ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஏப்ரல் 2019

ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1

1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுவிக்க சிங்கப்பூரில் ஒரு தற்காலிக இந்திய அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டது. அதன் பெயர் சுதந்திர இந்தியா விடுதலை அரசாங்கம்.
 

அதை ஆசாத் ஹிந்த் (Azad Hind) என்று இந்தி மொழியில் அழைத்தார்கள். இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டதும் அதனை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ரோமானியா, ஹங்கேரி, பல்கேரியா, குரோசியா, பின்லாந்து, தாய்லாந்து, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன.

இந்த அரசாங்கத்தைத் தோற்றுவித்தவர் நேதாஜி என்று அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.

ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் ஓர் அரசாங்கம் இருந்தது. அதன் பெயர் இந்திய விடுதலை இயக்கம். 1942-ஆம் ஆண்டு ராஜ் பிகாரி போஸ் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. தோக்கியோவில் உருவானது.
 

புதிய ஆசாத் அரசாங்கத்தைத் தோற்றுவித்தவர் நேதாஜி. அதற்கு ஜப்பானிய அரசு முதன்மையாக இருந்தது. பண உதவி, இராணுவ உதவி, அரசியல் உதவிகள் செய்தது. ஜெர்மனியும் சோவியத் ரஷ்யாவும் இராஜதந்திர உறவுகளை வழங்கின.

ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு மலாயாவில் பலர் பல வகைகளில் உயிரைப் பணயம் வைத்து தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்.

என். ராகவன்;

டாக்டர் லட்சுமியா;

பி.கே.தாஸ்;

எஸ்.என். சோப்ரா;

ஜான் திவி;

கே.எல். தேவாசர்;

எஸ்.சி. கோஹோ;

எஸ்.ஏ.மித்ரா;

எஸ். சண்முகம்;

டாக்டர் மசூம்டார்;

எம்.கே. சிதம்பரம்;

செங்கப்பா;

எல்லப்பா;

சுவாமி சத்தியானந்த பாரதி;

கே.ஏ, நாராயணன்;

கே.கே.பெஞ்சமின்;

அருசணாசலம் செட்டியார்;

கானல் மஹ்பூப் அகமட்;

என். வீரையா;

எம். காந்திநாதன்;

பத்மஸ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்;

கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் (சேகல்);

கேப்டன் மோகன்;

எஸ்.ஏ. ஐயர்;

சட்டர்ஜி;

ஹபிபுர் ரஹ்மான்;

போன்றவர்களின் பெயர்கள் வரலாற்றில் இடம் பெறுகின்றன. இன்னும் பெயர்கள் உள்ளன. பட்டியல் நீளும்.
 

ஆசாத் அரசாங்கம் சொந்தமாக நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டது. சொந்தமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது. சொந்தமாக நீதிமன்றங்களை நடத்தியது. சொந்தமாகச் சட்ட திட்டங்களையும் வகுத்துப் பின்பற்றியது.

ஆசாத் அரசாங்கத்திற்கு உண்மையான, சட்டபூர்வமான அரசாங்கத் தகுதிகள் இருந்தன. இருந்தாலும் அதற்கு என்று ஒரு தனி நாடு இல்லை. தனி ஒரு நிலப்பரப்பும் இல்லாமல் இயங்கியது.
 

1943-ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஆசாத் அரசாங்கத்திற்கு ஜப்பானிய அரசு வழங்கியது. பின்னர் மணிப்பூர், நாகாலாந்து போன்ற இடங்களின் சில பகுதிகள் ஆசாத் அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டன.

ஆசாத் அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டதும் அந்த அரசாங்கத்திற்கு ஓர் இராணுவ அமைப்பு தேவைப் பட்டது. அந்த வகையில் இந்திய விடுதலை தேசிய இராணுவம் எனும் ஓர் இராணுவ அமைப்பு உருவாக்கப் பட்டது. சுருக்கமாக அதன் பெயர் இந்திய தேசிய இராணுவம்.

அடுத்தக் கட்டமாக 1943 அக்டோபர் 23-ஆம் தேதி; ஆங்கில, அமெரிக்கக் கூட்டுப் படைகள் மீது ஆசாத் அரசாங்கம் போர்ப் பிரகடனம் செய்தது.

அதோடு அப்படியே விட்டுவிடவில்லை. இந்திய - பர்மா எல்லையில் இருந்த கூட்டுப் படைகள் மீது முதல் தாக்குதலையும் தொடுத்தது.
 

இந்திய விடுதலை தேசிய இராணுவத்தை இந்திய தேசிய இராணுவம் என்று சுருக்கமாக அழைத்தார்கள். ஆங்கிலத்தில் ஐ.என்.ஏ.

Azad Hind Fauj - Indian National Army - INA

பர்மா எல்லையில் இருந்த இம்பால் கோகிமா பகுதியில் முதல் போர் நடந்தது. அதற்கு இம்பால் போர் (Battle of Imphal) என்று பெயர். கோகிமாவில் இருந்த பிரிட்டிஷ் படைகளை ஐ.என்.ஏ. படையினர் தோற்கடித்து இந்தியாவிற்குள் காலடி வைத்தனர். பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

மோய்ராங் எனும் இடத்தை ஐ.என்.ஏ. படையினர் கைப்பற்றிய போது சற்றே பின்வாங்க வேண்டிய அவலநிலை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் கூட்டுப் படையின் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள். ஐ.என்.ஏ. படையினருக்குப் போதுமான உணவு வந்து சேரவில்லை. அத்துடன் மருந்துப் பொருட்களும் ஆயுதங்களும் உடனடியாக வந்து சேரவில்லை.
 

அதனால் தான் ஐ.என்.ஏ. இந்திய தேசிய இராணுவம் பின் வாங்கியது. பல ஆயிரம் பேர் இரு தரப்பிலும் இறந்து போனார்கள்.

நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ. படையினர்) இந்தியாவிலும், பர்மாவிலும் ஐந்து போர்களில் ஈடுபட்டனர். அதில் ஜான்சிராணி படையினரின் பங்கு அளப்பரியது. அதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்தப் போர்களில் ஐ.என்.ஏ. படையினருடன் ஜப்பானிய போர் வீரர்களும் பங்கெடுத்தனர். போர் விவரங்கள் கீழே வருகின்றன.

பிரிட்டிஷ் படையில் பிரிட்டிஷார், இந்திய இராணுவத்தினர், கூர்கா படையினர் பங்கெடுத்தனர்.
 


1. Battle of Sinzweya

சின்ஸ்வேயா போர்


தேதி: 05.02.1944 - 23.02.1944

இடம்: அரக்கான், பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 3,506

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு உயிரிழப்புகள்: 3,106

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர்: 2,229



2. Battle of Imphal

இம்பால் போர்


தேதி: 08.03.1944 - 03.07.1944

இடம்: இம்பால், மணிப்பூர், இந்தியா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 12,603

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 54,879

(ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பில் பெரும்பாலோர் பசி பட்டினி, நோய்களினால் இறந்தவர்கள்)



3. Battle of Kohima
   
கோகிமா போர்


தேதி: 04.04.1944 - 22.06.1944

இடம்: கோகிமா, நாகாலாந்து, இந்தியா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 4,064

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 5,764 - 7,000



4. Battle of Pokoku

பொகோக்கு போர்


தேதி: 04.02.1945 - 13.05.1945

இடம்: பொகோக்கு, பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 4,002

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 6,590 - 10,000
   


5. Battle of Central Burma

மத்திய பர்மா போர்


தேதி: ஜனவரி 1945 - மார்ச் 1945

இடம்: மத்திய பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 2.307

பிரிட்டிஷ் தரப்பு காயம் அடைந்தோர் / காணாமல் போனோர்: 15,888

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு உயிரிழப்புகள்: 6,513

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு  காயம் அடைந்தோர் / காணாமல் போனோர்: 6,299



பின்னர் வரும் கட்டுரைகளில் ஒவ்வொரு போரைப் பற்றியும் விளக்கமாக எழுதுகிறேன். சரி. ஆசாத் இராணுவப் பள்ளியைப் பற்றி பார்ப்போம்.

இந்திய தேசிய இராணுவத்தின் மிக முக்கியமான அம்சமாக விளங்கிய அமைப்பு ஆசாத் இராணுவப் பள்ளி ஆகும். இந்தப் பள்ளி சிங்கப்பூர் கில்ஸ்தீட் சாலையில் அமைந்து இருந்தது. இந்தப் பள்ளியில் ஆயிரக் கணக்கான மலாயா, சிங்கப்பூர் இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள்.

அனைவரையும் இங்கே நினைவுபடுத்தி எழுத இயலவில்லை. மன்னிக்கவும். இந்தப் போர் வீரர்களைப் பற்றியும் அவர்களின் போர் வரலாற்றையும் இப்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தன்னலமற்றச் சேவைகளை நினைவுகூர வேண்டும். அதுவே நம் தலையாய நோக்கமாகும்.

அவர்களில் ஒருவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம். அவர்களைப் பற்றித் தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம். வாய்ப்பு கிடைக்கும் போது மற்றவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

ஈப்போவுக்கு அருகில் ஒரு சிறுநகரம். அதன் பெயர் தஞ்சோங் ரம்புத்தான். அங்கே தான் மலாயாவின் வட பகுதிக்கான இந்திய தேசியப் பயிற்சி முகாம் இருந்தது. 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சோங் ரம்புத்தான் (Tanjung Rambutan Training Camp) பயிற்சி முகாமில் உள்ள காலாட்படையில் ஒரு ஜவானாக டான்ஸ்ரீ சோமா இணைந்தார்.

இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டவர்களை அப்போது ஜவான் என்று அழைத்தார்கள். தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமில் தான் அவருடைய தொடக்கப் பயிற்சிகள். அதன் பின்னர்தான் சிங்கப்பூர் பிடாடாரி பயிற்சி முகாமில் பயிற்சிகள்.

https://en.wikipedia.org/wiki/K._R._Somasundram - He joined the Indian National Army at the age of 14 and later after World War II trained at the Tanjung Rambutan Training Camp

தஞ்சோங் ரம்புத்தான் இராணுவப் பயிற்சி முகாமில் அவருக்கு சில மாதங்கள் பயிற்சி. அங்கே அவருக்குப் பொது அறிவு, புவியியல், வரலாறு, அறிவியல், இராணுவத் தந்திரங்கள், இராணுவ விவேக அணுகுமுறைகள் போன்றவை சொல்லித் தரப் பட்டன.
 

ஒவ்வொரு நாளும் எட்டு அல்லது பத்து மணி நேர இராணுவப் பயிற்சிகள். அனைத்தும் கடுமையான பயிற்சிகள். அவருடைய பிலட்டூன் பயிற்சிப் பிரிவில் 50 பேர் இருந்தார்கள். முதல் இரு வாரங்களுக்கு கடும் பயிற்சிகள்.

அந்தப் பயிற்சிகள் அவரைச் சிறந்த ஒரு கட்டொழுங்கு மனிதராக மாற்றி அமைத்தன. அப்படிச் சொன்னால் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். அந்த ஒழுங்குச் சீர்முறைகளை நாம் இப்போதும் அவரிடம் பார்க்க முடிகின்றது.

தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமில் இவர் மட்டுமே வயதில் குறைந்தவர். 14 வயது. ஒரு தடவை கடும் வெயிலில் பயிற்சி செய்யும் போது மயக்கம் போட்டு விழுந்து விட்டார். காய்ச்சல் வேறு. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இரு நாட்கள் மயக்க நிலையில் இருந்து இருக்கிறார்.



கண்விழித்துப் பார்த்த போது பக்கத்து படுக்கையில் அவருடைய டிரில் மாஸ்டர் படுத்து இருக்கிறார். பயிற்சி முகாமில் இருந்தவர்களில் யாரோ சிலர் அவரை மனத் தாங்கலில் அடித்து விட்டார்களாம். வலியால் டிரில் மாஸ்டர் முனகிக் கொண்டு இருந்து இருக்கிறார்.

(தொடரும்)

சான்றுகள்

1. Ghose, Sankar (1975). Political ideas and movements in India. Allied Publishers; Original from: University of Michigan Press.

2. Toye, Hugh (1959). The Springing Tiger: A Study of the Indian National Army and of Netaji Subhas Chandra Bose. Allied Publishers. p. 187. ISBN 978-8184243925.

3. Singh, Harkirat (2003) The INA trial and the Raj. Atlantic Publishers & Distributors. pp. 102–103. ISBN 81-269-0316-3

4. Sarkar, S. (1983), Modern India: 1885–1947, Delhi: Macmillan India, p. 412, ISBN 978-0-333-90425-1

5. Chandra Sarkar, Subodh (2008). Notable Indian trials. M.C. Sarkar; Original from: University of Michigan Press.