ஆர்த்தி நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்த்தி நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூன் 2019

ஆர்த்தி நிதி

மாறி வரும் உலகில் மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. ஆனால் அந்த மாறாத மாற்றங்களையே மாற்றி அமைத்து மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் பெண்கள். என்ன சொல்லப் போகிறீர்கள். ஆண்களுக்கே  சவால் விடும் ஜாம்பவான்களாக மாறி வருகிறார்கள். மறைந்து இருந்து மர்ம ஜாலங்களையும் காட்டி வருகிறார்கள். 


பெண்களைப் பார்த்து ஆண்கள் சலாம் போடுகிற காலம் நெருங்கி விட்டது. அதனால் எதற்கும் இப்போதே நான் முதல் சலாம் போட்டு விடுகிறேன். அனைத்துப் பெண்களுக்கும் சவால்களே சமாளியுங்கள்.

ஆண்களுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னணி வகிக்கின்றார்கள். இப்போது அவர்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவால் விட்டுச் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

சமையல் அறையே கதி என்று கிடந்த காலம் எல்லாம் இப்போது  இல்லை. மலை ஏறி ரொம்ப நாளாகி விட்டது. ஆண்களால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்கிற ஒரு காலம் அப்போது இருந்தது. பெண்களால் முடியாது என்கிற காலம் இப்போது அமேசான் காட்டிற்குள் ஓடியே போய் ஒளிந்து கொண்டதாம். 



இப்போது பாருங்கள். எந்த இடத்தில் தான் பெண்கள் இல்லை. எல்லா இடங்களிலும் அவர்களின் அல்லி தர்பார்கள். தப்பாக நினைக்க வேண்டாம். அந்த அளவிற்கு உயர்ந்து போய் உச்சம் பார்க்கின்றார்கள். அதே நிலையில் ஆண்களே அசந்து போகும் அளவிற்கு ஒரு கதை வருகிறது. படியுங்கள்.

பாரம் தூக்குதல், பளுதூக்குதல், இரும்பை வளைத்தல்; இப்படி இரும்பு சம்பந்தமான விசயங்கள் எல்லாம் அப்போதைக்கு ஆணாதிக்கத்தின் எழுதப் படாத சாசனங்கள். அவற்றில் பெண்கள் என்பவர்கள் கைதட்டித் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகள். 

பெண்களுக்கும் பளு தூக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நக்கல் அடித்தவர்களுக்கு விக்கல் வரச் செய்து இருக்கிறார் ஆர்த்தி நிதி. அழகிய அமெரிக்கத் தமிழ்ப் பெண்மணி. 



பளுதூக்குதல் போட்டியில் பெண்களும் பங்கேற்கலாம். அதில் பதக்கத்தையும் வெல்லலாம் என்பதை உணர்த்திய காட்டி இருக்கிறார் ஆர்த்தி நிதி.

உலக அளவிலான பவர் லிப்ட்டிங் (Power Lifting) எனும் பளுதூக்குதல் திறன் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி (வயது 23). வெள்ளிப் பதக்கம் பெற்று உலகச் சாதனை செய்து இருக்கிறார்.

சுவீடன் நாட்டில் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி. அங்கே அந்தச் சாதனை செய்யப்பட்டு உள்ளது.

’பவர் லிப்ட்டிங் பளுதூக்குதல்’ என்றால் பளு தூக்குத் திறன் போட்டி. மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இந்தப் போட்டி குந்துகை, இருக்கை, நெம்புத் தூக்கல் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்டது. 



இந்தப் பளுதூக்குதல் போட்டியில் ஒட்டு மொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்.

ஐ.பி.எப். (IPF) எனப்படும் (International Powerlifting Federation) எனும்  கழகம்  உலகப் பளுதூக்குதல் திறன் கழகம் (IPF Classic Bench Press World Championship) எனும் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டி 1971-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் நாட்டில் தோற்றுவிக்கப் பட்டது. விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு அந்தப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று வருகிறது. 20-22 வயதிற்கும் உட்பட்ட 63 கிலோ எடை உள்ள பெண்களுக்கான பிரிவில், அமெரிக்காவின் சார்பில் ஆர்த்தி நிதி போட்டியிட்டார். ஒட்டு மொத்தமாக 425 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்று இருக்கிறார்.



இவர் மற்றொரு சாதனையையும் செய்து உள்ளார். இந்தத் தூக்குத் திறன் போட்டியில் குந்துகைப் பிரிவில் உலகச் சாதனை செய்து மேலும் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று இருக்கிறார்.

ஆர்த்தியின் தந்தை கருணாநிதி தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர்  1987-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கே 1990-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 1996-ஆம் ஆண்டில் ஆர்த்தி நிதி பிறந்தார். அமெரிக்காவில் தான். இவருக்கு இரண்டு வயது மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில் இரண்டே இரண்டு பிள்ளைகள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பளு தூக்குத் திறன் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்காவுக்கு ஒரு பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை என்று சொல்கிறார் ஆர்த்தி. 



கடுமையான ஆனால் விடாப்பிடியான பயிற்சிகள். அவைதான் அவரின் கனவை; அவரின் இலட்சயத்தை நிறைவேற்றி உள்ளன.

அவர் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.

அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகள் பெரும்பாலோர் கல்வியில் சாதனை புரிவது சாதாரண விசயமாக இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பது குறைவு.

இந்தியர்கள் என்றாலே கல்விக்கு முதலிடம் கொடுத்து அதன் மூலம் பட்டறிவிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்குப் புலம்பெயர்ந்த பெற்றோர்கள் தான் முக்கியக் காரணம். படிக்கணும் படிக்கணும். படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று படிப்பிலேயே அதீதக் கவனம் செலுத்துகிறார்கள். 



ஆனால் கல்வியைப் போன்று விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களால் சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.

விளையாட்டுத் துறையிலும் புகழ்பெற முடியும் எனும் எண்ணத்தை வளர்க்க வேண்டியது அவசியம். கல்வியை விட்டால் நடனம். இந்த எண்ணத்தில் இருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளியே வர வேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி நிதி.

இந்த மாதிரி பளு தூக்கும் போட்டிகளில் தமிழ்ப் பெண்கள் பங்கு பெறுவதைத் தமிழர்களும் சரி; பொதுவாக இந்தியர்களும் சரி; விரும்புவது இல்லை.

இருப்பினும் ஆர்த்தியின் பெற்றோர்கள் சமூக அழுத்தங்களைத் தாண்டி வேறு கோணத்தில் பயணித்து இருக்கிறார்கள். சொல்லப் போனால் மனரீதியான தடைகளை மீறி உள்ளனர். இப்படிப்பட்ட பெற்றோர் தான் இப்போதைக்கு நம் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவை.



ஆர்த்தியின் பெற்றோர் அளித்த ஊக்கமே அவரின் வெற்றிக்குத் தலையாய காரணம். இவர் அனைத்துலகப் போட்டிக்குத் தயாரான போது தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைத்து விட்டார்கள். அதுவே பிளஸ் பாயிண்ட்.

அவர்கள் மூலம் நல்ல தரம் வாய்ந்த பயிற்சிகள் கிடைத்து உள்ளன. அவையே அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.

ஆர்த்தியின் தாயார் சாந்தி இப்படிச் சொல்கிறார். பள்ளிக் காலத்தில் பரத நாட்டியத்தில் ஆர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு. கல்லூரியில் சேர்ந்ததும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடப் போவதாக கூறினாள். அதை மனரீதியாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்றாலும் மகளின் ஆர்வத்திற்கு தடைபோடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக நானும் என் கணவரும் அமைதியாகிப் போனோம். தொடக்கத்தில் இருந்தே ஆர்த்திக்கு முழு ஆதரவு அளித்து வருகிறோம்.

இந்த நிலையில் அனைத்துலக அளவில் அமெரிக்காவின் தேசிய அணிக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ஆர்த்தியின் தாயார் கூறினார்.

அமெரிக்காவிலேயே பரத நாட்டியம் கற்றுக் கொண்டு அங்கேயே அரங்கேற்றம் செய்தவர் ஆர்த்தி. அப்படிப் பட்டவர்  எப்படி பரதநாட்டியத்தில் இருந்து பவர் லிப்ட்டிங் இரும்பு விசயத்திற்குள் நுழைந்தார்.

அதற்கு ஆர்த்தி சொல்கிறார்: மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்றேன்.  இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தினேன். உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றேன். 



உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி அமைத்தேன். உடற்கட்டில் அதிகக் கவனம் செலுத்தினேன். அதைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள், நண்பர்கள் வழங்கிய அறிவுரையின்படி பவர்லிப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன் என்றார்.

அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப் படுத்தும், வசைபாடும் மற்றும் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டது இல்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது என்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா. என்றாலும் தமிழ்நாட்டை நான் மறக்கவில்லை. நான் தமிழராக வாழ்வதில் பெருமை கொள்கிறேன் என்று ஆர்த்தி பெருமைப் படுகிறார்.

நான் பள்ளியில் படித்த போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்வேன். அப்போது என் நண்பர்கள் கேலி செய்தது உண்டு. ஆனால் நான் ஒரு போதும் அது குறித்து கவலைப்பட்டது இல்லை. இப்போதுகூட எனது உடற்கட்டைப் பராமரிக்கும் உணவு வகைகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் தொடர்கின்றன என்று கூறுகிறார்.

புலம்பெயர்ந்து அமெரிக்கா போனாலும் வீட்டில் தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள்.

ஆர்த்தி சொல்கிறார். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும்.

தனக்கு மிகவும் பிடித்த விசயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவு அளிக்க வேண்டும். நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறும் ஆர்த்தி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகிறார். 



ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே தன்னுடைய நீண்டகால இலட்சியம் என்று ஆர்த்தி கூறுகிறார். வாழ்த்துகிறோம் மகளே.

பெண்கள் முன்னால் ஆண்கள் புன்னகைத்து நிற்க வேண்டிய கட்டத்தில் உலக மாறுதல்கள் மாறிக் கொண்டே போகின்றன. அந்த மாறுதல்களில் ஆண்களும் பெண்களும் சமம் என்கிற ஓர் அணி சாரா மந்திரம் எல்லோருடைய வீட்டு வாசல் கதவுகளையும் தட்டிக் கொண்டே போகின்றது. ஜன்னலைத் திறந்து பாருங்கள். உங்களுக்கும் தெரியும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

ஆர்த்தியின் யூடியூப் காணொளி:

https://www.youtube.com/watch?v=XkhSab5_Zwk