பிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 நவம்பர் 2019

பிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம்

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சதுரங்க நாடகம் அரங்கேற்றம் காண்கிறது. ஓர் இந்தியர் ஓரங்கட்டப் படுவதற்கான நாடக ஒத்திகைகள் தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வருகின்றன. 



பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன், பதவி விலக வேண்டும் என்று 14 அரசு சாரா இயக்கங்கள் அண்மையில் கோரிக்கை வைத்து உள்ளன. அந்தக் கோரிக்கையில் இருந்து தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு பிராபகரன் அவர்கள் வழிவிட்டுப் பதவி விலக வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு வழி வகுக்கும் வகையில் அந்தக் கோரிக்கை அமைகின்றது.




இருந்தாலும் இந்தக் கோரிக்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என தியான் சுவா கூறி இருக்கிறார். பத்திரிகைச் செய்திகள் வழியாகத் தான் நான் இதனைத் தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என பி.கே.ஆர். உதவித் தலைவருமான தியான் சுவா சொல்லி இருக்கிறார்.

என்னைக் கேட்டால் நெருப்பு இல்லாமல் புகை வராது. ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

அப்படியே இருந்தாலும் அந்த 14 அரசு சாரா இயக்கங்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஓர் அரசியல் நாடக ஒத்திகையில் குட்டையைப் குழப்பும் காட்சி வருவது போல தெரிகிறது.




பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டவர் பிரபாகரன். ஒரு தமிழர், ஓர் இளைஞர். அவர் 2018-அம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், பி.கே.ஆர்.  கட்சி அவரைத் தன் பக்கம் ஈர்த்தது. தேர்தலில் வெற்றி பெற்றார். மலேசிய வரலாற்றில் மிக இளமையான நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையையும் பெற்றார். இதை முதலில் நினைவில் கொள்வோம்.

நடந்து முடிந்த அந்த 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய அரசியல் அதுவரையில் சந்திக்காத ஓர் அதிசயம் நடந்தது. 




பத்து நாடாளுமன்றத் தொகுதி எப்போதுமே எதிர்க் கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்த இடம். அந்தத் தொகுதியை 2008 ஆண்டு முதல் பி.கே.ஆர். கட்சியின் தியான் சுவா தான் கச்சிதமாகத் தற்காத்து வந்து இருக்கிறார். 

ஆனால் கடந்த 14-ஆவது பொதுத் தேர்தல் (2018) சமயத்தில் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது. அவர் மீது இருந்த வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட 2000 ரிங்கிட் அபராதம் காரணமாக வேட்புமனு நிராகரிப்பு.

தேசிய முன்னணியின் சார்பில் டொமினிக் லாவ் போட்டியிட்டார். இவர் வெற்றி பெற்று விடுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

அதனால் நம்பிக்கைக் கூட்டணியின் பார்வை சுயேச்சை வேட்பாளர்களின் பக்கம் திரும்பியது. சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகப் பிரபாகரன் வேட்பு மனுத் தாக்கல் செய்து இருந்தார். சொல்லி இருக்கிறேன்.




அப்போது அவருக்கு வயது 23. செந்தூல் வட்டாரத்து மண்ணின் மைந்தன். அவருடன் தியான் சுவா பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியது.

இதில் இன்னும் ஒரு பெரிய விசயம் என்ன தெரியுங்களா. ஒரு கூட்டத்தில் துன் மகாதீர் அவர்களே மேடையில் பிரபாகரனை அறிமுகப் படுத்தினார். நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவைத் தெரிவித்தார். அதன் விளைவு மலேசியர்களே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

பத்து தொகுதி பல்லின கலப்பு வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.  சுயேச்சை வேட்பாளராக நின்ற பிரபாகரன் 38,125 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். தேசிய முன்னணியின் கெராக்கான் டோமினிக் லாவ் என்பவரைவிட 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி.

ஆக அவரை எதிர்த்து நின்ற கெராக்கான், பாஸ் கட்சிகள் இரண்டும் சேர்ந்தே 24,297 வாக்குகள் தான் பெற்றன. மலேசிய அரசியல் வரலாறு இதுவரை காணாத ஓர் அதிசயம். அதன் பின்னர் பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர். கட்சியில் இணைந்தார். 




இன்றைய இளைஞர்களில் பிரபாகரன் வயதைச் சேர்ந்த பெரும்பாலோர் கைப்பேசியும் கையுமாகக் காதலியுடன் கைகோர்த்து ஊர்க்கோலம் போய்க் கொண்டு இருக்கும் இளமைக் காலப் பருவத்தில் பிரபாகரன்…

ஆனால் இவரோ ஒரு மாண்புமிகு இளைஞராக நாடாளுமன்றத்தில் வீரவசனம் பேசிக் கொண்டு இருக்கிறார்.

பிரபாகரன், செந்தூல் ஸ்ரீதண்டாயுதபாணி பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் மேக்ஸ்வெல் இடைநிலைப் பள்ளியில் தன் மேல்படிப்பை மேற்கொண்டார். சரி.

அரசியல் என்பது வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் அல்ல. இளைஞர்களுக்கும் தான் என்று மலேசியர்களை மலைக்கச் செய்தவர் இந்தப் பிரபாகரன். அந்த இளைஞரின் துணிச்சலையும் துடிப்பையும் நாம் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். புகழ வேண்டும்.




அப்படி வரலாறு படைத்த ஓர் இளைஞரின் அரசியல் இப்போது வேறு மாதிரியான ஒரு கோணத்தில் பயணிக்கும் போது மலேசிய மக்களிடம் ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. நியாயமான ஆதங்கம்.

இப்போது அதே அந்த பிராபகரன் அவர்கள், தியான் சுவாவிற்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும் என்பது மலேசிய இந்தியர்களுக்கு நியாயமாகத் தெரியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஓர் அரசியல் நாடக ஒத்திகை போல தெரிகிறது.

தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு வழி வகுக்கும் வகையில் பிரபாகரன் பதவி விலக வேண்டும் என்று 14 அரசு சாரா இயக்கங்கள் அண்மையில் கோரிக்கை வைத்து உள்ளன. 




அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பொது மக்கள் உண்மையிலேயே வியர்த்து விக்கித்துப் போகிறார்கள். அரசியலில் என்ன என்னவோ நடக்கும் என்பார்கள். ஆட்டைக் கடித்து ஆட்டை போடுவது நடக்கும். மாட்டைக் கட்டித்து மல்லுக்கு நிற்பது நடக்கும். அந்த வகையில் பற்பல தில்லாலங்கடிகள் நிறைந்த கூடாரம் தான் அரசியல்.

ஆனால் இப்போது இங்கே ஓர் இந்திய இளைஞர் ஒரம் கட்டப் படுகிறார். அவரை ஓர் அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. மலேசிய இந்தியச் சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகத் தான் பார்க்கிறேன்.

இன்றைய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் அன்றைய தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தான் களம் இறங்கினார். அதை நாம் மறந்து விடக்கூடாது.

அதனால் தான் சொல்கிறேன். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபாகரனைப் பதவி விலகச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத; ஜீரணிக்க முடியாத விசயம். 




தியான் சுவாவிற்கு வழி விடுவதே உத்தமம் என்று ஒரு காரணம் சொல்லி பிரபாகரனைப் போகச் சொல்கிறார்கள்.

இப்படியே ஒவ்வொரு தமிழரையும்; மலேசியாவில் உள்ள ஒவ்வோர் இந்தியரையும் நாமே வீழ்த்த நினைத்தோம் என்றால் எதிர்காலத்தில் நமது பிரதிநிதித்துவம் அரசாங்கத்திலும் இருக்காது. எதிர்க் கட்சியிலும் இருக்காது. கடைசியில் நமக்கு அடையாளம் இல்லாமலேயே போய் விடலாம். நடக்க்க கூடிய எதார்த்தமான உண்மை.

பிரபாகரனைப் பதவி விலகச் சொல்கிறார்கள். சரி. அப்படியே தேசிய முன்னணி வெற்றி பெற்று இருந்தால் என்ன செய்வார்களாம்.

இடைத் தேர்தல் வேறு எங்கு வந்தாலும் தியான் சுவா அங்கே போய் போட்டியிடலாமே. இவர் ஆளும் கட்சியில் உள்ளவர். அவர் விரும்பினால் அவர் சேவை செய்ய ஆயிரம் ஆயிரம் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ரொம்ப வேண்டாம். இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்துக் கொள்ளலாமே. அதற்குள் அப்படி என்ன ரொம்ப அவசரம். அதுவும் ஓர் இந்தியரை வலுக்கட்டாயமாக வெளியாக்கிவிட்டு அந்த இடத்தில் தான் இவர் போய் போட்டிப் போட வேண்டுமா. 




ஓர் இந்திய இளைஞரை இழப்பதை நாம் விரும்பவில்லை. தற்சமயம் நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலையற்றத் தன்மைகளைப் பார்க்கும் போது எதிர்கால அரசியலில் இந்தியர்களின் நிலைமை கேள்விக் குறியாகி அந்தரத்தில் தொங்கத் தொடங்கி விட்டது. இப்போதே இந்தியர்கள் ஓரங்கட்டப் படுவது போல ஒரு சந்தேகமும் ஏற்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது.

கேமரன் மலை தொகுதியில் டத்தோ சிவராஜ் பதவி இழக்க நேர்ந்தது. இடைத் தேர்தலில் போட்டியிட ம.இ.கா.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் ஜொகூர் தங்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற ம.சீ.ச. வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.




நெகிரி செம்பிலானில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கெஅடிலான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தன் கட்சித் தலைவருக்காகத் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்தார். தெரியும் தானே.

இன்று பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கங்கள் குரல் எழுப்பி உள்ளன.

தியான் சுவாவின் சேவை அவசரமாகத் தேவை என்றால் அதற்கும் வழி இருக்கிறது. தியான் சுவாவிற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வழங்கலாம். அவருடைய சேவைகளைப் அந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாமே.


இப்போது பதவியில் இருக்கும் ஒருவரை அதுவும் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட மலேசிய இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை விலகச் சொல்வது நியாயமும் அல்ல. அரசியல் சாணக்கியமும் அல்ல.

இதற்கு இடையில் சாய் ராஜேந்திரன் எனும் அன்பர் சொல்கிறார்: பிரபாகரனுக்கு விழுந்த ஓட்டுகள் அவருக்காகப் போடப் பட்டவை அல்ல. பி.கே.ஆர். கட்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள். பிரபாகரன் விட்டுக் கொடுத்துத் தான் ஆக வேண்டும். அரசியல் தெளிவு எதுவும் இல்லாமல் தியான் சுவாவைக் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார்.

என்னைக் கேட்டால் வேறு மாதிரி சொல்வேன். தப்பாக நினைக்க வேண்டாம். ஒரு மயிலைக் கொன்று தான் அதன் இறகுகளைப் பிடுங்க வேண்டுமா.

மற்ற இனத்தவர்கள் பெரும்பான்மை கொண்ட இடங்கள் எத்தனையோ உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா.

அப்படியே அந்த இடங்கள் கிடைக்காது என்றால் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா. ரொம்ப அவசரம் என்றால் தியான் சுவாவை ஒரு செனட்டராக்க வேண்டியது தானே. ஓர் இந்தியரின் சோற்றுத் தட்டைப் பிடுங்கித் தான் மற்றவருக்குக் கொடுக்க வேண்டுமா.

பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்கள் பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர். அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்கிறேன்.

தென்னரசு சின்னையா: நம்மை சீண்டுவதே வேலையாகி விட்டது. மக்களின் தீர்ப்பு இது. எவருடைய சுயநலத்திற்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது. இது தனிமனிதனுக்கான பதவியோ மதிப்போ இல்லை. இந்த நாட்டு தமிழர்களின் தன்மானம்... மரியாதை.

செல்வமணி: பலிகடா என்றால் இளிச்சவாயன் தமிழனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

வருசை ஒமார்: என்ன செய்வது தம்பி. சில சமயங்களில் பணத்தின் குரல் ஓங்கி ஒலிக்குதே! கொள்கையாவது புடலங்காயாவது! தமிழன் தான் இளிச்சவாயன். முன்பு நெகிரி செம்பிலானில் ஒரு தமிழர் எம்.பி.யைப் பலி கொடுத்தோம். இப்போது பத்து எம்.பி. பிரபாகரனா?

லெட்சுமணன் நடேசன்: மாண்புமிகு பிரபாகரன் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர். அவரைப் பதவித் துறக்கச் சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. இது மக்களின் தீர்ப்பு.

அம்மணி அய்யாவு: அந்த அரசு சாரா இயக்கங்கள் யாவை? விபரம் தேவை.

கோடீஸ்வரன்: இது நடக்காது என்பது நமக்குத் தெரியும். தியான் சுவா அந்த அளவுக்கு மனிதர் அல்ல. இதன் பின்னால் எவரோ ஒருவர் ஒளிந்து கொண்டு இருக்கிறார்!

அரசி ரவி பரமசிவம்: பிரபாகரன் எதற்கு அடிபணிந்து போக வேண்டும்?

கோபிநாதன் குப்பன்: அப்போது பிரபாகரனைத் தேடிப் போனது இந்தக் கூட்டம். இப்போது வேண்டாமோ? அருமையான ஒரு நாடகம்பா இது...

சிந்திப்போம் சற்று சிந்திப்போம். ஒரு காலக் கட்டத்தில் மலேசியாவில் இந்தியர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது கிள்ளுக்கீரையாகக் கிள்ளி எடுக்கும் காலத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

கொட்டக் கொட்ட குனிபவரும் மடையர்; குனியக் குனியக் கொட்டுபவரும் மடையர்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Thennarasu Sinniah: நம்மைச் சீண்டுவதே வேலையாகி விட்டது... மக்களின் தீர்ப்பு இது. எவருடைய சுயநலத்திற்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது. இது தனிமனிதனுக்கான பதவியோ மதிப்போ இல்லை. இந்த நாட்டுத் தமிழர்களின் தன்மானம். மரியாதை.


Dorairaj Karupiah >>> Thennarasu Sinniah: நண்பரே உங்கள் கருத்து அருமை...  ஆம். இது தனி மனிதனுக்கான பதவி இல்லை... தமிழர்களின் தன்மானம்... மரியாதை... உரிமையும் கூட...


Murugan Sivam: பிரபா தன் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்... பணம் பேசினால் ஒன்றும் பண்ண முடியாது... ஆனால் PH சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் தோற்பது திண்ணம்...Tg. Piai இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்போம்... நாளை 16.11.2019... 8 pm முடிவு தெரிய வரும்...


Varusai Omar: முத்து, எனது நேற்றைய F.B பதிவைக் காணுங்கள் நண்பா!PKR/PH அரசியல்வாதிகளுக்குத் தமிழன் தான் இளிச்சவாயன். முன்பு ஒரு தமிழ் MPயை பலி கொடுத்தானுங்க! இப்போது பத்து MP பிரபாகரனா? நேற்றைய பதிவில் மிக கடும் சொற்களைப் பதிவிட்டேன். இன்று? இன்னும் சுடு சொற்கள் வேண்டாம் நண்பா!


Siva Thangarasu Praba: இந்தப் பதவி இன்னும் 3 வருடம் தான். எதைச் செய்தால் அரசியலில் தொடர்ந்து இருக்க முடியும். வாய்ப்பு உள்ள பொழுதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இங்கே வெட்டியாகச் சிலர் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் தொகுதி மக்களுக்கு உதவி செய்ய 500 வெள்ளி கேட்டுப் பாருங்கள். காணாமல் போய் விடுவார்கள். அதிர்ஷ்டம் ஓரு முறை தான் கதவைத் தட்டும்.


Letchumanan Nadason மாண்புமிகு பிரபாகரன் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர். அவரைப் பதவித் துறக்கச் சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. இது மக்களின் தீர்ப்பு.


Pushpalata Ramasamy: அந்த அரசு இயக்கங்களின் விபரங்களைப் பதிவிடுக


Muthukrishnan Ipoh: நியாயமான கோரிக்கை...


Muthukrishnan Ipoh: கருத்துகள் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி...


Ramala Pillai: ஆபத்து நேரத்தில் வந்து உதவியவருக்கு தியான் சுவா நன்றி உணர்வு உள்ளவராக இருப்பார் என்று நம்புகிறோம். ஒரு தவணை என்பது ஐந்து ஆண்டுகள். ஒரு தவணை பூர்த்தி ஆனவுடன் அந்தத் தொகுதி மக்களுக்கு தான் முழுமையான சேவை செய்த மன நிறைவுடன் பிரபாகரனே ஒதுங்கி கொள்ளப் போகிறார்.

அப்படி “PKR” கட்சி அவரின் சேவையின் அடிப்படையில் அவருக்கு வேறொரு தொகுதி வழங்குமேயானால் கட்சிக்கு மேலும் பெருமை சேர்ப்பதோடு அல்லாமல் இந்தியர்களின் ஆதரவும் இன்னும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதைக் கட்சி வட்டாரம் அறிந்தே வைத்து இருக்கும்.

”PPBM” கட்சி சிறுபான்மையான பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொண்டு நம்பிக்கை கூட்டணியின் மற்ற தோழமை கட்சிகளுக்கே மிரட்டலாக விளங்கும் இந்த இக்கட்டான நேரத்தில்... “PKR” கட்சி வீணே தன்மூப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு... பல்லினக் கட்சி எனும் தம் தோற்றத்தையும் நம்பகத் தன்மையையும் இழந்து விடுவதற்கு தயாராக இல்லை என்பதை மறுப்பதற்கு இல்லை. தியான் சுவாவிற்கு செனட் சபையில் இடம் கொடுக்கலாமே!


Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க... 🙏 நீண்ட பதிவு... அருமையான தகவல்...


Varusai Omar: என்ன செய்வது தம்பி. சில சமயங்களில் பணத்தின் குரல் ஓங்கி ஒலிக்குதே! கொள்கையாவது புடலங் காயாவது!


Narinasamy Karpaya: தியான் சுவா வேறு வழிகளில் சேவை செய்யலாமே! பிரபாகரன் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர் தானே! இன்றைய அரசியல் நிலையில் இத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்துவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது!


Muthukrishnan Ipoh: பொறுத்து இருந்து பார்ப்போம் ஐயா...

M R Tanasegaran Rengasamy: மக்களின் வரிப் பணத்தைக் கண்டபடி செலவு செய்வதை அரசு நிறுத்த வேண்டும். இன்னும் மூன்றாண்டுகளே எஞ்சி இருக்கும் வேளையில் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருக்க இயலாதா என்ன? உடனே அங்கு ஓர் இடைத் தேர்தல் நடத்த அவசியம் என்ன? ஆளும் கூட்டணி மூன்றில் இரு பெரும்பான்மையைப் பெற்று விடுமா?

வீணாக மக்களின் எரிச்சலுக்கு வழிவகுக்கும் செயலாக இது அமையும். நாடு கடனில் உழன்று கிடக்கிறது எனக் கூப்பாடு வேளையில் இந்தத் இடைத் தேர்தல் தேவையா... அப்படி நடந்தால் ஜ.செ.க. நிச்சயம் இந்தியர்களின் வாக்குகளை இழக்கும்.

வரலாறு காணாத வண்ணம் அங்கு எதிர்க்கட்சி வாகை சூடும். அப்பொழுது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா எனப் போக வேண்டியது தான். பாரிசான் அரசாங்கத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெற்றது இல்லை என்றே கருதுகிறேன். நம்பிக்கை கூட்டணியில் இது அடிக்கடி நிகழ்கிறது. தவறான அரசியல் முன்னெடுப்பு.


Muthukrishnan Ipoh:
நீண்ட பதிவு.... நல்ல அருமையான கருத்துகள்... கருத்துகளுக்கு நன்றிங்க... 🙏


Ammini Ayavoo: அந்த அரசு சாரா இயக்கங்கள் யாவை?? விபரம் தேவை..


Varusai Omar >>> Ammini Ayavoo: ஒரு 10/30 பேரை சேர்த்துக்கிட்டு, தமிழ் நெஞ்சர் சங்கம் அப்படின்னு பெயர் வச்சுக்கிட்டு அங்கே இங்கே சில்லறை தேற்றிக்கிட்டு பதிவு பண்ணிட்டா? அம்புடுத்தான். அது ஓர் அரசு சாரா சங்கம் இயக்கம். என்ன... கொஞ்சம் கவனமாய் இருந்தால் சில்லறையைத் தேற்றிக் கொள்ளலாம்.


Kodis Varan: இது நடக்காது என்பது நமக்குத் தெரியும்! தியான் சுவா அந்த அளவுக்குத் தரம் கெட்ட மனிதர் அல்ல. இதன் பின்னால் எவனோ ஒரு திராவிடன் ஒளிந்து கொண்டிருப்பான்!


Varusai Omar >>> Kodis Varan: ஏம்பா... இங்கே எங்கே வந்தான் ஒங்க திராவிடனும் பிராமணனும்?


Selva Mani: பலிகடா என்றால் இளிச்சவாயன் தமிழனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?


Arasi Ravi Paramasivan: பிரபாகரன் எதற்கு அடிபணிந்து போகணும்??


Velaydam Kannan: என்று திருந்தும் இந்த மட சாம்பிராணிக் கூட்டம்...


Dorairaj Karupiah: தம்பி பிரபாகரன் அவர்களே... உங்கள் பதவியை நிறைவு செய்யுங்கள். யாருக்காகவும்... விட்டுக் கொடுக்க வேண்டாம்... படை பல வந்தாலும் தடை சில நேர்ந்தாலும் தொடரட்டும்... உங்களது மக்கள் சேவை


Vijikrish Krishnasamy: சிரித்துக் கொண்டே முதுகில் குத்துவது இவர்களுடைய வழக்கம்.


Gobinathan Kuppan: பிரபாகரனைத் தேடிப் போனது இந்தக் கூட்டம். இப்போது வேண்டாமோ. அருமையான ஒரு நாடகம்பா இது...


Kannan Kannan: நாடகமே இந்தா உலகம்...