நிபோங் திபால் மர்ம மாளிகை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிபோங் திபால் மர்ம மாளிகை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஏப்ரல் 2020

நிபோங் திபால் மர்ம மாளிகை - 2

தமிழ் மலர் - 04.08.2019

முன்பு எல்லாம் இந்த மாளிகையைப் பார்க்க அதிகம் பேர் வருவது இல்லை. கறுப்பு தாஜ் மகால் போல காட்டுக்குள் கண்ணாமூச்சி காட்டி வந்தது. அண்மைய காலங்களில் தான் கொஞ்சமாய் வெளிச்சம் படுகிறது. 




ஆய்வு பணிகளுக்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஆசிரியர்க் கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். காலையில் வந்து மாலையில் போய் விடுகிறார்கள். இரவில் யாரும் தங்குவது இல்லை.

சமயங்களில் பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். பொதுவாக இங்கு வருபவர்கள் மாளிகையைப் படம் பிடிப்பதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். செல்பி மேல் செல்பி எடுத்து சொந்த பந்தங்களைத் தெறிக்க விடுகிறார்கள்.

அந்த மர்ம மாளிகையின் வரலாறு என்ன சொல்கிறது. 1860-ஆம் ஆண்டுகளில் ஜான் வில்லியம் ராம்ஸ்டன் (John William Ramsden) என்பவரால் இந்த மாளிகை (99-Door Mansion) கட்டப் பட்டது. 1850-களில் பத்து காவான், நிபோங் திபால் பகுதிகளில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 



ஜான் வில்லியம் ராம்ஸ்டன்
வால்டோர் தோட்டம், சுங்கை பாக்காப் தோட்டம், கலிடோனியா தோட்டம், பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், சங்காட் தோட்டம், ஜாவி தோட்டம், சிம்பா தோட்டம், கிரியான் தோட்டம் போன்ற பெயர்கள் பலரின் நினைவுக்கு வரலாம்.

அந்தத் தோட்டங்களை வெள்ளைக்கார நிர்வாகிகள் நிர்வகித்து வந்தார்கள். அப்போதே இந்த மர்ம மாளிகைக்கு கலிடோனியா மாளிகை என்று பெயர்.

சுற்று வட்டாரத் தோட்டங்களின் தலைமை அலுவலகமாக அந்த மாளிகை விளங்கி இருக்கிறது. பக்கத்திலேயே ஒரு விமான ஓடுபாதையும் இருந்து இருக்கிறது. 




நிபோங் திபாலில் எனக்கு இரு நெருங்கிய நண்பர்கள். ஒருவர் கவிஞர் வாசு குப்புசாமி. பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர். பதவி ஓய்வு பெற்று உள்ளார்.

மற்றும் ஒருவர். தமிழ் ஆர்வலர். கலிடோனியா தோட்டம் கண்டெடுத்த எழுத்தாளர் பி.எஸ்.துரைசாமி. அவர் இப்படிச் சொல்கிறார்...

19-ஆம் நூற்றாண்டில் பைராம் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டமாக இருந்தது. 1880-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலையில் சீனியின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் இந்தத் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.

1960-களில் ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் செம்பனை பயிருக்கு மாற்றம் கண்டது. 




முன்பு விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தோட்டம் தான் இப்போது பைராம் தோட்டம் என்று அழைக்கப் படுகிறது என்று சொன்னார். சரி.

முன்பு காலத்தில் வெள்ளைக்கார முதலாளிகள், மலாயாவில் கால் வைக்காமலேயே இங்கிலாந்தில் இருந்தவாறே மலாயாவில் இருந்த தோட்டங்களை நிர்வாகம் செய்து வந்து இருக்கின்றனர். பெரிய சாதனை. ஒன் மினிட் பிளீஸ்.

இங்கிலாந்தை ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியார் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் இந்தியாவில் கால் வைக்காமலேயே; இந்திய மக்களைப் பார்க்காமலேயே; இந்தியா கறுப்பா சிகப்பா என்று தெரியாமலேயே  இந்தியாவின் மகாராணியாராக ஆட்சி செய்தவர். அவருடைய பெயரே விக்டோரியா தோட்டத்திற்கும் பெயர் வைக்கப் பட்டது. 



நிபோங் திபால் ஆற்றில் படகுகள்
இருப்பினும் அந்த மகாராணியாரின் பெயரைச் சொல்லி, மலாயா ரப்பர் தோட்டங்களை நிர்வாகம் செய்ய வெள்ளைக்கார இளம் நிர்வாகிகளை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களும் நல்லபடியாக லாபத்தைக் காட்டி வந்து இருக்கிறார்கள். முதலாளிகளுக்கு லாபம் வந்தால் போதும். அவர்களுக்குத் தலையும் வாலும் அது தானே. அப்புறம் என்ன.

அப்போது கட்டப்பட்டது தான் இந்தக் கலிடோனியா மாளிகை (Caledonia House). இந்த மாளிகைக்கு ஏன் 99 வாசல் கதவுகளை வைத்து கட்டினார்கள் என்று தெரியவில்லை. வினோதமாக இருக்கிறது. விசித்திரமாகவும் இருக்கிறது.

மாளிகையின் மேலேயும் கீழேயும் பத்துப் பன்னிரண்டு அறைகள் உள்ளன. இருந்தாலும் ஒவ்வோர் அறைக்கும் ஏழு எட்டு வாசல் கதவுகள் இருக்கின்றன. மண்டை குழம்பிப் போகிறது.




தவிர முன்பு காலத்தில் மாளிகைக்கு அருகிலேயே ஒரு சின்ன மதுபான விடுதியும் இருந்து இருக்கிறது. மாலை நேரங்களில் பக்கத்துப் பக்கத்துத் தோட்டங்களின் நிர்வாகிகள் எல்லாம் ஒன்றுகூடி இருக்கிறார்கள். ஜின், விஸ்கி, பிராண்டி போன்ற மதுபானங்களைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

மது ஊற்றிக் கொடுப்பதற்கு வெள்ளைக்காரிகள் கிடைக்கவில்லை போலும். சீனத்திகளை வேலைக்கு வைத்துக் கொண்டார்களாம். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை, மத்தியான நேரத்திலேயே ஒரு சில வௌவால்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தன.

மாளிகையைக் கட்டியவர் ஜான் வில்லியம் ராம்ஸ்டன். அவரின் இறப்பிற்குப் பின்னர் அவருடைய ஒன்றுவிட்டச் சகோதரரின் மகன் ஜான் செயிண்ட் மவுர் ராம்ஸ்டன் (John St. Maur Ramsden) என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவர் கொஞ்ச காலம், அந்த பங்களாவில் தங்கி தோட்ட நிர்வாகங்களைக் கவனித்து வந்துள்ளார். (Penang Rubber Estates Group)




ஒரு முக்கியமான நிகழ்ச்சி. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் நடந்த நிகழ்ச்சி. வில்லியம் ராம்ஸ்டன் இதே மாளிகையில் தான் கொலை செய்யப் பட்டார். 1948-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அவருடைய தலையின் பின்பாகத்தில் இரு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து இருக்கின்றன. மாளிகையின் மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் சுடப்பட்டு இருக்கிறார்.

இந்தக் கொலை சம்பந்தமாகப் பல நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றன. ஆனால் தீர்க்கமாக ஒரு முடிவு கிடைக்கவில்லை. அந்தக் கொலை ஒரு புரியாத புதிராகவே இன்று வரை தொடர்ந்து போகிறது.

கம்யூனிஸ்ட் போராளிகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் ஒரு காரணம் சொல்கிறார்கள்.

வில்லியம் ராம்ஸ்டனின் கார் டிரைவரின் அக்காளுடன் உறவு வைத்து இருந்தது கண்டிபிடிக்கப் பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். 




இவருடைய உடல் இப்போது பினாங்கு ஜார்ஜ் டவுன் இடுகாட்டில் (Georgetown’s Western Road cemetery) புதைக்கப்பட்டு இருக்கிறது.

வெகு காலமாக அந்த மாளிகை அனாதையாகக் கிடந்தது. 1950-ஆம் ஆண்டுகளில் ஒரு மலாய்க்கார மந்திரவாதி அந்த மாளிகையில் தங்கி மந்திர வேலைகள் செய்து வந்ததாகவும் சொல்லப் படுகிறது

சில கிராமவாசிகள் துணிந்து சென்று அந்த மந்திரவாதியைப் பார்த்து இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிராக மந்திரம் செய்யச் சொல்வார்களாம்.

தவிர இந்த மாளிகையில் இருந்து விநோதமான சத்தங்கள் வருவதாகவும் சிலர் சொல்கிறார்கள். மனிதர்கள் சித்ரவதை செய்யப்படும் போது எப்படி சத்தம் போடுவார்கள். அந்த மாதிரி சத்தங்கள் வருமாம். 




மத்தளம் அடிக்கும் சத்தமும் கேட்குமாம். அந்தச் சத்தம் பக்கத்தில் இருக்கும் காடுகள் வரை கேட்குமாம். பெரும்பாலும் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் அங்கே போவது இல்லை.

உய் உய்யின்னு சத்தம் கேட்குமாம்... கதவு அடிச்சுக்குமாம்... மின் விளக்கு ஆடுமாம்... திடீர் திடீர்னு சாமான் சட்டி எல்லாம் உடையுமாம்... சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் வசனம் தெரியும் தானே. அந்த மாதிரி தான்.

இன்னும் ஓர் அதிர்ச்சியான தகவல். இரவு 12 மணிக்கு மேல் திடீரென்று 100-ஆவது வாசல் கதவு தோன்றி மறையுமாம். இரண்டு மூன்று பேர் பார்த்து இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘சீக்கர்ஸ்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் ஒருநாள் இரவு முழுவதும் தங்கி பேய் வேட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குப் பேய் பிடித்து சில நாட்கள் சித்தம் கலங்கிப் போனதாகவும் சொல்லப் படுகிறது.




மர்ம மாளிகையின் சுவர்களில் யாருடைய பெயரையும் எழுதக் கூடாது என்றும் சொல்கிறார்கள். உங்களுக்குப் பிடிக்காதவரின் பெயரை எழுதி வைத்தால் அந்தப் பெயரைக் கொண்டவருக்குப் பைத்தியம் பிடித்து விடுமாம்.

உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது இருந்தால் இந்த விஷப் பரீட்சையில் தாராளமாக இறங்கலாம். ஆனால் ஒரு கண்டிசன். இராத்திரி 12 மணிக்கு நீங்கள் மட்டும் தனி ஆளாக அந்தப் பேய் பங்களாவுக்குப் போக வேண்டும். ஓர் இராத்திரி அங்கேயே தங்க வேண்டும். எப்படி வசதி.

துணைக்கு தயவு செய்து என்னை மட்டும் அழைக்க வேண்டாம். வேறு யாராவது ஏமாந்த வடிவேலு கிடைப்பார். அவரை ஒரு வழி பண்ணி விடுங்கள். சரிங்களா.

1960-ஆம் ஆண்டுகளில் கலிடோனியா தோட்டமும்; பக்கத்தில் இருந்த மற்ற மற்ற தோட்டங்களும் நிபோங் திபால் நகரில் அடகுக் கடையை நடத்தி வந்த (Tye Sin Pawnshop) சீனரிடம் விற்கப் பட்டன. அவர் அந்த நிலங்களைத் துண்டு துண்டுகளாகப் போட்டு விற்று விட்டார்கள். 




மர்ம மாளிகை இருக்கும் 54 ஏக்கர் நிலம் மட்டும் பினாங்கைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியிடம் விற்கப் பட்டது. 1974-ஆம் ஆண்டில் இருந்து 1982 வரையில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய பெயர் நிங் சுவீ சிங் (Ng Swee Ching).

கொஞ்ச நாள் கழித்து, அந்த மர்ம மாளிகை திரும்பவும் தை சின் அடகுக் கடைக்கு கை மாறியது.

கடைசியில் 1961-ஆம் ஆண்டு ஈப்போவைச் சேர்ந்த லீ எனும் சீனர், அந்தத் மர்ம மாளிகைத் தோட்டத்தை வாங்கிக் கொண்டார். அவரும் இறந்து விட்டார். வெளிநாடுகளில் இருக்கும் அவருடைய பேரப் பிள்ளைகள் மர்ம மாளிகைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். 




தமிழ்நாட்டில் இருந்து சஞ்சிக்கூலிகளாக இங்கு வந்த தமிழர்கள், ஒரு நூற்றாண்டுக் காலம் அருகாமையில் இருக்கும் ரப்பர் தோட்டங்களில் பணி புரிந்து உள்ளனர். அந்த ரப்பர் மரங்களின் வெள்ளை நிறத்துப் பால் அவர்கள் சிந்திய சிகப்பு நிறத்துச் செங்குருதியின் பிரளயச் சங்கீர்த்தனங்கள்.

கால மாற்றங்களின் காரணமாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் குடிபெயர்ந்து விட்டார்கள். இப்போது வங்காளதேசிகளும், இந்தோனேசியர்களும் ஒப்பந்தக் கூலிகளாய்க் கோலோச்சுகின்றனர்.

இந்தத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க் கல்வி பெற்றதும் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். 

இந்த மர்ம மாளிகை விசயம் மலேசியர்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். மனதில் பட்டதைச் சொல்கிறேன். கோபித்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பயிர் பச்சைகளின் அழகு தெரியாது. அவை சொல்லும் கதைகளும் சரியாகக் கேட்காது. 




ஆனால் அமேசான் காட்டில் ஒரு காட்டுப் புலி கரகாட்டம் ஆடுகிறது என்று சொல்லிப் பாருங்கள். கடன் வாங்கியாவது படை எடுத்துப் போவார்கள். சிலரைத் தான் சொல்கிறேன்.

நம் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதை எல்லாம் விட்டுவிட்டு, கப்பலேறி வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. போக வேண்டாம் என்று சொல்லவில்லை. போங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதே சமயத்தில் மலேசியாவையும் சுற்றிப் பாருங்கள். அப்புறம் வெளிநாடுகளுக்குப் போங்கள். அடிக்கடி ‘பாரீன்’ போகும் கலாசாரத்தைக் கொஞ்சம் மாற்றி மலேசியாவையும் சுற்றிப் பாருங்கள்.

உங்கள் நாட்டிற்கு முதல் மரியாதை கொடுங்கள். அதுவே உங்கள் தாயக நாட்டிற்கு நீங்கள் செய்யும் முதல்  மரியாதை!

நிபோங் திபால் மர்ம மாளிகையின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள். சரி. இந்த மாளிகையைப் போல நம் நாட்டில் பல மர்ம மாளிகைகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அறிமுகம் செய்கிறேன்.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.08.2019


சான்றுகள்:

1. https://www.thestar.com.my/news/nation/2006/07/15/exmca-rep-used-to-own-mansion/

2. https://www.penang-traveltips.com/99-door-mansion.htm

3. https://en.wikipedia.org/wiki/Nibong_Tebal

4. ‘Mystery of Rubber Estate Manager's Murder' Penang Heritage Trust (PHT) Newsletter, April 2012

5. 99-door Mansion Left to Rot’ The Star, 14 July 2006


பேஸ்புக் பதிவுகள்
15 April 2020


Samundiiswari Muniandy: என் (பாரிட் புந்தார்) பக்கத்துப் பட்டணம்... முதல் முறை இந்த அரண்மனையைப் பற்றி கேள்விப் படுகிறேன்... அருமையான தகவல்.

Muthukrishnan Ipoh:
பாரிட் புந்தார் என்று சொன்னதும்... ஒரு முறை பட்டர்வர்த்தில் இருந்து புறப்பட்டு பாரிட் புந்தாரில் இரவு 9 மணிக்கு... சிக்கிக் கொண்டேன்... தங்க அறை கிடைக்கவில்லை... இருந்தாலும் ஒரு மலாய்க்காரர் உதவி செய்தார்... நள்ளிரவில் தைப்பிங் வந்து சேர்ந்தேன்... 2017-இல் நடந்தது... தெய்வங்கள் மனித வடிவில் வருவது உண்மை...

Samundiiswari Muniandy >>> Muthukrishnan Ipoh: முற்றிலும் உண்மை ஐயா...

Sai Ra >>> Muthukrishnan Ipoh: Unmaitaan. En vaalvilum ippadi miga nalla mun pin arimugam illata malaikaarargalai paartirukkireen. Ellaa Inattilum Manita Teivanggal Undu. Atanalthan innmum Malai peigiratu, bumi nanaigiratu.

(உண்மைதான். என் வாழ்விலும் இப்படி மிக நல்ல... முன்பின் அறிமுகம் இல்லாத மலாய்க்காரர்களைப் பார்த்து இருக்கிறேன். எல்லா இனத்திலும் மனிதத் தெய்வங்கள் உண்டு. அதனால் தான் இன்னமும் மழை பெய்கிறது... பூமி நனைகிறது.)

Muthukrishnan Ipoh: அவரை முன்பின் பார்த்தது இல்லை... என்நிலையை அறிந்து உதவி செய்ய முன் வந்தார்... அவருடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாரிட் புந்தார் நகரில் தங்கும் விடுதிக்காக அலைந்து... கடைசியில் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்... பஸ் ஏற்றி விட்டார்... உண்மையிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சி...

Samundiiswari Muniandy >>> Muthukrishnan Ipoh: இனிமேல் பாரிட் புந்தாரில் தங்களுக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் ஐயா... உதவி செய்ய நான் மட்டும் அல்ல... இங்கு அதிகமானோர் இருக்கிறோம்... தர்மம் தலை காக்கும் என்பார்களே... அதுதான் அன்றைய நாளில் தங்களுக்கு நடந்து உள்ளது.

Muthukrishnan Ipoh >>> Samundiiswari Muniandy: மிக்க நன்றிங்க... தங்களின் அன்பான ஆதரவான உணர்வுகளுக்குச் சிரம் தாழ்த்திய நன்றிகள் 🙏🙏

Prem Rani: Full of informative sir. Tq very much.

Muthukrishnan Ipoh; நன்றி... மகிழ்ச்சி...

Ramani Naguran:
முதல் முறையாக இந்த மாளிகையின் வரலாற்றை அறிகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி .

Muthukrishnan Ipoh நன்றி... நன்றி....

Vanitha Ganapathy: இரண்டு பாகங்களையும் படித்து விட்டேன் ஐயா.. மிக்க நன்றி

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சியான செய்தி...

Sundar Senglrayan: Migaa arumaiyana pathivu ayya (மிக அருமையான பதிவு)

Muthukrishnan Ipoh: மிக்க நன்றி...

Melur Manoharan: "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh: நன்றி... மகிழ்ச்சி...

Maha Lingam: பார்க்க வேண்டிய ஒரு மாளிகை...

Muthukrishnan Ipoh: ஆமாம்... வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Sri Kaali Karuppar Ubaasagar: அருமை அண்ணா வாழ்துக்கள்🙏🏼🌹

Muthukrishnan Ipoh: தங்களுக்கும் வாழ்த்துகள்...

Janaki Raman: Very good article... another Vadivelu really makes me laugh. Thanks sir.

Muthukrishnan Ipoh: கொஞ்சம் நகைச்சுவை 😆

Poovamal Nantheni Devi: தெரியாத தகவல். தெரிந்து கொண்டேன்

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Sinappan Dass: அருமை....

Muthukrishnan Ipoh: மகி்ழ்ச்சி...

Balamurugan Balu: அருமை!

Muthukrishnan Ipoh நன்றி... மகிழ்ச்சி...

Sooria Kumari Xavier: நன்றி ஐயா..

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி

Maha Lingam: அழகோ அழகு....

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி...

Mageswary Muthiah உங்கள் கட்டுரையை மிகவும் சுவாரசியமாக சில இடங்களில் நகைச்சுவை பாணியில் எழுதி இருக்கிறீர்கள்... அருமையாக இருக்கிறது.

Muthukrishnan Ipoh: நன்றி... தயிர் சாதத்திற்கு ஊறுகாய் நன்றாக இருக்கும்... 😋😋

Vani Yap: எனது பதினான்காவது வயதில் இந்த மாளிகையைப் பற்றி அம்மா சொல்லி உள்ளார். நாளிதழில் இந்த மாளிகை பற்றிய தகவல் வந்து உள்ளது. அதை அம்மா பத்திரப் படுத்தி வைத்துள்ளார். கதை கேட்கும் போதே மிக பயமாக இருக்கும். நீங்களாவது வடிவேல் பற்றி கொஞ்சம் நகைச்சுவையாக சொன்னீர்கள்.

ஒரு முறை அம்மா இன்னும் சிலர் அந்த மாளிகையைப் பார்க்க சென்று இருந்தார்கள், மர்மங்கள் நிறைந்த மாளிகை என்றும் சொன்னார் அம்மா. அந்த மாளிகையின் மேல், மொட்டை மாடி இருந்ததாகவும், அங்கே டென்னிஸ் கோட் இருக்கிறது என்றும் சொன்னார்.

நீங்கள் சொல்வது போல், மறைக்கப்பட்ட உண்மைகள் இன்றளவும் தெரியவில்லை.. மர்மம்.. பல வருடங்களுக்கு பின் உங்கள் கைவண்ணத்தில் இந்த மாளிகை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.. அங்கு நடந்த பல விசயங்கள் பற்றி சொல்லி  உள்ளீர்கள். மிக்க நன்றி

Muthukrishnan Ipoh
இதே போல பத்துகாஜாவில் கெல்லிஸ் காசல் மாளிகை உள்ளது... இதிலும் பற்பல மர்மங்கள்... பற்பல இரகசியங்கள்... ஆனாலும் பழைய வரலாறு மறைந்து வருகிறது... இப்போது ஒரு வணிகத் தளமாக மாறி விட்டது...

Vani Yap: வணக்கம்.. மன்னிக்கவும்... நான் தவறாகப் பதிந்து விட்டேன். நீங்கள் சொன்ன மாளிகை கெல்லிஸ் காசல் என்று எண்ணி விட்டேன். குழப்பம் 'பத்து காஜா, பத்து காவானில் ஆரம்பித்து உள்ளது. நல்ல வேளை நீங்கள் இங்கே கெல்லிஸ் காசல் என்ற பெயர் உச்சரிப்பில் என் தவற்றைப் புரிந்து கொண்டேன்... மன்னிக்கவும், நன்றி

Muthukrishnan Ipoh:
நிபோங் திபால் மாளிகையைப் போல பத்து காஜா கெல்லிஸ் காசல் மாளிகையும் மர்மங்கள் கொண்டது... குழப்பங்கள் தெளிந்தமையில் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Indra Balakrishnan: பதிவுக்கு நன்றிங்க ஐயா. முதல் முறையாக இந்த மாளிகையின் வரலாற்றை அறிகிறேன்.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... போய்ப் பாருங்கள்... தனியாக வேண்டாமே...

Karan Mayan Mayan
: Do you have the English version of this write up sir?

Muthukrishnan Ipoh: விரைவில் மொழிபெயர்த்துப் பதிவு செய்கிறேன்...

Athiletchumy Ramudu: நீங்கள் சொன்னது உண்மை தான். இந்த மாளிகையைப் பற்றி துளி அளவும் யாம் அறியோம். பிரமிப்பாக உள்ளது.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Ponni Veerappan: கதை அருமை ஐயா

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... மகிழ்ச்சி... விரைவில் வேறு ஒரு பேய்க் கட்டுரை வரும்...😃😃