செமினி இடைத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செமினி இடைத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 மார்ச் 2019

செமினி இடைத் தேர்தல் பக்காத்தான் தோல்வி

செமினி இடைத் தேர்தலில் பக்காத்தான் தோல்வி என்பது ஆளும் அரசாங்கத்திற்குப் பொதுமக்களின் இரண்டாவது எச்சரிக்கை மணி. கேமரன் மலை தோல்விக்குப் பின்னர்  கிடைக்கும் இரண்டாவது சாட்டையடி.


பக்காத்தான் அரசாங்கம் சொன்னபடி நடந்து கொள்ள தவறி வருகிறது. அதை நினைவுபடுத்தவே மக்கள், தங்களின் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே கேமரன் மலையில் அடி விழுந்து விட்டது. அதை நினைத்துக் காய்களை நகர்த்தி இருக்க வேண்டும். செய்யத் தவறி விட்டார்கள்.

இவர்களுக்குள் தான் பதவிப் போராட்டத்தில் தலைமுடிகளைப் பிடித்து இழுத்துப் பிய்த்துக் கொண்டு திரிகிறார்களே. அப்புறம் எங்கே காயை நகர்த்துவது. காக்காவைப் பிடிப்பது.

முதலில் வந்து நிற்பது விலைவாசியின் அகோரத் தாண்டவம். பாரிசான் ஆட்சி செய்த காலத்தில்கூட விலைவாசி இந்த அளவுக்கு உயர்ந்து போனது இல்லை. ஒரு வெள்ளிக்கு விற்ற ஒரு கிலோ சிவப்பு மிளகாய் ஒன்பது வெள்ளிக்கு விற்கிறது.
 


பத்து காசிற்கும் இருபது காசிற்கும் கொஞ்சம்கூட மதிப்பு மரியாதை இல்லாமல் போய் விட்டது. ஒரு வெள்ளிக்கு குறைவாக எந்த ஒரு பொருளும் சந்தையில் கிடைப்பதாகவும் இல்லை.

சாமானிய மனிதனின் அன்றாட வாழ்வியலில் ஏற்பட்ட விலைவாசி தாக்கங்களே வேறு கோணத்தில் கொப்பளிக்கின்றன.

இந்த இலட்சணத்தில் பறக்கும் காரை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். தேவையா. முகத்தில் எண்ணெய் வடிகிறது. இதில் மேக்கப் போட பவுடர் கேட்பது போல இருக்கிறது. முதலில் முகத்தில் வழியும் எண்ணெயைச் சவர்க்காரம் போட்டுக் கழுவட்டும். அப்புறம் பவுடரைப் பற்றி பேசலாம்.

இதை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு மற்ற காரணங்களையும் பார்ப்போம். பொதுத் தேர்தலுக்கு முன்னர் பக்காத்தான் கூட்டணி சொன்னது மாதிரி நடந்து கொள்ள தவறிவிட்டது.
 


கொடுத்த வாக்குறுதிகளில் கொஞ்சமாவது செய்து காட்டி இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன. உருப்படியாக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. சண்டை போடத்தான் நன்றாகக் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து DAP-யின் ஆட்டமும் பாடமும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு... பி.டி.பி.டி.என்; டோல் விசயங்களில் பக்காத்தான் சொன்னதைப் போல் நடந்து கொள்ளவே இல்லை.

அடுத்து பிரிம் காசு. பாரிசான் கொடுத்து வந்த பிரிம் காசு BSH என்று மாற்றம் கண்டது. சரி. ஆனால் சரியான அலைகழிப்புகள். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யலாம். உள்ளே சென்று பார்த்தால் ஆயிரத்தெட்டு கேள்விகள்.

வருமானவரி இலாகாவின் Data Base அடிப்படையாகக் கொண்டு BSH பணத்தை பிரச்சனை இல்லாமல் கொடுக்கலாம். இருந்தாலும் பொதுமக்களுக்கு இப்படி ஒரு பெரிய அலைச்சலைக் கொடுத்து இருக்கக் கூடாது. மலேசியாவில் பாதி பேருக்கு இன்னும் BSH பணம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அந்த ஆத்திரம் வேறு இருக்கிறது.
 


1MDB பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் ரொம்ப சவடாலாக ஊர்க்கோலம் போய்க் கொண்டு இருக்கிறார்கள். உருப்படியாக யாரையும் பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தி உருப்படியாக வழக்கை நடத்தவில்லை.

டிவிட்டர் மன்னன் ரொம்பவும் சந்தோஷமாக ஊர் சுற்றிக் கொண்டு திரிகிறார். தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளும் புன்னகைப் பூக்கிறார்கள்.

பக்காத்தான் அமைச்சர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. மற்ற அமைச்சர்களுடன் மனம்விட்டு பேசிக் கொள்கிறார்களா என்றுகூட தெரியவில்லை. சந்தேகமாக இருக்கிறது.

இன்றைக்கு ஒரு பேச்சு. நாளைக்கு ஒரு பேச்சு. காலையில் பேசியதை மாலையில் மீட்டுக் கொள்கிறார்கள். மக்களுக்கு இது எரிச்சலைக் கொடுக்கிறது.


ஆள்பல அமைச்சருக்கு அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மீது  தான் ரொம்பவும் அக்கறை. நம் நாட்டுத் தொழிலாளர்களின் நலன்களில் போதுமான கவனிப்பு செலுத்த தவறி வருகிறார்.

நம் நாட்டு இந்தியக் குடும்ப மாதர்களுக்கும்; இந்திய இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம் இந்தியக் குடும்பப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை எல்லாம் பக்கத்து நாட்டுப் பெண்கள் கொல்லைப் புறமாக வந்து கபளீகரம் செய்துவிட்டுப் போகிறார்கள். அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறது.

சென்ற ஆண்டு 2018 பொதுத் தேர்தலில் பாரிசான் தோல்வி அடைந்தது. தெரிந்த விசயம். அந்த வேதனையில் அந்த வருத்தத்தில் அந்தக் கூட்டணி மக்களிடையே இனவாதத்தை தூண்டிக் கொண்டு வருகிறது. இந்த விசயத்தில் முஸ்ரிக்கு முதல் மரியாதை செய்யலாம்.

PAS UMNO இரண்டும் சேர்ந்து இருப்பது ஓர் இனவாதக் கூட்டணியே. அதே போல DAP-யும் ஒரு வகையில் ஒரு சீன இனவாத கட்சியே.

DAP அமைச்சர்களில் பெரும்பாலோர் அறிவாளிகளாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த விசயம் பெரும்பாலான உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை. (புரிந்து கொள்ளுங்கள்) இது பரவலான கருத்து. ஆனால் இது பலருக்கும் தெரியாத விசயம்.


சீன இனவாத அடிப்படையில் இயங்கும் DAP கட்சியை மலாய்காரர்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில் அம்னோவின் இனவாதத்திற்கு நம்முடைய இந்திய அரசியல் அமைப்புகளும் துணை போகின்றன. வேதனையாக இருக்கிறது.

இனவாதம் மேலோங்கினால் 1969 ஆண்டு மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மறந்துவிட வேண்டாம். இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

அன்வார் - அஸ்மீன் இருவருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிசலைப் பெரிதுபடுத்தி வருகிறது. இதைப் பார்த்து மக்கள் வெறுப்பு அடைந்து வருகிறார்கள்.

தகுதி இல்லாத அமைச்சர்களைத் தூக்கி எறிய முடியாமல் இன்னமும் இடுப்பில் கட்டிக் கொண்டு தடுமாறுகிறார் பெரியவர் மகாதீர். பாவம் அவர்.

வெள்ளைக் காலணியை கறுப்புக் காலணியாக மாற்றுவது மட்டும் ஓர் அமைச்சரின் ஒரு பெரிய வேலையாக அமைந்து விடாது.

இன்னும் வரும்...