நுரையீரல்கள் உடலில் உள்ள ஒரு வகையான திரவத்தில் மிதந்து கொண்டு இருக்கும். அதுவும் இயற்கையின் ஒரு பாதுகாப்பு அம்சமே.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் தண்ணீரில் மிதக்கக் கூடிய ஒரே உறுப்பு இந்த நுரையீரல்கள் தான். வேறு எந்த ஓர் உறுப்பும் தண்ணீரில் மிதக்காது. இந்த நுரையீரல்களை 12 ஜோடி விலா எலும்புகள் பாதுகாக்கின்றன. இதுவும் மற்றும் ஒரு பாதுகாப்பு அம்சமே. சரி.
நுரையீரல் எப்படி வேலை செய்கிறது என்று சொல்லிவிட்டு வேறு எங்கேயோ போவதாக நினைக்க வேண்டாம். பாலை எப்படி கறப்பது என்று தெரியாமல் பசு மாட்டை விலை பேசலாமா என்று பாட்டி சொன்னதாக நினைவுகள்... (மெலிதாக ஒரு புன்னகை).
வரிப்பந்து என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. டென்னிஸ் (tennis) என்பதற்கான தமிழ்ச் சொல். ஒரு வரிப்பந்து மைதானம் எவ்வளவு பெரிதாக இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அந்த மாதிரி அதே அளவு தான் நம்முடைய நுரையீரலும்... மலைக்க வேண்டாம். நம்புங்கள்.
மனித நுரையீரலைப் பிரித்துப் பிரித்துப் போட்டால் ஒரு வரிப்பந்து மைதானம் அகலத்திற்குப் பிரித்துப் போடலாம். அவ்வளவு ஆயிரக் கணக்கான அடுக்குகள் நம் நுரையீரல்களில் உள்ளன. ஆனால் இது எல்லாம் நமக்குத் தெரிவதே இல்லை.
நம் உடலுக்குள் போகும் எல்லா உயிர்க் காற்றையும் நுரையீரல் பயன் படுத்தாது. அதாவது நாம் சுவாசிக்கும் காற்றில் 20% ஆக்சிஜன் எனும் உயிர்க் காற்று. அந்த 20%-இல் வெறும் 5%-ஐ மட்டுமே நுரையீரல் பயன் படுத்திக் கொள்ளும். மிச்சக் காற்றை வேண்டாம் என்று சொல்லி அப்படியே வெளியே தள்ளி விடும்.
நம் உடம்பு ஒரு பெரிய குப்பைத் தொட்டி. கண்ட கண்ட அழுக்குகள் எல்லாம் நம் உடம்பில் தேங்கிக் கிடக்கின்றன. பட்டியல் போட்டுச் சொன்னால் நம் மீதே நமக்கு வெறுப்பு வரும். பார்க்கிறதை எல்லாம் விட்டு வைக்காமல் வளைச்சு அடிச்சு சாப்பிட்டால் அப்புறம் எப்படிங்க...
இதில் பெரும்பாலோர் அசைவர்கள். ஒரு சிலர் மட்டுமே இட்லி தோசை சப்பாத்தி பிரியர்கள். ஆனால் உடலில் அசடுகள் தங்கும் விசயத்தில் சைவர்கள்; அசைவர்கள் எனும் பாகுபாடு இல்லை. இரு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான கழிவுக் கசடுகள் தான்.
அப்படி நம் உடம்பில் தேங்கித் தங்கிப் போகும் கழிவுக் கசடுகளில் 30% மட்டுமே ஒன்றுக்கும் இரண்டுக்குமாய்க் கழிந்து போகின்றன. மிச்சம் 70% கழிவுகளின் நிலை என்ன. அங்கேதான் நம்முடைய நுரையீரல் ஐயா வந்து நிற்கிறார்.
அவர் தான் அந்தக் கழிவுக் கசடுகளை அழகாகப் பொட்டலம் கட்டி கெட்டக் காற்றாக வெளியே வீசி விடுகிறார். சுவாசிப்பதன் வழியாக உடலின் 70% கசடுகள் அப்புறப்படுத்தப் படுகின்றன.
நுரையீரல் ஐயா இல்லை என்றால் நம் நிலைமை என்னவாகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
பெண்களும் சின்னப் பிள்ளைகளும் கொஞ்சம் வேகமாகச் சுவாசிப்பார்களாம். ஆண்கள் கொஞ்சம் மெதுவாகச் சுவாசிப்பார்களாம். நான் சொல்லவில்லை. மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
பாருங்கள். சுவாசிப்பதிலும் யோசிப்பதிலும் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. சரி.
மனித நுரையீரல்களின் எடை என்ன தெரியுங்களா? ஏறக்குறைய 1.3 கிலோ கிராம். மனித நுரையீரல்கள் தான்.
மனித நுரையீரல்கள் ஐந்து லிட்டர் காற்றை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதே சமயத்தில் ஒரு திமிங்கலத்தில் திறன் எவ்வளவு தெரியுங்களா? மயக்கம் போட்டு விழாமல் இருந்தால் சரி.
5000 லிட்டர்கள். ஆதாவது ஆயிரம் மனிதர்களுக்குச் சமமான சுவாசக் காற்றை திமிங்கலத்தின் நுரையீரல் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இந்த விசயத்திலும் எந்த விசயத்திலும் மனிதர்களைத் திமிங்கிலத்துடன் ஒப்பிடுவது சரியாகாது.
மனிதனின் சராசரி எடை 70 கிலோ என்றால் திமிங்கிலத்தின் சராசரி எடை 190 டன்கள். சரி. நுரையீரல் 3-ஆம் பகுதியுடன் சந்திக்கிறேன். நன்றி.