ஒரு நாள் ஒளரங்கசிப்பிற்கு வெறி பிடித்து போனது. என்ன வெறி? அரச வெறி அதிகார வெறி என்பார்களே அந்த வெறிதான். தன் சகோதரர்களைச் சகட்டு மேனிக்கு வெட்டிக் கொன்று போட்டான். ஒளரங்கசிப்பின் வெறித்தனத்தைப் பார்த்த ஷாஜகான் பயந்து போய் கோகினூர் வைரத்தையும் மற்ற நவரத்தினங்களையும் ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைத்தார். தக்க சமயத்தில் வந்து மகள் Jahanara Begum Sahib தடுத்து நிறுத்தினார். ஷா ஜகானின் மூத்த மகள்தான் ஜகநாரா.
ஜகநாரா மட்டும் இல்லை என்றால் கோகினூர் வைரமும் இல்லை. இந்தக் கதையும் இல்லை. தன் மகன் ஒளரங்கசிப்பினால் சிறை வைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டிவிட்டார். தாஜ்மகாலைக் கட்டியதால் மொகலாய கஜானா காலியாகிப் போனது. அத்துடன் ஷாஜகான் தன்னுடைய நாட்டு நிர்வாகத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. சதா மனைவி மும்தாஜின் நினைவாகவே வாழ்ந்தார். அதற்கு முன்னதாகவே ஷாஜகான் தன்னுடைய மயில் சிம்மாசனத்தில் கோகினூர் வைரத்தைப் பதித்து வைத்திருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மும்தாஜ் இறந்து போன பிறகு, பரந்து விரிந்து கிடந்த மொகலாய சாம்ராஜ்யம், சாளரத்து திரைச் சீலையைப் போல ஆடியது. அப்போது ஷா ஜகானும் நோய்வாய்ப் பட்டிருந்தார். இப்படியே விட்டால் நாடு எதிரியின் கைக்குப் போய்விடும் என்று அச்ச உணர்வு ஒளரங்கசிப்பிற்கு ஏற்பட்டது. இயற்கையான அச்ச உணர்வு.
ஷா ஜகான் இறந்துவிட்டதாகப் புரளி. உண்மையில் அவர் இறக்கவில்லை. நாட்டை தந்தையாரிடம் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ள ஒளரங்கசிப் தன் சகோதரர்களின் உதவியை நாடினார். அவர்கள் மறுத்தனர். கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அவர்களுக்குள்ளே பதவிப் போராட்டம்.
தனித்தனியாக படைகளைத் திரட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர். ஆக, வேறு வழியில்லாமல் மூத்த அண்ணன் Dara Shukoh வையும், கடைசி தம்பி Murad Baksh வையும் வெவ்வேறு சம்பவங்களில் கொன்று போட்டார். ஒளரங்கசிப்பின் இரண்டாவது அண்ணன் Shah Shuja மியான்மாருக்கு ஓடிப் போனான். அங்கே Sandathudama எனும் மியன்மார் அரசனுடன் பிரச்னை. அந்தப் பிரச்னையில் ஷா சுஜாவும் அவனுடைய ஆண் ஆட்களும் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் அனைவரும் சிறைக்குள் அடைக்கப்பட்டு பட்டினி போட்டு சாகடிக்கப்பட்டனர்.
ஒளரங்கசிப் தன்னுடைய மூத்த அண்ணன் டாரா சுக்கோவின் தலையை வெட்டி அதை ஷா ஜகானின் பார்வைக்கு அனுப்பினான். அது மட்டுமல்ல. தன் தந்தை ஷாஜகானைப் பிடித்துக் கொண்டு போய் ஆக்ரா சிவப்புக் கோட்டைக்குள் அடைத்து வைத்தான். வைத்தியம் செய்பவர்களிடம் விஷத்தைக் கொடுத்து ஷா ஜகானைக் கொன்று விடும்படியும் கட்டளை போட்டான். விசுவாசமிக்க வைத்தியர்கள் விஷத்தை ஷா ஜகானுக்குக் கொடுக்காமல் அவர்களே சாப்பிட்டு மடிந்து போனார்கள். இப்படி எல்லாம் அநியாயம் செய்தவன் ஒளரங்கசிப்.
ஷாஜகான் சிறையின் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொள்வார். கம்பிகளின் ஓர் இடுக்கில் இந்தக் கோகினூர் வைரம் வைக்கப்பட்டது. வைரத்தின் மீது சூரிய ஒளி படும். அந்தப் பிரதிபலிப்பில் தாஜ்மகால் தெரியும். ஆக, தான் கட்டிய தாஜ்மகாலை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் இந்த வைரத்தின் ஒளிப் பிரதிபலிப்பைக் கொண்டு பார்க்க முடிந்திருக்கிறது.கோகினூர் வைரத்தின் வழியாகத் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ஷாஜகான் அழுவாராம். எட்டு ஆண்டுகள் அப்படி அழுது கொண்டே இருந்திருக்கிறார். கடைசியில், அப்படியே இறந்தும் போனார்.
ஷா ஜகானின் மூத்த மகள் ஜகநாராவும் அவருடனே எட்டு ஆண்டுகள் இருந்தார். தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஷா ஜகானுக்கு மொத்தம் ஏழு மனைவிகள். அவர்களில் மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மகால். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் இந்த ஜகநாரா, அவுரங்கசிப் எல்லாம்.
அவருடைய மூத்த மனைவியின் பெயர் Akbarabadi Mahal ஷா ஜகான் இறக்கும் தருவாயில் தன் மூத்த மனைவியை அழைத்தார். ஜகநாராவைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஷா ஜகானின் உடலுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும் என்று ஜகநாரா விரும்பினார். ஆனால், ஒளரங்கசிப் அதை விரும்பவில்லை. இருந்தாலும் சந்தனக் கட்டையால் செய்யப் பட்ட பெட்டியில் அவருடைய உடல் கிடத்தப்பட்டது. அப்படியே தாஜ்மகாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே மும்தாஜ் மகாலின் சமாதிக்கு பக்கத்தில் இவருக்கும் சமாதி எழுப்பப்பட்டது. இன்றும் இருக்கிறது.
ஷாஜகான் ஆசை ஆசையாகக் கட்டிய அந்த தாஜ்மகாலுக்கு உள்ளே அவர் கடைசிவரை போக முடியாமல் ஆகிப் போனது. அதுவும் ஒரு வேதனையான கதை. அப்பா அம்மா பாவம் சும்மா விடாது என்பார்கள். அது ஒளரங்கசிப்பைப் பொருத்த வரையில் மிகவும் சரி. கடைசி காலத்தில் மிக மிக நோய்வாய்ப்பட்டு செத்துப் போனார் ஒளரங்கசிப்.
கோகினூர் வைரம் மறுபடியும் பாரசீகத்திற்குப் போன கதை வருகிறது. 1700களில் ஈரான் நாட்டை ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்து வந்தது. அவ்வளவு பலம் பொருந்திய நாடாக அப்போது ஆப்கானிஸ்தான் விளங்கியது. ஒரு காலத்தில் ஈரான், ஈராக், மங்கோலியா, இந்தியாவின் வட பகுதி உட்பட்ட பல நாடுகளை ஆப்கானிஸ்தான் ஆண்டு வந்திருக்கிறது. உங்களால் நம்ப முடிகிறதா! இப்போது பாருங்கள். வேதனையான அரசியல் வாழ்க்கை.
ஆப்கானிஸ்தானிய ஆளுநர்கள் ஈரானில் மிருகத்தனமான ஆட்சியை நடத்தினார்கள். கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தார்கள். அதனால் ஈரான் மக்கள் குமுறிப் போனார்கள்.
இந்தச் சமயத்தில்தான் நாடிர் ஷா எனும் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வந்தான். இவன்தான் இந்திய மொகலாய சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையே மாற்றியவன். பிரான்சில் Joan of Arc இருந்தாரே. அவரைப் போன்ற கதைதான். நாடிர் ஷாவின் வேலை ஆடுகளைப் பார்த்துக் கொள்வது. மற்ற நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து திருடுவது. கொள்ளை அடிப்பது. அவ்வளவுதான்! காலப் போக்கில் இந்த இடையன் அந்தத் திருட்டுக் கும்பலுக்கே தலைவனான்.
படிப்படியாக வளர்ச்சி அடைந்து இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் சக்தியை உருவாக்கினான். அடுத்தக் கட்டமாக அந்நிய ஆப்கான்காரர்களை நாட்டை விட்டே விரட்டியடித்தான். 1725ல் ஈரான் நாட்டின் தேசிய வீரனாகப் புகழின் உச்சிக்கே போனான்.
ஈரான் நாடே அவன் பின்னால் கைகட்டி நின்றது. சின்ன வயதில் பெரிய சாதனை. 1736ல் நடந்தது. அப்போதைய ஈரானிய மன்னன் Tamasp என்பவர் சிறந்த போர் வீரராகத் திகழவில்லை. பல போர்களில் தோல்வி கண்டவர். அதனால் அவருடைய மகன் Safavid Shah ஐ அரசனாக்கினான் நாடிர் ஷா.
புதிய அரசன் சவிட் ஷா ஒரு சின்ன பாலகன். அதனால் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இளைஞன் நாடிர் ஷாவை புதிய மன்னனாக்கினார்கள். ஆடு மேய்த்த சிறுவனுக்கு வந்த வாழ்க்கையைப் பாருங்கள்.
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் பல முறை ஈரானைத் தாக்கியுள்ளது. அதன் செல்வங் களைத் தாறுமாறாகச் சூரையாடியுள்ளது. இதற்கு எல்லாம் ஒரு பாடம் சொல்லித் தர வேண்டும். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று இளைஞன் நாடிர் ஷா முடிவு செய்தான். (தொடரும்)