பில் கேட்ஸ் இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பில் கேட்ஸ் இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 செப்டம்பர் 2010

பில் கேட்ஸ் பிசினஸ் இரகசியங்கள்

(இந்தக் கட்டுரை மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது)

உலகின் மிக மிகப் பெரிய பணக்காரர் யார்? சின்ன குழந்தை கூட ‘பில் கேட்ஸ்’ என்று சொல்லி விடும். அந்த அளவிற்கு புகழ் பெற்றவர். தேங்கி நிற்கும் திசை எல்லாம் பில்கேட்ஸ். இறவாப் புகழின் அடையாளங்கள். வான விதானத்தில் ஊழியூழிக் காலத்திற்கும் வர்ணஜாலம் காட்டும் மந்திரச் சொல்.

கடந்த 13 ஆண்டுகளாக உலகப் பணக்காரப் பட்டியலில் முதல் இடம். பாரிஜாத நினைவுகளான அற்புத வாழ்க்கை. சென்ற வருடம் Slim Helu எனும் மெக்சிகோ நாட்டுக்காரர் அந்தப் பதவியைப் பறித்துக் கொண்டார். சென்ற வருடம் என்றால் 2009ஆம் ஆண்டின் கணக்கு. அதுவும் ஒரு சில கோடிகள் வித்தியாசத்தில் பதவி பறிபோனது.

சில கோடிகள் என்று சொன்னால், அவர்களுடைய Billionaires மொழியில் 900 கோடி டாலர்கள். இருவருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம். அது ஒன்றும் பெரிய காசு இல்லை. ஒரு கோடி, இரண்டு கோடி என்பதெல்லாம் அவர்கள் விஷயத்தில் ஒன்றுமே இல்லை. அரைக் கிலோ மாவு வாங்கி அரைத்து மசாலா தோசை சுட்டுச் சாப்பிட்ட கதைதான்.

கோடிக் கோடியாக பணம்


பில்கேட்ஸ் கீழே கிடக்கும் பத்து காசைக் குனிந்து எடுப்பதற்குள், அவருடைய வங்கிக் கணக்கில் 3250 ரிங்கிட் சேர்ந்து விடுகிறது. அவர் கணக்கில் எப்போதும் 20,000 கோடி ரிங்கிட் இருந்து கொண்டே இருக்கும். அவ்வளவு பணம். ம்ம்ம்… என்ன செய்வது. கொடுத்து வைத்த மகாராசன்.
Man of the Year from Time magazine

இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி. தெரியவில்லை! பில்கேட்ஸ், சிலிம் ஹேலு அல்லது லட்சுமி மிட்டல் போன்றவர்களிடம் உள்ள பணத்தில் ஒரே ஒருவரிடம் உள்ள பணத்தை மட்டும் நம்முடைய மலேசியாவிற்குக் கொண்டு வருகிறோம்.

அட… சும்மா ஒரு பேச்சுக்குத்தான். அவர்கள் என்ன ‘இந்தா எடுத்துக்கோ’ என்று கொட்டியா கொடுத்துவிடப் போகிறார்கள்.

கிடைக்காத ஒன்றை கற்பனை செய்து பார்ப்பதில் என்னய்யா தப்பு. அந்தப் பணத்தை அப்படியே நம்முடைய ஒரு ஒரு ரிங்கிட்டாக மாற்றி வரிசையாக அடுக்கி வைக்கிறோம்.

கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை அடுக்கி வைத்துவிடலாம். அப்புறம் இன்னொருவருடைய பணத்தை அடுக்கினால், உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்து விடலாம்.

அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல்


அந்த அளவிற்குப் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். கணக்கு போடுங்கள் அவர்களில் ஒருவர், அவருடைய பணத்தை அவரே எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். யாரையும் துணைக்குச் சேர்க்காமல், அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல் ஆசை ஆசையாக எண்ணுகிறார்.

எவ்வளவு காலம் பிடிக்கும். ஈரப்பசைக்கு இறைவன் கொடுத்த நாக்கு இருக்கவே இருக்கிறது. சும்மா ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

அதெல்லாம் சரி. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு இந்த மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள். என்னதான் செய்யப் போகிறார்கள் என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

அவர்களுடைய பணத்தை நிர்வாகம் செய்ய அவரவர்களுக்கு தனிப்பட்ட நிதி அமைச்சர், இரண்டு மூன்று துணையமைச்சர்கள், நூற்றுக் கணக்கான பொருளாதார நிபுணர்கள் என்று ஒரு பெரிய கணித மேதைகள் பட்டாளமே இருக்கிறது. இந்தப் பண முதலாளிகள் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல தான தர்மமும் செய்தும் வருகிறார்கள். அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

மலேசிய அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் Budget எனும் வரவுசெலவு கணக்குப் போடுகிறது. தெரிந்த விஷயம். இந்த ஒரு நாட்டின் வரவுசெலவு பணத்தை இரண்டு உலகப் பணக்காரர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும்;

அவர்கள் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பில்கேட்ஸ், சிலிம் ஹேலு, லட்சுமி மிட்டல், Warren Buffet ஆகிய இந்த நால்வர்தான் அந்த ஜாம்பவான்கள்.

இவர்கள் மனசு வைத்தால்

இந்த நால்வரும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நான்கு நாடுகளின் ஓராண்டு வரவுசெலவு பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மனசு வைத்தால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டு விடலாம்.
Bill Gates as a boy

தந்திரங்கள் நசுக்கல்கள் சரி, விஷயத்திற்கு வருவோம். உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் ஆவதற்கு பில் கேட்ஸ் என்னென்ன தந்திரங்களைக் கையாண்டார், என்னென்ன நசுக்கல் வேலைகளைச் செய்தார், என்னென்ன கீழறுப்பு வேலைகளைச் செய்தார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பில்கேட்ஸ் இராமாயணத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள்.

பல மொழிகளில் பல புத்தகங்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது மட்டும் அரிச்சந்திர ரகசியம். உலகின் பல நாடுகள் அவர் மீது வழக்குகள் போட்டன. கொரியா, தைவான், ஜப்பான், பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் அந்த வழக்குகளில் வெற்றியும் பெற்றன. கோடிக் கோடியாக நஷ்டயீடும் கொடுக்கப்பட்டது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து

ஆகக் கடைசியாக, Auto Desk எனும் மென்பொருள் உரிமையாளர்களின் வழக்கு. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையே கடித்துவிட்டதாக செய்தி. எல்லாம் அதே அமெரிக்காவில் தான்!

பில்கேட்ஸ் பிறந்த அதே தாய்மண்ணில்தான் அவருக்கு அத்தனை ஆலாபனைகள். கணினினியை இயங்க வைக்கும் செயல்பாட்டை operating system எனும் செயலம் என்கிறோம்.

ஆக, அவருடைய Windows Operating System எனும் செயலத்தையே ஒன்று இல்லை பார்த்துவிட, ஒரு சில கணினி மண்டைகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர் பிறந்த அமெரிக்காவிலேயே பலமான எதிர்ப்புகள். பில் கேட்ஸ”ம் சமாளித்து வருகிறார். இப்போது தொட்டதற்கு எல்லாம் virus வந்துவிட்டது. இந்த வைரஸ்களை உருவாக்கித் தயாரித்து உலா விடுபவர்கள் பெரும்பாலும் பில் கேட்ஸை எதிர்ப்பவர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எதிர்ப்பவர்கள். விண்டோஸ் செயலத்தை எதிர்ப்பவர்கள்.

வைரஸ் என்பது ஒரு சின்ன மென்பொருள். இணையத்தின் வழியாக உங்கள் கணினிக்குள் நுழைகிறது. குட்டி போடுகிறது. பேரன் பேத்திகள் எடுத்து பல தலைமுறைகளை உருவாக்கிக் கொள்கிறது. கடைசியில் கணினியைச் செயலிழக்கச் செய்து சமாதி கட்டுகிறது. அவ்வளவுதான்! அதற்கு மேல் உங்கள் கணினியை Format எனும் சுத்திகரிப்புச் செய்தால்தான் மறுபடியும் இயங்கச் செய்ய முடியும்.

வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன

இந்த வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன. Linux செயலத்தைத் தாக்குவதில்லை. இந்த விஷயம் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் லினாக்ஸ் ஓர் இலவசமான செயலம்.

செல்லப் பிள்ளை. உலகமெங்கும் பரவியுள்ள கணினி நிபுணர்கள் இதற்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள். நிறைய மென்பொருட்களை எழுதிக் கொடுக்கிறார்கள்.

சின்னப் பிரச்னை என்றாலும் உடனடியாகத் தீர்த்து வைக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்தக் கட்டுரையாளரும் ஒரு லினாக்ஸ் ஆர்வலர்தான். Linux Ubuntu செயலத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஆக, உலகமே கணினி மயமாக மாறிவிட்டது. மாறி வரும் இந்தக் கணினி உலகில் அதிகம் விரும்பப்படுகிற அதே சமயத்தில் அதிகம் வெறுக்கப்படுகிற மனிதர் யார் என்று கேட்டால், அவர்தான் இந்த பில்கேட்ஸ்.



உலகில் எண்பது விழுக்காட்டுக் கணினிகள் இவருடைய விண்டோஸ் செயல்பாட்டினால்தான் இயங்குகின்றன. எஞ்சியவை லினாக்ஸ், Macintosh முறையில் இயங்குகின்றன. காலத்தைக் கலைத்த கணிணினிக் கலை தெய்வத்திற்கு இணையான ஒரு நிலைக்கு கணினி வந்துவிட்டது. இப்படி சொல்வதற்காக மன்னிக்கவும்.

இருந்தாலும், உண்மை அதுதானே. எல்லாமே கடந்த 25 ஆண்டுகளில் நடந்து முடிந்தவை. கணினியைத் தெய்வமாக நினைத்துப் கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு வளர்ந்து அஃது எங்கேயோ போய்விட்டது.

கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தில் போய் உட்கார்ந்தும் விட்டது. காலத்தைக் கலைத்து நிற்கிறது கணிணினிக் கலை. ‘அதுவன்றி அணுவும் அசையாது’ என்பார்கள்.
Bill Gates Daughter

அதுபோல தெய்வத்திற்கு இணையாகப் பேசும் அளவிற்கு கணினியின் முக்கியத்துவம் வளர்ந்துவிட்டது. கணினி இல்லை என்றால் உலகமே நின்று போகும் அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலைக்கு கணினியைக் கொண்டு வந்ததில் பில்கேட்ஸூக்கு முக்கிய பங்கு உண்டு. அதை நாம் மறுக்கவில்லை.

பேராசை கலந்த வெறியுணர்வு

இருந்தாலும் பாருங்கள், உலகிலுள்ள அத்தனை பேரும் தன்னுடைய விண்டோஸ் செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்; அத்தனை பேரும் Microsoft நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் எனும் பேராசை கலந்த வெறியுணர்வுதான் அவர் மீது பலத்த பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வேறொன்றுமில்லை. இப்பேர்ப்பட்ட வளர்ச்சியை அவர் ஒரு கால் நூற்றாண்டுக்குள் சாதித்தார் என்பதுதான் இன்னொரு பெரிய விஷயம். உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய பில்கேட்ஸ், ‘நம்பர் ஒன்’ பணக்காரரானது நியாயமான விஷயம்.


மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். 1970களில் கணினித் தொழில்நுட்பம் பிரபலமாகி வந்தக் காலக்கட்டம். பில்கேட்ஸ் தன்னுடைய பள்ளியிலேயே இலவசமாக கணினியைப் பயன்படுத்த முடிந்தது. அந்தச் சமயத்தில் கணினி பற்றி முழுமையாக விஷயம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.

பெரிய மேதைகள் என்று பீற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இருக்கிற புத்தகங்களை வைத்துக் கொண்டு உலப்பியவர்கள். ஒரே சேற்றில் ஊறிய மட்டைகள்.

அந்தச் சமயத்தில் பில் கேட்ஸ், நண்பர்கள் சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு சின்னச் சின்ன Programs எனும் மென் பொருள்களை எழுதி வந்தார். அவர் பிறந்தது 1955ல். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பம்.

பதினாறு வயதில்

பதின்மூன்று வயதிலேயே கணினி ஆர்வம் வந்துவிட்டது. பள்ளிக்கூட கணினிகளின் முன் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்கு. பதினாறு வயதில் தன் நண்பருடன் சேர்ந்து Traf-O-Data என்ற ஒரு சின்னக் கம்பெனியைத் தொடங்கினார்.


அவர்கள் பகுதியிலிருந்த நிறுவனங்களுக்கு மென் பொருள்களை எழுதித் தந்து சின்னது சின்னதாகச் சம்பாதித்தார்கள். இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு மென்பொருள் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவில் இருக்கும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. யாராவது ஒருவர் குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.

சரி! யாரை வெளியே தள்ளுவது. கடைசியில் பில்கேட்ஸை ஓரங்கட்ட முடிவு செய்தார்கள். என்னையும் என் முடிவையும் மாற்ற முடியாது உலக நாயகன் பில்கேட்ஸ் கோபப்படவில்லை.

சர்வ சாதாரணமாகச் சொன்னாராம். ‘நான் இப்போது வெளியே போகிறேன். என் தேவை ஏற்படும் போது என்னை மறுபடியும் அழைப்பீர்கள். சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்குத் தலைவனாகத்தான் வருவேன். அதிலும் கொஞ்சம் பிரச்னை.

Bill Gates family

நான் ஒரு முறை தலைவனானால் அதன் பின்னர் நானேதான் தலைவனாக இருப்பேன். என்னையும் மாற்ற முடியாது. என் முடிவையும் மாற்ற முடியாது’. பில்கேட்ஸின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலேயே சமாளித்துக் கொண்டார்கள்.

உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக

பில்கேட்ஸின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி வைத்திருக்கிறது. இப்படித் தொடங்கிய பில்கேட்ஸின் வாழ்க்கை கணினி கணினி என்றே கழிந்தது. மனம் வேறு எங்கும் அலை பாயவில்லை.

கணினி, அதன் மென் பொருள், அதில் கிடைக்கும் பணம். இவற்றில் மட்டுமே மனம் ஈர்ந்து நின்றது. நாமும் அவரைப் போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் எனும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

திடீரென அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் படித்த அதே பள்ளிக் கூடத்திற்கு ஒரு சம்பளப் பட்டியல் தயாரித்துக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் அவரைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் அப்படி ஒன்றும் பெரிய கெட்டிக்காரர்கள் இல்லை. இருந்தாலும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. உல்லாசமாகத் தொடங்கிய வேலை உற்சாகமாக முடிந்தது. அதன்பின்னர் பல புதிய வேலைகள் அவர்களைத் தேடி வந்தன. அதிஷ்ட தேவதை அவர்களைப் பார்த்து சிரித்தாள்.


பணப் பசியும் தீர்ந்தது. அறிவுப் பசியும் தீர்ந்தது. பின்னர் சிறிய அளவில் கணினிகளைச் செய்தார்கள். அவற்றிற்கு தேவையான மென்பொருள்களையும் அவர்களே எழுதினார்கள். விற்றார்கள். நன்றாகப் பணம் சம்பாதித்தார்கள். 1973ல் பில்கேட்ஸுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

பணம் சம்பாதிக்க வேண்டும்

படித்து பெரிய பதவிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம்கூட இல்லை. நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. 1975ஆம் ஆண்டு தங்களுக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்று மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

Micro Computer Software என்பதே Microsoft ஆனது. அப்போது மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். பிலகேட்ஸின் திறமையினால், அவர்களுடைய தயாரிப்புகள் சந்தையில் பற்றிக் கொண்டு விற்றன.

அந்த இளைஞர்கள் அனைவருமே இப்போதைக்கு உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.


பட்டி தொட்டிகள் கணிணினிப் பெட்டிகள் அப்புறம் ஏகப்பட்ட திறமைசாலிகள் புதிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தனர். 1980 ஆம் ஆண்டுகளில் கணினி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது.

BM நிறுவனம் Personal Computer எனும் நவீனக் கணினிகளை உருவாக்கியது. பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தி வந்த காலம் மாறிப் போனது. பட்டி தொட்டி எல்லாம் கணினிகள் போய்ச் சேர்ந்தன.

வியாபாரத் தந்திரங்கள்

International Business Machines எனும் நிறுவனத்தின் சுருக்கமே IBM ஆகும். அந்தக் காலத்தில் உலகத்திலேயே அதிகமான கணினிகளைத் தயாரித்த நிறுவனமாகும். அந்த நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் கைகோத்தது. அப்பொழுதே வியாபாரத் தந்திரங்கள்  தொடங்கிவிட்டன. எழுதிய மென்பாருள்களை முழுமையாக ஒப்படைப்பதில்லை.

100க்கு 80 விழுக்காடு கொடுப்பது. மீதியைப் பிடித்துக் கொண்டு இழுத்தடிப்பது. அசல் மென்பொருளுக்குப் பதிலாக நகலைக் கொடுப்பது. தங்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது. இப்படி பலப்பல சாக்கு போக்குகள். பலருக்கு பில்கேட்ஸ் மீது பொறாமை. வயிற்றெரிச்சல் என்றுகூட சொல்லலாம்.


Xerox நிறுவனத்தின் மென்பொருளையும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளையும் திருடி ‘காப்பி’ அடித்து, அதன் மூலம் தனது விண்டோஸ் மென்பொருளை விற்பதாகக் குற்றச்சாட்டு. அவருடைய நடவடிக்கைகள் உலகம் பூராவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

பில்கேட்ஸ் தன் பண பலத்தைப் பயன்படுத்தி மற்ற சின்ன போட்டியாளர்களை நசுக்கிவிடுவதாகக் குற்றச்சாட்டு வேறு. அந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகவே தெரிய வருகிறது. ஏனென்றால், இப்போதைய கணினி உலகில் மைக்ரோசாப்ட் வைத்ததுதான் சட்டம்.

பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை

பலவிதமான வியாபாரத் தந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. ‘விண்டோஸ்’ பயன்பத்துபவர்கள் அதன் பிசினஸ் வலையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமையும் வந்துவிட்டது. அவர் உருவாக்கிய Bill Gates Melinda Foundation நிறுவனத்தின் செயல்பாடுகளும் முழுமையான சேவை நோக்கம் கொண்டவை அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.


பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை 7 பில்லியன் டாலர்களுக்கு அறப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், இவை அனைத்தும் சேவை நோக்கத்தில் செய்யப்படுகிற உதவிகள் இல்லை.

பல பிசினஸ் தில்லுமுல்லுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்று பில்கேட்ஸின் எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். பில்கேட்ஸின் தயாரிப்புகள் எந்த எந்த நாடுகளில் அதிகம் விற்பனையாகிறது என்பதைப் பொருத்தே அந்த அறக்கட்டளையின் கவனமும் ஈடுபாடும் அமைகிறது என்று வாதிடுகிறார்கள்.

இந்த வகையில் அந்த நாடுகளின் பெரும்புள்ளிகளை பில்கேட்ஸ் தன் வசப்படுத்திக் கொள்கிறார். அப்புறம் தன் பிசினஸ் விரிவாக்கத்திற்கு அவர்களை உச்சி முகர்ந்து கொள்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

குறிப்பாக, ஆப்ரிக்காவைச் சொல்லலாம். அஃது எந்த வகையில் உண்மை என்பது கேள்விக்குறியே! அகலப்பணி செயல் தொழில் பில்கேட்ஸுக்கு வேகமாக கார் ஓட்டுவதென்றால் கொள்ளை ஆசை.

With Queen Elizabeth

படிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் கார்களை ஓட்டி, பலமுறை பிடிபட்டு சிறைக்குப் போய் கம்பியும் எண்ணியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில், அந்தக் கட்டத்தின் எல்லாப் பகுதிகளும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்குமாம்.

ஒரே ஒர் இடத்தைத் தவிர! அந்த இடம் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரான பில்கேட்ஸ’ன் கார் நிற்குமிடம். அந்தப் பகுதியை மட்டும் பணியாளர்களால் எப்போதுமே சுத்தம் செய்ய முடிந்ததில்லை.

கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது
பில்கேட்ஸ் எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்று யாருக்குமே தெரியாதாம். இருபத்து நான்கு மணி நேரமும் அலுவலகத்தில்தான் இருப்பாராம். அவருடைய கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது. ஆகவே, அந்த இடத்தைச் சுத்தப் படுத்தவே முடியாதாம்.

Mrs.Ambiga - The First Woman to become the President of Malaysian Bar Council

வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரமெல்லாம் பில்கேட்ஸ், அலுவலகத்தில் அவருடைய கம்பியூட்டர் முன் இருப்பார். அவருடைய அலுவலக அறை எப்ப்டி இருக்கும்? அதை அவரே சொல்கிறார். கேளுங்கள். ‘என்னுடைய அறையில் பேப்பர்கள் நிறைய இருக்காது. என் வேலைகள் எல்லாம் கம்பியூட்டர் மூலம்தான்.

என் மேசையில் மூன்று கம்பியூட்டர்கள் இருக்கும். இடப்பக்கம் உள்ள திரையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள். நடுத்திரையில் நான் படித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள். வலதுபக்கத் திரையில் இண்டர்நெட் சமாச்சாரங்கள்.

எங்கள் அலுவலகம் மின்னஞ்சல் மூலமாகத்தான் இயங்குகிறது. எனக்கு தினம் நூறு மின்னஞ்சல்கள் வரும். செய்தித் தாள்களைக்கூட இணையத்தில்தான் படிப்பேன். கூட்டங்களுக்குச் செல்லும் போது சின்ன கணினியை எடுத்துச் செல்வேன். அதில்தான் குறிப்புகளை எழுதிக் கொள்வேன்’ என்கிறார் பில்கேட்ஸ்.

நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை

அவருடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 52000 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 28000 பேர் இந்தியாவிலிருந்து போனவர்கள். அவர்களில் 26000 பேர் தமிழர்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

PC Fair at Ipoh, Malaysia

தமிழர்களின் கணினித் திறமையைப் புரிந்து வைத்திருக்கும் பில்கேட்சுக்கு ஒரு சபாஷ்! நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை. என்ன அவருடைய Windows XP அல்லது Vista மென்பொருள்களை, சில சமயங்களில் காசு போட்டு வாங்கிப் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் காசு போடாமல் திருட்டுத்தனமாக அர்ச்சனை செய்கிறோம்.

பிடிபட்டால் சில நாட்களுக்கு கம்பி எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவுதான்! பணமே வா படிப்பே போ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பத்துப் பதினந்து தலைமுறைகளுக்கு சம்பாதித்தும் விட்டார். சம்பாதித்ததில் தானம் செய்கிறார்.

தர்மம் செய்வதில் வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடு மட்டும் இல்லாமல் இருந்தால் நல்லது. The Road Ahead, Business @ The Speed of Thought என இரண்டு புத்தகங்களை பில்கேட்ஸ் எழுதியிருக்கிறார். இதுவரை தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதவில்லை.

கடந்த காலத்தைப் பற்றி எழுதுவதில் என்ன இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி எழுதத்தான் எனக்கு ஆசை’ என்கிறார். இருந்தாலும் அவரைப்பற்றி மற்றவர்கள் 6000 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்கள்.

அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நூறு பேர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். அப்படி பட்டம் வாங்கியவர்களுக்கு அமெரிக்காவில் விருந்து வைத்திருக்கிறார். பணம் பரிசு என்றும் கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி யாராவது புத்தகம் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தால் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க! முடிந்தால் நீங்களும் ஒரு புத்தகம் எழுதி அனுப்பிப் பாருங்கள். அவருக்குத் தமிழ்மொழி தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று. ஒரு புத்தகம் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான். ஆயிரம் புத்தகங்கள் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான்.

Tamil girl playing with computer in Malaysia

எப்படி உங்கள் வசதி. பில்கேட்ஸ் – மெலிண்டா திருமணம் 1.1.1994ல் நடைபெற்றது. ஹவாய்த் தீவு ஒன்றை மொத்தமாக வாடகைக்கு எடுத்து பல மில்லியன் டாலர் செலவில் ‘சிக்கனமாக’ நடை பெற்ற கல்யாணம். இவர்களுக்கு இப்போது ஜெனிபர், ரோரி, அட்லே என் மூன்று குழந்தைகள்.

கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள்

இருந்தாலும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் வீட்டில் நடந்த கல்யாணத்தை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அவருடைய பிள்ளை கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக தகவல்!

உலகில் இதுவரையில் யாரும் இவ்வளவு பணம் செலவு செய்து கல்யாணத்தை நடத்தவில்லையாம். வளருட்டும் லட்சுமி மிட்டல் இரும்பு வியாபாரம்

பில்கேட்ஸ் சம்பாதித்த பணத்தை எய்ட்ஸ் நிவாரணம், மலேரியா ஒழிப்பு, கல்வி போன்ற நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கிறார். ‘கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ எனும் நன்கொடை நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

இதுவரையில் 850 கோடி ரிங்கிட்டை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பண உதவி கேட்கிறார்கள். பலருக்கு கிடைத்திருக்கிறது.

பில் கேட்ஸின் மின்னஞ்சல் முகவரி: bgates@microsoft.com நாமும் கேட்டுப் பார்க்கலாம். கேட்பதில் தப்பில்லை. ஆனால், கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை. நியாயமான கோரிக்கையாக இருந்தால் கிடைக்கலாம். கிடைத்தால் பில் கேட்ஸ’ன் மின்னஞ்சல் முகவரி தந்த என்னை மறந்து விடாதீர்கள்.

Blogger KSMuthukrishnan's
grand children using I Pod for calculation 

சரி! 20,000 கோடி ரிங்கிட்டை ஒவ்வொரு ரிங்கிட்டாக எண்ணினால் எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற விஷயத்திற்கு வருவோம். விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா.

நானும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். மூளை குழம்பிப் போனது. வீட்டிலுள்ள கணினியைப் போட்டுத் தட்டிப் பார்த்தேன். 6341 வருடங்கள் என்று பதில் வருகிறது. ஒரு விநாடிக்கு ஒரு ரிங்கிட் என்று எண்ணினால் ஒரு மணி நேரத்தில் 3600 ரிங்கிட்டுகள் எண்ண முடியும்.

ஒரு நாளைக்கு 86400 ரிங்கிட்டுகள். ஒரு வருடத்தில் 31536000 ரிங்கிட்டுகள். ஆக இருபதாயிரம் கோடி ரிங்கிட்டை எண்ணுவதற்கு 6341 வருடங்கள் வருகின்றன.

இந்தக் கணக்கு தேவைதானா என்று கேட்பது தெரிகிறது. இருந்தாலும் பாருங்கள். ஒரு காரியத்தில் இறங்கியாகிவிட்டது. பில்கேட்ஸைப் போல நாமும் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் அல்லவா?