கண்ணீர் மழையில் காஷ்மீர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் மழையில் காஷ்மீர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 1


நீல நயனங்களில் இமயத்து அமராவதிகள். பச்சை நளினங்களில் இமயத்துப் புல்வெளிகள். மஞ்சள் வனப்புகளில் இமயத்து மலர்க் காடுகள். வெள்ளை வார்ப்புகளில் இமயத்து விண்முகடுகள். வானவில்லின் வர்ண ஜாலங்களில் இமயத்து மலைச் சாரல்கள். 
 

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மனித நெஞ்சங்களைத் துவைத்துப் பிழியும் மழை மேகச் சல்லித் தூரல்கள். இவை எல்லாம் அழகிய காஷ்மீரின் அற்புதமான அடையாளங்கள். இயற்கை அன்னை ஆசைப்பட்ட ஓர் அழகு பிருந்தாவனம். மொத்தத்தில் பூலோகத்தின் சொர்க்கவாசல்.

சத்தியமாகச் சொல்கிறேன். பூமாதேவி இன்றைக்கும் என்றைக்கும் கொஞ்சி அணைக்கும் அழகு அழகான நந்தவனப் பூஞ்சோலை தான் காஷ்மீர்.

ஆனால் இப்போது அப்படி இல்லைங்க. மனித இரத்தம் அங்கே மழையாய்க் கொட்டி ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோலிக் குண்டுகளைப் பார்த்துப் பழகிப் போன பச்சைக் குழந்தைகள் பீரங்கிக் குண்டுகளால் சிறகு ஒடிந்து மரிக்கின்றார்கள். அழிவின் ஆராதனைகள் அங்கே அசிங்கமாய் ஆலாபனைகள் தெரிகின்றன. 


அங்கே வாழ்ந்த ஒரு நல்ல மனித நாகரிகம் அநியாயமாய் வெட்டிச் சாய்க்கப் படுகின்றது. வேறு எப்படித்தான் சொல்லச் சொல்கிறீர்கள். மனிதநேயங்கள் மாரைக் கிழித்துப் பாலைக் குடிக்கின்றன என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா. ஒரே வரியில் சொல்கிறேன். காஷ்மீர் இப்போது கம்பரை இழந்த ஒரு இராம காவியம். போதுங்களா.

இயற்கையே விரும்பிய அந்த அழகிய பச்சை மண்ணில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் தவிப்பும் காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கொப்பரையாய் கொப்பளிகின்றன. அழகான காஷ்மீரில் இப்போது அமைதி இல்லை. ஒழுங்கு இல்லை. மகிழ்ச்சி இல்லை. நிம்மதி இல்லை. 


இப்படி எத்தனையோ ‘இல்லை’கள். காஷ்மீர் மக்களுக்கு ஒரு நல்ல நாளும் இல்லை. நல்ல ஒரு பெருநாளும் இல்லை. எல்லா நாட்களும் அவர்களுக்கு முகாரி ராகங்களைப் பாடும் பொல்லாத நாட்கள்தான்.

ஒரு செருகல். அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்ற நிலை. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஜெய்ஸ்-இ-முகமது இயக்கம் என்பது ஒரு தீவிரவாத இயக்கம். பாகிஸ்தானைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த இயக்கம் கடந்த 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா எனும் இடத்தில் ஒரு தாக்குதலை நடத்தியது. அதில் 40 இந்தியப் போர் வீரர்கள் பலியானார்கள். 


அதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப் படையின் 12 மிராஜ் போர் விமானங்கள் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கின.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 300 பேர் வரை பலியானதாக ஊடகங்கள் கூறுகின்றன. இப்படித்தான் போராட்டங்கள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்தப் போராட்டங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு காஷ்மீர் பிரச்சினையின் உண்மையான பின்னணியை அலசிப் பார்ப்போம். அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


சரி. நேராக விசயத்திற்கு வருகிறேன். காஷ்மீரைப் பங்கு போட இப்போது மூன்று நாடுகள் துடியாய்த் துடித்துக் கொண்டு நிற்கின்றன. அந்தத் துடிப்புகளில் ஒரு விளைவுதான் அண்மையில் நடந்து முடிந்த பாலகோட் வான் தாக்குதல்.

காஷ்மீரைப் பங்கு போட நினைக்கும் நாடுகளின் இராணுவ அணிவகுப்புகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். என்னையும் பார் என் அழகையும் பார் என்று ஆளாளுக்குப் பீரங்கிகளை வரிசை வரிசையாய் அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றன. அதனால் பாதிக்கப் படுபவர்கள் எல்லாம் காஷ்மீர் பாமர மக்கள் தான்.

கிழக்கே சீனா. மேற்கே பாகிஸ்தான். தெற்கே இந்தியா. ஆக மொத்தம் முப்பது முக்கோடி பதுங்கல்கள். பாய்ச்சல்கள். அதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று உலகமே முகத்தை மூடிக் கொண்டு சிரிக்கிறது. பாவம் காஷ்மீர் மக்கள்.


அதற்கு முன் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். அப்போதுதான் உங்களுக்கும் ஓர் உண்மையான விசயம் தெரியும். அசோகர் காலத்தில் இருந்து 1200-களில் மார்க்கோ போலோ இந்தியாவிற்கு வந்த காலம் வரையில்… காஷ்மீர் சுத்தமான சுதந்திரமான ஓர் அழகுப் பூங்காவாகத்தான் மலர்ந்து மணம் பரப்பி வந்தது.

வருகிறவர் போகிறவர்களுக்கு எல்லாம் மனசு கோணாமல் மாமியார் வீட்டு உபசரணைகளைச் செய்தும் வந்தது. மகா அலெக்ஸாண்டர்கூட போய்ப் பார்க்க ஆசைப்பட்ட ஒரு புண்ணிய பூமியாகவும் விளங்கியது. சொன்னால் நம்புங்கள்.

1580-ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் அழகில் மயங்கிப் போன அக்பர் மகாராஜா அதைத் தன் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அது வேறு கதை. அதன் பின்னர் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மொகலாய அரசர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தார்கள். தாஜ்மகாலைக் கட்டுவதற்கு முன் ஷாஜகான் கூட தன் மனைவி மும்தாஜை அழைத்துக் கொண்டு காஷ்மீருக்குப் போய் தங்கி வருவது வழக்கம். 


கி.பி. 1757-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைந்த காலக் கட்டம். ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாகக் காஷ்மீர் அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கு அகமது ஷா துரானி (Ahmad Shah Durrani) என்பவர் அரசர் ஆனார்.

அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய போர் நடந்தது. அதை ஆப்கான் போர் என்று சொல்வார்கள். அந்தப் போரில் ரஞ்சித் சிங் என்கிற சீக்கிய மன்னர் வெற்றி பெற்றார். காஷ்மீர் அவருடைய ஆட்சியின் கீழ் வந்தது.

சீக்கியர்களின் கைக்கு காஷ்மீர் வந்துவிட்ட காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்து விட்டார்கள். சூடம் கொளுத்தி சாம்பிராணி போட்டு சாமிவிளக்கை எல்லாம் ஏற்றி வைத்து நல்லபடியாகச் சுரண்டல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.

இந்தியாவின் செல்வங்களை இங்கிலாந்திற்குக் கப்பல் கப்பலாக அனுப்பிக் கொண்டும் இருந்தார்கள். தீபம் அணைவதற்குள் அவர்களின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியது. 


வட இந்தியாவை ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதைப் பார்த்த சீக்கியர்கள் அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். பல இடங்களில் சண்டைகள் கலகங்கள். பின்னர் சின்னச் சின்னப் படைகளாக இருந்த சீக்கியர்கள் ஒன்றாகத் திரண்டு ஒரு பெரிய படையை உருவாக்கிக் கொண்டார்கள்.

அந்தச் சீக்கியப் படைகள் உயிர் கொடுத்துப் போராடின. ஆனால் ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு முன்னால் சீக்கியர்களின் கத்திமுனைகள் எடுபடவில்லை. சீக்கியப் படைகள் தோல்வி அடைந்தன. அத்துடன் சீக்கியர்களின் காஷ்மீர் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. 

ஆங்கிலேயர்கள் பீரங்கிகளைப் பயன்படுத்தப்படாமல் இருந்து இருந்தால் இந்தியாவின் பெரும்பகுதி சீக்கியர்களின் ஆளுமையின் கீழ் வந்து இருக்கலாம். இந்தியாவின் வரலாறும் வேறு மாதிரி பயணித்து இருக்கலாம்.



இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கிறார்களே அந்த நாட்டின் பெரும்பகுதிகள் அப்போது சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தவை. சீக்கியர்களின் தோல்வியினால் அந்தப் பாகிஸ்தானிய நிலம் அப்படியே ஆங்கிலேயர்களிடம் போய்ச் சேர்ந்தது. பற்றாக்குறைக்குக் காஷ்மீரும் ஆங்கிலேயர்களின் பார்வையின் கீழ் வந்தது.

சீக்கியப் படைகள் தோல்வி அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சீக்கியர்கள் மீது ஆங்கிலேயர்களுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கவே செய்தது. அதனால் முன்பு சீக்கியர்களின் அமைச்சரவையில் பழைய அமைச்சராக இருந்த குலாப் சிங் (Gulab Singh) என்பவரையே ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக ஆங்கிலேயர்கள் நியமித்தார்கள். அதற்கும் இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது.

வட இந்தியாவில் சீண்ட முடியாத சிங்கமாக இருந்தவர்தான் ரஞ்சித் சிங்  (Maharaja Ranjit Singh). இவரைத் தோற்கடிக்க குலாப் சிங்தான் ஆங்கிலேயர்களுக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தார். அதற்கு நன்றிக் கடனாகத்தான் குலாப் சிங்கிற்குக் காஷ்மீர் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. ஆக இப்படித் தான் காஷ்மீர் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் கொண்டு வரப்பட்டது.




அதன் பின்னர் நடந்தது எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம். ஆங்கிலேயர்களிடம் குலாப் சிங் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார். அது ஒரு வகையான விசுவாசத்தனம் என்றுகூட சொல்லலாம்.

அந்தக் குழைவுத்தனம் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. குலாப் சிங் பற்றி சில சுவராசியமான செய்திகள். பதிவு செய்யாவிட்டால் தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் இல்லாமல் போனது மாதிரி ஆகிவிடும்.

குலாப் சிங் என்ன செய்தார் தெரியுமா. யானைகளை வைத்து புலிகளைப் பிடித்து வருவது. பிடித்து வந்த புலிகளைக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைப்பது. சாப்பாடு கொடுக்காமல் பல நாட்களுக்குப் பட்டினி போடுவது.

அப்புறம் வெள்ளைக்காரர்களைப் புலி வேட்டைக்கு அழைப்பது. செத்தும் சாகாமல் விழி பிதுங்கிப் போன அந்தப் புலிகளைக் கூண்டுக்குள் இருந்து வெளியே திறந்து விடுவது. அப்புறம் அவற்றைச் சுட்டு வீழ்த்துவது. 




ராஜா ஐந்து புலிகளைச் சுட்டுச் சாய்த்து விட்டதாகச் செய்திகள் அந்தர்புரத்திற்குப் பறக்கும். ராஜாவின் அழகைப் பார்க்க அந்தர்புரத்து அழகுராணிகள் ஏங்கித் தவிப்பார்கள்.

அப்புறம் அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளை வெள்ளைக்காரர்கள் படம் பிடித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்து வீரவசனம் பேசுவார்கள். இதுதான் குலாப் சிங் செய்து வந்த அரிய பெரிய சாகசக் காரியங்களில் ஒன்று.

தீராத விளையாட்டுப் பிள்ளையின் வீராதி வீரச் செயல். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷமான ஆவணங்கள்.

அது எல்லாம் பெரிசு இல்லீங்க. இன்னும் ஒரு விசயம் இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆங்கிலேயப் பெரிசுகளுக்கு வேண்டும் போது எல்லாம் காஷ்மீரில் கிடைக்கும் இளம் பெண்களைக் கடத்தி வந்து அந்தப் பெரிசுகளுக்குக் கன்னிகாதானம் செய்வது. 




பெரிசு என்றால் நாற்பது ஐம்பது வயசு என்று நினைக்க வேண்டாம். எண்பதைத் தாண்டிப் போய் இங்கிலாந்தில் இருந்து கப்பல் ஏறி வந்த பழசிலும் பழசுகள். இருந்தாலும் அவர்கள் காஷ்மீரில் பற்கள் கொட்டிப் போன இளசுகள். எழுதவே மனசு கொஞ்சம் கஷ்டப் படுகிறது. இதைச் செய்ததும் நம்ப குலாப் சிங்தான்.

இங்கே கதைக்குள் இன்னும் ஒரு கதையும் வருகிறது. குலாப் சிங்கிற்கு எத்தனை மனைவிகள் என்று அவருக்கே தெரியாதாம். அந்தர்புரத்தில் சமயங்களில் எண்ணிப் பார்க்கும் போது அவருடைய கணக்கு தவறிப் போகுமாம். ஒருமுறை ராணிகளின் தலைமைராணி கணக்குப் போட்டு 348 என்று கணக்குச் சொன்னாராம். 




அப்படி என்றால் இன்னும் 17 பேர் எங்கே போனார்கள் என்று குலாப் சிங் தாவிக் குதித்துச் சண்டை போட்டதாகவும் கேள்வி. அப்போது மனைவிகள் குளித்துக் கொண்டு இருந்ததாகச் செய்தி வந்ததும் குலாப் சிங் அடங்கிப் போனாராம்.

“ஏங்க தெரியாமல் தான் கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் பேர் போட எவ்வளவோ சிரமப் படுகிறார். சமயங்களில் முடியாமல் ததிங்கினத்தோம் தாளம் போட வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். ஆனால் இந்த குலாப் சிங் என்னடா என்றால் 365 மனைவிகளில் ஒன்று இரண்டு குறைந்ததும் தகராறு பண்ணி இருக்கிறாரே. தலை சுற்றிப் போகிறது.

சரி. நமக்கும் அந்த மாதிரி பெரிய இடத்து விசயம் எதுவும் வேண்டாங்க. நம்ப கதைக்கு வருவோம். 




பர்மா, நேப்பாளத் நாடுகளில் இருந்து நவரத்தினங்கள் கொண்டு வரப்பட்டன. அவை ஆங்கிலேய மேல்தட்டுப் பெண்களுக்கு அன்பளிப்புகள் செய்யப்பட்டன. தவிர பொன்னும் பொருளும் அந்தப் பெண்களுக்கு வாரி இறைக்கப் பட்டன. இப்படியே தானம் செய்து குலாப் சிங் வெள்ளைகாரர்களை ஒரு வழி பண்ணிவிட்டார். அதன் பிறகு நடந்ததைப் பாருங்கள்.

குலாப் சிங்கிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் 1846 மார்ச் 15-இல் ஓர் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன்படி குலாப் சிங் 75 இலட்சம் ரூபாய்க்கு காஷ்மீரை அப்படியே மொத்தமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து ஒரு விலைக்கு வாங்கிக் கொண்டார்.

பிரான்ஸில் நெப்போலியன் முடிசூட்டிக் கொண்டது தெரியும் தானே. அந்த மாதிரி ஒரு நல்ல நாள் பார்த்து குலாப் சிங்கும் தன்னைக் காஷ்மீர் அரசராகப் பிரகடனம் செய்து கொண்டார். அப்புறம் தனக்குத் தானே முடி சூட்டியும் கொண்டார். அந்த வகையில் காஷ்மீர் கடைசியில் டோக் ரா எனும் சீக்கிய இனத்தவர்களின் கைகளுக்குள் வீழ்ந்தது.

காஷ்மீர் வரலாற்றுத் தொடர்ச்சி நாளை இடம் பெறும். 

(தொடரும்)




சான்றுகள்

1. Bamzai, P. N. K (1994), Culture And Political History of Kashmir, M.D. Publications, ISBN 978-81-85880-31-0

2. Rao, Aparna, The Valley of Kashmir: The Making and Unmaking of a Composite Culture? pp. 1–36, ISBN 978-81-7304-751-0

3. Pal, Pratapaditya (1989), Indian Sculpture: 700–1800, University of California Press, ISBN 978-0-520-06477-5

4. Rai, Mridu (2004), Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir, Princeton University Press, ISBN 978-1-85065-661-6

5. Schofield, Victoria (2010), Kashmir in conflict: India, Pakistan and the unending war, I. B. Tauris., ISBN 978-1-84885-105-4