மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜூன் 2017

மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும்

ஒரு தகப்பன். அவனுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறான். சாப்பிட்ட மிச்சம் மீதைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். வாரிப் போட வெள்ளிக் கரண்டிகள். மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்… இப்போது செல்வச் செழிப்பில் சீமானாய் வாழ்கின்றது. 
 

மற்றொரு பிள்ளையைத் தகப்பன் கண்டு கொண்டதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார். அந்தப் பிள்ளை தீய வழிகளில் செல்கிறது. தீய நோக்கத்தில் செயல் படுகின்றது. இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடித் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால்… அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா. அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் மலேசிய தமிழன் எனும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அடிபட்டு மிதிபட்டு அவதிப் பட்டு

அந்த மலேசியத் தமிழர்களில் சிலர் தான் இப்போதைக்குக் குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு மிதிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். 
 

இந்தக் குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் இல்லை. காலம் காலமாக இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் பல சமூகத் தலைவர்களும் கோலோச்சிக் கோலம் போட்டனர். அந்தக் கோலத்திற்குள்ளே ஒரு செடி நட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றி உரம் போட்டுச் செழிக்க வைத்து விட்டனர்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய சிலரும் இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். இப்போது வாழ்ந்து கொண்டும் வருகின்றனர். மன்னிக்கவும். இது மறுக்கப்பட முடியாதா உண்மை.

சரி. தலைப்பிற்கு வருவோம். மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும்... இந்தச் சொற்கள் அதீதிய வேதனைச் சொற்கள். அந்தச் சொற்களை இப்போதைக்குச் சற்றே… கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம். அப்புறம் அசை போட்டுப் பார்ப்போம். அதற்கு முன்…

இப்போதைக்கு ஒரு சர்ச்சை. மலேசியத் தமிழ் ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சிக்கலான சர்ச்சை. மலேசியத் தமிழர்களைத் தற்காலிகமாகக் கிரங்கடிக்கும் ஒரு சர்ச்சையான சிக்கல்.
 

அதாவது தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம். பழைய குண்டரியத்தின் புதிய நேரலைகள். அண்மைய காலங்களில் அதைப் பற்றி அநாகரிகமான சொல்லாடல் விரசங்கள். தேவையற்ற சொல் சரசங்கள். கேட்கும் போது வேதனையாகவும் இருக்கிறது. அசை போடும் போது அசிங்கமாவும் இருக்கிறது. என்ன செய்வது. பொறுத்துக் கொள்வோம். வேறு வழி இல்லை.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம்... நாடறிந்த தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறியதாக ஊடகச் செய்திகள். அப்படிச் சொல்லவே இல்லை என்பது அவரின் மறுப்புச் செய்திகள்.

அவருக்கு எதிராகத் தமிழ் அமைப்புகளுடன் அரசு சாரா இயக்கங்களின் கண்டனக் கூற்றுகள். கிள்ளான் போலீஸ் நிலையத்தில் புகார்கள். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. 
 

இது எந்த அளவிற்கு உண்மை. எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது நம்முடைய நோக்கம் அல்ல. மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரத்தைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். தொடர்ந்து படியுங்கள். அதற்கு முன்… இன்னும் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் சீனாவில் இருந்து கப்பலேறி வந்த கலாசாரம். அங்கே இருந்து இங்கே வந்து இங்கே இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் துணை போன கலாசாரம். அப்போது இந்திய இளைஞர்களை மிரட்டி உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு வாலாட்டியக் கலாசாரம்.

இப்போது இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்டு இந்தியச் சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டு வரும் கலாசாரம். தந்தை பெரியரால் ஒழிக்கப் பட்ட சாதி சமயம் எப்படி உரம் போட்டு மீண்டும் வளர்க்கப் பட்டதோ அதே போல குண்டர் கலாசாரமும் வளர்ந்து விட்டது.

ஆழ விருச்சகம் போல வேர் ஊன்றி பயம் இன்றி வளர்ந்து இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. காலம் இன்னும் கரையவில்லை.

தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை

மலேசியத் தமிழர்களிடையே இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. அந்தப் பிரச்சினை இப்போதைக்கு தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை. இந்திய இளைஞர் சமுதாயத்தின் மலையாயப் பிரச்சினை. மிக உன்னதமான பாரம்பரியத்திற்குச் சவால் விடும் பிரச்சினை. மிகப் புனிதமான ஒரு நாகரிகத்தை ஓரம் கட்டும் தேவையற்றப் பிரச்சினை.
 

1970 – 1980களில் இந்தியர்களிடம் அதிகம் காணப்படாத அந்தக் கலாசாரம் இப்போது எந்த கட்டத்தில் இருக்கிறது தெரியுமா… இந்தியர்களைக் கண்டாலே மற்ற சகோதர இனத்தவர்கள் சற்றே ஒதுங்கிச் செல்லும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகிறது.

2014இல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன. அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓப்ஸ் சந்தாஸ் 1 எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.
 
இனம்
மக்கள் தொகை
குண்டர் கும்பல் ஈடுபாடு
மலாய்க்காரர்கள்
65%
5%
சீனர்கள்
27%
20%
இந்தியர்கள்
7%
72%
சபா மாநிலத்தவர்
1%
1%
சரவாக் மாநிலத்தவர்
1%
2%

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7% தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72%. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அவற்றை மறுக்க முடியுமா அல்லது மறைக்கத் தான் முடியுமா…
 

அண்மைய காலமாக நம் நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவங்கள். நினைவு கூர்வோம். அவற்றின் பின்னணியில் கூலிக் கொலையாளிக் கும்பல்கள் இருக்கலாம் எனும் சந்தேகங்கள். தனிப்பட்ட விவகாரங்களில் வஞ்சம் தீர்க்கும் நகர்வுகள். கூலி கொலையாளிகள் ஏவப்பட்டு இருக்கலாம் எனும் சாத்தியங்கள். அவற்றை அரச மலேசிய போலீஸ் படையினர் மறுக்கவும் இல்லை.

மக்கிப் போன மனித உயிரின் விலை

குறிப்பிட்ட ஒரு சின்னப் பெரியத் தொகைக்கு மற்றவர்களைச் சர்வ சாதாரணமாகச் சுட்டுக் கொல்லும் ஒரு கலாசாரம். எந்தப் பின்னணியையும் பார்க்காமல் பணத்திற்காகச் சுட்டுக் கொல்லும் ஈவு இரக்கமற்ற கலாசாரம். இதை எல்லாம் பார்க்கும் போது மனித உயிரின் விலை ரொம்பவுமே மக்கிப் போய் விட்டதாகத் தெரிகின்றது.

இந்தக் கூலிக் கொலையாளிகள் குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வரலாம் என்று மலேசியப் போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷீட் இப்ராஹிம் கூறி இருக்கிறார். இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம். தெரிந்து கொள்ளுங்கள். கூலிக் கொலையாளிகளில் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாகவே இருக்கின்றனர். அதுதான் வேதனையிலும் வேதனையான விசயம்.
 

இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக் கூடும். அது போலீசாரின் கணிப்பு. அதே சமயத்தில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கூறுவதும் சரி அல்ல. இது நம்முடைய கணிப்பு.

இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 5000க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் கைது செய்யப் படுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப் படுகின்றனர்.

பந்திங் டத்தோ சோசிலாவதி கொலை

இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு என்ன காரணம். அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஒரு காரணம் என்று சொல்ல முடியுமா. கண்டிப்பாக முடியாது. இதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

2010ஆம் ஆண்டு பந்திங்கில் நடந்த டத்தோ சோசிலாவதி கொலை. அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுக்குப் பணம் இல்லையா. படிப்பு இல்லையா. சிந்திக்கும் ஆற்றல் இல்லையா. அல்லது சீர்தூக்கிப் பார்க்கும் திறன் தான் இல்லையா. எல்லாமே இருந்தன. இத்தனை இருந்தும் கொலை நடந்து இருக்கிறது. 
 

சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்து இருக்கிறது. இதற்குக் காரணம் தான் என்ன. பசியா... பட்டினியா... வேலை இல்லாமையா... அல்லது இனவாதமா... இவற்றுள் எதுவுமே இல்லை. ஆனால் கொலை நடந்து இருக்கிறது. ஏன். சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே இந்தியர்கள். எப்படி… அதுவும் ஒரு புதிரே…

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர் வகுத்த வாழ்வியல் கொள்கை. இருந்தாலும் செம்மையில் வறுமையின் மனதோடு வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்வது ஒரு சிலரின் சாவியல் கொள்கை.