இனாயத் கான் இந்திய வீராங்கனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனாயத் கான் இந்திய வீராங்கனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 நவம்பர் 2019

இனாயத் கான் இந்திய வீராங்கனை

தமிழ் மலர் - 18.11.2019

எத்தனையோ மலேசிய வீராங்கனைகள்; எத்தனையோ இந்திய வீராங்கனைகள்; எத்தனையோ உலகப் புகழ் வீராங்கனைகள். அவர்களின் வரலாறுகளை எல்லாம் பார்த்து இருக்கிறோம். படித்து இருக்கிறோம். 



அந்த வரலாறுகளில் எல்லாம் தனித்து நிற்கும் ஓர் இந்திய வீராங்கனையின் வரலாறு வருகிறது. தன் நாட்டிற்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த ஓர் அழகிய மகளின் வரலாறு. உளவாளிகளின் இளவரசி எனும் பெயருடன் உலக வரலாற்றில் வலம் வரும் ஒரு வீரப் பெண்மணியின் வரலாறு.

அவர் தான் நூர் இனாயத் கான். மலாயாவில் ஒரு சிபில் கார்த்திகேசு என்றால் இங்கிலாந்தில் ஓர் இனாயத் கான்.

மைசூரை ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். மாபெரும் வீரர். இறுதி வரை தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். அவரின் கொள்ளுப் பேரன் இனாயத் கான். அந்த இனாயத் கானின் மகள் தான் இந்த நூர் இனாயத் கான். 



அந்த வகையில் நூர் இனாயத் கான் ஓர் இந்திய இளவரசி. மைசூர் திப்பு சுல்தானின் நேரடி வாரிசுகளில் ஒருவர். வீரமிக்க பரம்பரையைச் சேர்ந்த வீராங்கனை. அவரின் வரலாற்றைப் பார்ப்போம். அதற்கு முன்னர்...

வீராங்கனை நூர் இனாயத் போல இன்னும் எத்தனையோ வீரங்கனைகள் நமக்குத் தெரியாமல் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனைகளை வெளியுலகத்தில் கட்சிப் படுத்த வேண்டும். அவர்களின் வரலாறு இலைமறைக் காய்களாக மறைந்து போய் விடக்கூடாது.

இனம், மொழி, சமயம் தாண்டிய மாமனிதர்களைப் பற்றி நம்முடைய வாரிசுகள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். நாம் மறைந்த பின்னரும் அந்த மாமனிதர்களுடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதுவே நம்முடைய இலக்காக அமைய வேண்டும். சரி.



நூர் இனாயத் கான் (Noor Inayat Khan) 1914 ஜனவரி 1-ஆம் தேதி மாஸ்கோவில் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் நால்வர். இவர் தான் மூத்தப் பெண். இரண்டாவதாக விலாயாத் (Vilayat 1916–2004); மூன்றாவதாக ஹிடாயாத் (Hidayat 1917–2016); நான்காவதாக (Khair-un-Nissa 1919–2011).

தந்தையார் ஐரோப்பாவில் ஓர் இசையாளர். சுபிசம் சமய நெறி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

நூர் இனாயத் கானின் குடும்பம் அவரின் சிறுவயதிலேயே ரஷ்யாவில் இருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்தது.

பிரான்சில் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டார். குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் வேலை செய்தார். பிரான்சு ஜெர்மனியிடம் வீழ்ந்த பின்னர் இவரின் குடும்பம் இங்கிலாந்திற்குச் சென்றது. அங்கே கொஞ்ச காலம் ஆசிரியராகச் சேவை செய்தார்.

ஒரு சுருக்கம். நூர் இனாயத் கான் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின் சார்பில் இரகசிய உளவுப் பணியில் ஈடுபட்டவர். இவரைப் பிரான்ஸிற்கு அனுப்பி வைத்தவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். 



வீராங்கனை நூர் இனாயத்தின் மற்றொரு பெயர் நோரா பேக்கர். மறுபடியும் சொல்கிறேன். இவரின் பரம்பரையே ஒரு வீரப் பரம்பரை. உலகப் புகழ் திப்பு சுல்தானின் வாரிசுகளில் தலையாயத் தலைமகள். மாபெரும் நெஞ்சுரம் கொண்டவர். பெருமையாக இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டை நாஜி படைகள் ஆக்கிரமித்த போது, அங்கு உளவுப் பணிக்காக அவர் இங்கிலாந்தில் இருந்து அனுப்பப் பட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

அதுதான் போர் முனைக்குப் போகிறவர்கள் எல்லாம் செத்துக் கொண்டு இருக்கிறார்களே. பற்றாக்குறை ஏற்படாமல் என்ன நடக்கும். அதனால் பெண்களையும் இராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி.

அந்த வகையில் பெண்களுக்கான இராணுவப் பிரிவில் நூர் இனாயத், தன்னை இணைத்துக் கொண்டார். கம்பியில்லாத் தந்தி மூலமாகத் தகவல்களை அனுப்புவதில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப் பட்டன.

1943-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி மேடலின் (Madeleine) என்கிற வேறொரு பெயரில் பிரான்ஸ் நாட்டின் வட பகுதியில் தன் பணியைத் தொடங்கினார்.
ஜெர்மனியின் தாக்குதல் பற்றியும்; நாஜிகளின் திட்டங்கள் குறித்தும் இங்கிலாந்திற்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் உளவு வேலை (Special Operations Executive).



கம்பியில்லாத் தந்தி கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கியவர் நூர் இனாயத். முக்கிய தகவல்களை இலண்டனில் இருந்த பிரிட்டிஷ் இராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.

பிரான்ஸ் நாட்டில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்த போது நாட்டிற்கு திரும்பி வருமாறு நூர் வற்புறுத்தப் பட்டார். அந்தச் சமயத்தில் நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்து வந்தனர்.

இருந்தாலும் நூர் இனாயத்திற்குத் திரும்பிப் போக மனம் வரவில்லை. பிடிவாதமாக மறுத்து விட்டார். தன் தோற்றத்தையும் தன் பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு தன் நாட்டிற்காகச் சேவை செய்தார். ஆபத்தான காலக் கட்டத்திலும் இலண்டனுக்கு தகவல்களை அனுப்பி வந்தார்.



மரணம் எதிரே நின்று சிரித்த போதும் தமக்கு வாழ்வு அளித்த பிரிட்டனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றார். கடைசி வரை  உறுதியாகவே இருந்தார்.

தானும் திரும்பிப் போய் விட்டால் பிரிட்டனுக்குத் தகவல் அனுப்ப ஆள் இல்லை என்று பிரான்ஸ் நாட்டிலேயே தங்கி விட்டார். தனி ஆளாக இருந்து பிரிட்டனுக்கு உளவு வேலைகளைச் செய்து வந்தார்.

நூர் இனாயத்தின் நடவடிக்கைகளில் நாஜிக்களுக்கு ஒரு மாதிரியான சந்தேகம். கடைசியில் அதுவே உண்மையாகிப் போனது. அவருடன் வேலை செய்து வந்த ஒரு பிரெஞ்சு பெண்மணி நாஜி ரகசிய போலீஸ் கெஸ்தபோவிடம் நூர் இனாயத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்.

நாஜி படையினர் அவரைக் கைது செய்தார்கள். டச்சாவ் எனும் இடம். பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப் பட்ட உயிர்ப்பலி தடுப்பு முகாம் இருந்த இடம். அந்த இடத்திற்கு இனாயத் கொண்டு போகப் பட்டார்.

அன்றைய மலாயாவில் 1940-களில் சிபில் கார்த்திகேசுவிற்கு ஜப்பானியர்களால் ஏற்பட்ட அதே நிலைமை தான் இனாயத்திற்கும் ஏற்பட்டது. பத்து மாதங்கள் கடும் சித்ரவதைகள். அவ்வளவு கொடுமைக்குப் பின்னரும் அவரிடம் இருந்து உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை.



பலவிதமான சித்திரவதைகள் தொடர்ந்தன. உண்மையைக் கூறும்படி தொடர் துன்புறுத்தல்கள். நூர் எந்த ஒரு தகவலையும் சொல்ல மறுத்து விட்டார்.

ஒரு கட்டத்தில் ஜெர்மனி இராணுவ வீரர்களையே ஏமாற்றித் தப்பித்தார். மறுபடியும் சிறை. ஆனால் இந்த முறை கடுமையான சித்ரவதைகள்.

இங்கிலாந்திற்குத் தவறான செய்திகளை அனுப்பும்படி தொடர்ந்து வற்புறுத்தப் பட்டார். எது நடந்தாலும் அது மட்டும் நடக்கவில்லை.

உடல் முழுவதும் காயங்கள். இங்கிலாந்து தன்னை வாழ வைத்த நாடு அதனை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டு இருந்தது. ஜெர்மனி வீரர்கள் போரில் கலந்து கொண்டு இருந்த நேரத்தில் சிறையில் இருந்து மறுபடியும் தப்பிக்க முயற்சி செய்தார். இராணுவத்தினரால் மீண்டும் பிடிபட்டார். 



ஒரு தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு மேலும் வேறு மூன்று பெண் கைதிகள் இருந்தனர். அவர்களுடன் இவரும் சேர்த்து அங்கே சுட்டுக் கொல்லப் பட்டார்.

போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் இனாயத் நூர் இன்றும் நினைவுக் கூறப் படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (Liberté - விடுதலை).

நூர் இனாயத் கான் வரலாற்றுப் புத்தகம் வெளிவந்து உள்ளது. அதன் பெயர்  ‘ஸ்பை பிரின்சஸ்’ (Spy Princess). அதை எழுதியவர் சரபானி பாசு (Shrabani Basu). பிரின்சஸ் ஸ்பை (Spy Princess: The Life of Noor Inayat Khan) என்கிற ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இனாயத் கானின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆய்வு செய்தவர் ஆய்வாளர் சரபானி பாசு. 



இங்கிலாந்து நாட்டுக்காக வாழ்ந்து மறைந்த இனாயத் கானுக்கு ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் போராடி வந்தார்.

அதற்கு இங்கிலாந்தின்  34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். சிலை வைப்பதற்காக இங்கிலாந்து வாழ் ஆசிரியர்களும் ஆதரவாக இருந்தனர். ஏன் என்றால் இனாயத் கான் ஒரு காலக் கட்டத்தில் ஆசிரியராக இருந்தவர்.

நூர் இனாயத் கான் எனும் அந்த அழகிய மகள் தான் ஓர் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் எப்போதுமே பெருமை கொண்டு வாழ்ந்து வந்தார்.

அவரின் இந்தத் தியாகத்தை உலக மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவி இருக்கிறார்கள். இலண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் (Taviton Street, Bloomsbury) மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

நூர் இனாயத் கானின் பெருமை இங்கிலாந்து முழுமையும் இன்று அறியப்பட்டு உள்ளது. பெரும்பாலோருக்கு அவரின் தியாக உணர்வுகள் நன்றாகவே தெரிகிறது. 



இங்கிலாந்து மக்கள் அவரைப் பெருமையாக நினைக்கிறார்கள். அவரின் பெயரைத் தங்களின் பிள்ளைகளுக்குச் சூட்டிப் பெருமை செய்கிறார்கள்.

உலகம் நிலைக்கும் வரையில் நூர் இனாயத் கானின் தியாக வரலாறும் நிலைக்கும். உலக வரலாற்றில் உன்னதம் பேசும். வாழ்க நூர் இனாயத் கான்.

சான்றுகள்:

1. Visram Rozina (1986). Ayahs, Lascars and Princes: The Story of Indians in Britain 1700–1947. London, UK.

2. Helm, Sarah (2005). A Life in Secrets: Vera Atkins and the Missing Agents of WWII. New York.

3. Escott, Beryl E. (1991). Mission Improbable: A salute to RAF women of SOE in wartime France.