தஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 செப்டம்பர் 2019

தஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம்

உலகை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்களாகவே வாழ்ந்து மறைந்து போய் இருக்கிறார்கள். அந்த மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. 


அசோகனின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. புஷ்யமித்திர சுங்கனின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. ஜெங்கிஸ்கானின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. ஔரங்கசிப்பின் வரலாற்றுப் பாத்திரம் என்பதும் வேறு. சரி.

இராஜாராஜன் ஏன் அப்பேர்ப்பட்ட பிரும்மாண்டமான ஒரு பெரிய கோயிலைக் கட்டினார். அந்தக் கோயிலின் கம்பீரத்தின் மூலமாக எதைச் சொல்ல நினைத்தார். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இராஜாராஜ சோழன் காலத்தில் தொடர்ச்சியாகப் பற்பல போர்கள். கேரளப் போர், குடமலை நாட்டுப் போர், ஈழப் போர், மைசூர் போர், வேங்கிப் போர், மாலைத் தீவுகள் போர், தென்கிழக்காசிய கடல் போர் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. அவருக்குப் பின அவருடைய மகனும் தொடர்ந்தார்.

(சான்று: Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press.)

கடாரம் (கெடா) வீழ்த்தப் பட்டது;

கங்கா நகரம் (புருவாஸ், பேராக்) அழிக்கப் பட்டது;

கோத்தா கெலாங்கி (ஜொகூர்) கோட்டைகள் தரைமட்டம் ஆக்கப் பட்டது;

ஸ்ரீ விஜயா பேரரசு (சுமத்திரா) சின்னா பின்னம் ஆனது.

இவற்றை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்தக் காலக் கட்டத்தில், பகாங் மாநிலத்தில் ஓர் இந்திய சாம்ராஜ்யம் இருந்தது. அதுவும் அழித்து ஒழிக்கப் பட்டது. அதையும் நாம் மறக்கக் கூடாது. இத்தனை அழிப்புகளையும் செய்தது இராஜாராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன்.

(சான்று: Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 46–49)

இராஜாராஜ சோழனுக்கு பெரிய பெரிய படைகள் இருந்தன. அந்தப் படைகளைக் கொண்டு தமிழ் நாட்டின் பல சிற்றரசுகள் வீழ்த்தப் பட்டன. தோற்றுப் போன நாடுகளின் போர் வீரர்கள் கைதிகள் ஆனார்கள். அவர்கள் ஆயிரக் கணக்கில் தஞ்சைக்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

அவர்கள் சிந்திய இரத்தம். அந்த இரத்தத்தில் இருந்து வழிந்த வியர்வை. அதில் இருந்து கிடைத்த உழைப்பு. ஆக அந்த உழைப்பில் இருந்து வந்தது தான் தஞ்சைப் பெரிய கோயில். போர்க் கைதிகள் இல்லை என்றால் இராஜா இராஜனால் தஞ்சைப் கோயிலைக் கட்டி இருக்கவே முடியாது. சத்தியமாகச் சொல்கிறேன்.

கைதிகளை மட்டும் அவன் கொண்டு வரவில்லை. அந்தக் கோயிலுக்குத் தேவையான எல்லாத் தளவாடப் பொருட்களையும் வெளி ஊர்களில் இருந்து தான் கொண்டு வந்தார்.

இராஜாராஜ சோழனை நாம் குறை சொல்ல முடியாது. வெற்றி பெற்ற அரசன் யாராகவும் இருந்தாலும் சரி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் அப்போதைக்குச் சட்டம். என்ன நினைக்கிறானோ அதுதான் அப்போதைக்கு அரச கட்டளை. அவனுடைய பேச்சிற்கு மறு பேச்சு இல்லை.

இராஜாராஜ சோழன் செய்ததை ஒரு சூறையாடல் என்று சொல்ல முடியாது. அப்படி நினைக்கவும் கூடாது. அது அவருக்குக் கிடைத்த பரிசு. அது அவர் கொண்டு வந்த பரிசு. அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜினி முகமதுவை விடவா இராஜாராஜ சோழன் கொடுமைகள் செய்து விட்டார். சொல்லுங்கள். ஜெங்கிஸ்கான் செய்யாத அட்டூழியங்களா. ஐரோப்பாவில் வைக்கிங் காட்டுமிராண்டிகள் செய்யாத அழிச் சேட்டைகளா.

இராஜாராஜ சோழனுடைய படை வீரர்களால் பல ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரிகள் சொல்கிறார். (சான்று: சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்:212.)

நீலகண்ட சாஸ்திரிகள் எப்படி எழுதி இருக்கிறாரோ அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

‘கர்நாடகா தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்தது. அதற்குச் சத்தியாசிரயன் கல்வெட்டு என்று பெயர்.

’இராஜாராஜ சோழன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் படையுடன் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தோனூர் நகரத்திற்குச் சென்றான். பெரும் போர் நடந்தது. அந்த நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான்.

இளைஞர்கள், இளங்குமரிகள் என்றும் பார்க்காமல் கொன்று குவித்தான். மலை மலையாகச் செல்வங்களைக் கவர்ந்து கொண்டு போனான். ஆயிரக் கணக்கான கன்னியர்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டான்’ என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அப்படித்தான் அந்த அறிஞர் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்.

 (சான்று: Rajaraja began his conquests by attacking the confederation between the rulers of the Pandya and Krala kingdoms and of Ceylon" – KAN Sastri, History of South India p 164)

அப்போது நடந்ததை எல்லாம் அப்படியே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து விட்டார்கள். அதை நம்மால் மறுக்க முடியுமா. சொல்லுங்கள்.

அன்றாடம் காய்ச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட *இராஜராஜ சோழனின் பெருமிதக் காய்ச்சலால் குளிரடித்து நடுங்குகின்றனர்). ’கடாரம் கொண்டான்’ எனும் பெருமிதத்திற்குள் வீழ்ந்து விடுகின்றனர். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

அடிமைகளின் இலவச உழைப்பு ஒரு பக்கம் இருக்கிறது. போர்களில் தோற்றுப் போன நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட செல்வம் ஒரு பக்கம் இருக்கிறது. ஆக இந்த இரு வடிவங்களில் உருவானதுதான் தஞ்சைப் பெரிய கோயில்!

வரலாற்று உண்மைகளைச் சொல்லுகிறேன். மனம் புண்படலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சோழப் பேரரசின் பெயரைக் கேட்டாலே அனைவரும் அச்சத்தால் அலற வேண்டும். தன்னை எதிர்ப்பதற்குப் பத்து முறை யோசிக்க வேண்டும். அதற்காக ஒரு மாபெரும் சின்னத்தை உருவாக்க வேண்டும்.

அந்தச் சின்னத்தையே அதிகார மையமாக மாற்ற வேண்டும். அதுவே இராஜாராஜனின் தலையாய நோக்கமாக இருந்து இருக்கிறது. அவ்வாறு உருவானது தான் தஞ்சைப் பெரிய கோயில்.

இராஜாராஜன் தமிழ்நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னர் அங்கே சின்னச் சின்ன அரசுகள் இருந்தன. மலை சார்ந்த குறிஞ்சி அரசுகள். காடு சார்ந்த முல்லை அரசுகள்.

பெரும்பாலும் வேளிர் எனும் இனத்தைச் சேர்ந்த குடி மக்களே தலைவர்களாக இருந்தனர். சிற்றரசர்களாகவும் இருந்தனர். இராஜாராஜன் தலை தூக்கினான். அப்புறம் அந்தச் சின்ன அரசர்களின் தலைகளும் சீவி எடுக்கப்பட்டன.

[சான்று: http://amizhtha.wordpress.com/2011/02/06/அன்று-மனுதர்மவாதிகள்-இன/]

மருத நிலப் பகுதிகளில் இராஜாராஜனின் பேரரசு சன்னம் சன்னமாய்ப் பெரிதாக்கம் பெற்றது. தொடர்ந்தால் போல பலப் பல போர்கள். அப்புறம் என்ன பல சிற்றரசுகள் நிர்மூலமாக்கப் பட்டன. அந்த அரசுகளின் கஜானாக்கள் காலியாக்கப் பட்டன.

அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளின் அரண்மனைச் செல்வங்கள் எல்லாம் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கு இராஜாராஜனின் யானைப் படைகளும் குதிரைப் படைகளும் பெரும் உதவிகளாக இருந்து இருக்கின்றன.

ஓர் எடுத்துக்காட்டு. தமிழகத்திற்கு வடக்கே நடந்த ஒரு நிகழ்ச்சி. கி.பி.1000-ஆம் ஆண்டுகளில் தார்வார் என்பது ஒரு மராட்டிய நிலப்பகுதி. அது ஒரு குட்டி அரசு. ஏற்கனவே சொன்ன தார்வார் அரசு என்பது வேறு. இது வேறு ஒரு தர்வார்.

அதன் மீது இராஜாராஜன் படை எடுத்தான். சோழப் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் ஆயிரக் கணக்கான மராட்டியப் பெண்களை மணந்தனர். அப்படியே அந்தப் பெண்களைத் தமிழ்நாட்டுக்கும் கொண்டு வந்து சேர்த்தனர் என்று ’ஹொட்டூர்’ கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

(சான்று: Gopal, Madan (1990). K.S. Gautam, ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 185.)

அப்படிப் பார்த்தால் பல ஆயிரம் தமிழர்களின் இரத்தத்திலும் மராட்டிய இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது என்றுதானே அர்த்தம். சும்மா சொல்லக் கூடாதுங்க.

சோழ மன்னர்களும் அவர்களுடைய படைகளும் தமிழ் இனத்தை ஓர் அனைத்துலக இனமாக மாற்றுவதற்குப் பெரும் முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்படித் தான் எனக்குப் படுகிறது. உங்களுக்கு எப்படி…

ஆனால் என்ன... பிடித்த இடங்களை எல்லாம் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து போனதுதான் இராஜாராஜன் செய்த மாபெரும் தப்பு.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.09.2019