ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 4

தமிழ் மலர் - 25.12.2019

கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் சிரோ மலை (Gunung Cheroh). இந்த மலையின் அடிவாரத்தில் தான் 1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. கருப்புச் சோகங்கள் நிறைந்த ஒரு காலச் சுவடு. Tragedi Hitam Insiden Runtuhan Gunung Cheroh என்று சொல்வார்கள்.



1970-ஆம் ஆண்டுகளில் சிரோ மலை அடிவாரத்தில் ஏறக்குறைய 100 தமிழர்க் குடும்பங்கள். சின்னச் சின்ன வீடுகள். அனைவரும் கடலை வியாபாரத்தில் ஈடுபட்டு சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார்கள். வஞ்சகம் இல்லாத வெள்ளந்திகள். வீண் வம்புகளுக்குப் போகாதவர்கள். அமைதி விரும்பிகள். தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்தவர்கள்.

இன்றும் அப்படித்தான். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவது இல்லை. ஒற்றுமைக் குணத்தை இவர்களிடம் நன்றாகப் பார்க்க முடியும். அனாவசியமாக அடுத்தவர் விசயத்தில் தலையிட விரும்பாத நல்ல குணம் படைத்தவர்கள். நாணயமானவர்கள். இரக்கம் குணம் கொண்டவர்கள். ஆனாலும் சிக்கனத்திற்குப் பேர் போனவர்கள். 



வறுத்த கச்சான்கள், அவித்த கச்சான்கள், பாசிப்பயிறு உருண்டைகள், வடைகள், இடியப்பம், முறுக்கு போன்ற இந்திய வகை உணவுகளைத் தயாரித்து ஈப்போ நகரில் விற்று வந்தார்கள். முறுக்கு என்று சொன்னதும் ஒன்றை நினைவு படுத்துகிறேன். இன்றைய காலக் கட்டத்தில் 40 விதமான முறுக்குகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

தொடக்கக் காலங்களில், அதாவது 1930 – 1940-களில் தலையில் கச்சான் தட்டுகளைச் சுமந்தவாறு ‘கச்சான் பூத்தே… கச்சான் பூத்தே… ஒரு காசுக்கு ஒன்று’ என விற்று இருக்கிறார்கள். சினிமா அரங்குகள்; மருத்துவமனைகள்; பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களுக்குக் கால்நடையாக எடுத்துச் சென்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.



சிலர் சைக்கிள்களில் கூடைகளைக் கட்டி விற்பனை செய்தனர். மேலும் சிலர் சைக்கிள் மூலமாக அருகாமையில் உள்ள கிராமங்களுக்குச் சென்றும் விற்று வந்தனர்.

அந்தக் காலக் கட்டத்தில் குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. பொது மக்கள் குனோங் சிரோவைத் தேடிச் சென்று கச்சான்களை வாங்கினார்கள். குனோங் சிரோ கச்சான்கள் மிக மிகச் சுவையானவை என்று புகழ்ந்தும் பேசினார்கள்.

1920-ஆம் ஆண்டுகளிலேயே இந்தக் கடலை வணிகம் தொடங்கி விட்டது. தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மலாயாவுக்கு வந்த தமிழர்கள் தொடக்கி வைத்த வணிகம். 



1973 அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி இரவு நேரம். சரியான மழை. அப்போது மழைக்காலம். ஒரு வாரக் காலமாக அடைமழை. தீபாவளிக்கு ஒரு வாரம். ஒரு சிலர் தீபாவளிக்குச் சாமான்கள் வாங்க ஈப்போ நகருக்குப் போய் விட்டார்கள். அடைமழையினால் பலர் வீடுகளிலேயே தங்கி விட்டார்கள்.

இரவு 9 மணிக்குத் திடீரென்று பயங்கரமான சத்தம். மழை இரைச்சலையும் தாண்டீய இடி முழக்கம். வானமே இடிந்து விழுந்த மாதிரி சத்தம். ஒரு மலைச் சரிவு. சுண்ணாம்புப் பாறைகள் சரிந்து விழுந்தன. அதில் 20 வீடுகள் புதைந்து போயின. 42 பேர் புதையுண்டு போயினர். ஆட்டுக் கொட்டகைகள், மாட்டுக் கொட்டகைகள் புதைந்தும் சிதைந்தும் போயின.

பார்க்கும் இடம் எல்லாம் கற்பாறைகள். சின்னதும் பெரியதுமாய் உடைந்து போன பல நூறு கற்பாறைகள். இராட்சசக் கற்பாறைகளும் கிடந்தன. அவை பல நூறு டன்கள் எடை கொண்டவை. அந்த விபத்தில் பலருக்குப் படுகாயங்கள். சிலர் கற்பாறைகளுக்கு அடியிலேயே சிக்கிக் கொண்டனர். 



ஏறக்குறைய 500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். காயம் பட்டவர்கள் உடனடியாகப் பக்கத்தில் இருந்த ஈப்போ பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.

அந்தப் புதை இடர்பாட்டில் இருந்து 12 உடல்கள் மட்டுமே மீட்கப் பட்டன. மீட்பு வேலைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. மற்றவர்களின் உடல்களை மீட்டு எடுக்க முடியவில்லை. பாறைகளுக்கு அடியில் மீளாத் தூக்கம் கொள்கின்றனர். 30 குடும்பங்கள் மட்டுமே அந்த இடர்பாட்டில் இருந்து தப்பித்தன.

தொடர்ந்து மழை பெய்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப் பட்டன. மேலும் மலைச் சரிவுகள் ஏற்படலாம் எனும் அச்சம். 




குனோங் சிரோ கச்சான் பூத்தே என்கிற கிராமம் ஒரே நாளில் காணாமல் போய் விட்டது. அடுத்து ஒரு தடை உத்தரவு. குனோங் சிரோவைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது என்று பேராக் மாநில அரசாங்கம் தடை விதித்தது.

அப்போது பேராக் மாநில முதல்வராக டத்தோ கமாருடின் இசா (Datuk Seri Kamaruddin Isa) என்பவர் இருந்தார். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்கப் படும் என்று மாநில அரசாங்கம் உறுதி அளித்தது.

அந்த மாற்று இடம் தான் இப்போது புந்தோங்கில் இருக்கும் கம்போங் கச்சான் பூத்தே (Kampung Kacang Putih). 1974-ஆம் ஆண்டில் குனோங் சிரோவில் எஞ்சி இருந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், கம்போங் கச்சான் பூத்தே கிராமத்திற்குப் புதுக் குடியேற்றம் செய்யப் பட்டனர். இந்தப் புது கம்போங் கச்சான் பூத்தே கிராமத்தின் அசல் பெயர் தெலுக் குரின்.



குனோங் சிரோவில் மரணம் அடைந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று டத்தோ கமாருடின் இசா வாக்கு அளித்தார். சொல்லி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. சொன்னது சொன்னது தான். அதை அப்படியே மறந்து விட்டார்கள்.  இது பேராக் மாநிலச் சுற்றுலாத் துறை கவனிக்க வேண்டிய ஒரு விசயம். சரி. கல்லுமலைக் கோயில் விசயத்திற்கு வருவோம்.

1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ கல்லுமலைக் கோயில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையின் அருகில் கிந்தா நதிக் கரையோரத்தில் பிரும்மாண்டமாய் அமைந்து விட்டது. நல்ல ஓர் அமைப்பான இடத்தில் நல்ல ஒரு கலையம்சமான திருக்கோயில்.

தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப் பட்டனர். சிற்ப வேலைபாடுகள் நடைபெற்றன. 1932-ஆம் ஆண்டு புதிய கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இப்போது போய்ப் பாருங்கள். ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி மிக மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம்; நடுவில் பிரும்மாண்ட முன்மண்டபம்; விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள்.

இவை அனைத்தும் மிகச் சீராகச் சிறப்பாக அமைந்து உள்ளன. மயில்கள் நிறைந்த ஒரு சிறிய பறவைக் கூடமும் இருக்கிறது.

1954-இல் ஒரு திருப்பம். ஈப்போவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவை என ஈப்போ தமிழர்கள் ஆசைப் பட்டு இருக்கிறார்கள். ஆக பொதுமக்கள் ஒன்றுகூடி 15,000 ரிங்கிட் சேர்த்தனர். கோயில் வளாகத்திலேயே தமிழ் உயர்நிலைப் பள்ளியையும் கட்டினார்கள். 



ஆனால் நடந்தது வேறு. தமிழ் உயர்நிலைப் பள்ளியை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. ஒன்று மட்டும் உண்மை. மலேசியாவில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைப்பதற்கு ஈப்போ தமிழர்களும் முயற்சி செய்து இருக்கிறார்கள். கட்டியும் இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

பின்னர் அந்தப் பள்ளி மண்டபம், பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தும் இடமாகவும் மாறியது. இப்போது அது நவீன வசதிகளுடன் கூடிய ஒரு திருமண மண்டபமாகவும் மாற்றம் கண்டுள்ளது.

1969-ஆம் ஆண்டில் 34,000 ரிங்கிட் செலவில் இந்தக் கோயிலுக்கான சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. அடுத்து 6500 ரிங்கிட் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் வளைவும் கட்டப்பட்டது. அப்போது அது பெரிய காசு.

1970-ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கின. அதே ஆண்டு இறுதியில் கும்பாபிஷேகமும் நடத்தப் பட்டது. பின்னர் பொதுமக்கள் பலர் வழங்கிய பண உதவி; நன்கொடைகளைக் கொண்டு விநாயகர் மற்றும் அம்மன் சன்னதிகள் அமைக்கப் பட்டன. மேலும் கோபுரத்தின் மூன்று புறங்களிலும் மாடங்கள் அமைத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



இப்போது மலேசியாவில் மிக அழகான கோயில்களில் கல்லுமலைக் கோயிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 22 மீட்டர் உயரத்திற்கு ஒரு ராஜ கோபுரத்தைக் கட்டி இருக்கிறார்கள். அதற்கான செலவை ஜாலான் பெண்டஹாரா போத்தல் கடை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இன்னும் பலரும் உதவி செய்து உள்ளனர். மிகக் கம்பீரமான புதிய கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். 528 சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. பார்க்கும் போது மலைப்பைத் தருகிறது. ஈப்போ கல்லுமலைக் கோயில் என்றால் அது இப்போது உலகம் முழுமையும் அறியப்பட்ட ஒரு புனிதத் தலமாகி விட்டது.

அந்தக் கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நான் போவது உண்டு. அப்போது ஏராளமான சிட்டுக் குருவிகளைப் பார்க்க முடிந்தது. கோயில் வளாகம் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்கியது. பலவிதமான பறவைகள் வந்து போகும். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். அமைதி வேண்டும் என்றால் இந்தக் கோயிலுக்குப் போக வேண்டும். இயற்கையின் இயல்பு ரசங்கள் சொட்டும் இனிய வளாகம். வேறு புகழ்ச்சி வேண்டாமே.

ஆனால் இப்போது அந்தச் சிட்டுக் குருவிகளைப் பார்க்க முடியவில்லை. ஏன் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. அர்ச்சகர்களிடம் விசாரித்தேன். அவர்களும் புதிது. அவர்களுக்கும் தெரியவில்லை. ஒருக்கால் சுற்றுப்புறச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு பறவைகளுக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் இருக்கலாம்.

இன்னும் ஒரு விசயம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தைப்பூசத் திருவிழா. போய் இருந்தேன். காவடிகள் வந்து கொண்டு இருந்த நேரம். அப்போது பயங்கரமான தோற்றத்தில் நான்கைந்து இந்திய இளைஞர்கள் சாட்டைகள் சகிதம் சூலங்களை உயர்த்திப் பிடித்து மருள் வந்து ஆக்ரோசமாக ஆடிக் கொண்டு வந்தார்கள். வாயிலே இடிப்பாரை மாதிரி இடும்பன் சுருட்டுகள். ஒரு வாயில் இரண்டு மூன்று சுருட்டுகள். சகிக்கவில்லை.

என் மனசில ஒன்று பட்டது. நான் ஓர் இந்து. அதனால் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வது சமய சாஸ்திரம். சரி. ஆனால் அந்த மாதிரி கொடுமைத் தனமான காவடிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லையே. அந்த மாதிரி ருத்ர தாண்டவம் ஆட வேண்டிய அவசியம் இல்லையே. பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு கொடும் தாண்டவம் ஆட வேண்டிய அவசியம் இல்லையே.

சமயம் என்ற போர்வையில் ஏன் இப்படி நடந்துக் கொள்கின்றார்களோ புரியவில்லை. அதிலும் கோயில் அருகில் அவர்கள் ஆடிய ஆட்டம் இருக்கிறதே சும்மா சொல்லக் கூடாது. பத்ரகாளி தோற்றுப் போவார். உண்மையில் அவர்கள் மருள் வந்து ஆடினார்களா இல்லை சும்மாவே ஆடினார்களா. அல்லது உறசாகப் பானம் பண்ணிய உத்வேகத்தில் ஆடினார்களா. தெரியவில்லை. யாமறியேன் பராபரமே.

பாவம் கோயில் நிர்வாகம். அவர்கள் பங்கிற்கு அவர்களின் கடமைகளைச் நன்றாகவே செய்தார்கள். எவ்வளவோ அமைதியாகவும் பண்பாகவும் சொல்லிப் பார்த்தார்கள். உஹூம்... ஒன்றும் நடக்கவில்லை. கஞ்சா கறுப்பு தோற்றுப் போகும். அப்படி ஓர் அசிங்கமான அருவருப்பான ஆட்டம். வெட்கமாக இருந்தது.

ஏன் நம் இளைஞர்கள் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறார்கள். மற்ற இனத்தவருக்கு அது கிண்டல் கேலிக் கூத்தாகத் தெரியாதா. இது அந்த சாம்பராணிகளுக்குத் தெரியாதா. ஏன் நம்ப மதத்தை இப்படி கேவலப் படுத்துகிறார்கள். திருந்தாத ஜென்மங்கள். என்றைக்குத் தான் திருந்துவார்கள்.

ஈப்போ கல்லுமலைக் கோயில். சுற்றிலும் சுண்ணாம்பு மலைக் குன்றுகள் உயர்ந்து நிற்கும் மலைக்காடுகள். அருவி நீர் நிறைந்து வழியும் மழைக் குளங்கள். மும்மாரி மழையில் நீர்த்து நிற்கும் மழைக் குட்டைகள். அந்தக் குன்றுகளில் மாட்சிமைகள் பேசும் மாசிலாக் குகைக் காவியங்கள். அந்தக் குகைகளின் உள்ளே அழகு அழகான குகைச் சுவர் ஓவியங்கள். சொல்லில் வடிக்க முடியாத இயற்கையின் ஆலாபனைகள். அதுவே முருகனின் ஆராதனைகள்.

ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்குள் எவ்வளவு பெரிய வரலாறு, எவ்வளவு பெரிய ரகசியங்கள். இவற்றை எல்லாம் வெளியே கொண்டு வந்த என் மனதிற்குள் மகிழ்ச்சி. அதுவே மலேசிய இந்துக்களுக்கும் என் இனிய காணிக்கை. நன்றி.

(முற்றும்)

நன்றி: emily.com