வானத்தில் இருந்து வந்த காதலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானத்தில் இருந்து வந்த காதலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஏப்ரல் 2019

வானத்தில் இருந்து வந்த காதலி

காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்று உலகையே வெறுத்து வாழ்ந்த ஒரு மனிதர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்தவர். பெண்களைக் கண்டாலே பத்தடிகள் தள்ளிப் போய் நிற்கும் மனிதர்.


இவருடைய பிரமச்சரியத்தைப் பார்த்து ஆண்டவருகே வேதனை போலும். வானத்தில் இருந்து ஒரு பெண்ணைத் தூக்கிப் போட்டு ‘இந்தா எடுத்துக்கோ... இவள் தான் உனக்கு’ என்று அந்த மனிதரின் வாழ்க்கையையே மாற்றிக் காட்டி இருக்கிறார். என்ன சொல்லப் போகிறீர்கள்.

லாரிட்ஸ் பெல்சியோர் என்பவர் அந்தக் காலத்து நாடகங்களில் பாடுபவர். opera singer. நம்ப கர்நாடக சங்கீதம் மாதிரி ஆங்கிலத்தில் கர்நாடகப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர். ஆனால் இவருக்குப் பெண்கள் என்றால் சுத்தமாக அலெர்ஜி. 


லாரிட்ஸ் பெல்சியோர் 1890 மார்ச் 20-ஆம் தேதி டென்மார்க் நாட்டில் பிறந்தவர். 1930-களில் அமெரிக்காவில் குடியேறினார். ஹாலிவூட் படங்களில் பாடினார். இப்படி இருக்கும் போது ஒரு நாள் அவருடைய வீட்டின் புல் தரையில் பாடல் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் பறந்து கீழே வருவது போல தெரிந்தது. என்ன ஏது கண்டு அறிவதற்குள் அந்தப் பொருள் நேராக கீழே வந்து அவர் மீதே சாய்ந்தது. அப்படி சாய்ந்த பொருள் ஓர் அழகிய பெண். அடடடா...

அந்தப் பெண்ணின் பெயர் மரியா ஹெக்கர் Maria Hacker. ஹாலிவூட் படங்களில் ஸ்டண்ட் நடிகை. விமானத்தில் பறந்து வான்குடை (பாராசூட்) பயிற்சி செய்து இருக்கிறார். அப்போது காற்று வேறு பக்கமாக அடித்து லாரிட்ஸ் பெல்சியோர் வீட்டுப் பூங்காவில் மரியாவைத் தள்ளிவிட்டுப் போய் விட்டது.


அதுவும் லாரிட்ஸ் மேலேயே மரியா விழுந்து இருக்கிறார். மரியாவைப் பார்த்ததும் லாரிட்ஸ் பெல்சியோர் மனம் மாறியது. காதல் கதவைத் தட்டியது. அப்புறம் என்ன.

ஒன் மினிட் பிளீஸ். காதல் பலவிதம். கண்டதும் காதல்; கேட்டதும் காதல்; அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற ராமாயணக் காதல்; இப்படி நிறைய காதல் வகைகள். அவற்றில் இந்தப் பாரசூட் காதலும் ஒருவகை.

இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். இரு பிள்ளைகள். லாரிட்ஸ் பெல்சியோர் 1973-ஆம் ஆண்டு தன்னுடைய 83-ஆவது வயதில் காலமானார். மரியா 1963-ஆம் ஆண்டு தன்னுடைய 38-ஆவது வயதில் காலமானார். 

இரு பிள்ளைகள்
இவர்களுடைய வயதைப் பாருங்கள். ஒருவர் இறக்கும் போது அவருக்கு வயது 83. அந்த எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள். 38. அந்த வயதில் இன்னொருவர் இறந்து போனார். 83-க்கும் 38-க்கும் என்னே ஒற்றுமை. இதுவும் ஒரு விந்தைச் செய்தி தானே. நாளைய தினம் வேறு ஒரு விந்தைச் செய்தி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
02.04.2019.