தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை 2016

தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும்

சோதிடத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற சோதிட வல்லுநர்கள் பலர் உள்ளனர். அவர்களைச் செந்தூரப் பூக்களாய் உயர்த்திப் பார்க்கிறோம். அதே சமயத்தில்... தமிழில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் சிலரும் பஞ்சாங்கப் பைகளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் போகிறார்கள்.



இவர்களால் தான் சோதிடத்திற்குச் சோதனை மேல் சோதனைகள். அவர்களை மந்தாரப் பூக்களாய்த் தான் தாழ்த்திப் பார்க்கிறோம்.

அந்த மாதிரியான சில பல கற்றுக் குட்டிகளினால் பாவம்... நம்மில் பலர் சோதிடத்தில் ரொம்பவுமே நம்பிக்கை இழந்து போகின்றோம். அதனால் சோதிடத் துறையை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் தள்ளப் படுகின்றோம்.

சோதிடம் உண்மையா... பொய்யா... நம்பலாமா... வேண்டாமா... என்று பலரும் பல கோணங்களில் அலசிப் பார்த்து அவதிப் படுகின்றனர். ஆனால் யாராலும் எவராலும் எந்த ஒரு தெளிவான முடிவையும்... இதுவரையிலும் எடுக்க முடியவில்லை.

இன்னும் சிலர் சோதிடத்தில் பாதி உண்மை... பாதி பொய் என்றும் சொல்கின்றனர். இதில் எந்தப் பாதி உண்மை... எந்தப் பாதி பொய்... தலை சுற்றிக் கிறுகிறுத்தும் போகிறது.

ஜோசியம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஜீயோடிஸ் (Jyótis) எனும் சொல்லில் இருந்து பிறந்தது. இந்தியச் சோதிடத்தில் இரு பிரிவுகள் உள்ளன. முதலாவது இந்து சோதிடம்.

அடுத்தது வேத சோதிடம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக் கிரகங்கள் எந்த நிலைகளில் எந்த அமைப்புகளில் அமைந்து இருந்தன என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது தான் ஜாதகம். அந்த வகையில் தான் ஒரு குழந்தையின் ராசி, நட்சத்திரம், இலக்கணம் போன்றவை குறிக்கப் படுகின்றன.

காலக் கணிப்பு முறையினால் உருவானது பஞ்சாங்கம். ஆக பஞ்சாங்கம் என்பது ஒரு கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து பிரிவுகளைக் கொண்டது. சரி.

அடுத்து... சோதிடம் என்பது அறிவியல் கோணத்தில் உறுதிப் படுத்த முடியாத ஒரு துறை ஆகும். இதை நாம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.

அதாவது சோதிடத் துறைக்கு அறிவியல் அடிப்படைச் சான்றுகள் எதுவும் இல்லாமல் போனது தான். Hypothethical என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அது ஒரு வகையான மூடநம்பிக்கை என்பது இன்னும் ஒரு சாராரின் கருத்து. சோதிடத்தை நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை. அந்த நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை. ஆனால் நம்முடைய (அறிவியல்) கருத்துகளைச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. சரிங்களா...

சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். 2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார். நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சொல்கிறார்.

‘ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம்’ என்கிறார்.

சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் அறிவியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார். (சான்று: https://ta.wikipedia.org/s/bnh). இது ஓர் அறிவியலாளரின் கருத்து. சரிங்களா.  

சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே அதன் பொருள். விண்மீன்கள் என்றால் நட்சத்திரங்கள். சரி. Astrology எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். Astro என்றால் Star. அடுத்து Logy என்றால் நம்பிக்கை அல்லது படிப்பு.

ஆக சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது தான். அதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை. ஆக ஆதிகால மனிதனின் வாழ்க்கையில் பூமியில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வானில் தெரியும் பொருட்கள் நகர்வதே காரணம் என அவன் ஒரு கற்பனையை உருவாக்கி வைத்துக் கொண்டான். [Hansson, Sven Ove; Zalta, Edward N. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.]

வானவியல் (Astronomy), சோதிடம் (Astrology) இந்த இரண்டும் வேறு வேறு துறைகள் தான். இருந்தாலும் இந்த இரண்டுமே வான் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. இரண்டிற்குமே சில பல பொதுவான அம்சங்கள் உள்ளன.

சூரியக் குடும்பத்தில் சூரியன் (Sun), பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளுட்டோ (Pluto) ஆகிய கிரகங்கள் உள்ளன. தெரிந்த விசயம்.

ஆனால் சோதிடத் துறை சூரியனையும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றது. சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடவே இல்லை.

அது மட்டும் அல்ல. சோதிடக் கட்டத்தில் நம் சூரியக் குடும்பத்தின் தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். [Bok, Bart J.; Lawrence E. Jerome; Paul Kurtz (1982). "Objections to Astrology: A Statement by 186 Leading Scientists.] சூரியன் ஒரு கோள் அல்ல. அது ஒரு நட்சத்திரம்.

அடுத்து பூமியின் துணைக் கோளம் சந்திரன். இதற்கும் சோதிடத்தில் மற்ற கோள்களைப் போல ஒரு பதவி தரப் படுகிறது. அது தவறு என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். சந்திரன் ஒரு கோள் அல்ல. அது பூமியின் துணைக்கோள் ஆகும்.

ஆக, ஒரு துணைக்கோள் எப்படி கோள் ஆக முடியும். பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுவது வானியல் கோட்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

மறுபடியும்... சோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களைப் பற்றி குறிப்பிடப் படவே இல்லை. ராகு, கேது ஆகியவை கோள்கள் என்று சோதிடத்தில் குறிப்பிடப் படுகின்றன. நல்லது.

உண்மையில் இந்த ராகு, கேது இரு கோள்களுமே சூரியக் குடும்பத்தில் இல்லவே இல்லை. உருவமும் அருவமும் இல்லாத கோள்கள். அசல் கற்பனையான கோள்கள் ஆகும். கற்பனையான கோள்களை வைத்துக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப் படுகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து. [Subbarayappa, B. V. (14 September 1989). "Indian astronomy: An historical perspective".]

பாம்பு என்ற ஒரு ஜீவனைக் கொண்டு வந்து... அதன் தலையைத் தனியாக்கி... தலைக்கும் பாம்புக்கும் தனித் தனியாக ராகு கேது என்று பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்... இதை மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது.

ராகு, கேது எனும் கோள்கள் வானவியலில் (Astronomy) கிடையவே கிடையாது. இவை ஆதிகால மனிதனின் கற்பனைக் கோள்கள் ஆகும்.

காலம் காலமாக மனிதன் தனக்குத் தெரிந்த விசயங்களையும் தெரியாத விசயங்களையும் வானத்தை அண்ணாந்து பார்த்துத் தெரிந்து கொண்டு வந்து இருக்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன.

அந்தக் காலக் கட்டத்தில் அப்போது வாழ்ந்த சில அறிவு ஜீவிகள் அந்த இரண்டையும் தொடர்பு படுத்தி பாமர மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று இருக்கின்றனர்.

ஆக மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு... வானில் வலம் வரும் சூரியன் சந்திரனில் ஏற்படும் நிகழ்வுகளும் நகர்வுகளுமே காரணம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

Astrology thus lost its academic and theoretical standing and common belief in it has largely declined. Astrology is now recognized to be pseudoscience.

சூரியனும் சந்திரனும் ஒளிவிடும் பொருட்கள். அவற்றின் இயற்பியல் காரணங்களைப் பற்றி அந்தக் கால மனிதர்களுக்கு எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கிறது. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நான் சொல்லவில்லை. இதுவும் ஓர் அறிவியலாளரின் கருத்து. [Zarka, Philippe (2011). "Astronomy and astrology". Proceedings of the International Astronomical Union 5 (S260): 420–425]

நீங்கள் வசிக்கும் இடத்தில் யாராவது புதிதாக வந்து நடமாடிக் கொண்டு இருந்தால்... அவரைப் பற்றி நமக்குத் தெரிந்தது தெரியாதைப் பற்றி எல்லாம்... சும்மா எடுத்து விடுகிறோம். இல்லையா... அந்த மாதிரி தான் இதுவும். அள்ளி விடுவதிலும் நல்ல சுகம் கிடைக்கலாம். அப்போது இல்லை இப்போது.

ஆக, வானில் தெரிந்த சூரியன், சந்திரன் மற்றும் சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்பு படுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றைக் கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பின்னர் காலத்தில் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் வரலாற்றுக் கதை.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் போன்றவை இந்த இந்த இடத்தில் இருந்த போது... இந்த இந்த நிகழ்வுகள் நடந்தன என்ற ஒரு தற்செயல் நிகழ்ச்சியால் உருவானதுதான் சோதிடம். அதனால் தான் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாரும் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்துள்ளனர்.

சோதிடம் என்பது முன்பு காலத்தில் மன்னர்களின் காரண காரியங்களுக்குக் குறிசொல்லும் பழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்படித் தொடங்கிய சோதிடம் தான் சன்னம் சன்னமாய்ப் பாமர மக்களிடம் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படியே பீடு நடையும் போட்டது.

இன்றைக்கு வீடு கட்டுதல், புதுமனை புகுதல், பெயர் சூட்டுவது போன்றவற்றில் தொடங்கி சகுனம் பார்ப்பது வரை வந்து நிற்கிறது. அடுத்து வாஸ்து பார்ப்பதிலும் போய் முடிகிறது. தயவு செய்து நம்மைத் தவறாக எடை போட்டு விட வேண்டாம். நம்முடைய கருத்துகளைச் சொல்கிறோம். மாற்றுக் கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.

சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளன. ஆகவே அதனை நகல் அறிவியல் என்றும் அழைக்கிறார்கள்.

சோதிட நம்பிக்கை பழங்கால வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தே வளர்ந்து வந்துள்ளது. நம் பிரச்சனைகளுக்கு யாராவது வழி காட்ட மாட்டார்களா... உதவிக் கரம் நீட்ட மாட்டார்களா... நம்முடைய வெற்றித் தோல்விகள் நம் கையில் இல்லை... வேறு யாரோ ஒருவர் தான் காரணம்... இந்த மாதிரியான தன்னம்பிக்கை குறைவினாலும் சோதிடம் செழித்து வளர்ந்தது.

உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் அந்தந்த நாகரிகங்களின் கணிப்புப் படியே சோதிடமும் அப்போது உருவாக்கப்பட்டது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ், ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப் படுகிறது. ஆனால் அவற்றின் கணிப்புகள் வேறு மாதிரியானவை. ஒன்றை ஒன்று சார்ந்தவை அல்ல. தனித் தனியாக உருவானவை. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இந்திய வானின் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரித்து உள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டு உள்ளது.

தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அனைத்துலக வானியல் கழகத்தினர் வானில் தெரியும் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாகப் பிரித்து உள்ளனர். இவற்றில் முக்கியமானவை வடதுருவப் பெருங்கரடிக் கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச் சிலுவை ஆகியவை ஆகும். இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தைச் சுற்றி வருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப் படுகின்றன.

இன்னும் ஒரு விசயம். யுரேனஸ் (Uranus) கிரகம் 1781ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லியம் ஹெர்சல் (Sir William Herschel) என்பவர் கண்டுபிடித்தார். நெப்டியூன் (Neptune) கிரகம் 1846ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ (Pluto) கிரகம் 1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஒரு கிரகம் இருக்கிறது. அதன் பெயர் செரிஸ் (Ceres). இது ஒரு குறுங்கோள் (dwarf planet) ஆகும். இந்தக் கிரகம் 1801ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சரி.

சோதிடம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. 2500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. சரி. அண்மையில் சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு கிரகங்களையும் எதில் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்களாம்.

ஒன்பது கிரகங்களைக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப்பட்டது.  இப்போது பத்து கிரகங்கள் உள்ளன. அப்படி என்றால் உலகத்தில் உள்ள எல்லா பஞ்சாங்கங்களையும் மாற்ற வேண்டி வருமே. என்ன செய்யப் போகிறார்களாம். எந்த ஒரு தனிப்பட்ட பஞ்சாங்கத்தையும் சுட்டிக் காட்டவில்லை.

இன்று இரவு அடிவானில் தோன்றும் விண்மீன் (நட்சத்திரம்) ஒன்றின் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நட்சத்திரம். பெயர் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்படிப் பார்த்தாலும் அந்த நட்சத்திரம் 4 நிமிடம் தாமதமாகத் தான் வானில் தெரியும். ஏன் தெரியுமா. நம் பூமியின் சூழற்சி தான் அதற்குக் காரணம்.

இதைத் தவிர நட்சத்திரங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக என்றோ எப்போதோ வானில் பார்த்த நட்சத்திரங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு சோதிடம் கணிக்கப் படுகின்றது என்று நான் சொல்லவில்லை. நோபல் பரிசு பெற்ற சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சொல்கிறார். 

வானில் தெரியும் அத்தனை நட்சத்திரங்களும் தங்களின் பழைய இடத்தில் இருந்து என்றோ எப்போதோ இடம் பெயர்ந்து ‘பை பை’ சொல்லி ஆயிரம் ஆயிரம் மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இப்போது கணித்துச் சொல்லப்படும் நட்சத்திரங்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவிற்கு நகர்ந்து போய் விட்டன.

எடுத்துக் காட்டாக திருவாதிரை நட்சத்திரம். 640 ஒளியாண்டுகள் தூரத்திற்கு நகர்ந்து போய் விட்டது. நடப்பது வேறு கணிப்பது வேறு.

அறிவியல் என்றால் அறிவு + இயல். மனித அறிவு சார்ந்த ஒரு துறை. மிகச் சரியான சான்றுகளுடன் உறுதிபடுத்தும் துறை. ஆக, சோதிடத்தின் மீது அவரவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறேன். இந்தக் கட்டுரையின் மூலமாக சிலருக்கு வருத்தங்கள் ஏற்படலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சான்றுகள்:

1. Sven Ove Hansson; Edward N. Zalta. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.
2. Vishveshwara, edited by S.K. Biswas, D.C.V. Mallik, C.V. (1989). Cosmic Perspectives: Essays Dedicated to the Memory of M.K.V. Bappu (1. publ. ed.).
3. Astronomical Pseudo-Science: A Skeptic's Resource List". Astronomical Society of the Pacific.
4. Thagard, Paul R. (1978). "Why Astrology is a Pseudoscience" (PDF).
5.www.helsinki.fi/teoreettinenfilosofia/oppimateriaali/Sintonen/Paul_R._Thagard_-_Why_Astrology_Is_A_Pseudoscience.pdf