தமிழகப் பெண்களின் போராட்டம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகப் பெண்களின் போராட்டம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூலை 2018

தமிழகப் பெண்களின் போராட்டம் - 1

*தமிழர்களைப் பார்ப்பதும் தீட்டு. பழகுவதும் தீட்டு. அவர்களைத் தொடுவதும் தீட்டு. இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை முன்பு காலத்தில் இருந்தது. எங்கே? உலகத்திற்கு உத்தமம் பேசிய நம்ப இந்தியாவில் தான். இப்போது அந்தக் கொடுமை இல்லை.* 



இருந்தாலும் அங்கே இங்கே என்று சில பல இடங்களில் அரசல் புரசலாகத் தேய்த்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் பார்த்து ஊரும் உலகமும் புன்னகை பூத்துக் கொண்டுதான் போகிறது.

அந்தச் செயல்களுக்கு அரச மரியாதை அளித்த மன்னர்கள் இருந்தார்கள். அரசு முத்திரை குத்திய ஜமீன்தாரர்கள் இருந்தார்கள். பட்டுப் பீதாம்பரம் வீசிய பசப்புச் செம்மல்கள் இருந்தார்கள். சாமியின் பெயரைச் சொல்லி தமிழ்ப் பெண்களைக் கெடுத்து வந்த பெரிய மனிதர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும்… இருந்தன. சின்ன ஒரு மரியாதை கொடுப்போம்.




அந்த மாதிரி வக்கிரம் படைத்தவர்களைப் பற்றி இங்கே எழுதுவதற்கு மனசு வரவில்லை. என்ன செய்வது. தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லீங்களா. ஆக எழுதியே ஆக வேண்டும். ஒரு கட்டாய நிலை. அதனால் எழுத வேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு தமிழர்ப் பிரிவினர் மீதும் ஒரு வகையான அடக்கு முறை திணிக்கப் பட்டது. உயர்ச் சாதி என்று சொல்லிக் கொண்டவர்கள் போட்ட அத்துமீறிய சடங்குச் சம்பிரதாயங்கள். ஏராளம் ஏராளம்.

அந்த உயர்ச் சாதியினரிடம் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதைகள் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்கள் மீது சொல்லாமல் எழுதி வைத்த ஒடுக்கு முறைத் திணிப்புகள். 



ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் தமிழர்களைச் சாதி சாதியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள். அவன் அந்த சாதி. இவன் இந்த சாதி. நான் பெரியவன். நீ சின்னவன் என்று சூடம் கொழுத்தி சாம்பிராணி வேறு போட்டுக் காட்டினார்கள்.

’சாதி என்பதைச் சாக்கடையில் வீசு’ என்று சொன்னவர்களுக்குச் சவுக்கடி கொடுத்தார்கள். சவர்க்காரத் தொட்டிகளில் போட்டு அமுக்கிக் குளம் குட்டைகளில் தூக்கி வீசியும் இருக்கிறார்கள்.

சரி. இந்தச் சாதிச் சடங்குகள் எப்படி வந்தன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி வைத்த காலக் கட்டத்தில் இருந்து அந்தச் சடங்குச் சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். தொடர்ந்து படியுங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.



ஆரியர் எனும் சொல் ஈரானிய மொழிச் சொல். ஆர்ய (Arya) எனும் அடிச் சொல்லில் இருந்து மருவி வந்தது.

(சான்று: https://ta.wikipedia.org/s/o2d)

இந்தச் சொல்லை ரிக் வேத நூலிலும் பார்க்க முடியும். 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்யா எனும் சொல் பயன்பாட்டில் இருந்து வந்து இருக்கிறது.

தவிர இந்த ஆர்ய எனும் சொல் அய்ரிய (Ayrya) எனும் ஈரானிய மொழிச் சொல்லுடன் இணைந்த சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி நாசிகளின் இனவாதக் கொள்கையில் ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது.

(Gershevitch, Ilya (1968). "Old Iranian Literature". Handbuch der Orientalistik, Literatur I. Leiden: Brill. பக். 1–31) 



ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க இந்தியாவிற்குள் நாடோடிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். சைபீரியா பூர்வீக மக்களினால் விரட்டப் பட்டவர்கள்.

(Aryans originated in the southwestern steppes of present-day Russia or Scandinavia, or at least that in those countries the original Aryan ethnicity had been preserved.)

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே ஐரோப்பாவில் வலது காலை எடுத்து வைத்து ஈரானில் இடது காலை வைத்தார்கள். கடைசியில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து இந்தியாவிற்குள் குதித்துத் தஞ்சம் அடைந்தார்கள்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Aryan_race#19th-century_physical_anthropology

இந்தியாவிற்குள் நுழைந்து ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்தார்கள். கடைசியில் சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய அப்பாவித் திராவிட மக்களையும் கடித்துக் குதறிப் போட்டார்கள். சங்கீத அரகோணத்தில் காம்போதிகளாக மாற்றிக் காட்டினார்கள் என்று கூட சொல்லலாம். தப்பில்லை.

அங்கு வாழ்ந்த வெள்ளந்திகளைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்தும் வைத்தார்கள். அந்தப் பிரிவினைக் கோலம் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இப்போது இங்கேயும்கூட ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 



இங்கே கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் சமயங்களில் சில சங்கங்கள் சாதிக்குச் சுண்ணாம்பு அடித்து அழகு பார்க்கிறார்கள். மலேசியாவில் அது ஒரு மௌனராகம். விடுங்கள்.

ஒரு காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்கு முறைகள். எல்லாம் தமிழகத்தில் நடந்தவைதான். அந்த மாதிரியான சாதியக் கொடுமைத் தடங்களில் ஒன்றுதான் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தோள் சீலைப் போராட்டம்.

தமிழ்ப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது. திறந்த மார்புடன் நடக்க வேண்டும். சுத்தமான முகாரிகள் வாசித்த ஓர் அடக்குமுறை.

அன்றைய கேரளப் பகுதியான தென் திருவிதாங்கூர், தமிழக எல்லைப் புறங்கள், கன்னியாகுமரி பகுதிகளில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான ஒடுக்கு முறையில் தனித்துப் பிரித்து வைக்கப் பட்டனர்.

சாமான்யத் தமிழர்கள் எத்தனை அடி தூரத்தில் நின்று பேச வேண்டும் என்று கணக்கு வேறு போட்டு வைத்து இருந்தார்கள். பாருங்கள். தீண்டாமை தீச்சுவாலையை எப்படி எல்லாம் போற்றி போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

தமிழர்களில் ஒரு பிரிவினர் கண்ணில்படக் கூடாத சாதி மக்கள் என்றும் தூற்றப் பட்டு இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த இந்தப் பூமியில் எங்கேயும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்குமா. சொல்லுங்கள்.

ஆனால், இந்தியத் தாய் மண்ணில் அப்படி நடந்து இருக்கிறது. ஆக, நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத் தூரத்தை எவரேனும் மீறினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது. 



அப்பேர்ப்பட்ட ஹிட்லர்கூட வேண்டாதவர்களை விசம் கொடுத்துதான் கொலை செய்தான். ஆனால் இத்தனை அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும் என்று சட்டம் போட்டது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இருந்தன. அங்கு சாணார் எனும் ஒரு தமிழ்ப் பிரிவினர் இருந்தனர். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உத்தமம், உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு சட்டத்தையும் போட்டது.

சாணார், பள்ளவர், ஈழவர், முக்குவர், புலையர் போன்ற பிரிவினர் தமிழர்ச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். அந்த வகையில் 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது.

அணியக் கூடாது என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். மேலாடை அணிவது பெரும் குற்றம். திறந்த மேனியோடுதான் நடமாட முடியும். மனுதர்மம் அப்படிச் சொல்வதாக ஒரு சாணக்கியச் சட்டத்தை எடுத்துக்காட்டி அதைச் சம்பிரதாயச் சட்டமாக மாற்றிகயும் காட்டினார்கள்.

தமிழர்ச் சமூகத்துப் பெண்கள் தங்கள் மார்பகத்தை எப்பொழுதும் திறந்து காட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று உயர்ச் சாதியினர் பிடிவாதமாக இருந்தனர். அந்த வகையில் குழந்தையில் இருந்து இறக்கும் கட்டத்தில் இருக்கும் பாட்டிமார்கள் வரை அந்த மரியாதைக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண் எவனுடைய மனைவியாகவும் இருக்கலாம். எவனுடைய மகளாகவும் இருக்கலாம். எவனுடைய சகோதரியாகவும் இருக்கலாம். எவனுடைய அம்மாவாகவும் இருக்கலாம். இல்லை பாட்டியாககூட இருக்கலாம். பிரச்சினை இல்லை… 



ஆனால் மார்பகத்தைக் காட்டிக் கொண்டு தான் போக வேண்டும்… வர வேண்டும். மார்பகத்தை மூடி வைக்கக் கூடாது. என்னே ஒரு மனுதர்மச் சட்டம்.

இந்த அசிங்கத்தை இந்த அவமானத்தை இந்த அவலத்தை இந்த அடக்குமுறையை எதிர்த்தப் பல தமிழ்ப் பெண்கள் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறினார்கள். தங்களின் மார்பகத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து மறைக்கப் பெரிதும் போராடி வந்தார்கள்.

பாவம் அந்தப் பெண்கள். மேலாடை அணியாமல் கூனிக் குறுகி வாழ்ந்து வந்தார்கள். அந்த அடக்கு முறையை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள்.

அந்தப் போராட்டம் தான் தோள் சீலைப் போராட்டம். பல பத்து ஆண்டுகள் போராட்டம் செய்தார்கள். கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்தத் தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இப்படி எல்லாம் நடந்து இருக்கின்றது இப்படி எல்லாம் தமிழர்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை நம் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி அறிந்து தெரிந்து கொள்வது தான் பாதிக்கப்பட்ட நம் தமிழ்ப் பெண்களுக்கு நாம் செய்யும் ஒரு கைமாறு ஆகும்.

18-19-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் நாட்டில் தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்து இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 96 அடி தள்ளி நிற்க வேண்டும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடம் இருந்து 60 அடி அப்பால் நிற்க வேண்டும்.

புலையன் இனத்தைச் சேர்ந்த ஒருவனை அப்படியே அந்த மேல்சாதிக்காரனைப் பார்க்க நேர்ந்தால் அந்த மேல்சாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகக் கருதப் படுவான். அப்படித் தீட்டுப் பட்டவன் ஆற்றில் அல்லது குளத்தில் மூழ்கி நீராட வேண்டும். தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வேதனையான செய்தி. திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையாகச் சுரண்டப் பட்டது. அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது. அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப் பட்டனர். அரசுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள்.

அது மட்டும் இல்லை. உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. மாடி வீடு கட்டக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது. பெண்கள் தங்களுடைய மார்புகளை மேலாடைகளால் மறைக்கக் கூடாது. முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தி மறைக்கக் கூடாது. பசு மாடுகளை வளர்க்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். இந்தக் கூடாதுகளைப் பற்றி நாளைய கட்டுரையில் கூடுதலாகத் தெரிந்து கொள்வோம்.

(பாகம் 2-இல் தொடரும்)