வான் அசிசா வான் இஸ்மாயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வான் அசிசா வான் இஸ்மாயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மே 2018

வான் அசிசா வான் இஸ்மாயில்

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்த ஒருவர் நாலு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்ட போது நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பார்க்கிற பட்டி தொட்டி எல்லாம் அவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. 
 

காய்கறி விற்கிற இடத்திலும் பேச்சு. நோய் நொடிக்கு மருந்து வாங்கப் போகிற இடத்திலும் பேச்சு. கோயிலுக்குப் போனால் அங்கேயும் பேச்சு. அட சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனாலும் அங்கேயும் சூப்பரன பேச்சுகள்.

இருந்தாலும் பாருங்கள். என் புருசனுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று சொல்லி மார்தட்டி வீர முழக்கம் செய்தார் ஒரு பெண். அந்தப் பெண் தான் வான் அசிசா வான் இஸ்மாயில்.

இப்போது இந்த நாட்டின் துணைப் பிரதமர். அதாவது ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி அதே நாட்டின் துணைப் பிரதமர். ஓர் அதிசயம் ஆனால் உண்மை. 
 

இந்த உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மலேசிய மக்கள் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்து விட்டார்கள். புது வரலாறு. புது யுகம். புதுத் தெம்புடன் மலேசிய மக்கள் பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்போது கணவனுக்காகப் போராடிய கண்ணகியின் கால் சிலம்புகள். இப்போது மலேசியர்களுக்காகப் போராடும் உரிமைகளின் வெள்ளிக் கொலுசுகள். சிதறிய சிலம்புகளையும் கொட்டிய கொலுசுகளையும்  வாரி அணைக்கும் ஒரு வனிதையின் சீற்றங்கள் வருகின்றன.
 

அசிசா எனும் பெயரில் அர்த்தமுள்ள உரிமையின் வடுக்கள் தெரிகின்றன. பெர்சே விழிப்புணர்வுகளின் ஈரம் காயாத சுவடுகள் தெரிகின்றன. வீர வசனங்களைப் பேசும் வரலாற்றுச் சான்றுகளும் தெரிகின்றன.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கலாசாரப் பின்னணி. அது வாழையடி வாழையாக வளர்ந்துவிட்ட ஒரு வழிமுறை.

அவளை ஒரு காட்சிப் பொருளாகக் காட்டுவதும் அப்புறம் அதே அந்தக் காட்சிப் பொருளை உடல் பசிக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதும் மூத்த வர்க்கத்தின் முன்னணிச் சாகசங்களாக இருக்கலாம். இருந்தும் வரலாம். 
 

ஒன்று மட்டும் சொல்வேன். ஒரு பெண்ணை அவள் விருப்பப்படியே வாழ விடுவதே சிறப்பு. ஓர் ஆண் தன் அதிகாரத்தை ஒரு பெண்ணின் மீது திணிக்கலாம். அதே போல ஒரு பெண் தன் கணவனின் மீது தன் ஆதிக்க வலிமையைக் காட்டலாம்.

இந்த மாதிரியான கட்டத்தில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதே சிறப்பு. விடுங்கள். எல்லார் வீட்டிலும் வாசல்படிகள் இருக்கின்றன. கதவுகளும் இருக்கின்றன. தாழ்ப்பாள்களும் இருக்கின்றன.

நவீனப் பெண்ணிய சிந்தனைக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாம். சிவப்புக் கலரில் கம்பளமும் விரிக்க வேண்டாம். மெலிதாக ஒரு வாழ்த்துச் சொன்னாலே போதும்.

அப்படி நான் சொல்லவில்லை. மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நல்ல ஓர் அரசியல்வாதி சொல்கிறார். அந்த இடத்தில் நம்முடைய காவியத் தலைவி கண்ணகியும் இவரைத் தாண்டி வருகிறார் என்று நினைக்கிறேன். சொன்னால் தப்பு இல்லையே.

இவரை ஒரு முறை டத்தோ அம்பிகாவின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஒரு சில நிமிடங்களில் அவருடைய போராட்ட உணர்வுகள் வெளிப்படையாகத் தெரிய வந்தன. ஒரு நிமிடத்தையும் ஒரு யுகமாகப் பார்க்கின்றவர்.
 

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி என்கின்ற பிகு இல்லை. மலேசியாவில் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவர் எனும் பந்தா கொஞ்சம்கூட இல்லை. மிக நேர்த்தியான அணுகுமுறை.

நான் இவரிடம் ரசித்தது அவருடைய மிக எளிமையான நடைமுறை வாழ்க்கை முறையாகும். அனைவரையும் அனுசரித்து அணைத்துப் போகும் அழகான தாய்மை முறை. அவரிடம் எதேச்சையாகக் காணப்படும் பக்குவமான பரிந்துரைகள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

அதையும் தாண்டி அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. கொஞ்ச நேரப் பேச்சில் மனதை மட்டும் கவரவில்லை. மனித உரிமைகளையும் கிள்ளிவிட்டு சென்று விட்டார் வான் அசீசா. அவருடைய நல்ல எண்ணஙகள் போதும். வாழ்த்துவோம்.

டத்தோ ஸ்ரீ, டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் 1952 டிசம்பர் 3-ஆம் தேதி, சிங்கப்பூர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் பிறந்தவர். அப்போது மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது. தந்தையாரின் பெயர் வான் இஸ்மாயில் வான் மொகமட். தாயாரின் பெயர் மரியா காமிஸ்.

வான் அசிசா இப்போதைக்கு மலேசியாவில் ஒரு பிரபலமான அரசியல்வாதி. 1990-களில் மலேசியாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் துணைவியார். இப்போது மலேசியாவின் துணைப் பிரதமர்.

மலேசியாவில் மக்கள் நீதிக் கட்சி எனும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகப் பதவி வகித்தவர் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிய இரண்டாவது பெண்மணி. முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணியாகும். யார் என்று நினைக்கிறீர்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

மலேசிய நாடாளுமன்ற மக்களவையில், மார்ச் 2008 லிருந்து 31 ஜூலை 2008 வரை எதிர்க்கட்சிகளின் தலைவராகச் சேவையாற்றியவர். தன்னுடைய கணவரின் அரசியல் வாழ்க்கையைச் சரி செய்வதற்காகத் தன் பகுதிநேர  மருத்துவத் தொழிலையும் தள்ளி வைத்தார்.
 

26 ஆகஸ்ட் 2008-இல் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றார்.

வான் அசிசா வான் இஸ்மாயில், கெடா, அலோர் ஸ்டார் நகரில் இருக்கும் செயிண்ட் நிக்கலஸ் கான்வெண்ட் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர், நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரில் இருக்கும் துங்கு குருசியா கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.

அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு அயர்லாந்து, டப்ளின் நகரில் இருக்கும் அரச அறுவை மருத்துவக் கல்லூரியில் (Royal College of Surgeons) மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மகப்பேறியல், பெண் நோயியல் துறைகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

அதே துறைகளில் சிறப்புத் தேர்வு பெற்றதால், கல்லூரியின் மெக்நாத்தன் ஜான்ஸ் (MacNoughton-Jones) தங்கப் பதக்கத்தையும் வென்றார். இருப்பினும் இவர் கண் மருத்துவத் துறையில்தான் நிபுணத்துவப் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய வான் அசிசா, கோலாலம்பூர் பொது மருத்துவமனை, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 14 ஆண்டுகள் மருத்துவராகச் சேவைகள் செய்தார். 1993-இல் இவருடைய கணவர் மலேசியாவின் துணைப் பிரதமர் ஆனதும் வான் அசிசா தன் மருத்துவத் தொழிலை ராஜிநாமா செய்தார்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் பணி புரியும் போது அன்வார் இப்ராஹிமின் நட்பு கிடைத்தது. 1979-ஆம் ஆண்டு முதன்முறையாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பே அவர்களைக் குடும்ப வாழ்க்கையிலும் இணைத்தது. 28 பிப்ரவரி 1980-இல் அவர்களுடைய திருமணம் நடந்தது.

அப்போது அன்வார் இப்ராஹிம், அபிம் என்று அழைக்கப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை முதலில் ஏற்கவில்லை. இருப்பினும் முதல் குழந்தை பிறந்த பின்னர் பெற்றோர்களின் குடும்ப உறவுகள் சுமுக நிலைக்குத் திரும்பியது.

வான் அசிசா வான் இஸ்மாயிலின் மூதாதையர்கள் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது. அதை வான் அசிசா வான் இஸ்மாயிலும் மறுக்கவில்லை. இவருடைய தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மொகமட், சீன வம்சாவளியைச் சேர்ந்த டத்தின் மரியா காமிஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

வான் இஸ்மாயில் வான் மொகமட் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப் பகுதியைச் சேர்ந்தவர். இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கிளாந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் பகுதியைச் சார்ந்ததாகும்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வான் அசிசா வான் இஸ்மாயில் இரண்டாவது பிள்ளை. இவருடைய தம்பி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார். இவருடைய தங்கை பெர்னாமா செய்தி நிறுவனத்தில் தலைமைச் செய்தியாளராகப் பணிபுரிகின்றார். இன்னொரு தங்கை வழக்குரைஞராகப் பணியாற்றுகின்றார்.

அன்வார் இப்ராஹிம் 20 செப்டம்பர் 1998-இல் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், வான் அசிசா அரசியல் களத்தில் இறங்கினார். அதுவரை அவர் நல்ல ஒரு குடும்பப் பெண்ணாக, நல்ல ஒரு மருத்துவராகவே வாழ்ந்து வந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு. தன் குடும்பம் உண்டு என்று மற்ற எல்லாப் பெண்களையும் போலவே ஓர் எளிமையான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

பொதுவாகவே, அவர் எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொண்டவர். பெரும் புள்ளியின் துணைவியார் என்று என்றைக்குமே அடையாளப் படுத்திக் கொண்டது இல்லை.

கணவர் கைது செய்யப்பட்டதும் (Reformasi movement) எனும் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தார். பெரும்பாலான மலேசியர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததற்கு அவருடைய எளிமைத்தனமும் ஒரு காரணமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாற்றுவோம் மாற்றிக் காட்டுவோம் என்பதே அந்த இயக்கத்தின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

பின்னர், 4 ஏப்ரல் 1999-இல் மக்கள் நீதிக் கட்சியைத் (Parti Keadilan Rakyat) தோற்றுவித்தார். அந்தக் கட்சிக்குத் தலைவரும் ஆனார். 3 ஆகஸ்ட் 2003-இல், மலேசியாவின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய மக்கள் கட்சியை, தன்னுடைய மக்கள் நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

இந்தக் காலக் கட்டத்தில் அவருடைய கணவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

1999 மலேசியப் பொதுத் தேர்தலில் வான் அசிசா, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 9077 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் வான் அசிசாவை பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் சாட் என்பவர் எதிர்த்துப் போட்டியிட்டார்.

2004 பொதுத் தேர்தலிலும் அத்தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக 2008 பொதுத் தேர்தலிலும், அதே தொகுதியில் வான் அசிசா வெற்றி வாகை சூடினார்.

31 ஜூலை 2008-இல் தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்து தன் கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவிட்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

பின்னர் அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கூட்டணியின் சார்பில் நின்று வெற்றி அடைந்தார் என்பது வரலாறு.

சரி. மலேசியாவில் முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணி. அவர் யார் என்று  ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்.

அதற்கான பதில். அவர்தான் மலேசிய இந்தியர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன். தன்னலமற்றச் சேவைகளை இனம் காணாமல் வழங்கி வருபவர். மலேசிய மனங்களில் சிறந்த பெண்மணியாக அடையாளம் காண்பவர். அவரைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

”பெண்ணை  ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து அடிமைத்தனம் செய்வதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்.”

இப்படிச் சொல்பவர் வான் அசிசா. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி என்று புன்னகையும் செய்கிறார்.

அங்கே துணிச்சல்மிக்க பெண்மையின் நவரசங்கள் தெரிகின்றன. உதிரத்தையும் உடலையும் உரமாகத் தானம் செய்யும் உணர்வுகளும் தெரிகின்றன. தொடாதே, தொட்டால் விடாதே என்று உள்ளதைச் சொல்லும் உரிமைக் குரல்களும் கேட்கின்றன.

அதையும் தாண்டி உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறது ஒரு மருத்துவ ஓவியம். அதுவே அந்த ஓவியத்தின் தாரக மந்திரம்.

வான் அசிசா வான் இஸ்மாயில். என்னைக் கவர்ந்த ஜீவனே… மறக்க முடியாத ஓர் இதிகாசம்!!