி'  என்று அழைக்க வேண்டும் என்றும் தமிழ் அறிஞர்கள் சிலர் சொல்கின்றனர்.

இந்தத் தமிழி முறையை அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்து முறையாக உருவாக்கினார் என்றும் சிலர் சொல்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் செபராங் பிறையில் கண்டு எடுக்கப்பட்ட மகானவிகா கல்வெட்டு பிராமி எனும் தமிழி எழுத்துகளாலும் சமஸ்கிருத எழுத்துகளாலும் எழுதப் பட்டவை ஆகும் (Inscriptions, both in Tamil and Sanskrit).

கிழக்கிந்திய கம்பெனியில் (East India Company) சேவை செய்த கேப்டன் லோ (Captain James Low) என்பவரால் அந்தக் கல்வெட்டு கண்டு எடுக்கப் பட்டது. இப்போது அந்தக் கல்வெட்டு கல்கத்தாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum, Calcutta, India) உள்ளது.

ஏன் இந்தக் கல்வெட்டைப் பற்றிச் சொல்ல வருகிறேன் என்றால் அந்தக் கல்வெட்டில் தான் சேது ரக்தமரிதிகா எனும் பெயர் இடம்பெற்று உள்ளது. சரிங்களா.

சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்கு சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயர் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.

இப்போது கிளந்தானில் தானா மேரா எனும் மாவட்டம் இருப்பது தெரியும் தானே. அந்த மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது.

பண்டைய காலத்தில், அதாவது கி.மு. 100 தொடங்கி கி.பி. 700 வரையில், சேது ரக்தமரிதிகா சிற்றரசு; இலங்காசுகம்; கடாரம் போன்ற ஆளுமைகள் மிக முக்கியமான வர்த்தக மையங்களாக விளங்கி உள்ளன. இதன் தலைநகரம் சொங்லா (Songkhla) பகுதியில் இருந்து இருக்கலாம். அல்லது கிளந்தானில் ஒரு பகுதியில் இருந்து இருக்கலாம்.

jஏ.எல். மியோன் (J.L. Meons) என்பவர் பிரபலமான வரலாற்ரு ஆசிரியர். அவரின் சொல்கிறார். இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜய பேரரசு இந்த கிளந்தானில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று சொல்கிறார். அதியே அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களும் வலியுறுத்துகிறார்.

(J.L. Meons (1937) believed that early Srivijaya was located in Kelantan and K.A. Nilakanta Sastri (1949) supported the idea.)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.06.2020

சான்றுகள்:

1. J.L. Moens (1937). Srivijaya Java en Kataha. TBG.

2. Kallidaikurichi Aiyah Nilakanta Sastri (1949). History of Sri Vijaya. University of Madras.

3. Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society.

4. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press.

5. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira.