மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர் 2019

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதம்

உயிரோடு இருக்கும் ஒரே ஒரு மலாயா கம்யூனிஸ்டுத் தமிழர். கடைசித் தமிழர். ஐயா ஆசிர்வாதம். மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஆசீர்வாதம் என்கிற அந்தத் தமிழர் பல முறை முயற்சிகள் செய்து விட்டார். அவரிடம் மலேசிய சிவப்பு அடையாள அட்டை மட்டுமே இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்றுவதற்கு எத்தனையோ தடவைகள் முயற்சிகள் செய்து விட்டார்.



இதுவரையில் 15,000 ரிங்கிட்டிற்கு மேல் செலவு செய்து விட்டதாகவும் சொல்கிறார். இன்னும் நீலநிற அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. குடியுரிமையும் கிடைக்கவில்லை. மலேசியராகப் பிறந்தும் குடியுரிமை இல்லாமல் அனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மலேசியத் தமிழர்களும் சரி; உலகத் தமிழர்களும் சரி; இந்த மனிதரை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

தென் தாய்லாந்தில் கோலோக் என்பது ஒரு சுற்றுலா சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ. தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் ஒரு குட்டிக் கிராமம். பெயர் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் (Kampung Chulaborn).

அங்கே 260 முன்னாள் மலாயா கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். அனைவரும் முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள். இவர்களுடன் அவர்களின் மனைவி பிள்ளைகள், உறவினர்கள் என மொத்தம் 460 பேர் இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு தமிழர்க் குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் ஆசிர்வாதம். (பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). வயது 75.




இவர் பேராக் மாநிலத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர். ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இப்போது வாழ்ந்தும் வருகிறார்.

இவருடைய மனைவியின் பெயர் ராஜம்மா சுலாங்போர்ன். உண்மையான தாய்லாந்து பெயர் சுலாங்போர்ன். திருமணத்திற்குப் பிறகு ராஜம்மா எனும் தமிழ்ப் பெயரும் சேர்க்கப் பட்டது. ராஜம்மாவும் காட்டில் ஒரு கம்யூனிஸ்டாக அலைந்து திரிந்தவர்தான்.

சொந்த பந்தங்கள் எல்லாம் சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார் பகுதிகளில் இருக்கிறார்கள்.

முன்பு மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த ஒருவரைத் தங்களின் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ள அவருடைய சொந்தக்காரர்களுக்கே விருப்பம் இல்லையாம். அதைப் பற்றி ஆசிர்வாதமும் கவலைப் படவில்லை.

மலேசிய அரசாங்கம் இன்னும் ஆசிர்வாதத்திற்கு குடியுரிமை வழங்கவில்லை. அவரிடம் சிவப்பு அடையாளக் கார்டு இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்ற முயற்சி செய்து கொண்டு வருகிறார்.




அதற்காக வருடத்திற்கு ஒரு முறையாவது மலேசியாவிற்குள் வந்து போகிறார். மனைவி ராஜம்மா சுலாங்போர்ன். தாய்லாந்து பிரஜை.

சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தை, பால் சுல்லாபோர்ன் பட்டனா (Ban Chulaborn Patana 12) என்றும் அழைப்பார்கள். கோலோக் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுக்கிரின் எனும் ஒரு குறுநகரம் இருக்கிறது.

அங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் ஒரு பெரிய ஆழ்க் காடு. அந்தக் காட்டுக்குள் அந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் இருக்கிறது.

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை. அப்படி ஒன்றும் அங்கே சுலபமாகப் போய் வந்துவிடவும் முடியாது. தெரியாதவர்கள் யாரையும் அந்தக் கிராமத்திற்குள் விடவும் மாட்டார்கள்.




தவிர கிராமத்திற்குப் போகும் மண் சடக்கில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள், குட்டிக் குட்டி ஆறுகள், சின்னப் பெரிய மண்சரிவுகள். இடை இடையே காட்டு யானைகளின் உருட்டல் மிரட்டல்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போக மூன்று நான்கு மணி நேரம் பிடிக்கும்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும், முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் 10-ஆவது ரெஜிமெண்டைச் (10th Regiment of the Communist Party of Malaya (CPM) சேர்ந்தவர்களின் குடும்பங்கள். அவர்களின் உறவினர்கள்.

இவர்களுக்கு அப்துல்லா சி.டி. (Abdullah CD) என்பவர் தலைவராக இருக்கிறார். துணையாக அவருடைய மனைவி சுராய்னி அப்துல்லா (Suriani Abdullah) என்பவரும் உதவிகள் செய்து வருகிறார்.

இவரைத் தவிர சின் பெங் (Chin Peng), ரசீட் மைடின் (Abdul Rashid bin Maidin), சம்சியா பாக்கே (Shamsiah Fakeh), மூசா அமாட் போன்றவர்களும் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள். வாழ்ந்தார்கள்.

மலாயாவின் கடைசி கம்யூனிஸ்டுத் தமிழர் ஆசீர்வாதம். தள்ளாத வயதிலும் நீல நிற அடையாள அட்டைக்காக அங்கேயும் இங்கேயும் அலைமோதிக் கொண்டு வாழ்கிறார்.

அரசியல்வாதிகள் கையை விரித்து விட்டனர். அரசாங்க அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதில் சொந்தக்காரர்கள் வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்கள். அவரும் கவலைப் படுவதாக இல்லை.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பெயர் சுமதி என்கிற திரேசா. இவர் ஒரு தாய்லாந்து பையனைத் திருமணம் செய்து கொண்டு, அதே சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறார்.

ஆசீர்வாதம் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கை சிப்புட்டிற்கு வந்து போகிறார். அவர் வருவதும் போவதும் அரசாங்கத்திற்குத் தெரியும்.

மலேசிய அரசாங்கத்தால் மன்னிப்பு வழங்கப்பட்ட மனிதர் என்பது குடிநுழைவு அதிகாரிகளுக்கும் தெரியும்.

தான் பிறந்து வளர்ந்த ஒரு நாட்டின் நன்மைக்காக நடைபெற்ற ஒரு புரட்சியில் கலந்து கொண்டதற்காக ஆசீர்வாதம் வருத்தப்படவில்லை.

அவர் சொல்கிறார். ‘எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. பிரிட்டிஷ்காரர்களை விரட்ட வேண்டும். மலாயாவுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அதுதான் என் இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்தை அடைந்து விட்டேன்’ என்கிறார்.

தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளைக் காடுகளில் கழித்தவர் இந்த ஆசீர்வாதம்.

மலாயாக் காடுகளில் அவர் கால் படாத இடம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

பகாங் பிரேசர் மலைக் காடுகள், ரவூப் காடுகள், தம்பின் காடுகள், தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர், தாப்பா, கேமரன்மலைக் காடுகள், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், சுங்கை சிப்புட், பாகான் செராய், ஜாவி காடுகள், கிரிக் பெத்தோங் காடுகள் என்று நிறைய காடுகளின் பட்டியல் நீண்டு போகிறது.

ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் காடுகளிலேயே வாழ்ந்து விட்டார். தென் தாய்லாந்து காடுகளில் நடந்த சண்டையில், காயம் அடைந்த போதுதான் தன் மனைவி ராஜம்மாவைச் சந்தித்தார்.

’துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் கிடந்தேன். சாகப் போகிற நிலை. அப்போது என்னைக் கவனித்துக் கொள்ள ராஜம்மாவை அனுப்பி வைத்தார்கள்.

அப்போது அவளுடைய பெயர் சுலாங்போர்ன். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மனைவிதான்.

இல்லை என்றால், காலில் சலம் வைத்து செத்துப் போய் இருப்பேன். தாக்குதல் நடந்த போது, என்னை முதுகில் சுமந்து கொண்டு காட்டுக்குள் ஓடிப் போனாள்.

இரண்டு மூன்று முறை துப்பாக்கிச் சூடுகள் நடந்து இருக்கும். உயிர் தப்பித்து விட்டோம். பிறகு திருமணம் செய்து கொண்டோம்’ என்கிறார் ஆசீர்வாதம்.

வயது என்னவோ அவருக்கு 70-க்கும் மேல் இருக்கலாம். ஆனால், தன் உடலை எப்போதும் கட்டுக் கோப்பாக வைத்து இருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து விடுகிறார். பக்கத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவப் போய் விடுகிறார்.

அவருடைய சொந்த ஆறு ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய 100 ரப்பர் மரங்கள் உள்ளன. அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் அவருடைய குடும்பம் நடக்கிறது.

அந்த ஆறு ஏக்கர் நிலத்தையும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறது என்பது ஒரு மனிதாபிமானத் தகவல்.

’என் மனைவி ஒரு தாய்லாந்து கம்யூனிஸ்டு. என்னோடு காட்டில் எதிரிகளுடன் சண்டை போட்டவர். பலமுறை சூடுபட்டு உயிர் தப்பி இருக்கிறார்.

எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவளும் இங்கே ஒரு தாய்லாந்துகாரரைத் திருமணம் செய்து கொண்டு, பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார்.’

’நான் ஓர் இந்தியராகப் பிறந்து வளர்ந்து இருந்தாலும், ஓர் இந்தியர் எப்படி வாழ்வார் என்பதை அடியோடு மறந்து விட்டேன். அது எனக்குத் தெரியாமலேயே போய் விட்டது. ஒரு கட்டத்தில் என்னுடன் பகாங் காட்டில் 85 இந்தியர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன்’ என்று ஆசீர்வாதம் கண்ணீர் மலகக் கூறுகிறார்.

கடைசியாக, என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆசீர்வாதம் என்பவர் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். அவர் ஒரு தமிழர்.

இப்போது அடையாளம் தெரியாமல் அனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த உண்மையை உலகத் தமிழர்கள் தெரிந்து கொண்டால் போதும்.

ஆசீர்வாதம் என்பவர் ஒரு தேசியவாதியா இல்லை ஒரு பயங்கரவாதியா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். சாமான்ய மக்களான நாம் முடிவு செய்ய முடியாது. அந்தத் தகுதி நமக்கு இல்லை.

ஓர் இலட்சியத்திற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் காட்டில் கழித்த ஒரு மூத்த மனிதர். அவரைத் தூக்கிக் கனம் பார்ப்பது நியாயம் இல்லை. ஆசீர்வாதம் என்பவர் உயிரோடு இருக்கும் ஒரு சகாப்தம் என்றுதான் சொல்ல முடியும்.

நல்லதோ கெட்டதோ அவரோடு இருக்கட்டும். அவரோடு மறைந்தும் போகட்டும். மறுபடியும் ஓர் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கப் போவது இல்லை. இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிகிறது. மௌனமாய் அழுகிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

1. https://www.thestar.com.my/…/…/29/at-peace-in-their-village/

2. https://www.malaysiakini.com/news/111797 - The last of CPM's Indian communists

3. https://www.dailymotion.com/video/x2r84bx




பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Murugan Murugan Govindasamy உண்மையான போராளியின் கண்ணீர்க் கதை. மனம் கனக்கிறது ஐயா. சிறப்பான கட்டுரை.
 
Sri Kaali Karuppar Ubaasagar என்ன செய்வது அண்ணா.. தமிழராக இருக்கிறாரே!!
  
Muthukrishnan Ipoh அவருக்கு் வயதானாலும் இளமையான உடல்வாகு அமைந்து உள்ளது... அவருக்கு குடியுரிமை கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி...
 

Sri Kaali Karuppar Ubaasagar Muthukrishnan Ipoh உண்மை தான் அண்ணா இறுதி வரை முயற்ச்சி செய்யட்டும்...
Thennarasu Sinniah மறுபடியும் ஒரு ஆசீர்வாதம் கிடைக்கப் போவதில்லை...கணமான வரிகள் ஐயா.
  
Muthukrishnan Ipoh இவருக்குப் பின்னர் அந்தச் சுவட்டில் வேறு எவரும் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...

Murugan Murugan Govindasamy Muthukrishnan Ipoh இவர் இன்றும் தென் தாய்லாந்தில்தான் வசிக்கிறாரா ஐயா?
 
Tamil Zakir நாட்டிற்காக போராடியவர் இன்று நாடோடியாய் அயல்நாட்டில்.
கண்ணீர் கட்டுரை
Muthukrishnan Ipoh அவர் பார்வையில் அவர் நாட்டிற்காகப் போராடி இருக்கிறார்...
Bala Sena இன்னொரு ஆசீர்வாதம் கிடைக்கப் போவதில்லை
  
Muthukrishnan Ipoh மலாயா கம்யூனிஸ்டு வரலாற்றில் இறுதித் தமிழர்ச் சுவடாக அமையலாம்...
Maha Lingam நன்றி.. அறியாத ஒரு செய்தி... மனமார்ந்த நன்றி...

 
Suthan Tiran நம் சரித்திர ஆவணம் இது.

Muthukrishnan Ipoh உண்மையிலேயே... பாதுக்காக்கப்பட வேண்டிய ஆவணம்...

Suthan Tiran Muthukrishnan Ipoh ஆம் ஐயா. ஆனால் நம் ஆவணங்களைப் பாதுகாக்க ஒரு சங்கமோ அல்லது ஓரிடமோ இல்லையே...