மலாக்கா நாட்டு பலேமிசுலா
பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் புரிந்த காலத்தில் அவரைப் பலமேசுலா
என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச்
சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… என்றுதான் அழைக்கிறார்கள். நமக்கும் வாய் தவறி வந்துவிடுகிறது.
சரி விடுங்கள். அவரைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்தார்கள்.
(சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)
(சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)
இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய
நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள்
பலமோஸ்
லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறுவதைக் கவனியுங்கள்.
அங்கே தான் சரித்திரம் அழகாக வீணை வாசிக்கிறது.
சரி. மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை
அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர்
பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள்
சொல்கின்றன. ஆக, மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா
பரமேஸ்வரா.
அவர் இறக்கும் போது பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்து இருக்கிறார்.
அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். சுல்கார்னாயின் என்பவர்
வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயரைத் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டார்கள். போதுங்களா.
எங்கே வருகிறேன்… புரிந்து கொள்ளுங்கள்.
இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா.
மகா அலெக்ஸாந்தரின் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்.
அவர் எப்படி லங்காவி தீவிற்கு வந்து அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து
கொண்டார். சரி.
பரமேஸ்வராவைப் பற்றிய சரியான சான்றுகள் நம்மிடம் உள்ளன. முறையான
ஆவணங்களும் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகம் உதவிகள்
செய்யத் தயாராகவும் இருக்கிறது. அப்புறம் என்னங்க பயம்.
பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு
நம்முடைய வாதம் அல்ல. இருந்தாலும் அவர் இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு
நம்முடைய வாதம். அதைப் பற்றித்தான் சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் வரிந்து
கட்டி நிற்கின்றன. மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லை. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதா
என்றும் ஆதங்கப்படுகின்றன். அதுதான் வேதனையாக இருக்கிறது.
பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா
என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச்
சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. வலுவான ஆதாரங்களும் உள்ளன. இப்போது
தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார்.
அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான்
எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின்
அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி
படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறேன்.
சீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15 ஆம் நூற்றாண்டின்
தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன. பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே
எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார்.
பரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச்
சீனக் கடல் பகுதித் தலைவர்களும் வந்து இருக்கின்றனர். ஒருவர் செங் ஹோ. இன்னொருவர் இங்
சிங். இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்கா வந்துள்ளனர்.
ஆக, சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச்
சீனா ஒரு பாதுகாவலராகவே விளங்கி உள்ளது.
அதனால் தான் சியாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில்
தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது.
சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத்
தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.
1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க
அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்றார். யோங்லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு
பாராட்டினார்.
பரமேஸ்வரா சீனாவிற்கு வந்து அடைந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு
நல்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்பு ஏடுகள்
மிங் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளில் காணப் பெறலாம்.
சீன மொழியில் எழுதப் பட்டிருப்பதின்
மொழியாக்கம்:
≠ அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம்
மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்திருக்கிறீர்கள்.
அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக.
நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
≠
≠ தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும்
உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்துள்ளனர். ஆதலால் நீங்கள் திரும்பிச்
சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது.
தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று சரியாகவும் இருக்கின்றது. ≠
≠ இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச்
சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும்
அக்கறைக்கு பிரதிபலனாக அமையும். ≠
≠ மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால்
ஆன அரைக்கச்சை, சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம், சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள்,
100 லியாங் தங்கம், 500 லியாங் வெள்ளி, 400,000 குவான் காகிதப் பணம், 2,600 செப்புக்
காசுகள், 300 பட்டுச் சேலைகள், 1000 மென் பட்டுத் துணிகள்...... ≠
மிங் அரசருக்கு மலாக்கா வழங்கிய அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள்,
முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள்,
மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி,
கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள்... என
அந்த வரலாற்றுக் குறிப்பில் உள்ளன.
யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ
பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற
வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில்
இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர்.
தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத்,
கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா,
சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.
16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான
துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர்
“யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது
கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர்
எழுத்தாளரும் ஆகும்.
பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா (மேகாட்
இஸ்கந்தர் ஷா) மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை
ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.
ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம்
இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார்.
இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று
கல்வியாளர்கள் நம்புகின்றனர்.
அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம்
அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும்
இடையே சச்சரவு உண்டாகியது.
ராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும்
குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு
குறைகூறல்.
சமயச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446இல் அவர் கத்தியால்
குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர்
ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.
ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின்
பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய
சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் மலாக்கா இந்தியர்களுக்கும் அதிகாரம் இல்லாமல்
போயிற்று.
மலாக்காவைத் தோற்றுவித்தவர் யார்???
மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும்
அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய்
வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.
போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
போதுமான சான்றுகளுடன் கட்டுரையை முடிக்கின்றேன். மலாக்காவைப் பரமேஸ்வரா கண்டுபிடிக்கவில்லை
என்பது தவறான கூற்று. மலாக்கா என்றால் பரமேஸ்வரா.
ஆக, ஒரு வரலாற்றுச்
சிதைவை நியாயப் படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு
அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கிறோம்.